வி.டி. சதீசன்: அமைச்சராகும் வாய்ப்பை இழந்தவர் இன்று சவால்களை வென்று கேரள முதல்வரானது எப்படி?

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி ஹிந்திக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
கேரள முதலமைச்சராக காங்கிரஸை சேர்ந்த வி.டி.சதீசன் பதவியேற்றுள்ளார். திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் அர்லேகர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். ரமேஷ் சென்னிதலா, முரளீதரன் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்ற உறுப்பினர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸை சேர்ந்த வெவ்வேறு மாநில முதலமைச்சர்களான சித்தராமையா, ரேவந்த் ரெட்டி மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். கேரளத்தின் முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பினராயி விஜயனுக்கு சவாலாக திகழ்ந்த சதீசன்
கேரளத்தில் இடதுசாரி கூட்டணி சார்பில் முதலமைச்சராக இருந்த பினராயி விஜயனை எதிர்த்து நின்ற ஒரு வலிமையான காங்கிரஸ் தலைவராக வி.டி.சதீசன் அறியப்படுகிறார்.
இதுவரை, கேரளத்தை ஆண்ட இடதுசாரி அரசாங்கத்தையோ அல்லது விஜயனையோ எந்த நிகழ்விலும் விமர்சிக்காமல் இருந்ததில்லை. விஜயனுக்குப் போட்டியின்றி இருந்தபோதே அவர் இவ்வாறு விமர்சித்து வந்துள்ளார்.
பல விவகாரங்களில் அவர் எடுத்த கடுமையான நிலைப்பாடு காரணமாக, பினராயி விஜயன் "முண்டு அணிந்த மோதி" என்று கூட அழைக்கப்பட்டார். முண்டு என்பது கேரளத்தில் வேட்டிக்கு வழங்கப்படும் பெயர்.
இருப்பினும், 61 வயதான வி.டி.சதீசனும் அதிலிருந்து பெரிய அளவில் வேறுபட்டவர் அல்ல.
சாதி அமைப்புகளை தள்ளி வைத்த சதீசன்
ஒருமுறை, ஈழவ சமூக அமைப்புகளான எஸ்என்பிடி மற்றும் நாயர் சர்வீஸ் சொசைட்டி ஆகியவை சதீசனை சந்திக்க விரும்பின.
ஆனால் அவர் சாதி அமைப்புகளுடன் எந்தவொரு தொடர்பையும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்தார். இதன் மூலம் மக்களுடன் நேரடியாக இணைய வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
அரசியல் விமர்சகரான பேராசிரியர் ஜே. பிரபாஷ் பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் கூறுகையில், "அவர் நேரடியாக மக்களிடம் சென்று அவர்களின் ஆதரவைப் பெற்றார். அவர் தீர்க்கமான முடிவுகளை எடுப்பதில் பெயர் பெற்றவர். மற்ற தலைவர்களைப் போலல்லாமல், அவர் ஒருபோதும் சாதி அடிப்படையிலான அமைப்புகளை அணுகவில்லை. இந்த முடிவு அவருக்கு சமூகத்தின் பிற பிரிவினரின் ஆதரவையும் பெற்றுத் தந்தது" என்று தெரிவித்தார்.
அவரது நேரடியான 'ஆம்' அல்லது 'இல்லை' என்ற அணுகுமுறை கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் சமூகங்களைக் கவர்ந்தது.
இதன் விளைவாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) அவருக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் முதலமைச்சர் வேட்பாளராக சதீசனையே தாங்கள் விரும்புவதாக ஐயுஎம்எல் தொடர்ந்து கூறிவந்தது.
கூட்டணிக் கட்சிகளிடையே அவருக்கு இருந்த செல்வாக்கும், பொதுமக்களிடையேயான அவரது பிரபலமும் அவரை முதலமைச்சர் வேட்பாளருக்கான காங்கிரஸின் முதல் தேர்வாக மாற்றியது.
வி.டி.சதீசன் சக்தி வாய்ந்த தலைவரானது எப்படி?

பட மூலாதாரம், ANI
ஐ.யு.எம்.எல்-இன் இந்த நிலைப்பாடு, பல்வேறு காரணங்களுக்காக காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது.
தங்களின் கூட்டணிக் கட்சி இந்த விவகாரத்தில் தலையிடுவதாக காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர். அதே வேளையில், பாஜக இதனை மாநிலத்தில் "இஸ்லாமிய ஆட்சியை" கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியாகக் கருதியது.
ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில், சதீசனின் அரசியல் மற்றும் நிர்வாக அணுகுமுறையும், அவரது சுற்றுப்பயணங்களும் மாநிலம் முழுவதும் உள்ள பொதுமக்களிடமிருந்து ஆதரவைப் பெற்றுள்ளன.
பொன்னானி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான கே.பி. நௌஷாத் அலி பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் கூறுகையில், "இந்த ஆதரவு அவரை ஒரு சக்திவாய்ந்த தலைவராக மாற்றியுள்ளது. பிளவுபடுத்துதலை எதிர்த்ததன் மூலம் அவர் சிறுபான்மையினரின் இதயங்களை வென்றார். மதச்சார்பின்மை மீதான அவரது அர்ப்பணிப்பு சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் நம்பிக்கையளித்தது" என்று தெரிவித்தார்.
வாக்கு எண்ணிக்கை நாளன்று திருவனந்தபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வெளியே இருந்த அரசியல் பார்வையாளர் ஒருவர், பெயர் வெளியிட வேண்டாம் எனக்கூறி பேசுகையில், "மக்களிடத்தில் அவருக்கு இருக்கும் இந்த பிரபலம், அவரை முதலமைச்சர் பந்தயத்தில் முன்னணியில் நிறுத்தியது" என்றார்.
"சதீசனுக்கு நிர்வாக அனுபவம் இல்லை என்றாலும், இவ்வளவு பெரிய பெரும்பான்மையுடன் அமையும் ஓர் அரசாங்கத்தை அவரால் மட்டுமே வழிநடத்த முடியும்" என்பதே அவரது மதிப்பீடாக இருந்தது.
அமைச்சராகும் வாய்ப்பை கடைசி நேரத்தில் இழந்தவர்

பட மூலாதாரம், ANI
முன்னாள் கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டியின் அமைச்சரவையில் சதீசன் கிட்டத்தட்ட அமைச்சராகும் தருவாயில் இருந்தார்.
ஆனால் கடைசி நிமிடத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா அவரது பெயரை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக வி.எஸ்.சிவகுமாரின் பெயரை சேர்த்தார். இது சென்னிதலாவுடனான அவரது உறவில் கசப்பை ஏற்படுத்தியது.
2025-ஆம் ஆண்டு ஆகஸ்டில், சதீசன் சுகாதாரம் மற்றும் உயர்கல்வி குறித்து இரண்டு மாநாடுகளை ஏற்பாடு செய்தார்.
கள அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையிலான கொள்கை வழிகாட்டுதலைத் தீர்மானிப்பதற்காக, இரு துறைகளிலும் உள்ள நிபுணர்களின் கருத்துகளைப் பெறுவதே இதன் நோக்கமாக இருந்தது.

பட மூலாதாரம், ANI
அதிகாரி ஒருவர் பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசுகையில், "சுகாதாரம் மற்றும் கல்விக்கான இரண்டு குழுக்கள் கொள்கையில் பல மாற்றங்களைப் பரிந்துரைத்துள்ளன. சுகாதாரக் கட்டமைப்பு மிகவும் வலுவாக உள்ளது, ஆனால் இன்னும் சில குறைபாடுகள் உள்ளன" என்று தெரிவித்தார்.
- சதீசன் தனது வாழ்க்கையை கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞராகத் தொடங்கினார்.
- அவரது அரசியல் ஆர்வம் மாணவர் பருவத்திலேயே தொடங்கியது.
- சதீசன் முதன்முதலில் 2001இல் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று முதல் பரவூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெற்று வருகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































