'ஊரே சுடுகாடாகிவிட்டது; எந்த துக்கத்திற்குச் செல்வது என்றே தெரியவில்லை' - கண்ணீர் கடலில் எக்கியார்குப்பம்

கண்ணீர்க் கடலில் எக்கியார்குப்பம்
    • எழுதியவர், மாயகிருஷ்ணன் க
    • பதவி, பிபிசி தமிழுக்காக, மரக்காணம்

மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழந்தனர். விழுப்புரம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளில் இருபதுக்கும் மேற்பட்டோர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் இன்று மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுபவர்களிடம் நலம் விசாரித்தார். கள்ளச்சாராய சாவுகளுக்குக் காரணமான மெத்தனால் வேதிப்பொருளை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கடந்த 13ம் தேதி எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்ட 40 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் நேற்று வரை 13 பேர் உயிரிழந்திருந்த நிலையில், இன்று விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரவணன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுவரை கள்ளச்சாரயத்தால் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

எக்கியூர்குப்பம் கிராமத்தில் மட்டும் 14 பேர் பலியாகியுள்ளனர்.

இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. அங்கே, கள்ளச்சாராயம் விற்பனைக்கு வந்தது எப்படி? அந்த கிராமத்தின் தற்போதைய நிலை என்ன? என்பதை அறிய எக்கியார்குப்பத்திற்கு நேற்று காலையில் சென்றோம்.

“கள்ளச்சாராயத்திற்கு இறுதி பலி எனது தந்தையாக இருக்கட்டும்”

கண்ணீர்க் கடலில் எக்கியார்குப்பம்
படக்குறிப்பு, சௌந்தர்யா

நிசப்தமான சூழலில் ஊருக்குள் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தைக் கடந்து நடந்து சென்ற போது வலது புறம் வீட்டின் முன்பே 10க்கும் மேற்பட்டோர் சோகமாக அமர்ந்திருந்தனர். அது இறந்த சுரேஷ் என்பவரின் வீடு. அவரது மகள் கண் கலங்கியபடி நம்மிடம் பேசத் தொடங்கினார்.

“நான் பிபிஏ படித்துள்ளேன் எனக்கு இரண்டு தம்பிகளும் உள்ளனர். நாங்கள் மீனவர்கள். எனது அப்பா தினமும் கடலுக்குச் சென்று வந்து தான் எங்களை படிக்க வைத்தார். இப்பொழுது என்ன செய்வதென்று எனக்கு தெரியவில்லை. எனது தாயாரையும், தம்பிகளையும் எப்படி காப்பாற்றுவது என்றும் புரியவில்லை. இது போன்ற துயரம் யாருக்கும் வரக்கூடாது. கள்ளச்சாராயம் என்பது முற்றிலும் அகற்றப்பட வேண்டும். கள்ளச்சாராய சாவுக்கு எனது தந்தை தான் கடைசி பலியாக இருக்க வேண்டும்,” என்றார்.

தொடர்ந்து துக்கம் விசாரிக்க வந்திருந்த தேன்மொழி என்பவர் நம்மிடம் பேசத் தொடங்கினார். “எங்கள் குடும்பத்தில் நான்கு பேர் மருத்துவமனையில் உள்ளனர். அதில் ஒருவர் இறந்து விட்டார். மீதி 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். என்ன செய்வது என்று புரியவில்லை. ஊரே சுடுகாடாக மாறிவிட்டது. இதுவரை 11 பேர் இறந்து விட்டதாக கூறுகின்றார்கள். கடலை நம்பித்தான் நாங்கள் இருக்கின்றோம். கள்ளச்சாராயம் எங்கள் ஊரில் ஒழிக்கப்பட வேண்டும். மருத்துவமனையில் உள்ளவர்கள் எல்லாம் 40 முதல் 50 வயது நபர்கள். நன்கு உழைக்கக் கூடியவர்கள். என்ன செய்வது? சாராயம் விஷச்சாராயமாக மாறிவிட்டது என்று கூறுகின்றார்கள். எங்கள் ஊரில் சாவு தொடர்கதை ஆகிவிட்டது. எந்த சாவுக்கு செல்வதென்று எனக்கு புரியவில்லை. இதற்கு நிரந்தரமாக முடிவு கட்ட வேண்டும்,” என்றார்.

