நியூசிலாந்தின் பிரமாண்ட நகருக்கு கீழே எரிமலை குகைகள் - பழங்குடி மக்களுக்கு ஏன் முக்கியம்?

எண்ணற்ற நிலத்தடி குகை தொடர்களை சுமக்கும் நியூசிலாந்து நகரம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சார்லோட் லிட்டனால்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில், பூமிக்கடியில் அதற்கு இணையாக எரிமலைக் குகை தொடர் பரந்து விரிந்திருப்பது உங்களுக்கு தெரியுமா?

நியூசிலாந்தின் மத்திய ஆக்லாந்தில், காளைகள் சுற்றித் திரியும் ஒரு புல்வெளியில் 70,000 ஆண்டுகளுக்கு முன்பு உருவான எரிமலைக் குகையின் நுழைவாயில் உள்ளது. நகரத்தின் அடியில் இருக்கும் நூற்றுக்கணக்கான குகைகளில் இதுவும் ஒன்று. அங்கு புல்வெளியின் நடுவில் உள்ள ஆழ்துளை மூடி மட்டுமே நிலத்தடி குகை இருப்பதற்கான சாத்தியத்தை குறிக்கிறது.

நிலத்தடியில் இருக்கும் யாரும் அறிந்திடாத பழம்பெரும் குகைகள் ஒவ்வொரு மாதமும் கண்டுபிடிக்கப்படுவதால், அவற்றின் சரியான அமைவிடத்தை கண்டறியவும், உலக அளவில் மற்ற எரிமலைப் பகுதிகளுக்கான வரைபடத்தை உருவாக்கவும் - எதிர்கால பேரழிவைத் தடுக்கவும் ஒரு புதிய மேப்பிங் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

'எரிமலைக் களத்தில் கட்டப்பட்ட நகரம்’ என்ற பெருமையை உடைய ஆக்லாந்து, உண்மையில் அசாதாரணமானது” என்று ஆக்லாந்தின் புவிசார் மரபு மற்றும் இயற்கை அம்சங்கள் நிபுணர் கேட் லூயிஸ் கூறுகிறார்.

"எரிமலை வெடிப்புகளுக்குப் பிறகு உருவாகும் குகைகளை பாதுகாப்பது மிகவும் முக்கியமானதாகவும் - சவாலாகவும் இருக்கிறது. வெடிப்புகளால் உருவாகும் குகைகளில் நான்கு முக்கிய ஆக்கக்கூறுகள் இருக்கும். அபாயம், பொறியியல், பாரம்பரிய மற்றும் கலாசாரம்” என்று அவர் விளக்குகிறார்.

எண்ணற்ற நிலத்தடி குகை தொடர்களை சுமக்கும் நியூசிலாந்து நகரம்

பட மூலாதாரம், Charlotte Lytton

"நாம் தற்போது நின்று கொண்டிருக்கும் 70,000 ஆண்டுகள் பழமையான குகையின், தரையில் பாறைகள் பரவலாக அமைந்திருக்கும். 10 அடி உயர (3 மீ) துளையின் மேல் பகுதியில் பாசி மற்றும் படர் செடி இனங்கள் காணப்படுகிறது. குகைகள், எரிமலை வெடிப்பு நிகழ்ந்ததும், அழகாக, விரைவாக உருவாகி இருக்கக்கூடும்.

மேலும் இந்த நிலத்தடி குகைகள் 200,000 ஆண்டுகளில் திடமான வடிவம் பெற்றுள்ளது. 550 ஆண்டுகளுக்கு முன்பு ஆக்லாந்தில் ரங்கிடோட்டோ என்ற எரிமலை இரண்டு முறை வெடித்தது. அதன் பிறகு உருவானது தான் இந்த குகை." என்கிறார் அவர்.

"லாவா குகைகள் என்பது வெற்று எரிமலைக் குழாய்களாகும், அவை பொதுவாக அவை திரவ எரிமலைக் குழம்பு உருகி பாய்ந்து செல்லும் போக்குவரத்தின் போது உருவாகின்றன" என்று கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி பே அக்வாரியம் ஆராய்ச்சி நிறுவனத்தின் எரிமலை நிபுணர் டேவிட் கிளாக் விளக்குகிறார்.

ஆற்றல் மிக்க வெடிப்பின் போது, உருகிய பாறை பூமியின் மேற்பரப்பில் பொங்கி ஊற்றுகிறது, பின்னர் குளிர்விக்கப்படுவதற்கு முன்னர் கீழ் நோக்கி நகர்ந்து, `மேலோடு’ (Crust) உருவாக்கம் நடக்கிறது.

