இலங்கையில் நிற்கும் இரான் போர்க்கப்பல் - அரசுக்கு அமெரிக்கா அழுத்தம் என வெளியான தகவல்

புஷெர் கப்பல்

பட மூலாதாரம், SL NAVY

படக்குறிப்பு, புஷெர் கப்பல்
    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இரான் கடற்படை கப்பல் ஒன்று இலங்கை அருகே அமெரிக்காவால் மூழ்கடிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது கப்பலுக்கு இலங்கை அரசு அடைக்கலம் கொடுத்துள்ளது. அதன் பணியாளர்கள் இலங்கையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழலில் இலங்கையில் இருக்கும் இரானிய கடற்படையினரை அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என இலங்கையிடம் அமெரிக்க அரசு கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இலங்கை, இரான் கப்பல், அமெரிக்கா

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு, ஐஆர்ஐஎஸ் தேனா கப்பல் (கோப்புப் படம்)

இரான் கப்பலில் உயிரிழந்தவர்கள், மீட்கப்பட்டவர்களின் நிலை என்ன?

இலங்கையை அண்மித்த கடல் பரப்பில் ஐஆர்ஐஎஸ் தேனா என்ற இரானிய கப்பல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த 84 பேரின் சடலங்கள் மீதான மரண பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக காலி துறைமுக போலீஸார் காலி நீதவான் முன்னிலையில் விடயங்களை தெளிவுப்படுத்தியிருந்தனர்.

இதன்படி, சடலங்கள் மீது மரண பரிசோதனையை நடத்துமாறு நீதவான், காலி தேசிய மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதேவேளையில், தாக்குதலுக்கு இலக்கான கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 32 பேரும், காலி தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ஒருவரின் நிலைமை மாத்திரம் கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறு காயங்களுக்கு உள்ளான ஏனையோர் தொடர்ச்சியாக சாதாரண அறைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வரும் இரான் பிரஜைகள், சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் வேறு இடங்களுக்கு அழைத்து செல்லும் காட்சிகளை எம்மால் காண முடிந்தது.

அத்துடன், இரான் தூதரகத்தின் அதிகாரிகளும் மருத்துவமனை வளாகத்தில் காத்திருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

இலங்கை, இரான் கப்பல், அமெரிக்கா

அறைகளில் நிலவிய தட்டுப்பாடு

இரான் கப்பல் தாக்குதலுக்கு இலக்கானதை அடுத்து, கண்டெடுக்கப்பட்ட 84 பேரின் சடலங்களையும் குளிரூட்டப்பட்ட அறையில் வைப்பதற்கு பாரிய பிரச்னை காணப்பட்டது. காலி தேசிய மருத்துவமனையில் குளிரூட்டப்பட்ட அறைகளில் காணப்படும் தட்டுப்பாடு காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, கொழும்பிலிருந்து நடமாடும் குளிரூட்டப்பட்ட அறைகளை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்தநிலை தற்போது சரி செய்யப்பட்டுள்ளது.

தனியாருக்குச் சொந்தமான குளிரூட்டப்பட்ட கொள்கலன் இரண்டு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் சடலங்கள் அதில் வைக்கப்பட்டன.

இலங்கை, இரான் கப்பல், அமெரிக்கா
படக்குறிப்பு, காலி மருத்துவமனை

இந்து சமுத்திரத்தில் பல சம்பவங்கள் நடந்தேறுகின்றன - நலிந்த ஜயதிஸ்ஸ

எதிர்கட்சிகள் அறியாத பல சம்பவங்கள் இந்து சமுத்திரத்தில் நடந்தேறி வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவிக்கின்றார்.

நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

''நீங்கள் கூறிய சம்பவங்களை விடவும் அதிகளவிலான சம்பவங்கள் இந்து சமுத்திரத்தில் இடம்பெற்று வருகின்றன. அதற்கு சர்வதேச சட்டங்களுக்கு அமைய, அரசாங்கம் என்ற விதத்தில் மனிதாபிமான ரீதியில் நாங்கள் தலையீடு செய்துள்ளோம். தலையீடு செய்வது தொடர்பான தகவல்களை நாடாளுமன்றத்திற்கு அறிவிப்போம்'' எனவும் அவர் கூறினார்.

பூஷெஹர் கப்பல்

பட மூலாதாரம், SL NAVY

படக்குறிப்பு, புஷெர் கப்பல்

இலங்கையில் தஞ்சமடைந்த இரானின் மற்றுமொரு கப்பல்

இரான் கப்பல் இலங்கை அருகே மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் விவாதப் பொருளான நிலையில், ஐஆர்ஐஎஸ் புஷெஹர் என்ற இரானியக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மேலும் அதில் இருந்த 208 பணியாளர்கள் இலங்கை கடற்படைக்கு சொந்தமான வெலிசர முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தப் பணியாளரை எடுத்துக் கொள்வதற்கான "மனிதாபிமான கடமை" தனக்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.

மீட்கப்பட்டவர்கள் தொடர்பில் இலங்கைக்கு அமெரிக்கா சொன்னது என்ன?

இந்தச் சூழலில் புஷெர் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இரானியர்கள் 208 பேரையும் தேனா கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேரையும் இரானுக்கு திருப்பி அனுப்பக்கூடாது என அமெரிக்கா இலங்கையிடம் தெரிவித்ததாக அரசு குறிப்பு ஒன்றை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்புவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் விவகாரப் பொறுப்பாளர் ஜெய்ன் ஹோவெல் இலங்கை அரசாங்கத்திடம் இதனை தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.

இலங்கை சுகாதார இணை அமைச்சர் ஹன்சாகா விஜேமுனி புதன்கிழமையனறு ராய்ட்டர்ஸிடம் பேசுகையில், "தேனா கப்பல் பணியாளர்களில் உயிரிழந்தவர்களின் உடல்களை திருப்பி அனுப்புவதற்கு உதவுமாறு இரான் கேட்டுள்ளது. ஆனால் அதற்கான கால அளவு நிர்ணயிக்கப்படவில்லை." எனத் தெரிவித்தார்.

இலங்கை, இரான் கப்பல், அமெரிக்கா
படக்குறிப்பு, இராமலிங்கம் சந்திரசேகரன்

'மீனவர்கள் சர்வதேச கடல் எல்லைக்கு செல்ல வேண்டாம் '

இலங்கை கடல் எல்லையை மீறி, சர்வதேச கடல் எல்லைக்குள் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் மீனவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றார்.

''குறிப்பாக எமது கடல் எல்லைக்குள், சர்வதேச கடல் எல்லைக்குள் தற்போது இடம்பெற்று வரும் சம்பவங்களை பார்க்கும் போது முதலில் ஒரு கோரிக்கையை விடுக்கின்றேன். எமது கடல் எல்லையை தாண்டி வேறு கடல் எல்லைகளுக்குள் செல்ல வேண்டாம் என அனைத்து மீனவர்களிடமும் நான் கேட்டுக்கொள்கின்றேன்.'' என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கூறுகின்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு