காலநிலை மாற்ற சவால்கள்: வளிமண்டலத்தில் இருந்து கரியமில வாயுவை நீக்க முடியுமா?

கார்பன்-டை-ஆக்சைடை நீக்க முடியுமா?

பட மூலாதாரம், Orjan Ellingvag/Alamy

    • எழுதியவர், ஜோஸ்லின் டிம்பெர்லே
    • பதவி, ஆசிரியர், பிபிசி குளோபல் நியூஸ்

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த வளிமண்டலத்தில் கலந்துள்ள கார்பனை உறிஞ்சி வெளியே எடுக்க வேண்டியிருப்பதாக ஐ.நா.வின் காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச குழு தெரிவித்துள்ளது. இந்த எதிர்மறை உமிழ்வுகள் எவ்வாறு செயல்படக் கூடும் என்பது ஜோஸ்லின் டிம்பெர்லே பார்வையில்...

மனித குலமே ஒரு மெல்லிய பனிக்கட்டியின் மீது இருக்கிறது. புதைபடிம எரிபொருள் பயன்பாட்டை துரிதமாகக் குறைப்பது, திறனை அதிகரிப்பது, அனைத்துத் துறைகளிலும் கரியமில வாயு உமிழ்வை கணிசமாக குறைப்பது ஆகியவை மூலமே காலநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளைத் தவிர்க்க முடியும் என்று ஐ.நா.வின் காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச குழு அறிக்கை கூறுகிறது.

மனித குலம் பிழைத்திருப்பதற்கான வழிகாட்டுதலின்படி இந்த புதிய அறிக்கை செயல்பட வேண்டும் என்கிறார் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஷ். காலநிலை மாற்றத்தை தடுக்கும் நடவடிக்கையில் எல்லா இடங்களிலும், அனைத்தும் ஒரே நேரத்தில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.

என்ன செய்ய வேண்டும்?

அறிவியலாளர்களின் பார்வையில், வளி மண்டலத்தில் உமிழப்படும் கார்பன் அளவை குறைக்க வேண்டும் என்ற பரிந்துரையுடன், ஏற்கெனவே காற்றில் கலந்துள்ள கார்பன்-டை-ஆக்சைடை நீக்கும் நடவடிக்கையும் அவசியம்.

எந்த தவறும் செய்யாதீர்கள், நாம் கார்பன் நீக்கம் செய்ய வேண்டும்; ஆனால் அதை நாம் பொறுப்புடன் செய்ய வேண்டும் - ராம் பெல்லமி

வளி மண்டலத்தில் உள்ள கார்பனை வெளியேற்றும் பல்வேறு வழிமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை இது குறிப்பிடுகிறது. இதனால், புவி வெப்பமாதலுக்குக் காரணமான பசுமை விளைவுக்கு அது பங்களிப்பது தடுக்கப்படும்.

வளி மண்டலத்தில் மனிதர்கள் சேர்க்கும் கார்பனை, அங்கிருந்து உறிஞ்சி எடுப்பதே இந்த யோசனை. வளி மண்டலத்தில் இருந்து கார்பன்-டை-ஆக்சைடை நேரடியாக உறிஞ்சி எடுப்பது.

கார்பனுடன் பயோ-ஆற்றலை சேகரித்து சேமிப்பது (CCS), பேசால்ட் போன்ற சிலிகேட் பாறைகளை பூமியின் மேற்பரப்பில் வைத்து இயற்கையாக கார்பன்-டை-ஆக்சைடு அளவை கட்டுப்படுத்துவது ஆகிய வாய்ப்புகள் நம் முன்னே உள்ளன.

மேலே முன்மொழியப்பட்ட, கார்பன்-டை-ஆக்சைடை அகற்றும் வழிமுறைகள் காலநிலையில் அர்த்தமுள்ள மாற்றத்தை உருவாக்குவதற்கான சாத்தியங்கள் என்ன? இதைக் காட்டிலும் சிறந்த வாய்ப்புகள் உள்ளனவா? கார்பன்-டை-ஆக்சைடை நீக்கும் செயல் திட்டத்தில் எவையெல்லாம் ஆபத்தானவையாக இருக்கும்?

கார்பன்-டை-ஆக்சைடை நீக்க முடியுமா?

கார்பன்-டை-ஆக்சைடு நீக்கம் தேவை ஏன்?

பல தசாப்தங்களாக கரியமில வாயுக்கள் உமிழ்தலைக் கட்டுப்படுத்த உலகம் தவறிவிட்டது. இதனால், காலநிலை மாற்றத்தின் அபாயத்தை கட்டுப்படுத்த வளி மண்டலத்தில் இருந்து கார்பன்-டை-ஆக்சைடு நீக்கம் அவசியம் என்று சில அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.

வளி மண்டலத்தில் இருந்து கார்பன்-டை-ஆக்சைடை நீக்குவது நம் முன்புள்ள தெரிவு அல்ல - அது கட்டாயம் என்று ஐ.பி.சி.சி. அறிக்கை கூறுகிறது என்கிறார் மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தின் காலநிலை மற்றும் சமூகத்துறை விரிவுரையாளர் ராப் பெல்லமி. அதேவேளையில், கார்பன் நீக்க வழிமுறைகளாலும் மக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு சில அபாயங்கள் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

"எந்த வழிமுறையை முன்னெடுக்கலாம்? அதனை எவ்வாறு ஊக்கப்படுத்தலாம்? இறுதியாக அதனை எவ்வாறு நிர்வகிக்கலாம்? என்பது குறித்து நம் சமூகத்தில் விரிவான உரையாடல் அவசியம். எந்த தவறும் செய்யாதீர்கள். நாம் கார்பன் நீக்கம் செய்ய வேண்டும். ஆனால், அதை நாம் பொறுப்புடன் செய்ய வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

கார்பன்-டை-அக்சைடை நீக்கும் அதேவேளையில், எஞ்சியிருக்கும் கரியமில வாயுக்கள் உமிழ்வைக் குறைப்பது சவாலான ஒன்று என்பதையும் ஐ.பி.சி.சி. அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

ஏனெனில், வேளாண்மை, விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து மற்றும் தொழில்துறைகளில் இந்த வகை கரியமில வாயுக்கள் வெளியேற்றப்படுவதாக அந்த அறிக்கை கூறுகிறது.

(தொழில்நுட்பக் குறைபாடு அல்லது கார்பன் பயன்பாட்டை நீக்க ஆகும் பெரும் பொருட்செலவு ஆகியவற்றால் இந்த துறைகளில் கரியமில வாயுக்களை நீக்குவது கடினமான ஒன்று என்று கருதப்படுகிறது)

கார்பன்-டை-ஆக்சைடை நீக்க முடியுமா?

ஆனால், எல்லா அறிவியலாளர்களும் இதனை ஒப்புக் கொள்ளவில்லை. கார்பன்-டை-ஆக்சைடு நீக்கத்தை பெரிய அளவில் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சிலர் கவலை தெரிவிக்கின்றனர். அதையே பெருமளவில் சார்ந்திருப்பது தவறாக முடியக் கூடும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆனால், கரியமில வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருந்து தப்ப அரசாங்கங்கள் இதையே ஒரு சாக்காக பயன்படுத்தும் வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

"படிம எரிபொருளுக்குப் பதிலாக புதுப்பிக்கத்த எரிசக்திக்கு மாறுவது, எரிசக்தித் திறனை அதிகரிப்பது, ஆற்றலையும், ஆற்றல் வளங்களையும் பயன்படுத்துவதைக் குறைப்பது ஆகிய நம்மிடையே தற்போதுள்ள தீர்வுகளை திறம்பட பயன்படுத்துவதன் மூலமே காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தி புவி வெப்பமாதலை 1.5 டிகிரி செல்சியசுக்கு குறைத்து விட முடியும் என்று ஐ.பி.சி.சி. அறிக்கை கூறுகிறது," என்கிறார் லிலி ஃபூர்.

இவர், ஜெனீவாவில் இருந்து செயல்படும் சர்வதேச காலநிலை சட்ட மையம் என்ற தன்னார் தொண்டு நிறுவனத்தின் காலநிலை மற்றும் ஆற்றல் திட்ட உதவி இயக்குநராக இருக்கிறார்.

"கரியமில வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, வளி மண்டலத்தில் கலந்துவிட்ட கார்பனை சேகரித்து சேமிப்பது மற்றும் கார்பன்-டை-ஆக்சைடு நீக்கம் சிறந்த பலனைத் தரும் என்று கருதி காலநிலை மாற்ற விளைவுகளை தணிக்கும் உத்தியைக் கைவிட்டால் வளி மண்டலத்தில் அது மோசமான விளைவைத் தரும். கரியமில வாயுக்களின் அளவை அதிகரித்துவிடக் கூடும்" என்கிறார் ஃபூர்.