"ஆரம்பத்தில், உருகிய பாறை எரிமலைக் குழம்பு கெட்டியாகும் போது, ​​அது கண்ணாடி தாள் போன்ற தன்மையில் இருக்கும். மேலும் இது ஒரு அசாத்தியமான மின்காப்பு (insulator) தன்மை உடையது. எனவே இவை பல மைல்களுக்கு பாய்ந்து செல்லக் கூடியவை" என்று லூயிஸ் கூறுகிறார்.

பாய்ந்து செல்லும் எரிமலைக் குழம்பை "பாலாசஸ் அல்லது தேன் போன்றது" என்று லூயிஸ் விவரிக்கிறார். மாக்மா (பாறை உருகுவது) உருகி வருவது நின்று விட்டாலோ, அல்லது வேறு இடங்களுக்கு திருப்பிவிடப்பட்டாலோ எரிமலைக்குழம்பு பாய்வதும் நின்றுவிடும். எனவே, அது கடந்து பாதை குகைகளாக மாறும்.

"குகைகள் அடர்த்தியான எரிமலை ஓட்டங்களால் உருவாகின்றன. பொதுவாக, எரிமலைக் குழம்புகள் திரவமாகவும் வேகமாகவும் பாயும் இடங்களில் குகை உருவாகும் சாத்தியம் அதிகம்" என்று கிளாக் கூறுகிறார். எனவே தான் ஹவாய், மற்றும் ஐஸ்லாந்து போன்ற எரிமலை தீவு பகுதிகளில் அதிக தீவுகள் உள்ளன.

கலபகோஸ், அசோர்ஸ் மற்றும் டஹிடி போன்ற கடல்சார் எரிமலை தீவு பகுதிகளிலும் பொதுவான அம்சங்களாக அமைகின்றன.

எண்ணற்ற நிலத்தடி குகை தொடர்களை சுமக்கும் நியூசிலாந்து நகரம்

பட மூலாதாரம், Charlotte Lytton

படக்குறிப்பு, ஆக்லாந்திற்கு பூமிக்கடியில் உள்ள மிகப்பெரிய குகை தொடரை வரைபடமாக்கும் பணியில் ஜாக்சன் இங்கோல்ட் (இடது) மற்றும் கேட் லூயிஸ்

ஆக்லாந்தில் உள்ள நிலத்தடி குகைகளில், மிக நீளமான குகை 290 மீ (957 அடி) வரை நீள்கிறது; அமெரிக்காவில், மிக நீளமான குகை 4 கிமீ (2.5 மைல்) வரை நீள்கிறது. வாஷிங்டனில் உள்ள கிஃபோர்ட் தேசிய பூங்காவில் உள்ள ஆல்ப்ஸ் குகை வட அமெரிக்காவின் மிக நீளமான தொடர்ச்சியான குகை தொடர் ஆகும்.

எரிமலை குகைகள் புவியியலின் ஆச்சரியம் மட்டுமல்ல, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளின் நடைமுறை மற்றும் கலாசார முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளது. உதாரணமாக, இடாஹோவில் உள்ள பாப்காட் குகையில், பூர்வீக அமெரிக்கர்கள் இக்கட்டான காலங்களில் பாறை கட்டமைப்புகளை குளிர்சாதனப் பெட்டிகளாகப் பயன்படுத்தினர், வேட்டையாடிய காட்டெருமை இறைச்சியை பதப்படுத்த பயன்படுத்தியிருக்கலாம் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.

13 ஆம் நூற்றாண்டில் நியூசிலாந்தில் முதன்முதலில் குடியேறிய மாவோரி (Māori) இன மக்கள், ஆக்லாந்தில் உள்ள பல குகைகளை புனிதமாக கருதினர். அவை மனித உடலை (koiwi) அடக்கம் செய்யும் புதைகுழிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், 1800 களின் முற்பகுதியில் இருந்து, நியூசிலாந்து நாடு உருவாக்கப்பட்டு பிரிட்டிஷ் இறையாண்மையை வழங்கிய போது, ​​கொய்வி என்ற மனித உடலின் புதை படிமங்கள், தனியார் ஆய்வகம் மற்றும் அருங்காட்சியகங்கள் போன்றவற்றிற்காக திருடப்பட்டன. சில சந்தர்ப்பங்களில் பிரிட்டன் அல்லது அமெரிக்கா வரை கடத்திச் செல்லப்பட்டன.

தனியார் நிலங்களில் கண்டறியப்படும் குகைகளின் நிலை

எண்ணற்ற நிலத்தடி குகை தொடர்களை சுமக்கும் நியூசிலாந்து நகரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்பு பழங்குடி மாவோரிகள் சில குகைகளை புதைகுழிகளாக பயன்படுத்தினர்

குகைகளில் இருந்து புதைபடிமங்கள் திருடப்பட்ட நிகழ்வு குறித்து வருத்தம் தெரிவித்து பேசிய உள்ளூர் மாவோரி பாரம்பரிய பயிற்சியாளர் மால்கம் பேட்டர்சன் "அந்த முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை மதிக்காதவர்கள் இப்படி செய்வார்கள். இது அவர்களின் புரிதல் இல்லாமையை நிரூபிக்கிறது" என்கிறார்.

"சில சமயங்களில் அவமரியாதை நோக்கங்களுக்காக சிலர் எடுத்து செல்கின்றனர். உதாரணமாக, காகிதங்களின் மீது வைக்கும் எடையாக பயன்படுத்த, மண்டை ஓட்டை திருடுகின்றனர். நாங்கள் விரும்பும் விதத்தில் எங்கள் புனித இடங்கள் நடத்தப்படவில்லை” என்றார் அவர்.

1940 இல், குகைகளில் ஒரு ரகசிய கம்யூனிஸ்ட் அச்சகம் இயங்கியுள்ளது. அது, மூன்று பள்ளி மாணவர்களால் கண்டறியப்பட்டது. 1960 களில் ஒரு காளான் பண்ணை நடத்தவும் குகை பயன்படுத்தப்பட்டது. சமீபத்தில் மது பாதாள அறையாக மாற்றப்பட்ட குகை பற்றிய விளம்பரமும் தென்பட்டது. "இன்று அவதூறான காரணங்களுக்காக குகைகளை பயன்படுத்துவது ஒரு தேவாலயத்திற்குச் சென்று மது விருந்து வைப்பதைப் போன்றது. புனிதத்தை கெடுக்கும் - இது பொருத்தமானதல்ல" என்று பேட்டர்சன் கூறுகிறார்.

கட்டுமான பணிகளின் போது கண்டறியப்படும் குகை தொடர்கள்

குகைகளை ஆய்வு செய்யும் லூயிஸின் குழு எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னை இது. தனியார் நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட குகைகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பது லூயிஸ் குழு தீர்க்க வேண்டிய சிக்கல்களில் முக்கியமான ஒன்று. கண்டுபிடிக்கப்படும் குகைகளில் பெரும்பான்மையானவை தனியார் நிலங்களில் இருக்கின்றன.

மற்றொரு புறம் நகரம் முழுவதும் வளர்ச்சித் திட்டங்களின் பகுதியாக கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் போது, ​​குகைகள் கண்டறியப்படுவது வழக்கமாகி விட்டது. கட்டுமான பணியாளர்கள் பாறைகளை இடிக்கும் போது, குகைகள் இருப்பதை அறிந்து லூயிஸ் குழுவுக்கு தகவல் சொல்வார்கள். லூயிஸ் மற்றும் அவரது சகாக்கள் விரைந்து சென்று குகை அளவு மற்றும் அம்சங்களை மதிப்பிடுவார்கள்.

"நாங்கள் உள்ளே இறங்கி பார்ப்போம். பின்னர் ஒப்பந்தக்காரர்களுடன், நில உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். மேலும் கட்டடப் பணிகளை தொடரும் போது குகையை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதை பற்றியும் விவாதிப்போம். உண்மையில் இது கடினமான வேலையாக உள்ளது”

நில உரிமையாளர்களை பொறுத்தவரை தங்கள் வீடுகளுக்கு அடியில் தொல்லியல் எச்சங்கள் அல்லது குகை போன்றவற்றை கண்டுபிடிப்பதை அதிர்ஷ்டமாக நினைப்பது இல்லை. அவற்றை பாரமாக தான் நினைக்கிறார்கள். எனவே வெளியே சொல்லாமல் மறைத்து விடுகின்றனர்.

உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் நிலங்களுக்கு பார்வையிட வருவதை தவிர்ப்பதற்காக பெரும்பாலானவர்கள் அமைதியாக இருந்துவிடுகின்றனர். அவர்கள் தங்கள் நிலத்தின் மதிப்பை பற்றி மிகவும் கவலைப்படுகிறார்கள். யாராவது தங்கள் நிலத்தின் கீழ் குகை இருப்பதை அறிந்தால், அது வீட்டின் அடித்தளத்தில் முடிவாக இருக்கும் என்று அஞ்சுகின்றனர்" என்று லூயிஸ் கூறுகிறார்.

"ஒரு குகையைக் கண்டுபிடிக்கையில் ஆபத்தும் நிகழ்கிறது. நிலத்தை தோண்டுபவர்கள் திடீரென ஏற்படும் துளைகளில் விழுந்த சம்பவங்கள் உள்ளன. ஆக்லாந்து முழுவதும் கட்டுமானப் பணிகள் தொடர்வதால், எப்போது என்ன நடக்கும் என்று தெரியவில்லை.

எங்கள் நகரத்தில் வீட்டு வசதிகள் குறைவு என்பதால், நகரம் முழுவதும் கட்டுமான பணிகளை தீவிரப்படுத்துகின்றனர். இந்த கட்டுமானப் பணிகளில், அதிக அகழ்வாராய்ச்சி பணிகளும் நடக்கும். எனவே நிச்சயமாக அதிக எரிமலை குகைகள் கண்டுபிடிக்கப்படும்.

இந்த சூழலில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதே சமயம் ஆக்லாந்தின் பல எரிமலைக் குகைகள் அழிவின் விளிம்புக்கு தள்ளப்படும்.” என்று மேப்பிங் திட்டத்தில் பணிபுரியும் ஆக்லாந்து பல்கலைக் கழகத்தின் முதுகலை மாணவர் ஜாக்சன் இங்கோல்ட் கூறுகிறார்.

புவியியல் சார்ந்த சிக்கல்கள்

"குகைகளுக்கு மனிதனால் உருவாக்கப்படும் சிக்கல்களுடன், புவியியல் சார்ந்த சிக்கல்களும் உள்ளன. ஆக்லாந்தில் பூமிக்கு அடியில் எரிமலைகள் எந்த நேரத்திலும் வெடிக்கும் சாத்தியம் உள்ளது. எதிர்கால பேரழிவைத் தடுக்க, டெவோரா - Devora (ஆக்லாந்தில் எரிமலை அபாயத்தைத் தீர்மானித்தல், பூகம்ப ஆணையம் மற்றும் ஆக்லாந்து நிதியுதவி ஆணையம்) கண்காணித்து வருகிறது” என்பதை லூயிஸ் சுட்டிக்காட்டுகிறார்.

அடுத்த வெடிப்பு எங்கே நிகழும் என்று தெரியவில்லை, `டெவோரா’ அமைப்பு ஆக்லாந்தின் பல்வேறு பகுதிகளில் ஏழு வெவ்வேறு சாத்தியங்களை வரைந்துள்ளது. எனவே அங்கு ஒரு வெடிப்பு ஏற்பட்டால், அது எப்படி இருக்கும்? அந்த எரிமலையில் விளைவு எப்படி இருக்கும்? உள் கட்டமைப்பு பிரச்னை என்ன? என்று ஆய்வு செய்து வருகின்றனர். இதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் இது நிகழும் வாய்ப்பு மிகக் குறைவு. ஆனால் அதன் தாக்கம் மிகப்பெரிதாக இருக்கும்". என்றார் லூயிஸ்.

"ஆக்லாந்தின் எரிமலைக் குகைகளின் முதல் தரவுகளை உருவாக்குவது, எதிர்கால ஆபத்துகளுக்கு எதிராக நகரத்தை பாதுகாக்கும். கடந்த கால எரிமலை குழம்பு ஓட்டங்களைப் பார்த்து மேப்பிங் செய்யும் போது, எதிர்காலத்தில் எரிமலை ஓட்டம் பயணிக்கும் வழியைப் பற்றி மேலும் அறிய, கணிக்க எங்களுக்கு உதவும்" என்று இங்கோல்ட் கூறுகிறார்.

மத்திய ஆக்லாந்தில் உள்ள இதுபோன்ற குகைகள் மூடப்பட்டிருந்தாலும், ஹவாய் போன்ற எரிமலை குகைகள் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் திறக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு ஆக்லாந்தில் வெள்ளம் ஏற்பட்ட போது, குகைகள் வழியாக நீர் எளிதில் பாய்கிறது என்பதை புவியியலாளர்கள் கண்டறிந்தனர், இதனால் மீண்டும் எரிமலைக் குழம்பு இந்த குகைகள் வழியாக உருகுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்கின்றனர்.

உலகெங்கிலும் உள்ள இதுபோன்ற எரிமலைப் பகுதிகளுக்கான வரைபடத்தை அவரது பணி வழங்கக் கூடும் என்று இங்கோல்ட் நம்புகிறார். இந்த புதிய எரிமலை தரவுத்தளம் உலக அளவில் எரிமலை குகைகளின் எதிர்காலத்தை மறுவரையறை செய்யக்கூடும் என்ற எண்ணம், "மிகவும் அற்புதமாக இருக்கும்" என்று அவர் விவரித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)