KKR vs MI: ப்ளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக கொல்கத்தா தகுதி - திருப்புமுனை ஏற்படுத்திய ரஸல், ராணா

பட மூலாதாரம், SPORTZPICS
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஐபிஎல் 2024 சீசனில் இதுவரை எந்த அணியும் ப்ளே ஆஃப் சுற்றை அதிகாரபூர்வமாக உறுதி செய்யாமல் இருந்தன.
ப்ளே ஆஃப் சுற்றுக்கு நெருக்கமாக இருந்தபோதிலும், அதை உறுதி செய்ய ஏதாவது ஒரு வெற்றி தேவையாகவே இருந்து வந்தது. அந்த வெற்றியை நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெற்றதையடுத்து, ப்ளே ஆஃப் சுற்றுக்கு 18 புள்ளிகளுடன் முதல் அணியாகத் தகுதி பெற்றது. அதேநேரம், முதல் இரு இடங்களைப் பிடிக்கவும் கொல்கத்தாவுக்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 60வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
மழையால் ஆட்டம் 45 நிமிடங்கள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 16 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடத்தப்பட்டது. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்தது. 158 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்து 18 ரன்களில் தோல்வி அடைந்தது.
முதல் இரு இடங்களில் கொல்கத்தா
இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 12 போட்டிகளில் 9 வெற்றி 3 தோல்விகளைப் பெற்று 18 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்து, ப்ளே ஆஃப் சுற்றையும் முதல் அணியாக உறுதி செய்தது. நிகர ரன்ரேட்டில் கொல்கத்தா அணி வலுவாக 1.428 என இருக்கிறது. கொல்கத்தா அணி தனக்கிருக்கும் 2 ஆட்டங்களிலும் சாதாரணமாக வென்றாலே 22 புள்ளிகளுடன் முதலிடத்தைத் தக்க வைக்கும்.
ஒருவேளை இரு ஆட்டங்களிலும் தோல்வி அடையும்பட்சத்தில் 18 புள்ளிகளுடன் இருந்தாலும், நிகர ரன்ரேட்டை வலுவாக வைத்திருப்பதால், ப்ளே ஆஃப் சுற்றில் இருப்பதற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஒருவேளை ஒரு ஆட்டத்தில் தோல்வி அடைந்து, மற்றொரு ஆட்டத்தில் வென்றால்கூட கொல்கத்தா அணி 20 புள்ளிகளுடன் வலுவான நிகர ரன்ரேட்டில் முதலிடத்தைப் பிடிக்கலாம்.

பட மூலாதாரம், SPORTZPICS
ஆனால், அதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனக்கிருக்கும் கடைசி 3 லீக் ஆட்டங்களில் ஒன்றில் தோற்று மற்ற இரு ஆட்டங்களில் வெல்ல வேண்டும். ஒருவேளை கொல்கத்தா அணி 20 புள்ளிகளுடன் முடித்து நிகர ரன்ரேட்டில் வலுவாக இருந்தபோதிலும், ராஜஸ்தான் அணி 22 புள்ளிகளுடன் முடித்தால் ராஜஸ்தான் அணிதான் முதலிடத்தைப் பிடிக்கும்.
ஒருவேளை கொல்கத்தா அணி தனக்கிருக்கும் 2 ஆட்டங்களில் வென்று 22 புள்ளிகளுடனும், ராஜஸ்தான் அணியும் தனக்கிருக்கும் 3 ஆட்டங்களில் வென்று 22 புள்ளிகளுடன் முடித்தால், நிகர ரன்ரேட் அடிப்படையில் முதல் இரு இடங்கள் முடிவு செய்யப்படும்.
அந்த வகையில் தற்போது ராஜஸ்தான் அணியைவிட வலுவாக கொல்கத்தா இருக்கிறது. அடுத்த இரு வெற்றிகளால் கொல்கத்தா அணி இன்னும் புள்ளிகள் பெற்று நிகர ரன்ரேட்டை வலுப்படுத்தும். ஆனால், ராஜஸ்தான் அணி 0.426 என கொல்கத்தா ரன்ரேட்டைவிட ஒரு புள்ளி குறைவாக இருப்பதால் நிகர ரன்ரேட் அடிப்படையில் முதலிடத்தைப் பிடிப்பது மாபெரும் வெற்றிகளைப் பெற்றால்தான் சாத்தியம். ஆதலால், கொல்கத்தா அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றாலே முதல் இரு இடங்களைப் பிடிப்பது உறுதி.
மும்பை அணிதான் ஐபிஎல் தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேறியது. இருப்பினும் ஆறுதல் வெற்றிக்காக நேற்று களமிறங்கி 9வது தோல்வியைச் சந்தித்தது. மும்பை அணி இதுவரை 13 போட்டிகளில் 4 வெற்றி, 9 தோல்வி என 8 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருக்கிறது.
தனது கடைசி லீக்கில் லக்னெள அணியை மும்பை அணி வரும் 17ஆம் தேதி சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் ஒருவேளை மும்பை அணி வென்றால், லக்னெளவின் ப்ளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துவிடும். ஒருவேளை லக்னெள அணி வென்றால், ப்ளே ஆஃப் வாய்ப்பு உயிர்ப்புடன் இருக்கும்.
தமிழக வீரர் வருணுக்கு ஆட்டநாயன் விருது

பட மூலாதாரம், SPORTZPICS
கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது பந்துவீச்சாளர்கள்தான். ஈரப்பதமான ஆடுகளத்தை நன்றாகப் பயன்படுத்தி, மும்பை பேட்டர்களை ரன்சேர்க்கவிடாமல் திணறவிட்டனர்.
குறிப்பாக சுனில் நரைன், தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி இருவரும் மும்பை பேட்டர்களின் கைகளைக் கட்டிப்போடும் வகையில் பந்து வீசினர். இருவரும் சேர்ந்து 7 ஓவர்கள் வீசி 38 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சராசரியாக ஓவருக்கு 5 ரன்கள் மட்டுமே இருவரும் விட்டுக்கொடுத்தனர்.
இதில் வருண் சக்ரவரத்தி 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். குறிப்பாக பவர்ப்ளே ஓவர்கள் முடிந்து, அடுத்த 5 ஓவர்களை வருண், நரைன் வீசி வெறும் 22 ரன்கள் மட்டுமே அடிக்க மும்பை பேட்டர்களை அனுமதித்து, 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி பெரும் நெருக்கடி அளித்தனர்.

பட மூலாதாரம், SPORTZPICS
ரஸல், ராணா திருப்புமுனை
ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரஸலும் பந்துவீச்சில் நேற்று 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஏற்கெனவே நரைன், வருண் பந்துவீச்சில் ரன் சேர்க்க முடியாமல் சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட் திணறி வந்தனர். இதில் ரஸலும் தனது பந்துவீச்சில் பல்வேறு வேரியேஷன்களை வெளிப்படுத்தி, ஸ்லோவர் பால், நக்குல் பால், ஸ்லோ பவுன்சர் என வீசி ஸ்கை பேட்டரை திணறவிட்டார்.
ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ஸ்கை 11 ரன்களில் ரமன்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்து ரஸல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதேபோல டிம் டேவிட் வந்தவேகத்தில் ரஸல் பந்துவீச்சில் டக்அவுட் ஆகி வெளியேறினார். இரு பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தி ரஸல் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
கடைசி ஓவரில் மும்பை அணிக்கு வெற்றியைத் தேடித் தரக் காத்திருந்த திலக் வர்மா, நமன் திர் இருவரையும் ஹர்சித் ராணா வெளியேற்றினார். இந்த 4 பந்துவீச்சாளர்கள்தான் கொல்கத்தா அணி வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்து டிபெண்ட் செய்து கொடுத்தனர்.
கொல்கத்தாவின் பேட்டிங் எப்படி இருந்தது?

பட மூலாதாரம், SPORTZPICS
கொல்கத்தா அணிக்கு வழக்கமாக அதிரடியான தொடக்கம் அளிக்கும் நரைன்(0), பில் சால்ட் (6) ஸ்ரேயாஸ்(7) மிகச் சொற்ப ரன்களில் வெளியேறினர். பவர்ப்ளேவில் கொல்கத்தா 3 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
வெங்கடேஷ்(42), நிதிஷ் ராணா(33), ரஸல்(20), ரிங்கு சிங்(20) ஆகியோர் சிறிய கேமியோ ஆடி சேர்த்த ரன்கள்தான் அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோர். எந்த பேட்டரும் அரைசதம்கூட அடிக்கவில்லை, அனைத்து வீரர்களின் பங்களிப்பால் 157 ரன்கள் எனும் ஸ்கோரை கொல்கத்தா அடைந்தது.
பும்ராவின் மேஜிக் பந்துவீச்சு
ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சை நேற்று எதிர்கொண்ட சுனில் நரைன் நிச்சயமாக சில வினாடிகள் திகைத்திருப்பார். பும்ரா வீசிய பந்து யார்க்கராக ஸ்டெம்பை பதம் பார்க்கும் என்று நரைன் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். இந்த பந்துக்கு எந்தப் பதிலும் இல்லாமல் நரைன் டக்-அவுட்டில் வெளியேறினார். இந்த சீசனில் நரைன் டக்-அவுட் ஆவது இதுதான் முதல்முறை.
பும்ரா வீசிய முதல் ஓவர் முதல் பந்து, பும்ராவின் கையில் இருந்து ரிலீஸ் ஆகும்போது அவுட்சைட் ஆஃப் ஸ்டெம்ப் நோக்கிச் சென்றது. ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் காற்றில் ஸ்விங் ஆகி நரைனின் ஆஃப் ஸ்டெம்பை தட்டிவிட்டு க்ளீன் போல்டாக்கியது.
அவுட் சைட் ஆஃப் ஸ்டெம்ப் நோக்கி பந்து செல்கிறது என நினைத்து பேட்டை தூக்கியவாறு நரைன் நிற்க பந்து ஸ்டெம்பை தட்டிவிட்டு சென்றதைப் பார்த்து நரைன் சில வினாடிகள் திகைத்து நின்றார். பும்ரா 4 ஓவர்கள் வீசி 39 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
‘நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை’

பட மூலாதாரம், SPORTZPICS
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில், “எங்களுக்கு இந்த சீசனும், இந்த ஆட்டத்தின் தோல்வியும் கடினமாக இருந்தது. பேட்டிங்கில் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தும் அதை நடுவரிசையில் வந்தவர்கள் பயன்படுத்தாதற்கு விலை கொடுத்துவிட்டோம். ஆடுகளம் கண்டுபிடிக்க முடியாத அளவு வித்தியாசமாக இருந்தது, ஆனால், தருணம்(மொமென்ட்டம்) என்பது முக்கியமானது, அந்தத் தருணத்தை, வாய்ப்புகளை நாங்கள் கைப்பற்ற முடியவில்லை."
"இந்தச் சூழலுக்கு இந்த இலக்கு அடையக்கூடியதுதான். எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். மழை காரணமாக, பந்துகள் பவுண்டரி சென்றாலே ஈரமாகிவிடுகிறது. கொல்கத்தா அணியும் சிறப்பாகப் பந்துவீச்சில் செயல்பட்டனர்.
அடுத்து வரும் ஆட்டத்தை அனுபவித்து விளையாட வேண்டும், நல்ல கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே குறிக்கோளாக இருக்கிறது. ஆனால், நாங்கள் போதுமான அளவு நல்ல கிரிக்கெட்டை இந்த சீசனில் விளையாடவில்லை,” எனத் தெரிவித்தார்
ஃபார்ம் இழந்து தவிக்கும் ரோஹித் சர்மா
மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா கடந்த சில போட்டிகளாகவே ஃபார்ம் இல்லாமல் தவித்து வருகிறார். இந்த நிலை நேற்றைய ஆட்டத்திலும் தொடர்ந்தது. இஷான் கிஷன் அதிரடியாக ஆடி பவுண்டரிகளை அடித்து வரும் நிலையில் ரோஹித் சர்மா விருப்பமில்லாமல் பேட் செய்தார். அதிலும் குறிப்பாக வருண் பந்துவீச்சில் ஸ்வீப் ஷாட் அடிக்க பலமுறை ரோஹித் முயன்றும் பந்து அவருக்கு மீட் ஆகவில்லை.
பவர்ப்ளே ஓவர்கள் முழுவதும் களத்தில் இருந்த ரோஹித் சர்மா பேட்டிலிருந்து ரன்கள் வருவது நேற்று கடினமாக இருந்தது. 24 பந்துகளைச் சந்தித்த ரோஹித் சர்மா 19 ரன்கள் சேர்த்தார் இதில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கும்.

பட மூலாதாரம், SPORTZPICS
ரோஹித்தின் ஸ்ட்ரைக் ரேட் நேற்று 79 ஆக இருந்தது. இஷான் கிஷன் அதிரடியாக பேட்டை சுழற்றியதால்தான் பவர்ப்ளேவில் மும்பை 59 ரன்கள் சேர்த்தது.
டி20 உலகக்கோப்பை நெருங்கி வரும் நிலையில் ரோஹித் சர்மா இப்படி ஃபார்மின்றி தவிப்பது இந்திய அணியின் நிலையை கேள்விக்குள்ளாக்குகிறது. மறுபுறம் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கிலும் பெரிதாக ரன் சேர்க்கவில்லை ஃபார்மிலும் இல்லை, பந்துவீச்சிலும் ஜொலிக்கவில்லை. ஆனால், இந்திய அணிக்கு துணை கேப்டனாக ஹர்திக் நியமிக்கப்பட்டுள்ளதும் பல்வேறு கேள்விகளை கிரிக்கெட் விமர்சகர்களிடையே எழுப்பியுள்ளது.
நம்பிக்கையளித்த பேட்டர்கள்
சூர்யகுமார் யாதவ்(11) நடுவரிசை பேட்டர்கள் ஹர்திக் பாண்டியா(2), டிம் டேவிட்(0), நேஹல் வதேரா(3), ஆட்டமிழந்தாலும், திலக் வர்மா, நன் திர் இருவரும் மும்பை அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல முயன்றனர்.
கடைசி 18 பந்துகளில் 57 ரன்கள் மும்பை வெற்றிக்குத் தேவைப்பட்டது. ஐபிஎல் டி20 தொடரில் இந்த ஸ்கோர் எட்டக்கூடியதுதான். ஹர்சித் ராணா வீசிய 14வது ஓவரில் திலக் வர்மா சிக்ஸர், பவுண்டரி என 16 ரன்கள் சேர்த்தார். நமன் திர் உற்சாகமடைந்து, ரஸல் வீசிய 15வது ஓவரில் இரு சிக்ஸர் உள்பட 19 ரன்கள் சேர்த்தார்.
கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. திலக் வர்மா, நமன்திர் மீது நம்பிக்கையும் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. ஆனால், ராணா வீசிய கடைசி ஓவரின் முதல் 3 பந்துகளில் திலக் வர்மா(32), நமன்திர்(17) இருவரும் விக்கெட்டை இழக்க மும்பையின் கதை முடிந்தது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