"எந்த துக்கத்திற்குச் செல்வது என்றே எனக்கு தெரியவில்லை"

கண்ணீர்க் கடலில் எக்கியார்குப்பம்
படக்குறிப்பு, தேன்மொழி

அங்கிருந்து கிளம்பி பத்து வீடு தள்ளிச் சென்றோம். அங்கும் ஒரு பந்தல். இப்போதுதான் இறந்த மூத்தாரை அடக்கம் செய்து வந்ததாக கூறினார் தேன்மொழி.

“எனது மூத்தார் இறந்துவிட்டார் என்று பேச தொடங்கினார். எனக்கு 25 வயதிருக்கும் பொழுது நான் என் கணவரின் குடி பழக்கத்தால் விதவையாக்கப்பட்டேன். இப்பொழுது எனது மூத்தாரும் குடியால் இறந்துவிட்டார். மிகுந்த சிரமமாக உள்ளது. கள்ளைச்சாராயம் குடித்ததால் இந்த நிலை. இது ஒழிக்கப்பட வேண்டும். நல்ல விசேஷங்கள் என்று எங்கள் வீட்டிற்கு நிறைய அழைப்புகள் வரும். நாங்கள் ஆளுக்கு ஒரு நிகழ்ச்சியாக சென்று பார்த்து விட்டு வருவோம். அது சந்தோஷம். ஆனால் இன்று ஒரே நாளில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளார்கள். எங்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது. எந்த துக்கத்திற்குச் செல்வது என்றே எனக்கு தெரியவில்லை,” என்று கூறியவர் அழத் தொடங்கி விட்டார்.

“எங்கள் ஊர் விதவைகளின் கிராமமாகிவிட்டது”

கண்ணீர்க் கடலில் எக்கியார்குப்பம்
படக்குறிப்பு, சரிதா

அவரைத் தொடர்ந்து அருகில் இருந்த சரிதா பேசத் தொடங்கினார்.

“எங்கள் ஊரில் ஏற்கனவே ஏராளமான விதவைகள் உள்ளனர். இதற்கு காரணம் இந்த சாராய குடி தான்,” என்று பேசத் தொடங்கினார்.

“எங்கள் ஊரில் சுனாமி வந்த பொழுது யாரும் இறக்கவில்லை. தொடர்ந்து கொரோனா காலத்தில் கூட நாங்கள் பாதுகாப்பாகதான் இருந்தோம். ஆனால் கேடுகெட்ட இந்த சாராயம் பத்துக்கும் மேற்பட்ட உயிரை பலி வாங்கி விட்டது. எங்கள் ஊருக்கு இந்த சாராயம் வேண்டாம். வரும் தலைமுறையாவது நல்லபடியாக வளரட்டும்,” என்றார்.

அங்கிருந்த கிராம நிர்வாக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவரும் இக்கிராமத்தில் ஏராளமான விதவைகள் இருப்பதை உறுதிப்படுத்தினார்.

தொடர்ந்து இறந்த சங்கரின் மனைவி தேவகி பேசத் தொடங்கினார். “அன்று 13ஆம் தேதி எனது கணவர் சாராயம் குடித்துவிட்டு வந்து படுத்திருந்தார். இரவு எனக்கு நெஞ்சு வலிக்கிறது, கை, கால்கள் உதறுகிறது என்று கூறினார். செய்வதறியாது உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கிருந்து கோரிமேடு கொண்டு சென்றோம் .அங்கு வைத்தியம் பார்த்தார்கள். டாக்டர் என்னிடம் என்ன சாப்பிட்டார் என்று கேட்டார். அதற்கு நான் சாராயம் குடித்து விட்டு வந்தார் அவ்வளவுதான் என்று கூறினேன். தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் அவர் இறந்துவிட்டார். இது எனக்கு பெரிய அதிர்ச்சி,” என்று கண்ணீர் விட்டு அழுதார்.

