ஆயுதக் கப்பல் நிறுத்திவைப்பு: அமெரிக்கா - இஸ்ரேல் உறவில் விரிசல் - இரு நாடுகளிடையே என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், EPA
- எழுதியவர், டாம் பேட்மேன்
- பதவி, பிபிசி நியூஸ்
ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், ‘காஸாவிற்கு கிழக்கே அமைந்துள்ள ரஃபா மீது இஸ்ரேல் ஒரு திட்டமிட்ட படையெடுப்பை மேற்கொண்டால் என்ன நடக்கும்?’ என்று அமெரிக்க அதிபர் பைடனிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த பைடன், “அப்படியென்றால் நாங்கள் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கப்போவதில்லை," என்றார்.
ஆயுத ஏற்றுமதி தான் அமெரிக்க- இஸ்ரேல் கூட்டணியின் அடித்தளமாக இருக்கிறது. பைடனின் இந்த பதிலால், கடந்த நாற்பது ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்கா- இஸ்ரேல் உறவில் ஒரு விரிசல் ஏற்பட்டுள்ளது.
காஸாவில் அதிகளவில் பொதுமக்கள் உயிரிழப்பதை தடுத்து நிறுத்தவும், அங்கு நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடி நிலையை சரிசெய்யவும், அமெரிக்க வட்டாரங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பைடனுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக கருதப்படும் இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை நிறுத்துவது என்ற முடிவை இறுதியாக எட்டியுள்ளார் பைடன். 1980களில், அப்போதைய அதிபர் ரொனால்ட் ரீகன் ஆட்சியில் தான் இதே போன்ற ஒரு முடிவு எடுக்கப்பட்டது.
அமெரிக்காவின் இந்த முடிவால் இஸ்ரேலுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்? இந்த முடிவுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் பதிலடி என்ன? பைடனின் இந்த முடிவுக்கு அமெரிக்காவில் ஆதரவு உள்ளதா?

பட மூலாதாரம், AFP
'அரசியல் மோதலில் சிக்கியுள்ள பைடன்'
இஸ்ரேல்- காஸா போரின் தொடக்கத்தில் இருந்தே, இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் குடியரசுக் கட்சிக்கும், தனது சொந்த கட்சியான ஜனநாயகக் கட்சிக்கும் இடையிலான ஒரு அரசியல் மோதலில் பைடன் சிக்கியுள்ளார் என்று முன்னாள் வெளியுறவு ஆய்வாளரும், மத்திய கிழக்கு அமைதி பேச்சுவார்த்தைக் குழுவின் மூத்த நிபுணருமான ஆரோன் டேவிட் மில்லர் கூறுகிறார்.
“இப்போது வரை, அமெரிக்க- இஸ்ரேல் உறவை சீர்குலைக்கும் வகையில் எந்த நடவடிக்கையையும் எடுக்க பைடன் தயக்கம் காட்டி வந்தார்” என்கிறார் மில்லர்.
ரஃபா மீது படையெடுக்கும் முடிவை இஸ்ரேல் விரைவில் எடுக்கப்போகிறது என்ற தகவல் வெளியான பிறகு, பைடனின் பார்வையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது.
திங்களன்று தனது தரைப்படைகள் ரஃபா நகரின் கிழக்குப் பகுதியில் ‘ஒரு இலக்கு நடவடிக்கையை’ ஆரம்பித்துள்ளதாகவும், மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகே இஸ்ரேலிய டாங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் கூறியது.
அதே சமயத்தில் அரிதாகவே இயங்கும் மருத்துவமனைகள் காயமடைந்தவர்களால் நிரம்பி வழிவதாகவும், ஷெல் குண்டுகளின் சத்தம் தொடர்ந்து கேட்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறினர்.
1,00,000-க்கும் மேற்பட்ட மக்கள் போர் நடக்கும் பகுதியில் இருந்து வெளியேறிவிட்டனர் என்றும், தங்குமிடம், உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ சேவைகள் ஆகியவற்றின் கடுமையான பற்றாக்குறையை மக்கள் எதிர்கொள்கின்றனர் என்று ஐ.நா சபையின் அறிக்கை கூறுகிறது.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலத்தீனிய அகதிகள் வசிக்கும் ரஃபா நகரம், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு இலக்காகியுள்ளது.

பட மூலாதாரம், AFP
போர் நிறுத்தம் தொடர்பான சமாதானப் பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்தாலும் கூட, ரஃபாவில் பதுங்கியுள்ள ஹமாஸின் நான்கு படைப்பிரிவுகளையும் அழிக்க ஒரு குறிப்பிடத்தக்க ராணுவ நடவடிக்கை அவசியம் எனவும் அதனால் முழு அளவிலான தரைவழித் தாக்குதல் அங்கு நடத்தப்படும் எனவும் நெதன்யாகு தொடர்ந்து கூறி வருகிறார்.
ரஃபாவில் ஹமாஸுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாமென நெதன்யாகுவை அமெரிக்க அரசு தொடர்ந்து பலமுறை வலியுறுத்தியுள்ளது.
ரஃபா மீதான இஸ்ரேலின் படையெடுப்பு, போரை நிறுத்துவதற்கான வாய்ப்பையும், பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான வாய்ப்பையும் பாதிக்கும் என்று அதிபர் பைடன் அஞ்சுவதாக மில்லர் கூறுகிறார்.
(மில்லர், பைடனின் நிர்வாகத்திற்கு பல ஆண்டுகளாக ஆலோசனை வழங்கிய முன்னாள் அரசு ஆலோசகரும் கூட)
“எகிப்து நாட்டுடன் ஒரு புதிய சிக்கல் உருவாவதையும் தவிர்க்க விரும்புகிறார் பைடன். அது மட்டுமல்லாது இஸ்ரேலின் ரஃபா படையெடுப்பு பைடனின் ஜனநாயகக் கட்சிக்குள் பதற்றங்களையும், பிளவுகளையும் அதிகரிக்கும்” என்று எச்சரிக்கிறார் மில்லர்.
"இதனால் தான் இஸ்ரேலுக்கு ஒரு சமிக்ஞையை அனுப்பினார் பைடன்", என்கிறார் மில்லர்.

பட மூலாதாரம், AFP
இஸ்ரேலுக்கான ஆயுதக் கப்பல் நிறுத்திவைப்பு
புதன்கிழமை ஒளிபரப்பான பைடனின் தொலைக்காட்சி நேர்காணலுக்கு முன்னதாக, இஸ்ரேலுக்கு செல்ல வேண்டிய ஒரு ஆயுதக் கப்பலை நிறுத்தி வைத்தது அமெரிக்கா. அதில் இஸ்ரேலுக்கு அனுப்ப வேண்டிய 2,000-பவுண்டு மற்றும் 500-பவுண்டு வெடிகுண்டுகள் இருந்தன.
ஒரு மூத்த நிர்வாக அதிகாரியின் கூற்றுப்படி, அதிக சக்திவாய்ந்த ஆயுதங்களை மக்கள் நெருக்கமாக வாழும் நகர அமைப்புகளின் மீது பயன்படுத்தும்போது, காஸாவின் பிற பகுதிகளில் ஏற்பட்டது போல மோசமான விளைவுகளை அது ஏற்படுத்தும் என்ற கவலையும் உள்ளது என்கிறார்.
2,000 பவுண்ட் குண்டுகள் இஸ்ரேலின் ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மிகவும் அழிவுகரமான ஆயுதங்களில் ஒன்றாகும். ஹமாஸை ஒழிக்க இத்தகைய ஆயுதங்கள் அவசியம் என்று இஸ்ரேலிய இராணுவம் வாதிடுகிறது.
கடந்த வெள்ளியன்று அமெரிக்க வெளியுறவுத்துறை, இந்த ஆண்டின் தொடக்கத்தில் பைடனால் உத்தரவிடப்பட்ட ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், காஸா போரின் போது சில சந்தர்ப்பங்களில் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறி அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்தியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த குற்றச்சாட்டிற்கான மதிப்பீட்டில் ‘முழுமையான தகவல்கள்’ இல்லை என்றும் அந்த அறிக்கை கூறியது, எனவே அமெரிக்கா இஸ்ரேலுக்கான இராணுவ உதவியைத் தொடரலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், Getty Images
மத்திய கிழக்கு பகுதிக்கான அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் மூத்த அதிகாரியாக பணிபுரிந்த, முன்னாள் அமெரிக்க இராணுவ வீரர் கர்னல் ஜோ புசினோ, “இஸ்ரேலிய ராணுவம் ஏற்கனவே தன்னிடம் உள்ள வெடிமருந்துகளைக் கொண்டே ரஃபாவை தரைமட்டமாக்க முடியும்” என்று கூறுகிறார்.
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆண்டுக்கு 3.8 பில்லியன் டாலர்கள் ராணுவ உதவியை வழங்குகிறது. சமீபத்தில் மேலும் 17 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் வரலாற்றில் வேறு எந்த நாட்டையும் விட அமெரிக்காவிடமிருந்து அதிக ராணுவ உதவியைப் பெற்ற நாடாக உள்ளது இஸ்ரேல்.
