காங்கிரஸ் மாவட்ட தலைவர் மரண வழக்கில் 2 வாரங்களாக நீடிக்கும் சிக்கல்

- எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் வழக்கில் 2 வாரங்களாகியும் இன்னும் துப்பு துலங்கவில்லை. அவர் எழுதியதாகக் கூறப்படும் 2 கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருந்தவர்கள் உள்பட 32 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். டி.எஸ்.பி. தலைமையில் 10 தனிப்படைகளை அமைத்து விசாரிக்கும் நிலையில் இந்த வழக்கில் இன்னும் துப்பு துலங்காதது ஏன்? காவல்துறை கூறுவது என்ன?
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள கரைச்சுத்துப்புதுரைச் சேர்ந்த கே.பி.கே ஜெயக்குமார் தனசிங், காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவராக இருந்து வந்தார். கட்சிப் பணிகள் தவிர, அரசு மற்றும் தனியார் ஒப்பந்தங்களை எடுத்து சாலை அமைப்பது, கட்டிடங்கள் கட்டுவது போன்ற பணிகளையும் அவர் செய்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த மே இரண்டாம் தேதி இரவு வீட்டை விட்டுச் சென்ற ஜெயக்குமார் தனசிங். மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, அவரது மகன் கருத்தையா ஜாப்ரின் உவரி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து மூன்று தனிப்படை அமைத்து தேடுதல் பணியை தொடங்கினர்.
போலீசாருக்கு கிடைத்த கடிதம்
அப்போது, ஜெயக்குமாரின் குடும்பத்தினர் அவர் கைப்பட எழுதிய கடிதம் என்று கூறி ஒரு கடிதத்தை காவல்துறையினரிடம் அளித்துள்ளனர். தொழில் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தனக்கிருந்த தொடர்புகளில் இருந்த பிரச்னைகளை குறிப்பிட்டு ஜெயக்குமார் தனசிங் எழுதியிருந்ததாக அந்த கடிதம் இருந்தது.
இந்த இந்த கடிதம் சமூக வலைதளங்களிலும் பரவி பெரும் விவாதங்களை கிளப்பியது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல அரசியல் தலைவர்களும் இதுகுறித்து தங்களது விமர்சனக் கருத்துகளை முன்வைத்தனர்.

பாதி எரிந்த நிலையில் உடல் மீட்பு
காணாமல் போன ஜெயக்குமார் தனசிங்கை காவல்துறையினர் 3 தனிப்படைகளை அமைத்து தேடிவந்த நிலையில், வீட்டின் அருகேயுள்ள தோட்டத்தில் மே 4ஆம் தேதி காலையில் பாதி எரிந்த நிலையில் அவரது உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
தோட்டத்தில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட உடல் ஜெயக்குமாருடையதுதான் என்று அவரது குடும்பத்தினர் உறுதி செய்தனர். "ஜெயக்குமார் உடலில் கையும், காலும் கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் கம்பியால் கட்டப்படிருந்தன. உடலின் முன்பகுதியில் பெரிய கல் ஒன்றும் வைத்து கட்டப்பட்டிருந்தது" என்று காவல்துறையினர் கூறினர்.
போலீசிடம் சிக்கிய தடயங்கள்
இதையடுத்து, காணாமல் போனவரைத் தேடுவதாக இருந்த வழக்கு, சந்தேக மரணமாக மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
ஜெயக்குமாரின் உடல் மீட்கப்பட்ட தோட்டத்தில் கைரேகை நிபுணர்கள், தடயவியல் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்கிருந்து காலியான கேன் ஒன்று, சிறிய கத்தி, டார்ச் லைட், கம்பி போன்ற தடயங்கள் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஜெயக்குமார் பயணித்த வழியில் உள்ள கடைகளில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், வீட்டின் அருகே இருக்கும் கடை ஒன்றில் காணாமல் போன மே 2-ஆம் தேதி இரவில் அவர் டார்ச் லைட் ஒன்று வாங்கும் காட்சி பதிவாகியிருந்தது. அந்த சிசிடிவி காட்சிகளும் வெளியாயின.
பிபிசி தமிழிடம் பேசிய ஜெயக்குமாரின் தம்பி கே.பி.கே ராஜா, “போலீசாரின் விசாரணையில் நம்பிக்கை உள்ளது. அவர்கள் உண்மையான் குற்றவாளியை கண்டுபிடிப்பார்கள் என்று குடும்பத்தினர் நம்புகிறோம்” என்றார்.

