பூமி அதிவேகமாகச் சுழன்றாலும் நாம் ஏன் தூக்கி வீசப்படுவதில்லை?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜுவான் பிரான்சிஸ்கோ அலோன்சோ
- பதவி, பிபிசி செய்திகள்
பிரபஞ்சத்தின் வழியான ஒரு அற்புதமான பயணத்தில் நம்மை அழைத்துச் செல்லும் கப்பல் இந்த பூமி. இந்த கிரகம் மணிக்கு 107,280 கிலோமீட்டர் வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது. மேலும் இது தன் அச்சில் அதாவது பூமத்திய ரேகையில் மணிக்கு சுமார் 1,666 கிலோமீட்டர் வேகத்தில் சுழல்கிறது.
ஆனால் ஒரு விண்வெளி காரில் சவாரி செய்வது போல் நாம் ஏன் உணர்வதில்லை?

பட மூலாதாரம், Getty Images
நிலைத்தன்மை மற்றும் செயலற்றதன்மை
இந்த நிகழ்வைப் புரிந்து கொள்ள, சிலியின் வானியல் இயற்பியலாளர் ஜவீரா ரே நமக்கு ஒரு உதாரணம் கூறுகிறார். இவர் லத்தீன் அமெரிக்காவில் விஞ்ஞான அறிவைப் பரப்பும் அமைப்பான ஸ்டார் டிரேஸின் (Star Tres) இணை நிறுவனர்.
"நீங்கள் ஒரு விமானத்தில் இருக்கிறீர்கள் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். விமானம் பறக்கத் தொடங்கும்போது உங்கள் இருக்கையில் மூழ்குவது போல் உணர்கிறீர்கள்.
மேலும் தரையிறங்கும்போது முன்னோக்கி நகர்வதைப் போல உணர்கிறீர்கள். ஏனென்றால் நிலைமம் (Inertia) நம்மை ஓய்வு நிலையில் வைக்கத் தூண்டுகிறது. விமானம் அதன் முழு வேகத்தை அடையும் போது அது நகர்வதை நாம் உணர்வதில்லை. நாம் எழுந்து நின்று, நடக்க முடிகிறது." என்கிறார் ரே.
இவ்வாறாக விமானம் சீரான வேகத்தில் செல்லும் போது, அது அப்படியே நிற்பது போல் தோன்றுகிறது.
பூமியிலும் இதேதான் நடக்கிறது. ஏனென்றால் அது நிலையான வேகத்தில் பயணிக்கும்போது, அது உண்மையில் பிரபஞ்சத்தின் ஊடாக பயணிக்கவில்லை என்பது போல் தெரிகிறது.
மனிதர்கள் உட்பட பூமியில் உள்ள அனைத்துமே அதே நிலையான வேகத்தில் பயணிக்கின்றன. நாம் பூமியுடன் சுழல்கிறோம். எனவே வேகத்தை நாம் உணர்வதில்லை.
ஆனால் மற்ற முக்கிய கூறுகளும் உள்ளன.

பட மூலாதாரம், Getty Images
பிற சக்திகள்
பூமி சுழல்வதை நாம் ஏன் உணர்வதில்லை என்பதை விளக்கவும் புவிஈர்ப்பு விசை உதவுகிறது.
"நீங்கள் ஃபார்முலா 1 காரில் இருக்கிறீர்கள் என்றும் நிலையான வேகத்தில் நேர்கோட்டில் பயணிக்கிறீர்கள் என்றும் கற்பனை செய்து பாருங்கள்,” என்று வெனிசுலாவின் மத்திய பல்கலைக்கழகத்தின் தத்துவார்த்த இயற்பியலாளரும் அறிவியல் தொடர்பாளருமான சோல்மர் வரேலா கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "அந்த நேரத்தில் வாகனம் நகர்வதை நீங்கள் உணர மாட்டீர்கள். ஆனால் நீங்கள் ஒரு திருப்பத்தை நெருங்கும் போது, ஒரு சக்தி உங்களை வளைவின் எதிர் திசையை நோக்கித் தள்ளுவதை உணர்வீர்கள். அது உங்களை காரிலிருந்து வெளியே தள்ள முயற்சிப்பது போல இருக்கும்,” என்று விளக்குகிறார்.
"நீங்கள் காரில் இருந்து தூக்கி எறியப்படாததற்குக் காரணம், நீங்கள் சீட் பெல்ட் அணிந்திருப்பதே" என்று அவர் கூறுகிறார்.
நமது கிரகத்திலும் இதே தான் நடக்கிறது. அது சுழலும் போது ஒரு மையவிலக்கு விசை உருவாகிறது. கோட்பாட்டின்படி அது நம்மை விண்வெளிக்கு தூக்கி அடிக்கும்.
இருப்பினும் என்ன நடக்கிறது என்றால், பூமியின் புவிஈர்ப்பு அந்த மையவிலக்கு விசையை விட மிகவும் வலுவானது. அதனால் தான் நாம் கிரகத்துடன் ஒட்டியிருக்கிறோம்.
"புவியீர்ப்பு விசை ஒரு காரின் சீட் பெல்ட் போல வேலை செய்கிறது," என்று வரேலா கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
இயக்கம் என்பது ஒப்புமை சார்ந்தது
பூமியின் நகரவை நம்மால் உணர முடியாததே, நமது கிரகம் பிரபஞ்சத்தின் மையம் என்று பல நூற்றாண்டுகளாக நம்பப்பட்டதற்கு ஒரு காரணம்.
"நீண்ட காலமாக பூமியே பிரபஞ்சத்தின் மையம் என்று நம்பப்பட்டது. ஏனென்றால் மக்கள் வானத்தைப் பார்த்தபோது நட்சத்திரங்கள் நகர்வதைக் கண்டார்கள்," என்று வெனிசுலா வானியலாளர் மற்றும் ஜெர்மனியில் உள்ள சூரிய மண்டல ஆராய்ச்சிக்கான மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட்டில் ஆராய்ச்சியாளரான மிரியம் ரேஞ்சல் விளக்குகிறார்.
"ஆனால் நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் மற்றும் ஜோஹன்னஸ் கெப்லர் ஆகியோர் சூரிய மைய மாதிரியை உருவாக்கினர். கலிலியோ வியாழனின் நான்கு நிலவுகளைக் கண்டுபிடித்தார். இந்த கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருவதை அவர்கள் கண்டுபிடித்தபோது இந்த எண்ணம் மாறியது" என்கிறார் ரேஞ்சல்.
கிரகம் நகர்ந்தால் அதை நம்மால் உணர முடியும் என்றும் உயரமான இடத்தில் இருந்து ஒரு பொருளை வீசினால் அது அடிவாரத்தில் விழாமல் பின்னால் தான் விழும் என்றும் பூமியே மையத்தில் உள்ளது என்ற கூற்றை ஆதரிப்பவர்கள் கூறினர்.
ஆனால் கலிலியோ அதை நிராகரிக்க ஒரு வழியைக் கண்டுபிடித்தார்.
அமைதியான கடலில் சீரான வேகத்தில் செல்லும் கப்பலில், தண்ணீர் துளிகளை கொள்கலனில் ஊற்றி அவர் சில சோதனைகளை நடத்தினார்.
கப்பல் முன்னோக்கி நகர்வதை அவர் கண்டார். ஆனால் துளிகள் எப்போதும் கொள்கலனில் விழுந்து கொண்டே இருந்தன.
"இதன் மூலம் எல்லாமே நாம் இருக்கும் இடத்தைப் பொறுத்தது என்பதை அவர் காட்டினார்," என்கிறார் ரேஞ்சல்.
இவ்வாறு சார்பியல் கோட்பாட்டை முன்வைத்த முதல் நபர் கலிலியோ ஆவார்.

பட மூலாதாரம், Getty Images
பழகிக்கொள்ளுதல் மற்றும் தயார் நிலை
பூமியின் இயக்கத்தை உணர முடியாமல் இருப்பதற்கு மற்றொரு காரணம், நாம் அதற்குப் பழகிவிட்டோம்.
"நாம் பிறப்பிலிருந்தே இந்த இயக்கத்திற்குப் பழகிவிட்டோம்" என்று மாட்ரிட்டின் கம்ப்ளூட்டன்ஸ் பல்கலைக்கழகத்தின் புவி இயற்பியல் பேராசிரியரான மார்டா அபாலோஸ் விளக்குகிறார்.
உயிரினங்களின் செவிவழி அமைப்பு கிரகத்தின் இயக்கம் நம்மை மயக்கமடையச் செய்வதைத் தடுப்பதற்கு ஏற்றபடி அமைந்துள்ளது என்று ரே சுட்டிக்காட்டுகிறார்.
அதேபோல், வளிமண்டலம் கிட்டத்தட்ட பூமியின் அதே வேகத்தில் நகர்கிறது என்பதும் இதில் ஒரு பங்கை வகிக்கிறது.
"பூமியைச் சுற்றியுள்ள காற்றின் அடுக்கு கிட்டத்தட்ட அதே வேகத்தில் சுழல்வதால், பூமியின் சுழற்சியால் ஏற்படும் எந்த 'காற்றையும்' நாம் உணர்வதில்லை" என்று அபாலோஸ் விளக்குகிறார்.
”கிரகத்தின் இயக்கம் காற்றை உருவாக்காது. ஏனெனில் விண்வெளி கிட்டத்தட்ட காலியாக உள்ளது," என்று ரே சுட்டிக்காட்டுகிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












