பாஜகவில் சீட் கிடைக்காத வருண் காந்தி காங்கிரசில் சேர்வாரா? பிபிசிக்கு மேனகா காந்தி சிறப்புப் பேட்டி

- எழுதியவர், ராகவேந்திர ராவ்
- பதவி, பிபிசி நிருபர்
2019 மக்களவைத் தேர்தலில் மேனகா காந்தி, உத்தரப்பிரதேசத்தின் சுல்தான்பூர் மக்களவைத் தொகுதியில் இருந்து எம்.பி.யானார். பாரதிய ஜனதா கட்சி அவரை மீண்டும் இதே தொகுதியில் வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
ஆனால் மேனகா காந்தியின் மகனும் பிலிபிட் தொகுதி எம்.பி.யுமான வருண் காந்திக்கு இம்முறை அக்கட்சி டிக்கெட் கொடுக்கவில்லை. காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்து யோகி அரசில் அமைச்சராக உள்ள ஜிதின் பிரசாத்தை அந்த தொகுதியின் வேட்பாளராக கட்சி நிறுத்தியுள்ளது.
பிபிசி உடனான சிறப்பு உரையாடலில், மேனகா காந்தி தனது அரசியல் பயணம், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி முதல் வருண் காந்திக்கு டிக்கெட் மறுக்கப்பட்டது வரை பல விஷயங்கள் குறித்து பேசினார்.
வருண் காந்தி காங்கிரசில் இணைவாரா?

பட மூலாதாரம், Getty Images
வருண் காந்தி ஒரு திறமையான நபர் என்றும் அவர் தனது திறனை சரியாக பயன்படுத்திக் கொண்டால் வெகுதூரம் முன்னேறிச்செல்வார் என்றும் மேனகா காந்தி கூறினார்.
“வருண் காந்திக்கு சீட் கிடைக்காதது எனக்கு வருத்தம் அளித்தது, ஆனால் தேர்தல் என்றால் அப்படி தான். வருண் 28 வயதில் முதன்முறையாக எம்.பி.யானார். அதன் பின்னர் கோடிக்கணக்கான மக்களின் மனதை வென்றுள்ளார்.”
"அரசியல் தவிர வேறு பல விஷயங்களிலும் அவருக்கு திறமை உள்ளது. பொருளாதாரம் குறித்த இரண்டு புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். அவர் கவிதையும் எழுதுவார். அவர் இன்னும் பல உயரங்களை அடைவார்" என்று மேனகா குறிப்பிட்டார்.
வருண் காந்தி அடிக்கடி சமூக வலைதளங்களில் பல விஷயங்களில் தனது கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து வருகிறார். பலமுறை அவர் தனது சொந்தக் கட்சி மற்றும் பெயர் குறிப்பிடாமல் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோர் குறித்தும் கருத்துகள் வெளியிட்டுள்ளார்.
பிரதமர் மோதியின் பிறந்தநாளன்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்ட சிவிங்கிப்புலிகள் இறக்கத் தொடங்கியபோது, அது குறித்து பேசிய வருண் காந்தி, "அயல்நாட்டு விலங்குகள் மீதான இந்த பொறுப்பற்ற நாட்டம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
வருண் காந்திக்கும், பாஜகவுக்கும் இடையிலான உறவு குறித்து மேனகா காந்தியிடம் கேட்டபோது, “வருண் என்ன எழுதினாலும், எதைப் படித்தாலும் அது மக்கள் பிரச்னைகள் தொடர்பானதாகத் தான் இருக்கும்” என்றார்.
வருண் காந்தியை சந்திக்கும் போது அரசியலைத் தவிர்த்துவிட்டு, குடும்பம் மற்றும் தனது பேத்தி பற்றி பேசுவதாக மேனகா காந்தி கூறுகிறார்.
“ஏனென்றால் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு பெரிய வாழ்க்கை உள்ளது” என்றார் அவர்.
