கோவையில் 117 செங்கல் சூளைகள் மூடப்பட்டதால் சுத்தமாகும் 'தடாகம்' - ஐகோர்ட் உத்தரவுக்குப் பின் நடப்பது என்ன?

கோவை மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த 177 செங்கல் சூளைகளை மூடுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து செங்கல் சூளைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல் சூளைகள் தொடர்பாக நீதிமன்ற உத்தரவு செயல்படுத்தப்படுகிறதா என்பதை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரில் வந்து ஆய்வு செய்வதாகத் தெரிவித்திருந்தனர்.
செங்கல் சூளைகளுக்கு சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில் என்ன நடந்தது?
கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் செங்கல் சூளைகள் உரிய அனுமதி இல்லாமல் இயங்கி வருவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து சின்னதடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம் மற்றும் பன்னிமடை கிராமங்களில் இயங்கி வந்த 177 செங்கல் சூளைகள் உரிய அனுமதி பெறாமல் இயங்கியதாக, கடந்த 2021ஆம் ஆண்டு மூடப்பட்டன.
இந்தத் தடை உத்தரவை எதிர்த்து செங்கல் சூளை உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். கோவை மாவட்ட செங்கல் சூளை தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்திலும் தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்திலும் நிலுவையில் உள்ளன. செங்கல் சூளைகள் யானைகளின் வழித்தடத்தில் அமைந்துள்ளது என்பது தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம், தீர்ப்பாய உத்தரவுகள்
செங்கல் சூளைகள் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது பசுமைத் தீர்ப்பாயம். அதில் செங்கல் சூளைகளால் தடாகம் பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் வெவ்வேறு அரசுத் துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்திருந்தது.
இந்தக் குழு கோவை மாவட்டத்தில் 565 இடங்களில் ஜி.பி.எஸ் முறையில் சோதனை நடத்தியது. அதில் செங்கல் சூளை உரிமையாளர்கள் அவற்றை இயக்குவதற்கான உரிய அனுமதிகள் பெறவில்லை மற்றும் நீர்நிலைகள், ஆற்றங்கரையோரங்களில் செங்கல் சூளைகள் இயங்கி வந்துள்ளன என்பதை நிருவி அறிக்கை சமர்பித்துள்ளது
மேலும், அதில் 177 செங்கல் சூளைகளில் சுமார் 1.10 கோடி ரூபாய் கன மீட்டர் செங்கற்கள் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டுள்ளதாக தீர்மானித்து 373 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மேலும் செங்கல் சூளைகளால் தடாகம் பகுதியில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு இழப்பீடாக 59.32 கோடி ரூபாய் விதிக்கப்பட்டிருந்தது.
இந்த அபராதம் இடைக்காலமானது என்றும் செங்கல் சூளைகளால் எடுக்கப்பட்டுள்ள மொத்த செங்கற்களின் அளவு முழுமையாக ஆராயப்பட வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அபராதத்தை எதிர்த்தும் செங்கல் சூளை உரிமையாளர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர்.
அதேநேரம் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கனிமவளத் துறை ஆணையர், "செங்கல் சூளைகள் அபராதம் செலுத்திவிட்டு இயங்கலாம்" என உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவுக்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அதை ரத்து செய்தது.
செங்கல் சூளைகளுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்புகளை முழுமையாகத் துண்டிக்க வேண்டும் என மின்சாரத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதில் கால தாமதம் ஏற்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
இந்தப் பின்னணியில்தான் செங்கல் சூளைகள் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதிகள் சதீஷ் குமார், பரத சக்கரவர்த்தி ஆகியோர் தடாகம் பகுதிக்கு நேரில் வந்து பார்வையிடப் போவதாகத் தெரிவித்துள்ளனர். நீதிபதிகள் தடாகத்திற்கு வரும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
செங்கல் சூளைகளை மூடியதால் நிலைமை முன்னேறியுள்ளதா?

செங்கல் சூளைகளை மூடிய பிறகு தடாகத்தில் சுற்றுச்சூழல் நிலைமை முன்னேறியுள்ளதாகத் தெரிவிக்கிறார் தடாகத்தைச் சேர்ந்த மருத்துவர் ரமேஷ்.
பிபிசி தமிழிடம் பேசியவர், “கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி செங்கல் சூளைகள் மூடப்பட்டன. செங்கல் சூளைகள் இயங்கி வந்த கிராமங்கள் கோவை வனக்கோட்டத்தில் ஏழு வனப்பிரிவுகளின் கீழ் வருகின்றன.
வனத்துறை தரவுகளின்படி செங்கல் சூளைகள் மூடப்படுவதற்கு முன்பு 2015 - 2020 வரை கோவை மாவட்டத்தில் இந்த வனப் பிரிவுகளில்தான் அதிக அளவிலான யானை-மனித எதிர்கொள்ளல் மற்றும் அதனால் ஏற்படும் மரணங்கள் பதிவாகியுள்ளன. செங்கல் சூளைகள் மூடப்பட்ட பிறகு இந்த மோதல்கள் மொத்தமாகக் குறைந்தன. உயிரிழப்புகள் என்பதே தற்போது இல்லை.
டிசம்பர் 29ஆம் தேதி செங்கல் சூளைகள் அபராதம் செலுத்திவிட்டு இயங்கலாம் என கனிமவளத் துறை அனுமதி அளித்த பிறகு யானை - மனித எதிர்கொள்ளல் மீண்டும் தொடங்கியது.
மார்ச் 2ஆம் தேதி மாங்கரை மற்றும் ஆனைக்கட்டியில் யானை தாக்கி இருவர் உயிரிழந்தனர். மார்ச் 8ஆம் தேதி சோமையனூரில் யானை ஒருவரைத் தாக்கியது. செங்கல் சூளைகள் மீண்டும் இயங்கத் தொடங்கியதால் ஏற்பட்டதன் விளைவு இது.
கனிமவளத் துறையின் உத்தரவு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த குழு சமர்ப்பித்த அறிக்கையிலும் விதிக்கப்பட்ட அபராதம் இடைக்காலமானது என்றுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையான பாதிப்புகள் பல ஆயிரம் கோடி வரை இருக்கும்,” என்றார்.

தற்போதைய நிலை என்ன?
செங்கல் சூளைகள் மூடப்பட்டுள்ளதால் அப்போது வரை தயாரிக்கப்பட்ட செங்கற்களும் தற்போது அங்கேயே தான் உள்ளன.
“செங்கல் சூளைகளுக்கான வணிக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டாலும் வீட்டு இணைப்புகள், ஜெனரேட்டர்களை பயன்படுத்தி சில இடங்களில் அவை இயங்கி வருகின்றன. மேலும் மின் இணைப்பை முழுமையாகத் துண்டிக்க அதிகாரிகள் சுணக்கம் காட்டுகின்றனர்,” என்கிறார் தடாகத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கணேஷ்.
செங்கல் சூளை உரிமையாளர்கள் கனிம வளத் துறைக்கு அபராதம் செலுத்திவிட்டு சுட்ட செங்கற்களை எடுத்துக் கொள்ளலாம், ஆனால் பச்சை செங்கற்களை எடுக்கக்கூடாது என பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
“செங்கல் சூளைகள் இயங்கியதே சட்டவிரோதமானது என்கிறபோது அங்குத் தயாரிக்கப்பட்ட செங்கற்களை மட்டும் எப்படி எடுத்துக் கொள்ள அனுமதிக்க முடியும்,” என்கிறார் கணேஷ்.
செங்கல் சூளைகளுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே நேரம் செங்கல் சூளைகள் மூடப்பட்டதால் தடாகம் பகுதியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக செங்கல் சூளை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக தடாகம் பகுதியில் செங்கல் சூளைகளில் வேலை பார்த்தவர்களையும் அதன் உரிமையாளர்களையும் நேரில் சந்தித்துப் பேசினோம்.
கோவை மாவட்ட செங்கல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பழனிசாமி பிபிசி தமிழிடம் பேசுகையில், “செங்கல் சூளைகள் பற்றி தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். இரண்டு ஆண்டுகளாக எந்த உற்பத்தியும் நடைபெறவில்லை. ஆனால் மின்சாரம் எடுத்து சூளைகளை இயக்குவதாக ஆதாரம் இல்லாமல் கூறுகிறார்கள்," என்று கூறினார்.
அதிகாரிகள் செங்கல் சூளை இணைப்புகளை மட்டுமில்லாது வீட்டு இணைப்புகளையும் துண்டித்துவிட்டதாகக் குற்றம் சாட்டுவதாகக் கூறிய அவர், "செங்கல் சூளைகள் மூடப்பட்டதால் அதை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். செங்கல் சூளை உரிமையாளர்கள் பல லட்சம் கடனில் உள்ளார்கள். மேம்போக்காக விசாரிக்காமல் சரியாக விசாரித்து செங்கல் சூளைகளை மீண்டும் இயக்க அனுமதி வழங்க வேண்டும்,” என்றார்.
மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட பால்ராஜ் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கோவைக்கு இடம்பெயர்ந்தார். அவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, “விவசாயத்தில் வேலை இல்லாததால்தான் இங்கு செங்கல் சுடும் வேலைக்கு வந்தோம். செங்கல் சூளைகளை மூடிய பிறகு இங்குள்ளவர்களுக்கு வேறு வேலை இல்லை. ஆண்கள் கிடைத்த வேலைகளைச் செய்து வருகிறார்கள். பெண்கள் வீட்டு வேலைகளுக்குச் செல்கிறார்கள். ரேஷன் பொருட்களை நம்பித்தான் இருக்கிறோம். எங்கள் வாழ்வாதாரத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்,” என்றார்.
தடாகத்தைச் சேர்ந்த பாப்பாத்தி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செங்கல் சூளைகளில் வேலை செய்து வருகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், “இந்தப் பகுதிகளில் செங்கல் சூளைகள் மட்டும்தான் இருந்தன. அதைத் தவிர்த்தால் வேறு வேலைவாய்ப்புகள் இல்லை.
அதனால் பெண்கள் வீட்டு வேலைக்கும், ஹோட்டலில் தூய்மை பணிக்கும் கோவைக்குத்தான் சென்று வருகின்றனர். காலை சென்று மாலை திரும்பினால் 250, 300 ரூபாய் சம்பளம் கிடைக்கும். வயதானவர்களால் அதுவும் முடியாது. மாற்று வேலை, வருமானம் இல்லாமல் தவித்து வருகிறோம்,” என்றார்.

தடாகத்தில் மாசுபாடு குறைந்துள்ளது
செங்கல் சூளைகளை மூடிய பிறகு தடாகத்தில் மாசுபாடு குறைந்துள்ளதாகத் தெரிவிக்கிறார் விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் ரங்கராஜ்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “தூசி மாசுபாடு காரணமாக இங்கு முதியவர்கள், குழந்தைகளுக்கு சுவாசப் பிரச்னை இருந்து வந்தது. மரங்கள், பயிர்கள் எல்லாம் தூசியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வந்தன. தற்போது செங்கல் சூளைகள் மூடப்பட்ட பிறகு இந்த பாதிப்புகள் குறைந்துள்ளன.
செங்கல் சூளைகளுக்காக அதிக அளவில் மணல் எடுக்கப்பட்டதால் மழை பெய்தாலும் நீரோடைகளில் தண்ணீர் தங்குவதில்லை. தற்போது நீரோடைகளில் தண்ணீர் தங்குவதைக் காண முடிகிறது. செங்கல் சூளைகள் நிறுத்தப்பட்டதால்தான் தடாகம் பள்ளத்தாக்கில் பசுமை திரும்பியுள்ளது,” என்றார்.
கோவை மாவட்ட செங்கல் சூளை தொடர்பாக வழக்குகள் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












