கோடை வெப்பம் தாங்காமல் வெடிக்கும் ஏ.சி. - தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன?

ஏசி வெடித்து தீப்பிடித்த குடியிருப்பு : உண்மையில் ஏசி வெடிப்பது ஏன்?

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, நொய்டாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏசி வெடித்து தீப்பிடித்தது.

கடும் வெப்பம் காரணமாக சில குடியிருப்புகளில் உள்ள ஏசி சாதனங்கள் வெடித்துச் சிதறுகிறது. இதுபோன்ற சம்பவங்களால், ஏசி சாதனங்களை எவ்வாறு பாதுகாப்பாகப் பயன்படுத்துவது, விபத்துகள் ஏற்படும்போது என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பன குறித்த விவாதம் தொடங்கியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள குடியிருப்புப் பகுதியில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்துக்கு, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ஏசி சாதனத்தின் கம்ப்ரசர் வெடித்ததே காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பலத்த சத்தத்துடன் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ பற்றி எரியும் காட்சிகள் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டது. தீவிர முயற்சிக்குப் பின் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த விபத்து குறித்து நொய்டா தீயணைப்புப் படை அதிகாரி பிரதீப் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், ​​“சமீப நாட்களில் வெவ்வேறு இடங்களில் 10 முதல் 12 ஏசி சாதனங்கள் வெடித்துச் சிதறியுள்ளது. இந்தச் சம்பவங்கள் குடியிருப்பு மற்றும் வணிக கட்டடங்களில் நடந்தது," என்றார்.

இதற்கு முன், மே 27ஆம் தேதி, மும்பையின் மேற்கு போரிவலி பகுதியில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் இதேபோன்ற சம்பவம் நடந்தது. நொய்டா சம்பவத்தைப் போலவே அங்கும் ஏசியில் தீப்பிடித்து அடுக்குமாடி குடியிருப்புப் பகுதி முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.

ஹரியாணா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு விகே நியூரோகேர் மருத்துவமனையில் ஏசி சாதனத்தின் கம்ப்ரசர் வெடித்து தீப்பிடித்தது.

ஏசி சாதனங்கள் வெடிப்பது ஏன்? ஏசி சாதனங்கள் வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இங்கு கண்டறிவோம்.

ஏசி சாதனங்களைத் தாக்கும் வெப்பம்

ஏசி வெடித்து தீப்பிடித்த குடியிருப்பு : உண்மையில் ஏசி வெடிப்பது ஏன்?

பட மூலாதாரம், ANI

ஏசி சாதனங்கள் வெடிப்பதற்கு முக்கியக் காரணம் வெப்பநிலை அதிகரிப்புதான்.

இந்தச் சம்பவங்களுக்குப் பின்னால் இருக்கும் அறிவியல் காரணங்களைப் புரிந்துகொள்ள, ஐஐடி பி,ஹெச்.யூ-வின் இயந்திரவியல் துறை பேராசிரியர் ஜஹார் சர்க்காரிடம் பேசினோம்.

பிபிசியின் அர்ஷத் மிசாலிடம் பேராசிரியர் சர்க்கார் பேசுகையில், ஒரு அறையைக் குளிர்விக்க, ஏசி சாதனத்தில் இருக்கும் கம்ப்ரசரை சுற்றியுள்ள வெப்பநிலை அதன் மின்தேக்கி (condenser) வெப்பநிலையைவிட 10 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்க வேண்டும் என்று விளக்கினார்.

"இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஏசி சாதனங்களின் மின்தேக்கி வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். மின்தேக்கி வெப்பநிலையைவிட வெளிப்புற வெப்பநிலை அதிகமாக இருந்தால், ஏசி வேலை செய்வதை நிறுத்திவிடும். இத்தகைய நிலையில் மின்தேக்கியின் அழுத்தம் அதிகரிக்கிறது. இது மின்தேக்கி வெடிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது," என்று பேராசிரியர் ஜஹார் பிபிசியிடம் கூறினார்.

மேலும் ஏசி வெடிப்பதற்கான காரணங்கள் என்ன, அந்த அபாயத்தைத் தவிர்க்க ஏசியை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்பன போன்ற தகவல்களையும் ஜஹார் வழங்கினார்.

ஏசி சாதனங்கள் வெடிப்பது ஏன்?

ஏசி வெடித்து தீப்பிடித்த குடியிருப்பு : உண்மையில் ஏசி வெடிப்பது ஏன்?

பட மூலாதாரம், SAJJAD HUSSAIN/AFP VIA GETTY IMAGES

அதிக வெப்பநிலையைத் தவிர்த்து வேறு சில காரணங்களாலும் ஏசி விபத்துகள் ஏற்படுகிறது.

வாயுக் கசிவு (AC gas leakage): மின்தேக்கியில் இருந்து வாயு கசிவதாலும் ஏசி சாதனங்களில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஏசியின் மின்தேக்கியில் வாயுவின் அளவு குறையும்போது மின்தேக்கியின் அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் வெப்பம் அதிகமாகி தீப்பிடித்து எறியும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

காயில்களில் தூசி: குளிரூட்டும் செயல்பாட்டில் ஏசி மின்தேக்கி சுருள்கள் (Coils) முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவை காற்றில் இருந்து வெப்பத்தை நீக்குகின்றன.

சுருள்களில் அழுக்கு மற்றும் தூசிகள் படியும்போது, ​​வாயு விநியோகப் பிரச்னைகள் எழுகின்றன. இதனால் மின்தேக்கி அதிக வெப்பமடைகிறது. இது தீப்பற்றி எரியும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

மின்னழுத்த ஏற்ற இறக்கங்கள் (Voltage Fluctuations): மின் விநியோகத்தில் அடிக்கடி ஏற்படும் மின்னழுத்த ஏற்ற இறக்கங்கள் கம்ப்ரசரின் செயல்திறனைப் பாதிக்கிறது. இது விபத்துக்கு வழிவகுக்கும்.

ஏசி சாதனங்கள் வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

ஏசி வெடித்து தீப்பிடித்த குடியிருப்பு : உண்மையில் ஏசி வெடிப்பது ஏன்?

பட மூலாதாரம், ANI

சுற்றுச்சூழலில் வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது ஏசி சாதனங்களின் கம்ப்ரசர் வெயில்படாமல் நிழலில் இருப்பதை உறுதி செய்யவும். கம்ப்ரசர் மற்றும் மின்தேக்கி அமைப்பை சுற்றிச் சரியான காற்றோட்டம் இருக்க வேண்டும். காற்றோட்டம் இருந்தால், கம்ப்ரசர் போன்ற பாகங்கள் அதிக வெப்பமடையாது.

ஏசி சாதனத்தைத் தவறாமல் சர்வீஸ் செய்ய வேண்டும். இவ்வாறு அடிக்கடி சர்வீஸ் செய்யும்போது உள்பாகங்களில் பழுது ஏற்பட்டால் முன்னரே கண்டறிந்து சரிசெய்ய ஏதுவாக இருக்கும்.

ஏர் ஃபில்டர் (Air filter) மற்றும் குளிரூட்டும் சுருள்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். இதைச் செய்வதன் மூலம், கம்ப்ரசர் அதிக அழுத்தம் அடையாது.

குளிரூட்டும் மின்விசிறியையும் அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். அதில் ஏதேனும் பிரச்னை இருந்தால், உடனடியாகச் சரி செய்ய வேண்டும்.

ஏசி சாதனம் வாங்கும் முன் மனதில் கொள்ளவேண்டிய விஷயங்கள்

அலுமினியம் கண்டன்சர்கள் கொண்ட ஏசிகளைவிட தாமிரத்தால் (copper) செய்யப்பட்ட ஏசி சாதனங்களின் விலை சற்று அதிகம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தாமிரம் தண்ணீருடன் அல்லது காற்றிலுள்ள ஈரப்பதத்துடன் வினை புரிவதில்லை. எனவே அதிக எதிர்ப்புத் தன்மைகொண்ட பொருளாகச் செயல்படுகிறது.

தாமிரம் குறைந்த வெப்ப கடத்துத் திறனைக் கொண்டுள்ளது. இந்தப் பண்புகளால் அது விரைவாக வெப்பமடையாது. எனவே வெப்பம் அதிகரித்தாலும் சீக்கிரம் இயல்பான தட்பவெப்பத்துக்கு வந்துவிடும்.

ஆகையால், நிபுணர்கள் அலுமினியம் ஏசி சாதனங்களைவிட காப்பர் ஏசிகளையே பரிந்துரைக்கிறார்கள்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)