காஸாவில் அமெரிக்க ஆயுதங்களை இஸ்ரேல் எவ்வாறு பயன்படுத்தியது? ஆய்வறிக்கையில் புதிய தகவல்

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
    • எழுதியவர், டாம் பேட்மேன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

காஸா போரில், இஸ்ரேல் சில சந்தர்ப்பங்களில் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறி அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை பயன்படுத்தி இருக்கலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் ஆயுத பயன்பாட்டினை ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அந்த ஆயுதங்கள் இஸ்ரேலின் பொறுப்புகளை மீறி 'முரணான' வழிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என அமெரிக்க அரசு கூறுகிறது.

ஆனால் இது குறித்து முழுமையான தகவல்கள் இல்லை என்றும் ஆயுத ஏற்றுமதி தொடரும் என்றும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கை வெள்ளிக்கிழமை சற்று தாமதத்திற்கு பிறகு அமெரிக்கப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

வெள்ளை மாளிகை உத்தரவிட்டதன் பேரில், கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து, இஸ்ரேல் மற்றும் மோதலில் ஈடுபட்டுள்ள மேலும் 6 நாடுகள் அமெரிக்காவிடம் பெற்ற ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்தின என்பது ஆய்வு செய்யப்பட்டது.

காஸாவில் இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை மீறி இருக்க கூடும் - அமெரிக்கா

பட மூலாதாரம், GETTY

படக்குறிப்பு, காஸாவில் அதிகரித்து வரும் பொதுமக்களின் மரணங்கள் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கை காஸாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் தீவிரமான நடவடிக்கைகளுக்கு எதிரான தெளிவான கண்டனமாக இருந்தாலும், அமெரிக்கா தரப்பில், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) சர்வதேச சட்டத்தை மீறியதாக இன்னும் திட்டவட்டமாக அறிவிக்கவில்லை.

"காஸாவில் ஹமாஸுக்கு எதிராக போராடும் இஸ்ரேல் ஒரு 'அசாதாரண இராணுவ சவாலை' எதிர்கொள்ள வேண்டியிருந்தது’. அமெரிக்க ஆயுதங்களை சட்டங்களுக்கு உட்பட்டு பயன்படுத்துவதாக இஸ்ரேலிடம் இருந்து பெற்ற உத்தரவாதங்கள் நம்பகமானவை” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஹமாஸ் "பொதுமக்களுக்கான உள்கட்டமைப்பை இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்துகிறது, பொதுமக்களை மனித கேடயங்களாகவும்" பயன்படுத்துகிறது. இதனால், "தீவிரமான போர்க்களத்தில் நிகழும் செயல்பாடுகளை தீர்மானிப்பது கடினம்" என்றும் அமெரிக்க அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

"அமெரிக்கா தயாரித்த ஆயுதங்களை இஸ்ரேல் கணிசமான அளவில் நம்பியிருக்கிறது. மேலும் பல சந்தர்ப்பங்களில் சர்வதேச மனிதாபிமான சட்டத்துக்கு (IHL) முரணாக அந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். குடிமக்களுக்கு தீங்கு விளைவிப்பதைத் தணிக்க நிறுவப்பட்ட சிறந்த நடைமுறைகளுடன் முரண்பட்டு அவை பயன்படுத்தப்பட்டிருக்கும்" என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளில் பொதுமக்களின் பாதிப்பை குறைப்பதற்கான சிறந்த நடைமுறைகளை செயல்படுத்துவதற்கான அறிவு, அனுபவம் மற்றும் கருவிகளை கொண்டுள்ளது. ஆனால் களத்தில், அதிக அளவிலான பொதுமக்கள் உயிரிழப்புகள் உட்பட, அங்கு ஏற்படும் அனைத்து நிகழ்வுகளிலும் இஸ்ரேல் ராணுவம் அதன் சிறந்த நடைமுறைகளை திறம்பட பயன்படுத்துகிறதா என்ற கேள்விகளை எழுப்புகின்றன.”

"பொதுமக்கள் மீதான பாதிப்பை குறைப்பதற்கு இஸ்ரேல் மேற்கொள்ளும் முயற்சிகள் 'சீரற்ற, பயனற்ற மற்றும் போதுமானவையாக இல்லை' என்று ஐ.நா. மற்றும் மனிதாபிமான அமைப்புகள் விவரித்ததாகவும் அறிக்கையில் கூறப்படுகிறது.

"காஸாவில் மோதலின் ஆரம்ப மாதங்களில், காஸாவுக்கு மனிதாபிமான உதவிகளை 'அதிகப்படுத்த' அமெரிக்கா முயற்சிகள் மேற்கொண்ட போது, இஸ்ரேல் முழுமையாக ஒத்துழைக்கவில்லை. ஆனால் அந்த நிலை இப்போது மாறிவிட்டது”

"இஸ்ரேலிய அரசாங்கம் அமெரிக்காவின் மனிதாபிமான உதவியின் போக்குவரத்து அல்லது விநியோகத்தை தடை செய்கிறது என்பதையோ வேறுவிதமாக கட்டுப்படுத்துகிறது என்பதையோ நாங்கள் தற்போது ஆய்வு செய்யவில்லை" என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அறிக்கை சமர்பிக்க உதவியவர்களில் ஒருவரான, துருக்கிக்கான முன்னாள் அமெரிக்க தூதர் டேவிட் சாட்டர்ஃபீல்ட் பிபிசியிடம் பேசுகையில், "இதுபோன்ற அறிக்கை வெளியாவது இதுவே முதல் முறை, இஸ்ரேலிய நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்து மதிப்பாய்வு செய்யும்" என்றும் கூறினார்.

"இது உலகம் இதுவரை கண்டிராத ஒரு மோதல். எனவே ஆய்வு செய்யும் போது, மிகவும் வெளிப்படையான, ஆனால் நம்பகமான முடிவுகளை கொண்டு வருவதில், எல்லா காரணிகளையும் நாங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள முயற்சித்தோம்." என்றார்.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலத்தீனர்கள் உள்ள காஸாவில், ஹமாஸின் கடைசி கோட்டையான ரஃபா மீது தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலுக்கு வழங்கும் சில குண்டுகள் மற்றும் பீரங்கி குண்டுகள் நிறுத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பகிரங்கமாக அச்சுறுத்தி அறிவிப்பு வெளியிட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த ஆயுதங்கள் பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கை வெளியாவதற்கு சற்று முன்னர், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிபர் பைடனின் எச்சரிக்கைகளை நிராகரித்து, ரஃபாவில் நடவடிக்கை 'சிவப்பு கோட்டை' கடக்கும் என்றும் தேவைப்பட்டால் இஸ்ரேல் 'தனியாக நின்று போராடும்' என்று சபதம் செய்தார்.

திங்கட்கிழமை முதல் 80,000க்கும் மேற்பட்ட மக்கள் ரஃபாவிலிருந்து வெளியேறியதாக ஐ.நா கூறுகிறது, மேலும் தொடர்ச்சியான குண்டு வீச்சுகளுக்கு மத்தியில் கட்டிடங்களுக்கு அருகில் இஸ்ரேலிய டாங்கிகள் குவிந்ததாக கூறப்படுகிறது.

இஸ்ரேலிய படைகள் தங்கள் இராணுவ நடவடிக்கையின் தொடக்கத்தில் எகிப்து உடனான ரஃபாவின் எல்லையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஐநா ஊழியர்கள் மற்றும் நிவாரண டிரக்குகள், இஸ்ரேல் மீண்டும் திறந்துள்ள கெரெம் ஷாலோம் பாதையை கடப்பது மிகவும் ஆபத்தானது என்று ஐ.நா கூறியது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)