"ஆண்டுக்கு 200 கோடி டன் CO2 வாயுவை அகற்றுவது அவசியம்"

உலகம் முழுவதும் நீக்கப்பட வேண்டிய கார்பன்-டை-ஆக்சைடு அளவு குறித்த முதல் மதிப்பீட்டை இந்த ஆணடின் தொடக்கத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான குழு அறிக்கை அளித்துள்ளது.

ஆண்டுக்கு 200 கோடி டன் கார்பன்-டை-ஆக்சைடை நீக்க வேண்டியிருக்கும் என்கிறது அந்த அறிக்கை. அவற்றில் பெருமளவு நிலத்தில் இருந்தே அகற்றப்பட வேண்டியுள்ளது.

2022-ம் ஆண்டு படிம எரிபொருள் மற்றும் சிமெண்ட் பயன்பாட்டின் மூலம் வளி மண்டலத்தில் உமிழப்பட்ட 3660 கோடி டன் கார்பன்-டை-ஆக்சைடு என்ற அளவில் கிட்டத்தட்ட 5 சதவீதமாகும்.

ஆனால், கார்பன்-டை-ஆக்சைடு நீக்கத்தின் அளவை தற்போதுள்ளதைக் காட்டிலும் அதிகரிக்க நாடுகள் சில திட்டங்களை வகுத்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

காலநிலை மாற்ற குறிக்கோளை அடைய, கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்துதல் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை ஐ.பி.சி.சி. தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்த வழிமுறைகளில் பெரும்பாலானவை, பாரிஸ் ஒப்பந்தப்படி புவி வெப்பமாதலை 1.5 டிகிரி செல்சியஸ் அல்லது 2 டிகிரி செல்சியசுக்கும் கீழே குறைக்கும் இலக்கை அடைவதற்கு கார்பன் நீக்கமும் அவசியம் என்று கூறுகின்றன.

ஐ.நா. மாநாட்டில் நாடுகள் அளித்த உறுதிமொழியை முழுமையாக செயல்படுத்தினால் 2100-ம் ஆண்டில் பூமி 2.4 டிகிரி செல்சியஸ் வெப்பமடையும். அதேநேரத்தில், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கொள்கைகளை மட்டும் அந்த நாடுகள் தொடர்ந்தால் 2100-ம் ஆண்டில் பூமி 2.8 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பமாகும்.

இந்த இலக்கை எட்டுவதற்கு எவ்வளவு கார்பன் நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதை கார்பன் உமிழ்வு எந்த அளவுக்கு கட்டுப்படுத்தப்படுகிறது என்பதைக் கொண்டே தீர்மானிக்க முடியும். இதுவே, நீக்கப்பட வேண்டிய கார்பன்-டை-ஆக்சைடு அளவை துல்லியமாக தீர்மானிப்பதை சவாலான ஒன்றாக்குகிறது. கார்பன்-டை-ஆக்சைடு நீக்கத்தைக் குறைக்க வேண்டும் என்றால், கார்பன் உமிழ்வை கணிசமாகவும், துரிதமாகவும் குறைப்பது அவசியம்.

ஐ.பி.சி.சி. அறிக்கையின் சில கணிப்புகள் 'கிளைமேட் ஓவர்ஷூட்' இருக்கக் கூடும் என்றே குறிப்பிடுகின்றன. அதாவது, 1.5 டிகிரி செல்சியஸ் என்ற இலக்கை எட்டுவதற்கு முன்பாக சில காலம் பூமியின் வெப்பம் அதைக் காட்டிலும் அதிகமாக இருக்கக் கூடும். பூமியின் வெப்பநிலையைக் குறைப்பதில் கார்பன்-டை-ஆக்சைடு நீக்கம் தேவைப்படலாம் என்று ஐ.பி.சி.சி. கூறுகிறது.

கார்பன்-டை-ஆக்சைடு நீக்கம் என்றால் என்ன?

கார்பன்-டை-ஆக்சைடு நீக்கம் என்பது எதிர்மறை உமிழ்வு என்றும் கூறப்படுகிறது.