ஜெயக்குமார் எழுதியதாக வெளியான 2-வது கடிதம்
காவல்துறை விசாரணை தொடர்ந்த நிலையில், ஜெயக்குமார் தனது மருமகன் ஜெபாவிற்கு எழுதியதாக கூறப்படும் இரண்டாம் கடிதம் கிடைத்தது. அதில், "தனக்கு யாரெல்லாம் பணம் தரவேண்டும், எவ்வளவு கொடுக்க வேண்டும்" என்று ஜெயக்குமார் கூறுவதாக 23 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இரண்டு கடிதங்களிலும் உள்ள கையெழுத்து ஜெயக்குமார் தனசிங்குடையதுதான் என்று குடும்பத்தினர் உறுதி செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
2 கடிதங்களும் சிக்கியது எப்படி?
ஜெயக்குமார் தனசிங் எழுதியதாக சமூக வலைதளங்களில் வெளியான முதல் கடிதம், அவர் தனது உதவியாளரிடம் கொடுத்து வைத்தது என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. ஆனால், ஜெயக்குமார் தனசிங்கிடம் உதவியாளராக பணியாற்றியுள்ள வேலன், பிபிசி தமிழிடம் பேசிய போது அதனை மறுத்தார்.
"ஜெயக்குமார் தனசிங்கிடம் 6 மாதங்களுக்கு முன்பு வரை உதவியாளராக பணிபுரிந்து வந்தேன். 6 மாதங்களுக்கு முன் பணியில் இருந்து நின்றுவிட்டேன். முதலில் வெளியான கடிதத்தை அவர் எழுதி என்னிடம் கொடுத்து வைத்திருந்தார் என்பது தவறு. ஜெயக்குமார் தனசிங் காணாமல் போன பிறகு நானும், அவரது மகன் கருத்தையா ஜாப்ரினும் அவரது அலுவலகத்தில் தேடிய போது அந்த கடிதம் கிடைத்தது. அதனையே அவரது குடும்பத்தினர் காவல்துறையினரிடம் அளித்தனர்" என்று கூறினார்.
இரண்டாவது கடிதம் ஜெயக்குமார் தனசிங்கின் வீட்டில் கிடைத்ததாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். இந்த 2 கடிதங்களும் ஜெயக்குமார் தனசிங்கால் எழுதப்பட்டவை தானா என்பதை உறுதி செய்ய தடயவியல் ஆய்வுக்கு காவல்துறையினர் அனுப்பியுள்ளனர்.
32 பேரிடம் சம்மன் அனுப்பி விசாரணை
ஜெயக்குமார் தனசிங் எழுதியதாக கூறப்படும் 2 கடிதங்களின் அடிப்படையில் 32 பேருக்கு காவல்துறை சம்மன் அனுப்பியது. நெல்லை, துத்துக்குடி உள்பட பல்வேறு இடங்களில் வைத்து காங்கிரஸின் முன்னாள் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு, நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரன் உள்பட பலரிடமும் காவல்துறை விசாரணை நடத்தியது.
விசாரணையில் ஆஜராக நெல்லை வந்திருந்த கே.வி தங்கபாலு செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஜெயக்குமார் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் என்னைப் பற்றி கூறப்பட்டிருந்த தகவல்கள் அனைத்தும் பொய்யானது, உண்மைக்கு புறம்பானது. காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்”, என்று கூறினார்.

2 வாரங்கள் கடந்த பிறகும் தொடரும் மர்மம்
ஜெயக்குமார் தனசிங் மே 2 தேதி காணாமல் போன பிறகு, அவரது உடல் மே-4ஆம் தேதி மீட்கப்பட்டது. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது உடலுக்கு சொந்த ஊரில் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. இந்த வழக்கில் துப்பு துலக்க 10 தனிப்படைகளை அமைத்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 வாரங்கள் கடந்து விட்ட பிறகும் குற்றவாளிகள் இன்னும் பிடிபடவில்லை.
‘வழக்கில் ஒரு வாரத்தில் தெளிவு கிடைக்கும்’
ஜெயக்குமார் தனசிங் வழக்கு தொடர்பாக மே 13 ஆம் தேதி தென்மண்டல ஐ.ஜி. என்.கண்ணன் தலைமையில் திருநெல்வேலியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல் ஐஜி கண்ணன், “ஜெயக்குமார் பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை. முதல் கட்ட தகவலின்படி அவரது உடலில் காயம் தென்படவில்லை. கை, கால்கள் கம்பியால் கட்டப்பட்டிருந்தன. அதேபோல் வாயில் ஸ்கிரப்பர் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலில் கல் ஒன்று கட்டப்பட்டிருந்தது தெரிய வந்திருக்கிறது." என்றார்.
மேலும், "இந்த வழக்கில் புகார் வந்தவுடன் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 32 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனையின் முழுமையான முடிவுகள் இன்னமும் கிடைக்கவில்லை. இந்த வழக்கில் சைபர் கிரைம், தடய அறிவியல் துறை, கைரேகை நிபுணர் குழுவைச் சேர்ந்தவர்கள் பல்வேறு ஆய்வுகள், சோதனைகளை நடத்தியுள்ளனர்" என்று கூறினார்.

மேலும் தொடர்ந்த அவர், “ராமஜெயம் வழக்கைப் பார்த்தவுடனே கொலை வழக்கு என்று தெரிந்துவிட்டது. ஆனால் இதில் பார்த்தவுடனே கொலையா? அல்லது தற்கொலையா என்பதை உடனடியாக முடிவுக்கு வர இயலாத நிலை உள்ளது. அதனால் தான் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. எந்த வழக்கிலும் இல்லாத வகையில் இந்த வழக்கிற்கு 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வாரத்தில் இந்த வழக்கில் தெளிவு கிடைக்கும்“ என்றார்.
“ஜெயக்குமார் வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட பிரேதப் பரிசோதனை, டி.என்.ஏ அறிக்கையின் முழுமையான முடிவுகள் இந்த வார இறுதிக்குள் கிடைத்துவிடும். அதன் மூலம் இந்த வழக்கு முன்னேற்றம் அடையும். குற்றவாளியை விரைவில் நெருங்கி விடுவோம்”, என்று ஐ.ஜி. என். கண்ணன் தெரிவித்தார்.
சபாநாயகர் அப்பாவுவிடம் விசாரணையா?
ஜெயக்குமார் தனசிங் எழுதியதாகக் கூறப்படும் முதல் கடிதத்தில் சபாநாயகர் அப்பாவு பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறி அவரிடம் விசாரணை நடத்தப்படுமா என்று ஐ.ஜி. கண்ணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த கண்ணன், "தேவைப்பட்டால் அவரிடமும் விசாரணை நடத்தப்படும்" என்று கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