தற்போது மேனகா காந்தி சுல்தான்பூரில் தனியாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
தேர்தல் பிரசாரத்திற்கு வருண் காந்தி வராதது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மேனகா காந்தி, “வருண் வர விரும்புகிறார். ஆனால் இந்த நேரத்தில் அதற்குத் தேவை இல்லை. எனது குடும்பம் முழுவதும் இங்கு இருக்க வேண்டும் என்று தான் நான் விரும்புகிறேன். நாங்கள் மிகவும் பிஸியாக இருக்கிறோம். தற்போது தேர்தல் பிரசாரம் சிறப்பாக நடந்து வருகிறது. எனவே இப்போது வருண் தேவையில்லை. தேவை என்று எனக்கு தோன்றினால் கண்டிப்பாக வருணை அழைப்பேன்,” என்று குறிப்பிட்டார்.
மேலும், “வருண் காந்திக்கு டிக்கெட் கொடுக்கப்படாவிட்டாலும் எனக்காக அவர் சுல்தான்பூருக்கு பிரச்சாரம் செய்ய வந்தால் அது எந்த முரண்பாட்டையும் ஏற்படுத்தாது. அதனால் எனக்கு நன்மை தான் ஏற்படும்,” என்று மேனகா காந்தி கூறினார்.
வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டதும் வருண்காந்தி சுயேச்சையாக போட்டியிடலாம் அல்லது காங்கிரசுடன் கைகோர்க்கலாம் என ஊகங்கள் கிளம்பின.
இது குறித்துப் பேசிய மேனகா காந்தி, "இந்த ஊகங்கள் அனைத்தும் ஊடகங்களால் உருவாக்கப்படுகின்றன. சுல்தான்பூரில் டீக்கடையில் அமர்ந்து கொண்டு ஆட்சியை உருவாக்குவது குறித்தும், கவிழ்ப்பது குறித்தும் சிலர் பேசுவார்கள். அதுபோல தான் பத்திரிகைகளின் நிலையும். ஆனால் யதார்த்தத்தில் எதுவும் மாறவில்லை. வருண் முதலில் எங்கு இருந்தாரோ இப்போதும் அங்குதான் இருக்கிறார்,” என்று குறிப்பிட்டார்.
பிரியங்கா, ராகுல் காந்தி பற்றி மேனகா கூறியது என்ன?

உத்தரபிரதேசத்தில் காந்தி குடும்பத்துடன் தொடர்புடைய மூன்று இடங்கள் எப்போதும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கின்றன. அவை ரேபரேலி, அமேதி மற்றும் பிலிபிட்.
இந்த முறை ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். 2019ஆம் ஆண்டில் மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான ஸ்மிருதி இரானி அவரை அமேதி தொகுதியில் தோற்கடித்தார்.
ராகுல் காந்தி அமேதிக்கு பதிலாக ரேபரேலிக்கு செல்வது குறித்து மேனகா காந்தி எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
ராகுல் காந்தியின் யாத்திரையை எப்படி பார்க்கிறீர்கள் என்று மேனகா காந்தியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "ராகுல் அரசியலில் வளர்ச்சியடைந்ததாக நான் நினைக்கவில்லை. பாத யாத்திரை செல்வதால் மட்டும் யாரும் வளர்ச்சி அடைந்துவிடுவதில்லை. பிரச்னைகளை கவனித்து, ஆழமாகப் படித்து, தலைமைப் பண்புக்கான அழகுடன், வீரமாக நடந்துகொள்வது தான் தேவை" என்று அவர் பதில் அளித்தார்.
பிரியங்கா காந்தி தொடர்பாக இதே கேள்வியை கேட்டபோது, ராகுல் குறித்து தான் கூறிய அனைத்தும் பிரியங்கா காந்திக்கும் பொருந்தும் என்று அவர் கூறினார். அதாவது ராகுலைப் போலவே பிரியங்கா காந்தியாலும் தன்னைத்தானே வளர்த்துக் கொள்ள முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
400 என்ற இலக்கை எட்டுமா பாஜக?

பட மூலாதாரம், ANI
இந்த மக்களவைத் தேர்தலில், '400 தொகுதிகள் இலக்கு' என்ற கோஷத்தை பிரதமர் மோதி கொடுத்துள்ளார். உண்மையிலேயே இந்த எண்ணிக்கையை பாஜக தாண்டுமா?
இந்த கேள்விக்கு பதிலளித்த மேனகா காந்தி, "தேர்தல் நேரத்தில் எனக்கு சுல்தான்பூர் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது. சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் நாடு கூட பின்னர்தான். முதலில் சுல்தான்பூரின் பிரச்னைகள் மற்றும் மக்களின் விருப்பங்கள் தான் கண்ணுக்கு தெரிகின்றன. அவர் (பிரதமர் மோதி) ’400’ என்ற முழக்கத்தை கொடுத்திருந்தால் அது கண்டிப்பாக நடக்கும் அல்லது வெற்றி எண்ணிக்கை அதற்கு அருகில் இருக்கும்," என்று தெரிவித்தார்.
சாம் பிட்ரோடா பற்றி மேனகாவின் கருத்து

பட மூலாதாரம், Getty Images
சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா அமெரிக்காவின் ’பரம்பரை சொத்து மீதான வரிச் சட்டத்தை’ ஆதரித்தார்.
"அமெரிக்காவில் பரம்பரை சொத்து வரிவிதிப்பு முறை உள்ளது. இதன் பொருள் ஒருவருக்கு 10 கோடி டாலர் மதிப்புள்ள சொத்து இருந்தால் அவர் இறந்த பிறகு அவரது குழந்தைகளுக்கு 45 சதவிகித சொத்து மட்டுமே கிடைக்கும். மீதமுள்ள 55 சதவிகிதம் அரசுக்கு சென்றுவிடும்," என்று பிட்ரோடா கூறினார்.
"இது மிகவும் சுவாரஸ்யமான சட்டம். உங்கள் காலத்தில் நீங்கள் செல்வத்தை சேர்ப்பீர்கள். நீங்கள் உலகத்தை விட்டுச் செல்லும்போது உங்கள் செல்வத்தை பொதுமக்களுக்காக விடவேண்டும். முழுமையாக அல்ல, அதில் பாதி. என்னைப் பொருத்தவரை இது சிறந்தது என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறியிருந்தார்.
பிட்ரோடாவின் அறிக்கையை பிரதமர் மோதி தேர்தல் விவகாரமாக்கினார். தேர்தல் பேரணியில் காங்கிரசை தாக்கிப் பேசிய அவர், "நீங்கள் உயிருடன் இருக்கும் வரை காங்கிரஸ் உங்களை அதிக வரியால் தாக்கும். நீங்கள் உயிருடன் இல்லாத போது உங்கள் மீது பரம்பரை சொத்து வரியை சுமத்தும்" என்றார்.
”தற்போது காங்கிரஸ் பரம்பரை சொத்து மீது வரி விதிப்பு செய்யப் போவதாக கூறுகிறது. பெற்றோரிடம் இருந்து பெற்ற சொத்துக்கும் வரி விதிக்கப்படும். உங்கள் கடின உழைப்பால் நீங்கள் சேர்க்கும் சொத்து, உங்கள் குழந்தைகளுக்கு கிடைக்காது. காங்கிரஸின் கைகள் உங்களிடமிருந்து பறிக்கும். காங்கிரஸின் தாரக மந்திரம், வாழும் போதும் கொள்ளை..வாழ்க்கைக்கு பிறகும் கொள்ளை” என்று மோதி குறிப்பிட்டார்.
பாஜகவின் உச்சகட்ட பிரசாரம் மற்றும் பிரதமர் மோதியின் அறிக்கைகளிலும் முஸ்லிம், ஊடுருவல், மங்கள்சூத்ரா (தாலி) போன்ற வார்த்தைகள் குறிப்பிடப்படுவது குறித்து மேனகா காந்தியிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது அதை அவர் தவிர்க்க முயல்வது போல காணப்பட்டார். சாம் பிட்ரோடா இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கக் கூடாது என்று அவர் கூறினார்.
"இந்த நேரத்தில் பிட்ரோடா இதை சொல்லியிருக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன். தனிப்பட்ட முறையில் எனக்கு அரசியல் விஷயங்களில் அக்கறை இல்லை. யார் என்ன சொன்னார்கள், யார் என்ன பதில் சொன்னார்கள் என்பதில் நான் கவனம் செலுத்துவது இல்லை.
பரம்பரை சொத்து வரி இந்தியாவுக்கு பொருந்தாது. தனிப்பட்ட முறையில் நான் அதற்கு எதிரானவள். நம்முடையது கூட்டுக் குடும்பம் அல்லது குடும்பங்களுக்கு இடையேயான உறவுகள் மிகவும் வலுவாக உள்ளன. வாழ்நாள் முழுவதும் உழைத்து பணம் சம்பாதிப்பவர் குழந்தைகளுக்காக அதைச் செய்கிறார். அதில் பாதியை அரசுக்கு கொடுக்க வேண்டும் என்றால் பிறகு அதில் என்ன பயன்,” என்றார் அவர்.
”சிலர் வெளிநாட்டில் உட்கார்ந்திருக்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் சொல்கிறார்கள். ஆனால் இது கட்சி மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பிட்ரோடா இப்படி பேசியிருக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன்,” என்று மேனகா காந்தி குறிப்பிட்டார்.
பாஜக மீதான 'பிரிவினைவாதப் பேச்சு' குறித்த குற்றச்சாட்டு

பட மூலாதாரம், Getty Images
ஒரு தேர்தல் பேரணியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதை மேற்கோள் காட்டிய பிரதமர் மோதி, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இட ஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் கட்சி விரும்புவதாக கூறினார்.
தேர்தலில் பாஜகவின் பிரிவினைவாதப் பேச்சு அதிகரித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு குறித்துப்பேசிய மேனகா காந்தி, "என் பிரசாரங்கள் பற்றி நீங்கள் ஆராயலாம். நான் இதை இங்கு (சுல்தான்பூர்) செய்யவில்லை. நீங்கள் கிராமங்களுக்குச் செல்லுங்கள். எந்த சமூகமாக இருந்தாலும் இந்தக் குற்றச்சாட்டுகளை உங்களால் கேட்க முடியாது,” என்று கூறினார்.
2019ஆம் ஆண்டு தனது சர்ச்சைப் பேச்சு குறித்தும் அவர் தெளிவுபடுத்தினார். அவரது பேச்சு அடங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
அந்த வீடியோவில் தான் வெற்றி பெறுவது உறுதி என்று கூறிய மேனகா, வெற்றிக்குப் பிறகு ஒரு முஸ்லிம் தன்னிடம் ஏதாவது உதவிக்காக வந்தால் அதைப் பற்றி தான் யோசிக்க வேண்டியிருக்கும் என்றும் கூறியிருந்தார்.
இது குறித்து தெளிவுபடுத்திய அவர், "சாதி, மத பாகுபாடு பார்க்காமல் மக்களுக்காக பாடுபடுகிறேன். ஆனால் தேர்தலின் போது ஒருவருக்கு நான் யார், என்னுடைய பின்புலம் என்ன என்பது நினைவுக்கு வந்தால் அது எனக்கு வருத்தமாக இருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில் நான் ஏன் வேலை செய்கிறேன் என்று நினைக்கத் தோன்றுகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.
"ஐந்தாண்டுகளில் பல்வேறு சாதி, சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வந்தனர். ஆயிரக்கணக்கானோருக்கு உதவி அளிக்கப்பட்டது. சாதி-மத அடிப்படையில் எதுவும் இருக்கக் கூடாது. முன்னேற்றம் தொடர்பாகவே அனைத்தும் இருக்கவேண்டும். இதற்காகவே நான் தொடர்ந்து முயற்சித்து வருகிறேன்.
இப்போதும் சொல்கிறேன். மகிழ்ச்சியுடன் என்னிடம் வாருங்கள், என் வீடு, என் இதயம் அனைவருக்காகவும் திறந்திருக்கிறது. இதைத்தான் நான் அப்போதும் சொன்னேன், அதையே தான் இப்போதும் சொல்கிறேன்,” என்று கூறுகிறார் மேனகா காந்தி.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