கண்ணீர்க் கடலில் எக்கியார்குப்பம்
படக்குறிப்பு, தேவகி

“மீண்டும் எப்படி தலை தூக்கப் போகிறோம்?"

எக்கியார்குப்பம் கடலோரப் பகுதிக்கு சென்றபோது தன் சக நண்பர்களுடன் சோகமாக அமர்ந்திருந்த ரகு நம்மிடம் பேசத் தொடங்கினார்.

“மீன்பிடித் தொழிலை நம்பி நாங்கள் வாழ்கின்றோம்.இங்கு சாராயம் குடிப்பது புதிதல்ல. தொடர்ந்து குடித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள் அப்பொழுது எந்த பிரச்னையும் இல்லை. நாங்கள் அதிகாலை 3 மணிக்கு கடலுக்குச் சென்று 11 மணிக்குள் எங்கள் வேலைகள் அனைத்தையும் முடித்து விடுவோம். பிறகு ஐந்து மணிக்கு மேல் எங்களுக்கு வேலை ஏதுமில்லை பொழுதுபோக்கிற்காகவும் சிலர் இயற்கையாகவே தொடர்ந்து குடிக்கிறார்கள் அப்படித்தான் அன்று அனைவரும் குடித்துள்ளனர். ஆனால் இப்படி ஆகும் என்று எங்களுக்கு தெரியாது. ஊரே சுடுகாடாக மாறிவிட்டது. வயதானவர்கள் மட்டுமல்ல, இப்பொழுது இளைஞர்களுக்கும் இந்த பழக்கம் தொற்றிக் கொண்டது. இதிலிருந்து எப்படி மீள போகிறோம் என்று தெரியவில்லை,” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

கண்ணீர்க் கடலில் எக்கியார்குப்பம்
படக்குறிப்பு, ரகு

கள்ளச்சாரய விற்பனை முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாய சங்க தலைவர் கஜேந்திரன் தெரிவித்தார்.

“தமிழ்நாடு முதலமைச்சர் கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடுகளை தந்து நேரிலும் வந்து பார்வையிட்டுள்ளார். இது வரவேற்கத்தக்கது என்ற போதிலும் கள்ளச்சாராய விற்பனை முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். போலீஸ்சார் நடவடிக்கை எடுத்தாலும் முழுமையாக அதிலிருந்து மக்களை மீட்டெடுக்க முடியவில்லை,” என்று கூறினார். சாராய விற்பனை தொழிலில் இருந்து மீண்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தந்திட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கண்ணீர்க் கடலில் எக்கியார்குப்பம்

காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை

கள்ளச்சாராய உயிரிழப்புகள் எதிரொலியாக விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு எஸ்.பி பிரதீப் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜுக்கு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது, இதே போன்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகருக்கு செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

விஷச்சாராய விற்பனையைத் தடுக்க தவறிய விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் காவல் ஆய்வாளர்கள் இருவர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் இருவர் என 4 பேரும், செங்கல்பட்டில் காவல் ஆய்வாளர் ஒருவர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் இருவர் என 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று, அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டத்திலும் அவர் பங்கேற்றார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

மரக்காணம் கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு, சாராயத்தில் போதை கூட்ட மெத்தனால் என்ற வேதிப்பொருள் கலந்ததே காரணம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, மெத்தனால் பயன்பாட்டை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு சென்னை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனரகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், "விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சென்று பார்வையிட உள்ளேன். கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் மெத்தனால் பயன்பாட்டை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மெத்தனால் வேதிப்பொருளை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: