புகை பிடிப்பதை நிறுத்தியதும் உடலில் ஏற்படும் 10 மாற்றங்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விஷ்ணு ஸ்வரூப்
- பதவி, பிபிசி தமிழ்
இன்று (மே 31-ஆம் தேதி) உலக புகையிலை எதிர்ப்பு தினமாக (World No Tobacco Day) கடைப்பிடிக்கப்படுகிறது.
உலக சுகாதார மையத்தின் உறுப்பு நாடுகளால் 1987-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த தினம், உலகம் முழுவதும் பரவியுள்ள புகையிலை பயன்பாட்டின் மீதும் அது ஏற்படுத்தும் நோய் மற்றும் மரணங்கள் மீதும், இவை எவ்வாறு தவிர்க்கப்படக்கூடியவை என்பதன்மீதும் கவனத்தை ஈர்ப்பதற்காக கடைப்பிடிக்கப்படுகிறது.
புகையிலை நுகரப்படும் மிகப் பரவலான வழிமுறைகளில் ஒன்று, சிகரெட் புகைப்பது.
சிகரெட் புகைப்பதனாலோ, அந்தப் புகையை சுவாசிப்பதாலோ புற்றுநோய் ஏற்படும் என்பது இன்று நாம் அறிந்த பொதுவான உண்மைகளில் ஒன்றாகும். ஆனால் சிகரெட் புகைப்பதற்கும் புற்றுநோய் ஏற்படுவதற்குமான தொடர்பு அவ்வளவு எளிதில் நிறுவப்படவோ, பொதுவெளியில் ஏற்றுக்கொள்ளப்படவோ இல்லை.
அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலகம் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையின் படி, 19-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர், நுரையீரல் புற்றுநோய் அரிதான ஒரு நோயாகவே இருந்து வந்தது. ஆனால் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில், இயந்திரமயமாக்கப்பட்ட சிகரெட் தயாரிப்பும், பரவலான சந்தைப்படுத்துதலும் நுரையீரல் புற்றுநோய் சம்பவங்களின் எண்ணிக்கையை அதிகரித்தன.
“1940-கள், 1950-களில், நுரையீரல் புற்றுநோய்க்கு சிகரெட் தான் காரணம் என்ற உண்மை அங்கீகரிக்கப்பட்டது. இது நோய்ப்பரவல் ஆய்வுகள், விலங்குகள் மீதான ஆய்வுகள், செல் நோய்க்கூறு அராய்ச்சி, ரசாயனப் பகுப்பாய்வு, ஆகியவற்றின்மூலம் நிறுவப்பட்டது,” என்கிறது அந்த ஆய்வறிக்கை.
ஆனாலும், இந்த உண்மை பொதுவெளியில் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் அவ்வளவு எளிதாக நடக்கவில்லை. சிகரெட் நிறுவனங்கள் இதனை தங்கள் வணிகத்திற்கெதிரான திட்டமிடப்பட்ட சூழ்ச்சியாகச் சித்தரித்தன.
இவையனைத்தையும் தாண்டி, இன்று சிகரெட் புகைப்பது புற்றுநோயை உண்டாக்கும் என்ற அறிவியல் உண்மை, சிகரெட் பெட்டிகளிலிருந்து, சினிமா அரங்கங்கள் வரை இன்று பரவியிருக்கிறது.
ஒருவர் எந்த வயதில் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தைத் துவங்குகிறார்?
மருத்துவர்களிடம் கேட்டபோது, தாங்கள் பார்க்கும் பெரும்பாலான நோயாளிகள், பள்ளியிலிருந்து கல்லூரிக்குச் செல்லும் வளரிளம் பருவமான 18 வயதளவில், நண்பர்களோடு ‘ஜாலியாகப்’ புகைபிடிக்கத் துவங்கி அதுவே கைவிடமுடியாத பழக்கமாகிவிட்டதாகச் சொல்வதாகக் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
புகைப்பழக்கம் ஏன் ஒருவரை அடிமைப்படுத்துகிறது?
புகைபிடிப்பது ஏன் எளிதில் கைவிடமுடியாத பழக்கமாகிறது?
'நிக்கோட்டின்,’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த மூத்த நுரையீரல் மருத்துவரான எஸ்.ஜெயராமன்.
புகையிலையில் இருக்கும் நிக்கோட்டின் என்ற இந்த ரசாயனம் தான் புகைபிடிப்பதை கைவிடமுடியாத பழக்கமாக (addictive) மாற்றுகிறது என்கிறார் அவர்.
இதனோடு பிணைக்கப்பட்ட வகையில், இந்த ஆண்டின் புகையிலை எதிர்ப்பு தினத்தின் கருப்பொருள் ‘புகையிலை வணிகத்தின் ஊடுருவலில் இருந்து குழந்தைகள் மற்றும் இளைஞர்களைக் காப்பது’.
புகையிலை எதிர்ப்பு நாளை முன்னிட்டு, புகைபிடிப்பதை நிறுத்தியவுடன் உடலில் ஏற்படும் மாற்றங்களைக் குறித்து இந்தக் கட்டுரை பேசவிருக்கிறது.
இதற்காக, சென்னையிலுள்ள அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் பொதுமருத்துவத் துறைத்தலைவர் மருத்துவர் எஸ்.சந்திரசேகர் மற்றும் சென்னையைச் சேர்ந்த மூத்த நுரையீரல் மருத்துவரான எஸ்.ஜெயராமன் ஆகியோர் பிபிசி தமிழிடம் கூறிய கருத்துக்கள் இங்கே தொகுத்தளிக்கப்படுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
புகைபிடிப்பதை நிறுத்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?
‘புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினால் என்ன நன்மை?’ என்று மருத்துவர் சந்திரசேகரிடம் கேட்டோம்.
“பொதுவாக 40 வயதுக்குள் ஒருவர் புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிட்டால், அவரது ஆயுள் 10 வருடங்கள் கூடும், என்று மருத்துவர்கள் சொல்வோம்,” என்கிறார்.
மேலும், “அதுவே ஒருவர் 40 வயதுக்கு மேல் புகைப்பழக்கத்தைக் கைவிட்டால், அவரது உடலில் புகையால் ஏற்பட்ட பாதிப்புகள் 90% குறையும், ஆனால் அவரது ஆயுள் நீளும் என்று சொல்ல முடியாது,” என்கிறார்.
பொதுவாக, புகைபிடிப்பதால், புற்றுநோய், மாரடைப்பு ஆகியவை ஏற்படும் என்றுதான் பலரும் பொதுவாக நினைப்பார்கள்.
ஆனால், புகைபிடிக்கும் ஒருவரது சுவை உணரும் திறன், உடல் நாற்றம், பற்களின் நிறம் முதற்கொண்டு பல விஷயங்களையும் புகைப் பழக்கம் பாதிக்கிறது, என்கிறார் மருத்துவர் சந்திரசேகர்.
தொடர்ந்து புகைபிடிப்பவர் அப்பழக்கத்தைக் கைவிடும்போது இந்தப் பிரச்னைகள் உடனடியாகவும் படிப்படியாகவும் குறைகின்றன, என்கிறார் அவர்.

பட மூலாதாரம், S Chandrasekar
சுவை உணர்வதில் உள்ள சிக்கல்கள் தீரும்
புகைபிடிப்பவர்களுக்கு ஆரோக்கியமற்ற சில வகையான உணவுகளை அதிகம் விரும்பி உண்ணும் பழக்கம் இருக்கும்.
காரணம்?
“புகைப் பிடிப்பதால், அவர்களது நாவில் உள்ள சுவைமொட்டுக்களின் உணர்திறன் பாதிக்கப்படுவதால், அவர்கள் இனிப்பு, உப்பு, காரம், துவர்ப்பு ஆகிய சுவைகளை உணரும் தன்மை மாறிவிடும்,” என்கிறார் மருத்துவர் சந்திரசேகர்.
காய்ச்சல் வரும்போது வாய் சுவையற்றுப் போய்விடுவதைப்போல, புகைபிடிப்பவர்களுக்கும் ஆகும் என்கிறார் அவர்.
இது டிஸ்ஜியூசியா (dysgeusia) என்று அழைக்கப்படுகிறது.
இதனால், அவர்கள் சுவைக்காக ஆரோக்கியமற்ற உணவுகளைத் தேடி உண்பார்கள், என்கிறார்.
சுவாசம், உடல் துர்நாற்றம் சரியாகும்
புகைபிடிப்பவர்களின் சுவாசத்தில் ஒருவகையான துர்நாற்றம் வீசுவதை நாம் பலரும் கவனித்திருப்போம்.
தொடர்ந்து புகைபிடிப்பவர்களின் தலைமுடி, வியர்வை ஆகியவற்றிலும் இந்த துர்நாற்றம் இருக்கும்.
அவர்கள் புகைபிடிப்பதை நிறுத்தினால், 2-3 நாட்களிலேயே இந்த துர்நாற்றம் மறையும், என்கிறார் மருத்துவர் சந்திரசேகர்.

பட மூலாதாரம், Dr S Jayaraman
உடலில் சேரும் நச்சுத்தன்மை வெளியேறும்
புகையிலையில் சுமார் 4,000 ரசாயனங்கள் உள்ளன என்கிறார், மருத்துவர் ஜெயராமன். இவற்றில் 70-க்கும் மேற்படவை புற்றுநோயை உருவாக்க வல்லவை (carcinogens).
"ஒருவர் புகைபிடிக்கும்போது இந்த ரசாயனங்களையும் சேர்த்தே தனது நுரையீரலுக்குள் அனுப்புகிறார். இவை உடலின் ரத்த ஓட்டத்தில் கலந்து, உடலில் தங்கிவிடுகின்றன.
தொடர்ந்து புகைப் பிடிக்கும் ஒருவர், புகைப் பிடிப்பதை நிறுத்திய ஒரு நாளைக்குள்ளேயே அவரது ரத்தத்திலும் செல்களிலும் உள்ள இந்த நச்சுத்தன்மைமிக்க ரசாயனங்கள் (toxins) வெளியேறத் துவங்குகின்றன.
புகைபிடிப்பதை நிறுத்திய ஒரு வாரத்துக்குள், ஒருவர் ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்றி வந்தால், அவரது உடலில் எஞ்சியுள்ள இந்த நச்சுத்தன்மை மிக்க ரசாயனங்கள் வெளியேறிவிடும்," என்கிறார் மருத்துவர் ஜெயராமன்.
சருமச் சுருக்கங்கள் மறையும்
புகைப் பிடித்தல் இதயத்தின் ரத்த நாளங்களை மட்டுமல்ல, சருமத்தின் ரத்த நாளங்களையும் சுருங்கச் செய்கிறது. இது ரத்த நாளம் சுருங்குதல் (vascular narrowing) என்று அழைக்கப்படுகிறது.
இதனால், சருமத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டு, வயதான தோற்றம் ஏற்படுகிறது.
புகைப் பிடிப்பதை நிறுத்தும்போது, இந்த நிலையும் சீராகும், என்கிறார் மருத்துவர் ஜெயராமன்
பற்கள், உதடுகளின் நிறமாற்றம் சீராகும்
ஒருவர் புகைப் பிடிக்கும் போது, புகையிலையில் இருக்கும் தார் (tar) பற்களில் படிகிறது. இதனால் புகைப் பிடிப்பவர்களின் பற்கள் மஞ்சளாகவோ, அவர்களின் பற்களில் பழுப்பு நிறப்படிவுகளோ இருப்பதைக் காணலாம்.
அதேபோல் இந்தத் தார், புகைப் பிடிப்பவர்களின் உதடுகள் நாக்கு ஆகியவற்றிலும் படிந்து அவை கருமையாக நிறம் மாறுவதற்குக் காரணமாக இருக்கலாம்.
புகைபிடிப்பவர்கள் சிலரது விரல்களிலும் கருமை படிந்திருக்கும்.
ஒருவர் புகைபிடிப்பதை நிறுத்தும்போது இவை சீராகத் துவங்குகின்றன.

பட மூலாதாரம், Getty Images
மூச்சிரைப்பு சரியாகும்
புகைபிடிப்பவர்கள் மாடிப்படிகளில் ஏறும்போதோ, அதிக தூரம் நடக்கும்போதோ, அவர்களுக்கு விரைவாக மூச்சிரைக்கத் துவங்கிவிடும், சிலசமயங்களில் படபடப்பு கூட ஏற்படும். உடற்பயிற்சி செய்யும்போதும் இதுபோன்ற நிலை ஏற்படலாம்.
இதற்குக் காரணம், புகையிலையில் உள்ள ஹைட்ரஜன் சயனைட், ஃபீனால், நைட்ரோசமைன்கள் போன்ற நச்சுத்தன்மைமிக்க ரசாயனங்கள் ரத்தத்தில் கலந்து அனுதாப நரம்பு மண்டலத்தைத் தூண்டுகின்றன (sympathetic stimulation), என்கிறார் மருத்துவர் ஜெயராமன்.
இதனால், இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவை அதிகரிக்கின்றன.
"புகைபிடிப்பதை நிறுத்தி 1-2 வாரங்களில் இந்த நிலை சீராகத் துவங்கும். 2 மாதங்களுக்குள் இந்த பாதிப்புகள் வெகுவாக மாறிவிடும். புகைபிடிப்பதை நிறுத்தி 6-8 மாதங்களில், முதலில் 10-15 நிமிடங்கள் தொடர்ச்சியாக நடக்கவே சிரமப்பட்டவர்கள், 25 நிமிடங்கள் வரை சிரமமின்றி நடக்கமுடியும்," என்கிறார் மருத்துவர் சந்திரசேகர்.

பட மூலாதாரம், Getty Images
மாரடைப்பு, இதய நோய் ஏற்படும் சாத்தியங்கள் குறைகின்றன
புகைபிடிப்பதை நிறுத்தியவுடன், ஒருவருக்கு மாரடைப்பு (heart attack), பக்கவாதம் (stroke), இருதய நோய்கள் (cardiovascular diseases) ஆகியவை ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைகின்றன.
2 முதல் 5 ஆண்டுகள் புகைபிடிப்பவர்களுக்கு இந்த நோய்கள் வருவதற்கான அதிக சாத்தியங்கள் உள்ளன.
புகையிலையில் உள்ள தார், கார்பன் மோனாக்ஸைட், ஹைட்ரஜன் சயனைட் உள்ளிட்ட ரசாயனங்கள், இருதயத்தின் நாளங்களில் கொழுப்பு படிவதை அதிகப்படுத்துகின்றன. இதனால் ‘coronary artery spasm’ எனப்படும் இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்கள் சுருங்குவது முதல், மாரடைப்பு முதலான நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன, என்கிறார் மருத்துவர் ஜெயராமன்.
ஒருவர் புகைபிடிப்பதை நிறுத்தி ஒரு வருடத்தில் இந்த நோய்களுக்கான சாத்தியங்கள் குறைகின்றன, என்கிறார் மருத்துவர் சந்திரசேகர்.
புகைப் பிடிக்கும் பழக்கமுள்ள ஒருவர் அதை நிறுத்தி 10-15 ஆண்டுகளில் அவரது இதயம், அந்த பாதிப்புகளிலிருந்து மாறி, புகைபிடிக்காத ஒருவரது இதயம் போன்ற நிலைக்குத் திரும்பும், என்கிறார் மருத்துவர் சந்திரசேகர்.
பக்கவாதம் ஏற்படும் சாத்தியம் குறைகிறது
புகையிலையில் இருக்கும் மேற்சொன்ன ரசாயனங்கள், மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களிலும் இதே பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இதனால் மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்கள் சுருங்கி, மூளைக்குச் சென்று சேரவேண்டிய ரத்தமும் ஆக்சிஜனும் அளவில் குறைகின்றன. இது பக்கவாதத்துக்கு (stroke) வழிவகுக்கிறது.
புகைபிடிப்பதை நிறுத்தும்போது, இந்த ஆபத்துக்கான சாத்தியமும் குறைகிறது.

பட மூலாதாரம், Getty Images
ஆண்களின் விறைப்புத் தன்மை
புகையிலையில் இருக்கும் நச்சுத்தன்மைமிக்க ரசாயனங்கள், ரத்த நாளங்களைச் சுருங்கச் செய்யும் என்பதைப் பார்த்தோம்.
ஒரு ஆணுக்கு பாலியல் உணர்ச்சி தோன்றும்போது அவரது ஆணுறுப்பு விறைக்க வேண்டுமெனில், அவரது ஆணுறுப்பின் ரத்த நாளங்களில் அதிக ரத்தம் பாயவேண்டும்.
ஆனால் தொடர்ந்து புகைபிடிப்பவர்களது ரத்த நாளங்கள் சுருங்குகின்றன. இதனால் அதிகமாகப் புகைபிடிப்பவர்களுக்கு விறைப்புத் தன்மை குறைபாடு ஏற்படும் வாய்ப்புள்ளது.
புகைபிடிப்பதை நிறுத்தினால், இந்த ஆபத்தும் குறையும்.
ரத்த ஓட்டம் சீராகும்
புகைபிடிப்பதனால் ஏற்படும் ரத்த நாளச்சுருக்கத்தால் இஸ்கிமியா (ischemia) என்ற பதிப்பும் ஏற்படக்கூடும். அதாவது, உடலின் ஒரு பகுதிக்கு சரியான ரத்த ஓட்டம் செல்லாத நிலை.
இதனால், அந்தப் பகுதிக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் போகிறது. இதனால் திசுக்கள் இறக்கும் necrosis, புண்கள் ஆகியவை ஏற்படக்கூடும்.
புகைபிடிப்பதை நிறுத்தினால், இந்த ஆபத்தும் குறைகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












