நீண்ட இடைவெளிக்கு பின் கிரிக்கெட் களத்தில் நடராஜன்: ஆனால் சாதித்தாரா?

பட மூலாதாரம், BCCI
- எழுதியவர், விவேக் ஆனந்த்
- பதவி, பிபிசி தமிழ்
நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழ்நாட்டை சேர்ந்த நடராஜன் மீண்டும் கிரிக்கெட் அரங்கில் காலடி எடுத்து வைத்துள்ளார்.
கடந்த 2022 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டி ஒன்றில் டிம் டேவிட் நடராஜனின் ஒரே ஓவரில் நான்கு சிக்ஸர்கள் விளாசினார். அந்த போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசி 60 ரன்கள் கொடுத்து மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார்.
அந்த போட்டிக்கு பின் காயம் தொடர்பான பிரச்னையில் சிக்கியவர், இந்திய அணிக்குள் மீண்டும் நுழையவே இல்லை.
இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், 2020 டிசம்பர் 02-ம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
அதற்கடுத்த இரண்டே நாட்களில் டி20 போட்டிகளிலும், ஒரே மாதத்தில் இந்தியாவின் டெஸ்ட் அணியிலும் இடம்பெற்றார்.
ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஒரே தொடரில் மூன்று ஃபார்மெட்டில் காலடி எடுத்து வைத்தார்.
உச்சிக்கு உயர்த்திய ஆஸ்திரேலியப் பயணம்
ஆஸ்திரேலிய தொடரில் நடராஜனின் ஆட்டம் மிகப்பெரிய அளவில் பேசு பொருளானது. முதலில் நடந்த ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா முதல் இரண்டு போட்டிகளை வென்று தொடரை வென்றுவிட்ட நிலையில், மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியா நிர்ணயித்த இலக்கை துரத்தியது.
அப்போது , ஆஸ்திரேலியாவின் முதல் விக்கெட்டை பறித்தார் நடராஜன். முதல் விக்கெட்டிலேயே ஸ்டம்புகளை தகர்த்தார். சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸ் அங்கிருந்து தான் சர்வதேச கிரிக்கெட்டில் தனது விக்கெட் வேட்டையை துவங்கியது.
அவரது முதல் விக்கெட் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் லபுஷேன். அது மட்டுமல்ல அந்த போட்டியில் அழுத்தம் மிகுந்த சூழலில் 48வது ஓவரை வீசிய நடராஜன், அதுவரை பொறுப்பாக விளையாடிக் கொண்டிருந்த அஷ்டன் அகர் விக்கெட்டை வீழ்த்தினார். அதுவே இந்திய அணி வெற்றி பெற அடிகோலியது.
அதைத் தொடர்ந்து தனது அறிமுக சர்வதேச டி20 போட்டியிலேயே கிளென் மேக்ஸ்வெல் உள்ளிட்ட மூன்று பேரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இரண்டாவது டி20 போட்டியிலும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதே தொடரில் மூன்றாவது டி20 போட்டியிலும் மேக்ஸ்வெல்லை போல்டாக்கினார்.
நடராஜனின் அசத்தல் ஆட்டம், இந்திய அளவில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் பல்வேறு நட்சத்திர வீரர்களின் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக அவரது யார்ககர்கள் பெரிதும் பேசப்பட்டன.
அதைத்தொடர்ந்து இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் நடராஜன் சேர்க்கப்பட்டார். பிரிஸ்பேன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது எந்தவொரு அணிக்கும் மிகக்கடினம்.
ஆஸ்திரேலியாவின் கோட்டை என அழைக்கப்பட்ட பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் இந்திய அணி போட்டியை வென்றது. 30 ஆண்டுகளுக்கு பிறகு கப்பாவில் தோற்றது ஆஸ்திரேலியா.
அந்த டெஸ்ட் போட்டியில் விளையாடிய நடராஜன், முதல் இன்னிங்சில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அடுத்தடுத்து விறுவிறுவென நடராஜன் கிராஃப் ஏறியது.
தொடங்கிய சரிவு
ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் அவரது பயணம் நான்கே மாதத்தில் தேங்கியது. 2021 மார்ச் 28-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 10 ஓவர்களில் 71 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அந்த போட்டிக்கு பின் இந்திய அணியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் விளையாடவில்லை. இதுவரை நான்கு டி20 போட்டிகள், இரண்டு ஒருநாள் போட்டிகள், ஒரு டெஸ்ட் போட்டி விளையாடி இருக்கிறார்.
2021 ஐபிஎல் சீசனில் இரண்டு போட்டிகளோடு காயம் காரணமாக வெளியேறினார். 2022 சீசனில் 11 போட்டிகளில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடியவர் 18 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் ஓவருக்கு சராசரியாக கிட்டத்தட்ட 10 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
சில சொதப்பல் ஆட்டங்கள் மற்றும் காயங்கள் நடராஜனின் கிரிக்கெட் வாழ்வை கேள்விக்குறியாக்கியிருந்த நிலையில், இன்றைய தினம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மீண்டும் களம் கண்டார் நடராஜன்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது 4 ஓவர்களில் 56 ரன்களை கடந்து அதிவேகத்தில் ரன் குவித்துக் கொண்டிருந்தது.
31 வயதாகும் இடது கை வேகப்பந்து வீச்சாளரான சேலம் சின்னப்பம்பட்டி நடராஜன், ஆர்வமும் ஐந்தாவது ஓவரை வீச வந்தார்.
ரன் அப்பில் சிக்கலாகவே, மீண்டும் ஓடி வந்து முதல் பந்தை வீசினார். அந்த பந்தை அனாயசமாக பௌண்டரிக்கு விரட்டினார் பட்லர். இரண்டாவது பந்தை சிறப்பாக வீசினார். பட்லர் மீண்டும் மிட் ஆஃபுக்கு மேலே அடிக்க முயன்றார். ஆனால் பந்து பேட்டில் படவில்லை.
அனால் அதன் பின்னர், அடுத்த மூன்று பந்துகளையும் பௌண்டரிக்கு ஓடவிட்டார் ஜாஸ் பட்லர்.
பட்லரின் ஹாட்ரிக் பௌண்டரி உட்பட நான்கு பௌண்டரிகள் காரணமாக நடராஜனின் அந்த ஒரே ஓவரில் மட்டும் 17 ரன்கள் அடிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
இந்த போட்டியில் ராஜஸ்தான் வீரர்கள் வேறு சரமாரியாக விளாசலில் ஈடுபட்டதால் நடராஜனுக்கு மேற்கொண்டு ஓவர்கள் கிடைக்கவில்லை.
ஆட்டத்தின் 17வது ஓவரை வீச நடராஜனை அழைத்தார் புவனேஷ்வர் குமார்.
ஏற்கனவே 16 ஓவர்களில் 170 ரன்கள் குவிந்திருந்தது ராஜஸ்தான்.
இறுதிக்கட்ட ஓவர்களில் இன்னும் வீரியமாக பேட்டிங் செய்யும் முனைப்போடு ராஜஸ்தான் இருந்தது. அந்தச் சூழலில் 17வது ஓவரை வீசிய நடராஜன் முதல் பந்திலேயே ரியான் பராக் விக்கெட்டை வீழ்த்தினார். அந்த ஓவரில் மேற்கொண்டு பௌண்டரி, சிக்ஸர்கள் எதையும் ராஜஸ்தான் வீரர்களால் அடிக்க முடியவில்லை.
17வது ஓவரில் வெறும் மூன்று ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து மீண்டும் 19வது ஓவரை வீசும் வாய்ப்பு நடராஜனுக்கு வழங்கப்பட்டது.
19வது ஓவரின் முதல் பந்தையே யார்க்கராக இறக்கினார். அந்த பந்தில் புவனேஷ்வர் குமார் செய்த ஒரு தவறால் ஹெட்மேயர் ரன் அவுட் ஆவதில் இருந்து பிழைத்தார்.
அதே ஓவரின் மூன்றாவது பந்தில், அதுவரை சிக்சரும் பௌண்டரியுமாக வான வேடிக்கை காட்டிக்கொண்டிருந்த சஞ்சு சாம்சனை பெவிலியனுக்கு அனுப்பினார் நட்டு.

பட மூலாதாரம், Getty Images
32 பந்துகளில் நான்கு சிக்ஸர்கள், மூன்று பௌண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சாம்சன் வெளியேறினார்.
ஆனால், அடுத்த பந்து கிளென் ஃபிலிப்ஸ் செய்த ஒரு தவறால் பை ஆக நான்கு ரன்கள் ராஜஸ்தானுக்கு கிடைத்தது. அந்த ஓவரில் ஏழு ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார் நடராஜன்.
இறுதியில் மூன்று ஓவர்கள் வீசி 23 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளோடு இந்த ஆட்டத்தில் தனது பந்துவீச்சை நிறைவு செய்தார்.
204 ரன்கள் எனும் அபார இலக்கை துரத்திய சன் ரைஸர்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 131 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ்.
சன் ரைசர்ஸ் அணி தோல்வியுற்றபோதும் நடராஜன் இந்த ஆட்டத்தில் இறுதி ஓவர்களில் கொடுத்த 'கம்பேக்' அந்த அணிக்கு ஓர் சாதகமான அம்சம்.
நடராஜன் இந்த இரு ஓவரில் கிடைத்த உத்வேகத்தை பயன்படுத்தி இந்த ஐபிஎல் சீசனில் அடுத்தடுத்த ஆட்டங்களில் கலக்கல் ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