இஸ்ரேலுக்கு அனுப்ப வேண்டிய ஒரு ஆயுதக் கப்பலை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளதால், ரஃபா மீதான இஸ்ரேலின் தாக்குதல் திட்டத்திற்கு பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என்று கர்னல் புசினோ கூறுகிறார்.
"இஸ்ரேல் மீது அதிருப்தியில் உள்ள அமெரிக்க மக்களுக்காக நடத்தப்படும் ஒரு சிறிய அரசியல் நாடகம் இது" என்று அவர் கூறுகிறார்.
இது உண்மையோ பொய்யோ ஆனால், அதிபர் பைடனின் இந்த செயலுக்கான தாக்கம் அமெரிக்க அரசியலில் குறைவில்லாமல் இருக்கிறது. அமெரிக்க செனட் சபைகளில் குடியரசுக் கட்சியினரின் கோபம் வெளிப்பட்டது.
"அந்த ஆயுத இடைநிறுத்தம் முற்றிலும் மூர்க்கத்தனமானது என்று நான் நினைக்கிறேன். இதைச் செய்ய வேண்டிய அவசியம் அதிபருக்கு இல்லை" என்று அமெரிக்க செனட்டர் பீட் ரிக்கெட்ஸ் கூறுகிறார்.
ரஃபா மீது ஒரு திட்டமிட்ட தாக்குதலை நடத்துவதற்கு இஸ்ரேலுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது என்று அவரிடம் சொன்னபோது, "ஒரு பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போராட்டத்தில் நமது நட்பு நாடான இஸ்ரேலை ஆதரிப்பது பற்றிய பிரச்னை இது. எனவே அந்த கண்ணோட்டத்தில் இதை அணுக வேண்டும்" என்று அவர் கூறினார்.
குடியரசுக் கட்சியின் மற்றொரு செனட்டரான ஜான் பர்ராசோ, "தங்கள் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க எது அவசியம் என அவர்கள் நினைக்கிறார்களோ, அதைச் செய்ய இஸ்ரேலுக்கு உரிமை உண்டு. பைடனின் இந்தச் செயல் ஒரு விஷயத்தை நிரூபித்திருக்கிறது. அதாவது இந்த அதிபருக்கு ஒரு பலவீனம் இருக்கிறது என்பதை" என்று கூறினார்.
ஆனால் பைடனின் சொந்தக் கட்சிக்குள், அவரது நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

பட மூலாதாரம், EPA
'நெதன்யாகுவைத் தடுக்க பைடன் முயற்சித்தார்'
இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஜனநாயகக் கட்சியின் செனட்டர் கிறிஸ் கூன்ஸ், பாலத்தீனிய குடிமக்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் மற்றும் அவர்களது பாதுகாப்பு குறித்து கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், ரஃபா மீது ஒரு முழு அளவிலான தாக்குதலை இஸ்ரேல் தொடுத்தால், இஸ்ரேலுக்கான இராணுவ உதவிகளை குறைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
தொடர்ந்து பேசிய கூன்ஸ், "இஸ்ரேலின் வலுவான ஆதரவாளர்களாக நாம் இருக்கும் அதே வேளையில், காஸாவின் மக்கள் படும் துன்பங்கள் மற்றும் அங்கு நிலவும் மனிதாபிமான நெருக்கடி நிலைகள் குறித்து நமக்கு மிகுந்த அக்கறை இருப்பதாக கூறிக்கொள்ளும்போது, மிகவும் வேதனையான ஒரு மறுபரிசீலனை தேவைப்படுகிறது." என்றார்.
“நெதன்யாகுவைத் தடுக்க அதிபர் பைடன் ‘மீண்டும் மீண்டும்’ முயற்சித்தார், ஆனால் காஸாவுக்கான மனிதாபிமான உதவிகளை எதிர்க்கும் மற்றும் மேற்குக் கரையில் இருந்து பாலத்தீனியர்களை வெளியேற்ற விரும்பும் அதீத தேசபக்தர்களின் அரசியல் ஆதரவை இஸ்ரேலிய தலைவர் நெதன்யாகு நம்பியிருப்பதால் போர் பதட்டங்கள் அதிகரித்துள்ளன” என்று கூன்ஸ் கூறுகிறார்.
மேலும், "இருநாட்டு உறவில் முதல் உண்மையான விரிசலாக இது இருக்கலாம்" என்கிறார் கூன்ஸ்.
நெதன்யாகு உடனான இந்த விரிசல், கைதிகளை விடுவிக்கும் நோக்கில் ஹமாஸுடன் ஒரு போர்நிறுத்தத்தை எட்டுவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கும் ஒரு முக்கியமான தருணத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த வார தொடக்கத்தில் கெய்ரோவில் நடந்த பேச்சுவார்த்தைகள் வெளிப்படையான ஒரு தீர்வு இல்லாமல் தோல்வியில் முடிந்தன.
சில இஸ்ரேலிய விமர்சகர்கள், பைடனின் நடவடிக்கை பணயக்கைதிகள் பேச்சுவார்த்தைகளை பலவீனமடையச் செய்யும் என்று பரிந்துரைத்துள்ளனர். ரஃபா மீதான இஸ்ரேலிய தாக்குதலின் அச்சுறுத்தலை மழுங்கடிக்கும் எந்தவொரு முயற்சியும் ஹமாஸுக்கு தான் பயனளிக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த பேச்சுவார்த்தைகள் எந்த அடிப்படையில் நடக்கின்றன என்பது தெளிவாக இல்லாததால், விமர்சகர்களின் கூற்றை உறுதியாக மதிப்பிடுவது கடினமாக உள்ளது. போரை நிரந்தரமாக நிறுத்த வேண்டும் என்ற ஹமாஸின் கோரிக்கை தான் மிகப்பெரிய முட்டுக்கட்டையாக உள்ளது. இஸ்ரேல் அதனை நிராகரித்து விட்டது.
பைடனுக்கும் நெதன்யாகுவுக்கும் இடையிலான உறவு ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது.

பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேலுக்கு அதிபர் பைடன் அளித்த தொடர் ஆதரவிற்காக அமெரிக்காவை அடிக்கடி பாராட்டியுள்ளார் நெதன்யாகு, ஆனால் பாலத்தீனியர்கள் தொடர்பான முக்கிய கொள்கை பிரச்னைகளில் அவர்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளன.
அக்டோபர் 7 தாக்குதல்கள் நடந்து சில நாட்களுக்குள், இஸ்ரேலுக்கு சென்ற அதிபர் பைடன் டெல் அவீவ் நகரில் நெதன்யாகுவை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இஸ்ரேலிய பிரதமர் மற்றும் அவரது அமைச்சரவையுடனான சந்திப்பில் முடிந்த பிறகு, இஸ்ரேலுக்கு தனது உறுதியான ஆதரவை வெளிப்படுத்திய அதிபர் பைடன், ஒரு எச்சரிக்கையையும் விடுத்தார், “9/11 தாக்குதலுக்குப் பிறகு நாங்கள் செய்த தவறுகளை நீங்கள் செய்யாதீர்கள். அதே சமயம் பாலத்தீனிய மக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர், உலகின் மற்ற நாடுகளைப் போலவே அப்பாவி பாலத்தீனியர்களின் இறப்பிற்காக நாங்கள் வருந்துகிறோம்." என்று கூறினார்.
பின்னோக்கிப் பார்க்கும்போது அதிபர் பைடனின் இந்த இஸ்ரேல் பயணம் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த வாரம் அமெரிக்க-இஸ்ரேல் உறவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்ட விரிசலைத் தடுக்கும் முயற்சியின் தொடக்கம் தான் அந்தப் பயணம்.
வியாழன் அன்று இஸ்ரேலுக்கான ஆயுதக் கப்பல் நிறுத்தப்பட்டதாக அறிவித்த மறுநாள், நெதன்யாகு ஒரு பதிலடி கொடுத்தார்.
“நாம் தனித்து நிற்க வேண்டும் என்றால் தனித்து நிற்போம். தேவைப்பட்டால் வெறும் கைகளால் கூட சண்டையிடுவோம் என்று நான் கூறியுள்ளேன்,'' என்றார்.
நெதன்யாகுவின் அறிக்கை குறித்து ஜனநாயகக் கட்சியின் செனட்டரான கிறிஸ் கூன்ஸிடம் கேட்டபோது, "அவர்கள் வெறும் கைகளால் சண்டையிட தேவையில்லை. அமெரிக்காவோடு இணைந்து அவர்கள் உருவாக்கியுள்ள நவீன ஆயுத அமைப்புகளின் உதவியோடு போராடுவார்கள். அந்த ஆயுதங்கள் எங்களால் தானே வழங்கப்படுகின்றன.
ஆனால் ஒன்று, பொதுமக்களின் உயிரிழப்புகளை குறைக்கும் வகையில் அந்தப் போராட்டம் நடக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












