விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய புகாரில் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியை காப்பாற்ற முயல்கிறதா காவல்துறை? பிபிசி கள நிலவரம்

அம்பாசமுத்திரம், காவல்துறை
    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல் நிலையங்களில் குற்ற சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்படுவோரின் பற்களை கட்டிங் பிளையர் கொண்டு பிடுங்கி சித்ரவதை செய்ததாக, அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங்க்கு எதிராக வைக்கப்பட்ட குற்றச்சாட்டு அதிர்வலைகளை கிளப்பிய நிலையில் என்ன நடந்தது என்பது குறித்து பிபிசி தமிழ் விரிவாக கள ஆய்வு செய்தது.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் உள்ளிட்ட ஊர்கள் மேற்கு தொடர்ச்சி மலை அருகே அமைந்துள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் இக்கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் பலரும் பிரதான தொழிலாக விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த பகுதியில் சாதிய மோதல், முன்விரோதம் காரணமாக ஆயுதங்களுடன் தாக்கி கொள்வது, கொலை செய்வது என பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவதை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் விசாரிக்கும் போது நம்மால் அறிய முடிகிறது.

அம்பாசமுத்திரம், காவல்துறை

அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வரும் நபர்களின் பற்களை பிடுங்கியதாக அவர் மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், பற்களை பிடுங்கியதாக முதலில் சமூக ஊடகங்களில் வெளியிட்டது யார் என்பதை தெரிந்து கொள்வதற்காக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று விசாரித்தது.

அம்பாசமுத்திரம் அடுத்துள்ள அடையகருங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை சிவந்திபுரம் மற்றும் அடையகருங்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், ஒரு தலையாக காதலித்து வந்த நிலையில் அந்த பெண்ணுக்கு அடையகருங்குளம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் திருமணமாகி உள்ளது.

காதலால் தொடங்கிய மோதல்

அம்பாசமுத்திரம், காவல்துறை

திருமணமான அந்த பெண்ணின் புகைப்படத்தை சிவந்திபுரத்தை சேர்ந்த செல்லப்பாவின் நண்பர் சமூக வலைதளத்தில் தவறாக சித்தரித்து பகிர்ந்ததால் அந்த பெண்ணின் கணவர் அடையகருங்களத்தை சேர்ந்த மாரி மகேந்திரன் அவருடைய நண்பர்கள் சிலருடன் சென்று செல்லப்பா மற்றும் அவரது நண்பர்களை தாக்கியுள்ளனர். இதில் இரண்டு நபர்களுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 9ந் தேதி மீண்டும் அடையகருங்குளம் பகுதியை சேர்ந்த அருண்குமார் அவரது நண்பர்கள் கணேசன் உள்ளிட்டோர், சிவந்திபுரத்தை சேர்ந்த இசக்கி முத்து மற்றும் அவரது சகோதரர்களான செல்ல பாண்டியன், மாரியப்பன், அந்தோணி ஆகிய இரு தரப்பும் அம்பாசமுத்திரம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டிருக்கின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஏஎஸ்பி பல்வீர் சிங் தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தாக்குதலில் ஈடுபட்ட இரு தரப்பை சேர்ந்த 10 பேரையும் ஒரே ஆட்டோவில் ஏற்றி அம்பாசமுத்திரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவத்தில் இருவர் சிறுவர்கள் என்பதால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் கண்டித்து அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

விசாரணை கைதிகள் பற்களை பிடுங்கியதாக ஏஎஸ்பி மீது குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலமிற்கு உத்தரவிடப்பட்டது.

அதன் அடிப்படையில் கடந்த 4 நாட்களாக புகார் அளித்த நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு ஏஎஸ்பி பல்வீர் சிங்கை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார் என காவல்துறை சார்பில் தெரிவித்துள்ளார்.

அம்பாசமுத்திரம், காவல்துறை

"மிரட்டல் காரணமாக மாற்றிப் பேசிய சூர்யா"

சார் ஆட்சியர் நடத்திய விசாரணையில் ஆஜரான ஜமீன் சிங்கம்பட்டியை சேர்ந்த சூர்யா "காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்ற எனது பற்களை போலீசார் பிடுங்கியதாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவில் அடிப்படையில் என்னை அழைத்து விசாரித்தனர். போலீஸ் பல்லை பிடுங்கவில்லை, நான் கீழே விழுந்ததில் பல் உடைந்ததாக" விசாரணையில் கூறியதை தெரிவித்தார். போலீசார் அடித்து பல்லை பிடுங்கியதாக சமூக வலைதளத்தில் முதலில் வீடியோ வெளியிட்ட சூர்யா இவ்வாறு மாற்றி பேசியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து விளக்கம் கேட்பதற்காக சூர்யாவை தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் சூர்யாவின் சொந்த ஊரான கல்லிடைக்குறிச்சி அடுத்துள்ள ஜமீன் சிங்கம்பட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போது அவரது தாத்தா, பாட்டி மட்டும் இருந்தனர்.

பின்னர் அவரது உறவினர்களிடம் பேசும் போது போலீஸ்காரர்கள் மிரட்டல் காரணமாகத்தான் சூர்யா மாற்றி கூறியுள்ளார் என்றனர்.

ஏஎஸ்பி க்கு எதிராக விசாரணையில் சாட்சியம் அளித்தால், அதே பகுதியில் வசித்து வரும் தலித் சமூகத்தை சேர்ந்த நபர்களை சாதிய ரீதியாக அவர் திட்டிய வீடியோ போலீசாரிடம் இருப்பதாகவும், அந்த வீடியோ காட்சிகள் அடிப்படையில் சூர்யா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று பாபநாசத்தில் உள்ள தனியார் விடுதி அறையில் வைத்து போலீசார் மிரட்டியதால்தான் சூர்யா மாற்றி சாட்சி அளித்ததாக ஏஎஸ்பி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ள வழக்கறிஞர் மகாராஜா தெரிவிக்கிறார்.

யார் இந்த பல்வீர் சிங்?

அம்பாசமுத்திரம், காவல்துறை

பல் பிடுங்கியதாக குற்றம்சாட்டப்படும் ஏஎஸ்பி பல்வீர் சிங் ஹரியாணா மாநிலத்தை சேர்ந்தவர். இவரது தந்தை மத்திய அரசில் பணியாற்றி வருகிறார்.

பள்ளிப்படிப்பு முதல் கல்லூரி வரை தனது சொந்த மாவட்டத்தில் முடித்துள்ளார். இதையடுத்து ஐஐடி மும்பையில் பி.டெக் மெக்கானிக்கல் எஞ்சினீயரிங் படித்திருக்கிறார்.

அதன்பிறகு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை பார்த்து வந்தார். சிவில் சர்வீஸ் தேர்வு எழுத தனி பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார். பின்னர் 2020 ஐபிஎஸ் பேட்ச் அதிகாரியாக தேர்ச்சி பெற்று நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் துணை மண்டலத்தில் பயிற்சி ஏஎஸ்பி யாக நியமிக்கப்பட்டு 5 மாதங்கள் ஆகிறது.

பல் பிடுங்கியதாக புகார் தெரிவிக்கும் இளைஞர்கள் மீது முன்னதாகவே வழக்குகள் நிலுவையில் உள்ளது. எனினும் ஏஎஸ்பி அவர்களது பற்களை பிடுங்கினாரா என உறுதியாக தெரியவில்லை என நம்மிடம் பேசிய காவலர்கள் தெரிவித்தனர்.

பல்லை பிடுங்கினால் முகத்தின் வடிவம் மாறி விடும். பல் இல்லாமல் அவரால் சரியாக பேச முடியாது, வார்த்தைகளில் தெளிவு இருக்காது. பல் இல்லாமல் வெளியில் வர கூச்சப்பட்டு வெளியில் வருவதை தவிர்த்து கொள்வார்கள் இதனால் சம்பந்தப்பட்ட நபரால் தொடர்ந்து குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் குறைந்து சட்ட ஒழுங்கு கட்டுப்படுத்தப்படும். குற்றவாளிகளை இவ்வாறு வட மாநிலங்களில் செய்வார்கள் என காவலர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

"அண்ணனின் ஆணுறுப்பை ஏஎஸ்பி நசுக்கியதால் புகார்"

பல் பிடுங்கியது தொடர்பாக முதலில் சமூக வலைதளத்தில் வீடியோ மூலம் புகார் அளித்த செல்லப்பாவை அம்பாசமுத்திரம் அடுத்துள்ள சிவந்திபுரத்தில் உள்ள அவரது கறிக்கடையில் வைத்து சந்தித்து பேசினோம்.

'ஒரு பிரச்சனை காரணமாக என்னையும் எனது அண்ணன் தம்பி என 6 பேரையும் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று ஆடைகளை கழட்ட சொல்லி என் கண் முன்னே இரண்டு அண்ணன்களின் ஆணுறுப்பை ஏஎஸ்பி இரண்டு கைகளால் பிடித்து நசுக்கினார். அது மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதன் காரணமாக தான் நான் சமூக ஊடகங்கள் மூலம் இதனை வீடியோவாக மக்கள் மத்தியில் தெரிவித்தேன். என்னுடைய பல்லை பெரிய ஜல்லி கற்களை கொண்டு அடித்து உடைத்தார். ஒரு அண்ணனுக்கு மேல் தாடையில் உள்ள ஒரு பல் மற்றொரு அண்ணனுக்கு கீழ் தாடையில் உள்ள பல்லை பிடுங்கினார். ரத்தம் சொட்ட சொட்ட பல்லை பிடிங்கியதால் தரையில் சிந்திய ரத்தத்தை எங்களையே துணியை வைத்து துடைக்க சொன்னார்" என்றார் செல்லப்பா.

