சவுக்கு சங்கர் வழக்கு: யூடியூப் சேனல்களுக்கு கட்டுப்பாடு தேவையா? நீதிபதி கருத்தால் எழும் கேள்விகள்

பட மூலாதாரம், Getty Images/Savukku Shankar
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
"சில யூடியூப் சேனல்கள் தங்கள் பின்தொடர்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, அவதூறான உள்ளடக்கம் கொண்ட காணொளிகளை வெளியிடுவதன் மூலம் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக மாறி வருகின்றன."
"இதுபோன்ற விரும்பத்தகாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது" என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.குமரேஷ் பாபு வியாழக்கிழமை தெரிவித்தார்.
நெறியாளரும் குற்றவாளியா?
சவுக்கு சங்கர் கைதான வழக்கில், முன் ஜாமீன் கேட்டு ரெட் பிக்ஸ் யூ டியூப் சேனல் உரிமையாளர் மற்றும் சவுக்கு சங்கருடனான நேர்காணலை நடத்தியவருமான ஃபெலிக்ஸ் ஜெரால்டு மனு கொடுத்திருந்தார்.
அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் அரசு வழக்கறிஞர் (ஏ.பி.பி) இ.ராஜ் திலக், மனுதாரர் சமீபத்தில் 'சவுக்கு சங்கர்' என்கிற ஏ. சங்கரை நேர்காணல் செய்ததாகவும், இதன்மூலம் பெண் காவலர்களுக்கு எதிராக அவதூறான கருத்துகளை வெளியிட அவருக்கு "வசதி செய்து கொடுத்ததாகவும்" கூறினார்.
மனுதாரரின் வழக்கறிஞர் தனது கட்சிக்காரர் கடந்த 25 ஆண்டுகளாக ஒரு பத்திரிகையாளராக இருக்கிறார் என்று கூறியபோது, நீதிபதி கூறுகையில், மனுதாரர் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்க வேண்டும், ஏனென்றால் அவர்தான் நேர்காணல் செய்தவரை பெண்களுக்கு எதிராக அவதூறான கூற்றுகளை வெளியிடத் தூண்டினார் என்றார்.
ரெட் பிக்ஸ் யூ டியூப் சேனல், பத்து நாட்கள் முன்பு காவல்துறை தொடர்பாக சவுக்கு சங்கருடன் நடத்திய நேர்காணலை வெளியிட்டிருந்தது.
அந்த நேர்காணலில் ஒரு காவல் அதிகாரியின் பெயரைக் குறிப்பிட்டு, ஆவேசமாகப் பேசிய சவுக்கு சங்கர், பணியில் இருக்கும் பெண் காவலர்கள் மற்றும் அந்தக் காவல் அதிகாரி ஆகியோர் தொடர்பாகச் சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.
அதே நேர்காணலில், மற்றொரு தருணத்தில், தனது இடது கையால் வலதுபுறம் உள்ள மீசையை முறுக்கிக் கொண்டே, “திமுகவுக்கு இந்தத் தேர்தலில் சில தொகுதிகளில் இழுபறி நீடிக்கிறது. இதற்குக் காரணம் சவுக்கு மீடியா என முதல்வரிடம் சிலர் கூறியிருந்தனர்," என்று கூறியவர், அதேவேளையில் ஆனால் அதற்குக் காரணம் மு.க.ஸ்டாலினின் அரசுதான் என்பதை கொச்சைப்படுத்தும் வார்த்தைப் பயன்பாட்டுடன் கூறியவாறு சிரித்தார்.
எதிரில் இருந்த நெறியாளர், “நான் உங்கள் தாக்கத்தைக் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் இப்படி ஒரு செய்தி கிடைத்தால், அது எதனால் ஏற்பட்டது என்று ஆராயாமல் ஒரு ஊடகத்தை முடக்கினால் சரியாகிவிடும் என்று அரசு எப்படி நினைக்கிறது?” என்று கேட்கிறார்.
"குடிசைத் தொழிலாக யூடியூப்"

பட மூலாதாரம், Getty Images
இது தொடர்பாக பி.பி.சி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் மாலன், ”யூ டியூப் சேனல்கள் நடத்துவது என்பது தற்போது குடிசைத் தொழில் செய்வது போல் ஆகிவிட்டது. யூடியூப் சேனல்களில் செய்திகளைச் சேகரிப்பதற்கான குழுக்கள் கிடையாது. அதற்கான நிதி ஆதாரம், மனித வள ஆதாரம் இருக்காது.
எனவே அந்த சேனல்கள் செய்திகளை அலசி கருத்து தெரிவிக்கும் தளமாக இருக்கிறது. சில நேரங்களில் அது புரளி பேசுவதாகவும், அதையும் தாண்டி சில நேரங்களில் அவதூறாகப் பேசுவதாகவும் மாறிவிடுகிறது," என்றவர் யூடியூப் சேனல்கள் ஒட்டுமொத்தமாகத் தரம் குறைந்துள்ளதாகவும் அதற்கு பொருளாதார நோக்கங்கள் இல்லையென்று கூற முடியாது எனவும் கூறினார்.
எதையும் திட்டி பேசினால்தான் யூ டியூபில் எடுபடும் என்று கருதப்படுவதாக அவர் தெரிவிக்கிறார். கிட்டத்தட்ட இதே மாதிரியான கருத்தை பெண் ஊடகவியலாளர்கள் குறித்து எஸ்.வி.சேகர் பேசியபோது, எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் "இன்று சவுக்கு சங்கர் பேசும்போது, கருத்துரிமை பறிபோனதாகக் கூறுவது எப்படி நியாயம்?" என்றும் வினவுகிறார்.
கோபப்படுவது சரியில்லை என்று குறிப்பிடும் நீதிபதி அரி பரந்தாமன், “அம்பேத்கர் கூறிய இட ஒதுக்கீடு பத்து ஆண்டுகளுக்குத்தான் செல்லும் என்று நீதிமன்றம் கூறும்போது வராத கோபம் ஏன் இப்போது வருகிறது?” எனக் கேட்கிறார்.
கட்டுப்பாடுகள் தேவையா?

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் ஏராளமான யூடியூப் சேனல்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த சேனல்களில் அரசியல், சினிமா எனப் பல்வேறு விதமான விஷயங்கள் வெளிவருகின்றன. அரசியல் கட்சிகளும் தங்களுக்கான சேனல்களை நடத்தி வருகின்றனர். யூடியூப் சேனல் தொடங்க யாரிடமும் எந்த உரிமையும் பெறவேண்டிய அவசியமில்லை.
பெரிய ஊடகங்களுக்கு இல்லாத கட்டுப்பாடு ஏன் யூடியூப் ஊடகத்திற்கு மட்டும் விதிக்கப்பட வேண்டும் என்று கேட்கிறார், நீதிபதி அரி பரந்தாமன். "எந்த ஊடகத்துக்கும் முறைப்படுத்துதல் இல்லை. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் ஊடகங்கள் முறைப்படுத்துதல் இல்லாமல்தான் இயங்குகின்றன. சாதாரண மக்கள் பயன்படுத்தும் யூடியூப் போன்ற சமூக ஊடகங்களை ஏன் முறைப்படுத்த வேண்டும்?"
சவுக்கு சங்கரின் நேர்காணலை யாராலும் ஆதரிக்க முடியாது, ஆனால் செய்தி என்பது விற்கப்படும் பண்டமாகிவிட்ட நிலையில் யாரும் அதில் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள் என்கிறார் அவர்.
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் அது அரசியல் ரீதியாகத்தான் பயன்படுத்தப்படும் என்கிறார் ஜீவா டுடே என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் பத்திரிகையாளர் ஜீவ சகாப்தன்.
“யூ டியூப் சேனல்களில் பாஜகவை திட்ட வேண்டும் அல்லது திமுகவை திட்ட வேண்டும். அதில் பேசும் சர்ச்சையான கருத்தை முகப்புப் படமாக வைக்க வேண்டும் என்ற போக்குதான் பெரும்பாலும் உள்ளது. பெண்களையோ, ஒரு துறை சார்ந்தவர்களையோ அவதூறாகப் பேசுவது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல.
சில யூடியூப் சேனல்களில் நடிகைகள் குறித்த கிசுகிசு, பிறரைத் தனிப்பட்ட முறையில் தாக்குவது ஆகியவையே உள்ளடக்கங்களாக இருப்பதால், யூடியூப் சேனல்கள் என்றாலே மோசம் என்ற எண்ணம் இருக்கிறது.
ஆனால் இதை முறைப்படுத்த வேண்டும் என்று அரசு கூறினால், அரசியல் ரீதியாக கருத்து தெரிவிப்பவர்களைத்தான் அரசு கட்டுப்படுத்தும். பெண்களைப் பற்றி இழிவாகப் பேசுபவர்களைத் தேடி முதலில் செல்லாது. அது ஆபத்தானது,” என்றார்.
சரிவில் ஊடக சுதந்திரம்

பட மூலாதாரம், Getty Images
ஊடக சுதந்திரம் தொடர்பான தரவரிசைப் பட்டியலை எல்லைகள் இல்லாத ஊடகவியலாளர்கள் என்ற அமைப்பு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதில் இந்தியாவின் தரவரிசை 159 என்ற பின்தங்கிய இடத்தில் உள்ளது.
இந்திய ஊடகங்கள் அதிகாரபூர்வமற்ற அவசரநிலையை அடைந்திருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்தியாவின் அரசமைப்பு சட்டத்தில் பத்திரிக்கை சுதந்திரம் தனியாகக் குறிப்பிடப்படாத போதிலும், கருத்துரிமையின் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது.
ஆனால் அரசாங்கம் காலனி ஆதிக்க கால சட்டங்களைப் பயன்படுத்தி ஊடகங்களைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகளும்கூட சட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி ஊடகவியலாளர்களைத் துன்புருத்துவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
ஒளிபரப்பு சேவைகள் கட்டுப்பாட்டு சட்டம், 2023 தகவல் தொடர்பு சட்டம், டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் மூலம் ஊடகங்களைக் கட்டுப்படுத்த அதீதமான அதிகாரத்தை அரசாங்கம் குவித்துக் கொண்டிருப்பதாக அந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது.
அரசியல் ரீதியான கருத்துகள் காரணமே இல்லாமல் முடக்கப்படுவதாக போல்தா இந்துஸ்தான் என்ற சேனலின் நிறுவனர், ஹசீன் ரஹ்மானி பிபிசி தமிழிடம் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், “கடந்த மாதம் 4ஆம் தேதி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அறிவுறுத்தலின் பெயரில் எங்களது யூடியூப் சேனல் முடக்கப்படுவதாக யூடியூப் நிர்வாகத்திடம் இருந்து மின்னஞ்சல் கிடைத்தது. தகவல் கிடைத்து 12 மணிநேரங்களில் சேனல் முடக்கப்பட்டது. நாங்கள் அதுவரை 4,200 வீடியோக்கள் பதிவிட்டிருந்தோம்.
இரண்டு நாட்கள் முன், நான் கேட்காமலேயே, சேனல் மீண்டும் அனுமதிக்கப்பட்டது. எங்கள் குழு இரண்டாவது முறையாக ஆய்வு செய்தததில் உங்கள் தளத்தில் விதிமீறல்கள் எதுவும் இல்லை,” என்று கூறினர். எந்த விதிமீறலும் இல்லாமல் 34 நாட்கள் முடக்கப்பட்டு இருந்ததாக ஹசீன் ரஹ்மானி கூறினார்.
சமூக ஊடகத்தில் தினமும் உழைத்தால்தான் ஆதரவுத் தளத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று கூறும் அவர், "இன்று நாங்கள் முதல் படியில் இருந்து மீண்டும் தொடங்க வேண்டும். அதே போன்று முகநூலில் விளம்பரங்கள் மூலம் வருவாய் பெறுவதற்கான அனுமதி தொடர்ந்து மறுக்கப்படுகிறது," என்றும் தெரிவித்தார்.
மேலும், இதே செயலை அரசு ஒவ்வொரு யூடியூப் சேனலின் மீதும் மேற்கொள்ளும், இப்படியே செய்துகொண்டிருந்தால் எழுப்புவதற்குக் குரலே இருக்காது, என்றார் ஹசீன் ரஹ்மானி.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