இதன்படி, மனிதர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வளி மண்டலத்தில் இருந்து கார்பன்-டை-ஆக்சைடை நேரடியாக நீக்கப்படும் அல்லது காடுகள் போன்ற இயற்கையான அமைப்புகளை பயன்படுத்தி அதனை சாதிக்க முடியும்.

நம் முன்னுள்ள வாய்ப்புகள் என்ன?

வளி மண்டலத்தில் இருந்து கார்பன்-டை-ஆக்சைடை நீக்க நம்மிடையே பலதரப்பட்ட வழிமுறைகள் உள்ளன. ஆனாலும், மிகப்பெரிய அளவில் கார்பன்-டை-ஆக்சைடை நீக்க எந்தவொரு தொழில்நுட்ப அணுகுமுறையும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

ஆக்ஸ்போர்டுபல்கலைக் கழகத்தின் கார்பன்-டை-ஆக்சைடு நீக்க மதிப்பீட்டின்படி, பல்வேறு தொழில்நுட்பங்களால் சாத்தியமாகும் கார்பன் உமிழ்வு குறைவை கீழ்க்காணும் வரைபடம் காட்டுகிறது.

கார்பன்-டை-ஆக்சைடை நீக்க முடியுமா?

பயோஆற்றலுடன் கார்பன் சேகரித்தல் மற்றும் சேமித்தல் (CCS)

பயோஎனர்ஜியுடன் கார்பன் சேகரித்தல் மற்றும் சேமித்தல் (CCS) வழிமுறைதான் ஐ.பி.சி.சி. அறிக்கையில் கூறப்பட்டுள்ள மிக முக்கியமான தொழில்நுட்ப வழிமுறையாகும்.

இதன்படி, கார்பன்-டை-ஆக்சைடை எடுத்துக் கொள்ளும் மரங்கள் வளர்க்கப்பட்டு, பின்னர் அவை ஆலையில் எரிக்கப்பட்டு ஆற்றல் பெறப்படுகிறது. அதேநேரத்தில், ஆலையின் உமிழ்வுகள் அப்படியே சேகரிக்கப்பட்டு, பூமிக்கடியில் நிரந்தரமாக சேமிக்கப்பட்டுவிடும்.

நேரடி காற்று சேகரித்தல் (DAC)

வளி மண்டலத்தில் இருந்து கார்பன்-டை-ஆக்சைடை நீக்குவதற்காக அதிகம் பேசப்படும் மற்றொரு வழிமுறை நேரடி காற்று சேகரித்தல் (DAC). இதன்படி, வளி மண்டலத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடு வாயு சில கருவிகள் மூலம் நேரடியாக உறிஞ்சப்படும்.

சி.சி.எஸ். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த கார்பன்-டை-ஆக்சைடை நிரந்தரமாக பூமிக்கடியில் சேமித்து வைத்துவிட்டால், நிகர கார்பன் உமிழ்வு எதிர்மறையாகிவிடும் அதாவது குறைந்து விடும். 2020-க்கும் 2022-க்கும் இடைப்பட்ட காலத்தில் பெரும்பாலான முதலீடுகள் இந்த திட்டத்தின் கீழ் செய்யப்பட்டுள்ளன.

பயோக்கர் வழிமுறை (Biochar)

கார்பன்-டை-ஆக்சைடு நீக்கத்திற்கு பயோக்கர் வழிமுறையைப் பயன்படுத்துவது மரங்கள் அல்லது தாவரங்கள் பயன்பாட்டை உள்ளடக்கியது.

வளரும் போது கார்பன்-டை-ஆக்சைடை எடுத்துக் கொள்ளும் அந்த தாவரங்கள் ஆக்சிஜன் அற்ற சூழலில் வெப்பப்படுத்தப்பட்டு கருப்பு நிறத்தில் கார்பனை மட்டுமே பிரதானமாகக் கொண்ட நிலக்கரி போன்ற பொருள் தயாரிக்கப்படும்.

இதனை மண்ணுடன் கலந்துவிடுவதன் மூலம் கார்பனை வளிமண்டலத்தில் இல்லாமல் செய்துவிடலாம்.

மேம்படுத்தப்பட்ட பாறை காலநிலை சமப்படுத்துதல் (Enhanced rock weathering)

மேம்படுத்தப்பட்ட பாறை காலநிலை சமப்படுத்தல் (Enhanced rock weathering) என்ற வழிமுறையும் வளி மண்டலத்தில் இருந்து கார்பனை வெளியேற்ற முன்மொழியப்பட்டுள்ளது.