அம்பாசமுத்திரம், காவல்துறை

‘உன் பல் உடையாதா?, என்ன பேஸ்ட் யூஸ் பண்ற’

அதே கறி கடையில் இருந்த அவரது தம்பி அந்தோணியிடம் கேட்ட போது, "முதலில் எனது பல்லை ஜல்லி கல்லால் இருமுறை அடித்தார் பல் உடைய வில்லை. உடனே ஏஎஸ்பி 'நீ என்ன பேஸ்ட் யூஸ் பண்ணற' என கேட்டார். ஹிந்தியில் ஏதோ கூறினார் அது எனக்கு புரியவில்லை பின்னர் இரண்டு முறைக்கு மேல் எனது பல்லை கல்லால் அடித்ததில் பல் தெறித்து விட்டது. இன்று வரை என்னால் உணவருந்த முடியவில்லை. 'பல் இல்லாத என்னை எந்த பொண்ணு சார் கல்யாணம் பண்ணும்' என்றார் அந்தோணி.

‘சார் ஆட்சியர் விசாரணையில் நம்பிக்கை இல்லை’

அம்பாசமுத்திரம், காவல்துறை

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பாதிக்கப்பட்டோர் சார்பில் வழக்கு பதிவு செய்துள்ள வழக்கறிஞர் மகாராஜா, "தற்போது சார் ஆட்சியர் தலைமையில் நடைபெறும் விசாரணையில் எங்களுக்கு திருப்தி இல்லை" என்று கூறினார்.

"இவர்கள் இருவருக்கும் இடையே பல நாட்களாக நட்பு இருந்து வந்துள்ளது. இருவரும் குடும்ப ரீதியாக நண்பர்களாக இருந்து வருவதுடன் வார விடுமுறை நாட்களில் பாபநாசம் உள்ளிட்ட மலைப்பகுதிக்கு சென்று குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்து வந்தவர்கள். இப்படி இருக்கையில் எப்படி விசாரணை நேர்மையாக நடக்கும்?"

"உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி விசாரித்தால் மட்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும். மேலும் பாதிக்கப்பட்டதாக புகார் தெரிவித்த நபர்களுக்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் இல்லையெனில் சூர்யா போன்று போலீசாரால் அச்சுறுத்தப்பட்டு சாட்சியை மாற்றி விடுவார்கள் எனவே அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்" என வழக்கறிஞர் மகாராஜா கேட்டுக்கொண்டார்.

ஏஎஸ்பி க்கு ஆதரவாக டிஜிட்டல் பேனர்

அம்பாசமுத்திரம், காவல்துறை

அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார சில கிராமங்களில் திடீரென ஏஎஸ்பி பல்வீர் சிங்குக்கு ஆதரவாக கிராம மக்கள் சிலர் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதுடன் டிஜிட்டல் பேனர்கள் வைத்தனர்.

ஏஎஸ்பி க்கு ஆதரவாக டிஜிட்டல் பேனர் வைத்திருந்த ஓ.துலுக்கப்பட்டி கிராமத்திற்கு பிபிசி தமிழ் சென்று விசாரிக்கையில், 'தமிழக முதல்வரின் கவனத்திற்கு, பல்வீர் சிங்கை மீண்டும் அம்பாசமுத்திரம் பகுதியில் பணியில் அமர்த்தி ஊர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்' என அச்சிடப்பட்ட டிஜிட்டல் பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

டிஜிட்டல் பேனர் வைத்திருந்த இடத்துக்கு எதிரே உள்ள வீட்டில் பேனர் குறித்து கேட்டதற்கு 'யார் வைத்தார்கள் என தெரியவில்லை. அந்த பேனரில் உள்ள நபர் யார் என்றே தெரியாது' என ஏஎஸ்பி யின் புகைப்படத்தை பார்த்து தெரிவித்தார்.

மேலும் அதே ஊரில் உள்ள இசக்கி என்பரிடம் கேட்டதற்கு, "எங்கள் ஊரை சேர்ந்த நபர் ராணுவத்தில் பணியாற்றி இறந்து விட்டதால் அவர் நினைவாக இந்த பேனர் வைத்திருப்பதாக பேனரில் உள்ள புகைப்படத்தை பார்த்து நினைத்தேன். இந்த டிஜிட்டல் பேனருக்கும் கிராம மக்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. யாரோ ஒருவர் தன்னிச்சையாக முடிவெடுத்து இவ்வாறு டிஜிட்டல் பேனர் வைத்துள்ளனர்" என்றார்.

இது குறித்து டிஜிட்டல் பேனர் வைத்த நபரிடம் கேட்கும் போது, "எங்கள் கிராம மக்கள் 70 சதவீதம் மும்பையில் வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் கோவில் திருவிழாவுக்கு மட்டும் வருடத்திற்கு ஒரு முறை வருவார்கள். அதே போல் இந்த ஆண்டு திருவிழாவுக்கு வந்த போது ஏஎஸ்பியை சந்தித்தனர். கிராம மக்கள் மும்பையில் இருப்பதால் ஹிந்தி நன்றாக பேசுவார்கள் ஏஎஸ்பியும் ஹிந்தி பேசுவதால் எங்கள் கோயில் திருவிழாவில் கலந்து கொண்டு அடுத்த தலைமுறைகள் குற்றச் சம்பவங்களில் ஈடுபடாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கேட்டு கொண்டார். குற்றச் சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் எனவும், மிகவும் எளிமையாக பேசி நடந்து கொண்டதால் இந்த டிஜிட்டல் பேனர் கோவில் இளைஞர் அணி சார்பில் வைத்தோம்." என்று கூறினார்.

பல்லை பிடுங்கினால் குற்றம் குறையுமா?

அம்பாசமுத்திரம், காவல்துறை

இதனிடையே பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காவல் துறை சித்திரவதைக்கு எதிரான அனைத்து அரசியல் கட்சியைச் சார்ந்த கூட்டமைப்பினர் பல்வேறு ஆய்வுகளை சம்பவம் நடைபெற்ற இடங்களிலும் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி முதற்கட்ட அறிக்கையை தயார் செய்துள்ளனர்.

இது குறித்து மக்கள் கண்காணிப்பு குழு மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதம் பிபிசி தமிழிடம் பேசுகையில், அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் திட்டமிட்டே சிசிடிவி பொருத்தப்படாத காவல் நிலையங்களுக்கு அழைத்து சென்று கைதிகளை சித்திரவதை செய்துள்ளார். மக்கள் கண்காணிப்பு குழு சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நெல்லை மாவட்டத்தில் புகார் எழுந்துள்ள காவல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் வீடியோக்களை கேட்டுள்ளோம். வீடியோ தருவதாக சொன்ன காவல்துறை இதுவரை தரவில்லை. துறை ரீதியாக காவலர்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் மாவட்ட காவல்துறை செயல்படுவதாக தெரிகிறது.

பல் பிடுங்கியதாக புகார் தெரிவித்துள்ள இசக்கி முத்து, செல்லப்பா தரப்பினர் மாநில மனித உரிமை ஆணையம் உள்ளிட்டவற்றில் புகார் அளித்து நீதி கேட்டு வரும் நிலையில் இவர்களுக்கு எதிர் தரப்பினரான அருண்குமார், கணேசன் உள்ளிட்ட சிலருக்கு பல் பிடுங்கப்பட்டு உள்ளதாக தெரியவருகிறது.

அவர்களின் தற்போதைய நிலை என்னவென்று தெரியாததால் அவர்கள் குறித்து அவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்கள் தங்கி இருந்த வீடுகளில் விசாரித்து வருகிறோம்.

அதில் இரண்டு தலித் சமுதாயத்தைச் சேர்ந்த நபர்களுக்கு பல் பிடுங்கப்பட்ட உள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே அது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம். பல் பிடுங்கப்பட்டவர்களுக்கு குற்றப் பின்னணி இருந்தாலும் அவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தி தண்டனை பெற்று தருவது தான் காவல்துறையின் வேலை அதை விடுத்து பல்லை பிடுங்குவது மனித உரிமை மீறல்.

விசாரணை கைதிகளை கொடூரமாக தாக்கி கொலை முயற்சி செய்த ஏஎஸ்பி மற்றும் அவருக்கு உதவிய காவலர்கள் மீது ஏன் இதுவரை கொலை வழக்கு பதிவு செய்யப்படவில்லை?" என ஆசீர்வாதம் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஏஎஸ்பியிடம் விளக்கம் பெற முயற்சி

ஏஎஸ்பி மீது பலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் சிலர் அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வருதை சேரன்மகாதேவி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் காண முடிகிறது. ஏஎஸ்பியின் தரப்பு விளகத்தை கேட்பதற்காக தொலைபேசியில் அவரை தொடர்பு கொண்டோம். அழைப்பை எடுத்த ஏஎஸ்பி பல்வீர் சிங்கிடம் பிபிசியில் இருந்து பேசுவதாக கூறினோம் அதற்கு அவர் 'நீங்கள் பேசுவது சரியாக கேட்கவில்லை' என கூறி அழைப்பை துண்டித்தார்.

காணொளிக் குறிப்பு, ASP Balveer Singh: விசாரணை கைதிகளின் பல்லை பிடுங்கினாரா? - முழு விவரம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: