உலக பத்திரிகை சுதந்திர தினம்: அச்சுறுத்தல்களால் சொந்த நாடுகளைவிட்டு வெளியேறிய 310 பிபிசி செய்தியாளர்கள் கூறுவது என்ன?

உலக பத்திரிகை சுதந்திர தினம்
படக்குறிப்பு, ஷாஜியா ஹயா செய்தியாளராக ஆப்கானிஸ்தான் முழுவதும் பயணித்துள்ளார்.
    • எழுதியவர், ஸ்டீபனி ஹெகார்டி
    • பதவி, பிபிசி உலக சேவை

நாடுகளுக்கு வெளியே இருந்து செயல்படும் பிபிசி உலக சேவை பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட இருமடங்காகி 310 ஆக உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான புள்ளிவிவரங்கள் உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல் முறையாக வெளியிடப்பட்டது. இந்த எண்ணிக்கை ரஷ்யா, ஆப்கானிஸ்தான் மற்றும் எத்தியோப்பியாவில் நீடிக்கும் அடக்குமுறைகளை பிரதிபலிக்கின்றன.

இரான் உட்பட பிற நாடுகளை சேர்ந்த ஊடகவியலாளர்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். பலர் சிறை தண்டனை, மரண அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்களை நேரடியாகவும், இணையம் வாயிலாகவும் எதிர்கொள்கின்றனர்.

பிபிசி உலக சேவையின் இயக்குனர் லிலியன் லாண்டோர் கூறுகையில், "அவர்கள் செய்தியாளராக பணியைத் தொடர ஒரே வழி, தங்கள் நாடுகளை விட்டு வெளியேற வேண்டும் என்பதே. நாட்டைவிட்டு வெளியேறிய ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது பத்திரிக்கை சுதந்திரம் பற்றிய கவலையை அதிகரிக்கிறது." என்றார்.

ஆகஸ்ட் 2021 இல் தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியபோது, பிபிசி அதன் பெரும்பாலான பணியாளர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டியிருந்தது. அதன்பிறகு பெண் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை, அதே சமயம் ஆண் ஊழியர்களும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டனர்.

மியான்மர் மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளிலும் செய்தியாளர்கள் மீது அழுத்தம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களால் சுதந்திரமாக செய்தி சேகரிக்கவோ பதிவிடவோ முடியவில்லை.

உலக பத்திரிகை சுதந்திர தினம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நூற்றுக்கணக்கான பிபிசி செய்தியாளர்கள் தங்களது சொந்த நாட்டை விட்டு வெளியேறி பணியாற்றி வருகின்றனர்.

"நான் மிகவும் கவனமாக இருக்கிறேன்” என்கிறார் பிபிசி பாரசீக செய்தியாளர் ஜியார் கோல். அவர் செய்தி சேகரிக்க எங்கு சென்றாலும், எந்த அறைக்குள் நுழைந்தாலும், முதலில் தப்பிக்கும் வழி உள்ளதா என்பதையே தேடுகிறார்.

"எனது வீட்டில் நிறைய பாதுகாப்பு கேமராக்கள் உள்ளன, என் மகளின் பள்ளியை மாற்றுவது புத்திசாலித்தனமாக இருக்கும் என்று நான் எச்சரிக்கப்பட்டேன்" என்கிறார்.

2007 இல் இருந்து ஜியார் இரானுக்குச் செல்லவில்லை. அவரது தாயார் இறந்த போது கூட, இறுதிச் சடங்கிற்கு செல்ல முடியவில்லை. ஒரு கட்டத்தில் தாயின் கல்லறையைப் பார்க்க எல்லை அருகே பதுங்கி இருந்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி புற்றுநோயால் இறந்ததில் இருந்து ஜியார் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார்.

"எனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால், என் மகள் என்ன ஆவாள் என்பது மட்டும் தான் எப்போதும் என் மனதில் இருக்கும் ஒன்று" என்று அவர் கூறுகிறார்.

"இரானிய ஆட்சி அபாரமாக வளர்ந்துள்ளது. அவர்கள் கடுமையான தடைகளை எதிர்கொள்கின்றனர். இரான் தனிமைப்படுத்தப் பட்டிருப்பதால் சர்வதேச அரங்கில் இரான் பற்றி என்ன நினைக்கிறது என்பதை பற்றி ஆட்சியாளர்கள் கவலைப்படுவதில்லை."

உலக பத்திரிகை சுதந்திர தினம்
படக்குறிப்பு, நினா நசரோவா தனது கணவர் மற்றும் 16 மாத குழந்தையுடன் 2022 இல் ரஷ்யாவை விட்டு வெளியேறினார்

ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழுவைச் சேர்ந்த ஜோடி கின்ஸ்பர்க் கூறுகையில், "கடந்த மூன்று ஆண்டுகளில் நாடுகளை விட்டு வெளியேறும் பத்திரிகையாளர்களுக்கு நாங்கள் நிதி மற்றும் சட்டப்பூர்வ ஆதரவை வழங்குவது 225% அதிகரித்துள்ளது” என்றார்.

மேலும் பேசிய அவர் "சிறையில் உள்ள செய்தியாளர்களின் எண்ணிக்கையை ஓரளவுக்கு நாங்கள் சரியாக கணித்து விட்டோம். செய்தியாளர்கள் கொல்லப்படுவது 2015 க்குப் பிறகு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ரஷ்யா, இரான் மற்றும் செளதி அரேபியா போன்ற ராஜ்யங்கள், தங்கள் நாடுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் பதிவாகும் செய்தி அறிக்கைகளை கட்டுப்படுத்த தீவிரமாக முயற்சி செய்கின்றன ” என்றார்.

யுக்ரேன் மீதான முழு அளவிலான படையெடுப்பைத் தொடர்ந்து பிபிசி ரஷ்யன் செய்தியாளர் நினா நசரோவா தனது நாட்டை விட்டு வெளியேற வேண்டி இருந்தது. நினாவின் கணவரும் செய்தியாளர் தான். மாஸ்கோவில் இருந்து விமானம் புறப்பட்டதும், தனது கணவரை உற்று நோக்கினார். அவர் அழுது கொண்டிருந்ததை நினாவால் உணர முடிந்தது.

"நான் உணர்வற்றுப் போனேன்," என்கிறார் நினா.

புதிய தணிக்கை சட்டம் நடைமுறைக்கு வந்த நாள். "நான் போர் வரப்போகிறது என்று எச்சரித்தேன். இதற்காக நான் சிறையில் அடைக்கப்படலாம்” என்றார்.

நினா தங்கள் 16 மாத மகன், இரண்டு சூட்கேஸ்கள் மற்றும் ஒரு டிராலியை எடுத்துக்கொண்டு ரஷ்யாவிலிருந்து துருக்கிக்கு மலிவான டிக்கெட்டை முன்பதிவு செய்து புறப்பட்டார். அங்கு ஒரு வாரம் கடந்தது, பின்னர் அவர்கள் துபாயில் நாட்களை கழித்தனர்,

அவர்கள் போர் மூள்வதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே விடுமுறையை திட்டமிட்டு பணம் செலுத்தி ஏற்பாடு செய்தனர். பின்னர் அவர்கள் மாண்டினீக்ரோவிற்கு குடிபெயர்ந்தனர். அதன் பிறகு, லாட்வியன் தலைநகரான ரிகாவிற்கு குடிபெயர்ந்தனர். அங்கு பிபிசி நாட்டைவிட்டு வெளியேறிய ரஷ்ய ஊழியர்களுக்காக ஓர் அலுவலகத்தை அமைத்திருந்தது.

இந்த ஆண்டு ஏப்ரலில், நினாவின் சக ஊழியரும், பிபிசி ரஷ்ய செய்தியாளருமான இலியா பரபனோவ், "வெளிநாட்டு உளவாளி" என்று முத்திரை குத்தப்பட்டார். "தவறான தகவல்களை பரப்பினார்" மற்றும் போரை எதிர்த்தார் என்று குற்றம் சாட்டப்பட்டார். இதை இலியாவும் பிபிசியும் நிராகரித்து நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.

செய்தியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறிய பிறகும் அவர்களுக்கு அச்சுறுத்தல்கள் தொடரலாம். மார்ச் மாதம் தனியார் தொலைக்காட்சி நிறுவனமான 'இரான் இன்டர்நேஷனல்’ தொகுப்பாளர் தனது லண்டன் வீட்டிற்கு வெளியே தாக்கப்பட்டார். மர்ம நபர்கள் அவரது காலில் கத்தியால் குத்தினர். சமீபத்தில் பிரிட்டிஷ் தீவிரவாத எதிர்ப்பு போலீசார் பிரிட்டனில் வசிக்கும் பிபிசி பாரசீக ஊழியர்களுக்கு அதிக அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரித்தனர்.

உலக பத்திரிகை சுதந்திர தினம்
படக்குறிப்பு, பிபிசி பாரசீக தொகுப்பாளர்கள் ஃபர்னாஸ் காசிசாதே (இடது) மற்றும் ரானா ரஹிம்பூர் (வலது) இருவரும் இரானை விட்டு வெளியேறினர்.

2022 ஆம் ஆண்டில் பிபிசி பாரசீக தொகுப்பாளர் ராணா ரஹிம்பூரின் கார் உடைக்கப்பட்டிருந்தது, ஒட்டு கேட்கும் சிறிய மைக் போன்ற சாதனம் உள்ளே வைக்கப்பட்டிருக்கலாம் என அவர் சந்தேகித்தார்.

அவர் நினைத்தது போலவே அவர் தனது தாயுடன் நடத்திய உரையாடல் பதிவு செய்யப்பட்டு இரானிய அரசின் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டது. அந்த உரையாடலில் ஆட்சியை ஆதரித்து பேசுவது போல் எடிட் செய்யப்பட்டது.

இதனால் போட்டி ஊடகங்கள் அவரை இழிவு படுத்த இந்த சம்பவத்தை பயன்படுத்தியபோது, ராணா ஊடகத் துறையில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்தார்.

"இந்த அரசு தரப்பு அதன் மிகவும் நுட்பமாக தந்திரமாக செயல்படுகிறது. எங்களை இழிவு படுத்தவும், மிரட்டவும் மற்றும் இறுதியில் எங்களை அமைதிப்படுத்தவும் முயற்சி செய்கின்றனர். எனக்கு நடந்திருப்பது அது தான்" என்று ராணா கூறுகிறார்.

இது அவரது நண்பர்களையும் சக ஊழியர்களையும் பதற்றத்தில் ஆழ்த்தியது.

பிபிசி பாரசீகத்தின் மற்றொரு தொகுப்பாளரான ஃபர்னாஸ் காசிசாதே கூறுகையில், "இரானில் உள்ள எனது அம்மாவை நான் அலைப்பேசியில் அழைக்கும் ஒவ்வொரு முறையும், யாரோ நாங்கள் பேசுவதை ஒட்டுக் கேட்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். இது பயமாக இருக்கிறது, ஏனென்றால் அவர்கள் எங்களை அழிக்க எளிதில் ஒரு வழியைக் கண்டுபிடிக்க முடியும்." என்றார்.

அவர் 21 ஆண்டுகளாக இரானுக்கு திரும்பவில்லை. மேலும் அவரும் அவரின் ஒன்பது சக ஊழியர்களும் நாட்டில் இல்லாத போது தங்களுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை சமீபத்தில் கண்டுபிடித்தனர். இரானிய நீதித்துறையில் இருந்து ஹேக்கர்கள் இந்த தகவல்களை கசியவிட்டனர்.

முன்னதாக, இரானிய வெளியுறவு அமைச்சகம் பிபிசி பாரசீக ஊழியர்கள் மீது வன்முறை, வெறுப்பு பேச்சு மற்றும் மனித உரிமை மீறல்களை தூண்டுவதாக குற்றம் சாட்டியது.

ஃபர்னாஸின் கணவர் வலைப்பதிவில் எழுதியதற்காக 25 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு ஃபர்னாஸும் அவரது கணவரும் தங்கள் ஆறு மாத மகனுடன் நாட்டை விட்டு வெளியேறினர்.

உலக பத்திரிகை சுதந்திர தினம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நாடுகளை விட்டு வெளியேறிய பிபிசி உலக சேவை பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட இருமடங்காகி 310 ஆக உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஃபர்னாஸின் தந்தை இரானின் பாதுகாப்பு பிரிவினரால் தொடர்ந்து விசாரணைக்கு வரவழைக்கப்பட்டார், அவருக்கு மிரட்டல் விடுத்தனர், அவர் தனது மகளை திரும்பி வரச் சொல்லும்படி அவரை வற்புறுத்தினர், மேலும் அவரது பேரக்குழந்தைகள் எங்கு பள்ளிக்குச் செல்கிறார்கள் என்பது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரியும் என்று கூறி மிரட்டியுள்ளனர்.

2022 ஆம் ஆண்டில், ஃபர்னாஸின் சகோதரர் கடுமையாக நோய்வாய்ப்பட்டார் . அவரது வயதான பெற்றோர்கள் அவரைப் பார்த்து கொள்ள முடியாமல் போராடினர். ஆறு வாரங்களுக்குப் பிறகு அவருடைய சகோதரர் இறந்துவிட்டார். அடுத்த ஆறு மாதங்களில் அவருடைய தந்தையும் இறந்துவிட்டார்.

"இந்த இழப்புகளில் இருந்து என்னால் முழுமையாக மீள முடியவில்லை. நான் உண்மையில் என் குடும்பத்திற்காக என் அம்மாவுக்காக அங்கு இருக்க விரும்பினேன். என்னால் முடியவில்லை" என்றார் ஃபர்னாஸ்.

"நான் இனி இந்த செய்திகளை, இந்த கொலை மிரட்டல்களை இனி கண்டுகொள்ள மாட்டேன். எனக்கு வரும் குறுந்தகவல்களை இனி திறக்க மாட்டேன். சில சமயங்களில் பாலியல் ரீதியாகவும் அசிங்கமாகவும் குறுஞ்செய்தி அனுப்புகின்றனர்" என்கிறார் ஃபர்னாஸ்.

பிபிசி பாஷ்டோவைச் சேர்ந்த ஷாஜியா ஹயாவிற்கு, நாட்டை வருத்தமாக இருந்தாலும் கூடவே குற்ற உணர்வும் இருந்தது.

2022 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கட்டுப்பாட்டை முழுவதுமாக கைப்பற்றிய போது, அவரது பெற்றோரையும் சகோதரரையும் காபூலில் விட்டுவிட்டு அவர் தனியாக பிரிட்டனுக்கு வெளியேற்றப்பட்டார்.

"இரவு 02:00 மணியளவில் நான் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டேன், ஏன் என்று எனக்குத் தெரியவில்லை, அந்த சமயத்தில் என்னால் என் தம்பியை கட்டிப்பிடித்து விடை கொடுக்க முடியவில்லை என்பது வருத்தம் அளித்தது.

நான் இங்கே சுதந்திரமாக இருக்கிறேன், ஆனால் அவர்கள் ஒரு வகையான சிறையில் இருக்கிறார்கள். தலிபான்கள் என் வேலையை காரணம் காட்டி என் குடும்பத்தினரை தண்டிப்பார்களோ என்று கவலையாக உள்ளது, அதனால் என் குடும்பத்தினரிடம் யாராவது என்னை பற்றி கேட்டால் அதை மறுக்கும்படி கூறியிருக்கிறேன்” என்றார்.

ஷாஜியாவுக்கு நாட்டை விட்டு வெளியேற பின்னரும், இணையத்தில் இடைவிடாத தொல்லை உள்ளது.

உலக பத்திரிகை சுதந்திர தினம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷாஜியா உள்ளிட்ட பல பிபிசி பத்திரிகையாளர்களுக்கு இணையம் வழியாக மிரட்டல்கள் மற்றும் தொல்லைகள் கொடுக்கப்படுகிறது.

ஒரு உலக சேவை பத்திரிகையாளர், தன் சொந்த நாட்டில் ஏதேனும் செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் தன் அடையாளத்தை மறைத்து சில தகவல்களை பகிர்ந்தார். அவருக்கும் அவரது சக ஊழியர்களுக்கும் இருக்கும் மிகப்பெரிய பயம் என்னவென்றால், அவரது அரசாங்கம் தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மறுத்துவிடுமோ என்பது தான்,

அப்படி பாஸ்போர்ட்டை ரத்து செய்து விட்டால் நாடற்றவர்கள் ஆகிவிடுவோமோ என்று அஞ்சுகின்றனர். மேலும் தொலைதூரத்திலிருந்து தங்கள் நாடுகளைப் பற்றி செய்தி வாசிப்பது கடினமாக இருப்பதாகவும் கருதுகின்றனர்.

ஷாஜியா ஆப்கானிஸ்தானைச் சுற்றிப் பயணித்து, மக்களிடம், குறிப்பாக பெண்களிடம், அவர்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசி வருகிறார். அப்படி பேட்டி அளித்தால் எந்த ஆபத்தும் வராது என மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் இரானில் சாதாரண மக்கள் பிபிசியுடன் பேச அஞ்சுகின்றனர். பேட்டி அளிக்க கூடாது என அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர்.

நினா தனது வேலை மிகவும் கடினமானது என்று கூறுகிறார். எங்குமே பயணிக்க முடியாமல், மேசையில் அமர்ந்து வேலை செய்தல், தன் திறமையை பறித்துவிடும் என்று அவர் கவலைப்படுகிறார்.

முக்கியமான குடும்ப நிகழ்ச்சிகளில் கூட நினாவால் கலந்து கொள்ள முடியவில்லை. தன் மகனை அனைவரும் பாராட்டுவதை கண்டு ரசிக்க முடியவில்லை.

"காதல் இருக்கிறது, ஆனால் சற்று தொலை தூரமாகி விட்டது" என்கிறார் நினா.

புலம்பெயர்ந்து வாழ்வதும் வேலை செய்வதும் ஒரு வகையான `பாதி வாழ்க்கை’ என்று தன் சூழலை விளக்குகிறார் ஃபர்னாஸ்.

"நான் நாட்டை விட்டு வெளியேறி விட்டேன், நான் இப்போது பிரிட்டிஷ் நாட்டின் குடிமகன் ஆகிவிட்டேன் என்று அவ்வளவு சுலபமாக நம்மால் வாழ முடியாது. இந்த சூழலில் என் வாழ்க்கையை உண்மையில் முழுமையாக வாழ முடியாது. நாங்கள் நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறோம், ஆனால் எங்கள் மனம் இன்னும் எங்கள் நாட்டில் தான் வசிக்கிறது” என்கிறார் ஃபர்னாஸ்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)