இதன்படி, பேசால்ட் போன்ற சிலிகேட் பாறைகள் பெரிய அளவில் நிலத்தில் பரப்பப்படும். பாறைகள் காலநிலையை சமப்படுத்தும் இயற்கையான செயல்பமுறையை அப்படியே பிரதிபலிக்கும் இந்த செயல்முறையால் பெருங்கடல்களின் மேற்பரப்பில் பயோகார்பனேட் வடிவில் கார்பன்-டை-ஆக்சைடு வாயு சிறைப்படும்.

பெருங்கடல் அல்கலனைசேஷன்

கார்பன்-டை-ஆக்சைடை நீக்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

கடைசியாக, பெருங்கடல் அல்கலனைசேஷன் என்ற வழிமுறை முன்மொழியப்பட்டுள்ளது.

இதன்படி, பெருங்கடல்களில் சிலிகேட் அல்லது கார்பனேட் பாறைகள் போன்ற அல்கலின் பொருட்களை சேர்த்து, கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சும் அதன் செயல்முறையை அதிகப்படுத்தப்படும்.

இதேபோல், ஓஷன் பெர்டிலைசேஷன் என்ற செயல்முறை மூலம் பெருங்கடல்களில் பைட்டோபிளாங்டான் வளர்ச்சியைத் தூண்டுவதால் கார்பன் -டை-ஆக்சைடு அளவைக் கட்டுப்படுத்த முடியும்.

வழிமுறைகள் புதிது, ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன

கார்பன்-டை-ஆக்சைடு நீக்கத்திற்கான இந்த வழிமுறைகளை பெரிய அளவில் பேசப்பட்டாலும், யதார்த்த சூழலில் இந்த புதுமையான செயல்முறைகள் ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றன.

மேலே குறிப்பிட்ட அனைத்து வழிமுறைகளும் இணைந்தால் கூட, ஆண்டுக்கு 20 லட்சம் டன் கார்பன்-டை-ஆக்சைடை மட்டுமே நீக்க முடியும் என்று ஆக்ஸ்போர்டு நெட் ஜீரோ அமைப்பின் செயல் இயக்குநர் ஸ்டீவ் ஸ்மித் கூறுகிறார்.

2022-ம் ஆண்டு உலகளாவிய படிம எரிபொருள் மற்றும் சிமெண்ட் பயன்பாட்டால் உமிழப்பட்ட கரியமில வாயுக்களின் அளவில் வெறும் 0.005 சதவீதம் மட்டுமே.

மேற்கூறிய செயல்முறைகள் மூலம் கார்பன்-டை-ஆக்சைடு நீக்கத்தின் அளவு 2050-ம் ஆண்டு வாக்கில் 4 முதல் 6 மடங்கு அதிகரித்தால் மட்டுமே பாரிஸ் ஒப்பந்த இலக்கை எட்ட முடியும் என்று மதிப்பீடு கூறுகிறது.

சுற்றுச்சூழல் அமைப்புகளை சீரமைத்தாலே 99.9% இலக்கை அடைந்துவிடலாம்

ஆனால், கார்பனை சேகரிக்கவும், சேமிக்கவும் ஏற்கனவே பரவலாக பயன்பாட்டில் இருக்கும் வேறு பல வழிமுறைகள் இருப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உண்மையில், 200 கோடி டன் கார்பன்-டை-ஆக்சைடு நீக்குதல் இலக்கில் 99.9 சதவீதத்தை நிலத்தை நாம் கையாளும் விதத்தின் மூலமே அடைந்துவிட முடியும். குறிப்பாக, வனத்தின் பரப்பளவை அதிகரிப்பதன் மூலமாக அதனை சாதிக்க முடியும். அத்துடன், கார்பனை அதிக அளவில் சேமிக்கக் கூடிய ஈர நிலம் மற்றும் சதுப்பு நிலங்கள் போன்ற சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுக்க வேண்டும்.

இத்தகைய சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதன் மூலம் இரண்டு வித பலன்களைப் பெறலாம். காலநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளை தடுப்பதுடன், பல்லுயிர் பெருக்கத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியையும் சமாளிக்கலாம்.

கார்பன்-டை-ஆக்சைடை நீக்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

கார்பன் நீக்கத்திற்கான எல்லைகள்

இந்த இயற்கையான வழிமுறைகளால் எந்த அளவுக்கு கார்பனை சேகரிக்க முடியும் என்பதற்கும் சில வரம்புகள் உள்ளன. மரங்களே நம்மைக் காப்பாற்றிவிடும் என்று மிதமிஞ்சிய நம்பிக்கை கொள்ளக் கூடாது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

மரங்களால் மட்டுமே காலநிலை மாற்ற விளைவுகளை தனியாளாக சீர்செய்துவிட முடியாது என்பது அவர்களின் கருத்து. சுற்றுச்சூழல் அமைப்புகள் மறுசீரமைப்பு மூலம் கிடைக்கும் தீர்வு நிரந்தரமானதாக இல்லாமல் போகவும் வாய்ப்புகள் உண்டு. ஏனெனில், வெப்பநிலை உயரும் போது, அவை சேமித்து வைத்துள்ள கார்பன்-டை-ஆக்சைடு வளிமண்டலத்தில் வெளியேற்றப்படலாம்.

புது வழிமுறைகளில் பிரச்னைகள் என்ன?

புதுமையான வழிமுறைகள் பலவற்றிலும் சில பிரச்னைகள் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

உதாரணமாக, பெருங்கடல் அல்கலனைசேஷன், பெர்டிலைசேஷன் ஆகிய செயல்முறைகள் கடல்களின் சுற்றுச்சூழலை பாதித்து ஆபத்தானதாக மாறலாம். அதனால் இந்த செயல்முறை பயன்படாமலேயே போகலாம்.

சிசிஎஸ் வழிமுறையை செயல்படுத்த மிகப்பரந்த நிலப்பரப்பு பயோஎனெர்ஜி பயிர்களுக்கென மாற்றப்பட வேண்டும், இது உணவு முறைகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதிக்கலாம்.

பயோக்கர் உற்பத்திக்கு தேவைப்படும் பெரிய அளவிலான நிலத்திற்கும் இதே போன்ற கவலைகள் உள்ளன (பரந்த அளவிலான பயோசார் பயன்பாட்டின் நீண்டகால தாக்கங்களும் தெரியவில்லை), மேலும் பயோசார் உற்பத்திக்குத் தேவையான அதிக வெப்பநிலைக்கு நிறைய ஆற்றல் தேவைப்படுகிறது.

கார்பன்-டை-ஆக்சைடை நீக்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

பயோக்கர் வழிமுறையிலும் இதேபோன்ற சவால்கள் இருக்கவே செய்கின்றன. பயோக்கர் தயாரிப்புக்கு ஏராளமான நிலம் தேவைப்படும். (பெரிய அளவில் பயோக்கர் வழிமுறை பயன்படுத்தப்படும் போது அதன் நீண்ட கால விளைவுகள் என்ன என்பது இன்னும் தெரியவில்லை.) பயோக்கர் தயாரிப்புக்கு அதிக வெப்பநிலை அவசியம் என்பதால் ஏராளமான ஆற்றலும் தேவையாக இருக்கிறது.

மேம்படுத்தப்பட்ட பாறைகள் மூலம் காலநிலை சமப்படுத்துதல் வழிமுறைக்கும் பாறைகளை தூளாக்க ஏராளமான ஆற்றல் தேவை. அதற்கு அதிக செலவு பிடிக்கக் கூடும்.

சிசிஎஸ் வழிமுறையுடன் கூடிய, நேரடி காற்று சேகரித்தலும் அதிக ஆற்றல் தேவைப்படக் கூடிய, அதீத செலவு பிடிக்கக் கூடிய செயல்முறைதான் என்பதால் அதனை விரிவான அளவில் செயல்படுத்துவது கடினம். ஆனால், இதனை மலிவான செயல்முறையாக மாற்றும் புதிய செயல்முறையைக் கண்டுபிடிக்க சில விஞ்ஞானிகள் முயல்கின்றனர்.

உலகம் முழுவதும் சிசிஎஸ் வழிமுறைக்கான வசதிகள் அதிகரித்து வரும் அதேவேளையில், கார்பனை சேமிக்கும் வசதி இன்னும் பெரிய அளவில் பெற முடியவில்லை. தற்போதைய நிலையில், தேவையைக் காட்டிலும் மிகவும் குறைவான அளவே அந்த வசதி இருப்பதாக ஐ.பி.சி.சி. அறிக்கை கூறுகிறது.

இருப்பினும், 2100ம் ஆண்டில் புவி வெப்பமாதலை 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த தேவையான கார்பன்-டை-ஆக்சைடு சேமிப்புக்குத் தேவையான புவியியல் சேமிப்புத் திறன் தொழில்நுட்பம் போதுமான அளவில் இருப்பதாக ஐ.பி.சி.சி. கூறுகிறது.

கார்பன் சேகரித்தல் ஒருபோதும் கார்பன்-டை-ஆக்சைடை நீக்காது, ஏன்?

மேற்கூறிய தொழில்நுட்பங்கள் சில வகைகளில் பயன்படுத்தப்படும் போது எதிர்பார்க்கும் பலனைத் தருவதில்லை. நேரடி காற்று சேகரித்தல் அல்லது பயோஆற்றல் மூலம் வளி மண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடு சேகரிக்கப்பட்டு, பின்னர் எரிபொருளாகவோ அல்லது மற்ற பொருட்களுக்கு பயன்படுத்தும் போதோ, கார்பன்-டை-ஆக்சைடு மீண்டும் வளிமண்டலத்தில் சேர்ந்துவிடும்.

இதனால், வளி மண்டலத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடின் அளவு அப்படியே இருக்கும். 'கார்பன் சமநிலை' அப்படியே நீடிக்கும். சிசிஎஸ் போல நீண்ட காலம் அப்படியே சேமித்து வைக்கப்பட்டால் மட்டுமே கார்பன் நீக்கத்திற்கு வழிவகுக்கும்.

அதேபோல், கார்பன்-டை-ஆக்சைடை சேமித்து வைக்கும் சிசிஎஸ் வழிமுறை, வளி மண்டலத்தில் இருந்து கார்பன்-டை-ஆக்சைடை முற்றிலுமாக இல்லாமல் போகச் செய்வதில்லை. ஆக்சிஜன் இல்லாமல் பயோஎரிபொருளை எரிக்கும் போது வெளியாகும் உமிழ்வுகள் நேரடியாக வளி மண்டலத்தில் கலப்பதை மட்டுமே அது தடுக்கிறது.

கார்பன்-டை-ஆக்சைடை நீக்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காலநிலை மாற்றப் போராளி கிரெட்டா தன்பெர்க்

கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்துவதும் அவசியம்

காலநிலை மாற்றத்தை தடுப்பதில் எதிர்காலத்தில் கார்பன் நீக்கம் தேவை என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்தாலும் கூட, 2030-ம் ஆண்டு வரையிலான மிகப்பெரிய இடைவெளியை சரிக்கட்ட கரியமில வாயு உமிழ்வை கட்டுப்படுத்தியே தீர வேண்டும் என்று ஸ்மித் கூறுகிறார்.

காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான புதிய கொள்கைகள் இல்லாத சூழலில், 2020 முதல் 2030 வரையிலான கால கட்டத்தில் உலகளாவிய கார்பன் உமிழ்வு கிட்டத்தட்ட ஒரே அளவில் நிலையாக வந்திருக்கிறது. அதன் பிறகு நீண்ட கால நோக்கில் கார்பன்-டை-ஆக்சைடு நீக்கம் மிகவும் முக்கியமான ஒன்று என்று அவர் கூறுகிறார்.

ஐ.பி.சி.சி. அறிக்கைக்கு பதிலளித்த காலநிலை மாற்றப் போராளி கிரெட்டா தன்பெர்க், காலநிலை நெருக்கடியைத் தணிக்க நடவடிக்கை எடுக்கத் தவறிய அதிகாரத்தில் இருப்பவர்களின் போக்கு 'முன்னெப்போதும் இல்லாத துரோகம்' என்று வர்ணித்தார்.

துரதிர்ஷ்டவசமாக, கார்பன் உமிழ்வைக் குறைப்பதன் மூலமே காலநிலை மாற்றத்தை சரிசெய்து விடும் முதல் கட்டத்தைக் காட்டிலும், மிகவும் கடினமான மற்றும் ஆபத்தான வழிமுறைகளைப் பயன்படுத்தி முந்தைய சேதத்தை தவிர்க்க வேண்டிய கட்டத்திற்குள் உலகம் இப்போது நுழைகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: