50 டிகிரியை தாண்டும் வெப்பம் - மணல் பிரமிடுகளை எழுப்பி பூமிக்கடியில் வாழும் மக்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜாரியா கோர்வட்
- பதவி, பிபிசி செய்தியாளர்
மத்திய ஆஸ்திரேலியாவிற்குள் நீண்ட தூர பயணத்தில், அடிலெய்ட் நகருக்கு வடக்கே 848 கிலோமீட்டர் தொலைவில் மர்மமான மணல் பிரமிடுகள் காணப்படுகின்றன. அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் வெறிச்சோடி உள்ளது. பரந்து விரிந்து கிடக்கும் புதர்களும் இளஞ்சிவப்பு தூசியையும் தவிர இங்கு வேறொன்றுமில்லை.
நெடுஞ்சாலையில் தொடர்ந்து பயணிக்கும் போது அங்கு வித்தியாசமான கட்டமைப்புகள் தென்படுகிறது. அவை வெளிறிய மண் மேடுகள் போன்று காட்சியளிக்கிறகிறது. அங்கிருந்து சிறிது தூரத்தில் ஒரு வெள்ளைக் குழாய் நிலத்தில் இருந்து வெளி வருவதைக் காணலாம்.
இந்த காட்சிகள் அனைத்தும், ஓப்பல் (கோமேதகம்) என்னும் ஒருவகை மாணிக்க கல்லின் சுரங்க நகரமான கூபர் பெடியின் (Coober Pedy) முதல் அடையாளங்கள் ஆகும். இங்கு சுமார் 2,500 மக்கள் வசிக்கின்றனர். ஓப்பல் சுரங்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சுரங்கப் பணிகளின் போது மண் அகற்றப்பட்டு சிறிய முகடுகளாக கொட்டப்பட்டது. அவ்வாறு உருவாக்கப்பட்ட மண் முகடுகள் தான் இந்த பகுதிக்குள் நம்மை வரவேற்கிறது. மேலும் இங்கு நிலத்தடியில் வாழும் மக்களின் சான்றுகளும் உள்ளன.
உலகின் ஒரு மூலையில் இருக்கும் இந்த விசித்திரமான பகுதியில், 60 சதவீத மக்கள் இரும்பு நிறைந்த மணற்கல் மற்றும் சில்ட்ஸ்டோன் பாறைகளால் உருவாக்கப்பட்ட வீடுகளில் வாழ்கின்றனர். சில வீடுகளில் காற்றோட்டத்துக்காக வைக்கப்பட்ட ஜன்னல் அமைப்பு மற்றும் நுழைவாயிலுக்கு அருகில் வீசும் அதிகப்படியான மண் ஆகியவை மட்டுமே இங்கே குடியிருப்புக்கான அறிகுறியாக உள்ளது.
இந்த தனித்துவமான `ட்ரோக்ளோடைட்’ (troglodyte) வாழ்க்கை முறை குளிர்காலத்தில் விசித்திரமாகத் தோன்றலாம், ஆனால் கோடைக் காலத்தில் கூபர் பெடியில் ( பூர்வீக ஆஸ்திரேலிய மொழியில் இதன் பொருள் 'குழியில் வசிக்கும் வெள்ளைக்காரன்') கடினமானது. அந்த நேரத்தில் வெப்பநிலை வழக்கமாக 52 டிகிரி செல்சியசை எட்டும். வானில் பறக்கும் பறவைகள் கூட சுருண்டு தரையில் விழும் அளவுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும். இங்கு கோடையில் மின்சாதன பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டி இருக்கும்.
உலகம் முழுவதும் புவி வெப்பமாதல் விளைவால் வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளது. எனவே இதுபோன்ற கட்டட அமைப்புகள் மக்களை வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும்.
தென்மேற்கு சீன நகரமான சோங்கிங்கில், இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய வான்வழி குண்டுவீச்சிலிருந்து தப்பிக்க கட்டப்பட்ட பதுங்கு குழிகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 35 டிகிரி செல்சியஸ் அளவுக்கு தகித்த பத்து நாள் வெப்ப அலையில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க திறக்கப்பட்டன. இன்னும் சிலர் வெப்பத்தில் இருந்து தப்பிக்க நகரத்தில் உள்ள பிரபலமான நிலத்தடி குகை ஹாட்பாட் உணவகத்தில் திரண்டனர்.
கடந்த ஆண்டு, அமெரிக்காவில் தொடர்ந்து மூன்று மாதங்கள் கடும் வெப்பம் நிலவியது. காட்டுத் தீ தெற்கு ஐரோப்பாவின் பல பகுதிகளை எரித்தது.
இந்த சூழ்நிலையில் கூபர் பெடியில் வசிப்பவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன என்பதை பார்ப்போம்..

பட மூலாதாரம், Getty Images
ஒரு நீண்ட வரலாறு
`கூபர் பெடி’ உலகின் முதல் அல்லது மிகப்பெரிய நிலத்தடி குடியேற்றம் கிடையாது. சவாலான தட்பவெப்ப நிலைகளை சமாளிக்க மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலத்தடி குடியேற்றங்களை உருவாக்கி வசித்து வருகின்றனர்.
மனித இனத்தின் மூதாதையர்கள் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு குகையில் தங்கள் கருவிகளை விட்டுச் சென்ற சுவடுகள் உள்ளன. தென்கிழக்கு செனகலில் கடுமையான வெப்பத்தை எதிர்த்து சிம்பன்சிகள் குகைகளில் வசித்து உடலை குளிர்வித்துக் கொண்டதையும் காண முடிந்தது.
மத்திய துருக்கியில் உள்ள ஒரு பண்டைய மாவட்டமான கப்படோசியா (Cappadocia ) உயரமான மற்றும் வறட்சியான பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதி கவர்ச்சிகரமான நிலப்பரப்பை கொண்டிருக்கும். இங்கு செதுக்கப்பட்ட சிகரங்கள் உள்ளன. வித்தியாசமான புகைபோக்கிகள் மற்றும் அற்புதமான பாறைகளும் உள்ளன.
இங்குள்ள அற்புதங்கள் குறித்து துருக்கியில் ஒரு பிரபலமான கட்டுக்கதை சொல்லப்படுகிறது: 1963 ஆம் ஆண்டில், ஒரு நபர் தனது கோழிகள் காணாமல் போனதால் அவரது நிலத்தடி வீட்டுக்கு சென்று பார்த்தார். அங்கு கோழிகள் ஒரு குழிக்குள் செல்வதைக் கண்டு, அப்பகுதியை சுத்தம் செய்து, கோழிகளை பின் தொடர்ந்து அந்த நபரும் குழிக்குள் சென்றிருக்கிறார். அந்த நபரின் கண்களுக்கு ஒரு ரகசிய பாதை தென்பட்டது. அந்த பாதையில் சென்ற போது, தாழ்வாரத்தில் ஒரு அற்புதமான நகரம் இருந்தது. அது தொலைந்து போன டெரிங்கு (Derinku) நகரின் பல நுழைவுவாயில்களில் ஒன்று.
துருக்கியில் உள்ள நூற்றுக்கணக்கான குகை குடியிருப்புகள் மற்றும் நிலத்தடி நகரங்களில் டெரிங்குவும் ஒன்றாகும். இது கி.மு. எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் அதில் தொடர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இது காற்றோட்டத்துக்கான அமைப்புகள், கிணறுகள், தொழுவங்கள், தேவாலயங்கள், கிடங்குகள் மற்றும் நிலத்தடி குடியிருப்புகளை கொண்டிருந்தது. இங்கே ஏறக்குறைய 20,000 பேர் தங்குவதற்கான இடம் இருந்ததாக கூறப்படுகிறது.
கூபர் பெடியைப் போலவே, நிலத்தடியில் வாழ்வது இப்பகுதி மக்களுக்கு அதீத காலநிலையைச் சமாளிக்க உதவியது. கோடைக்காலம் வெப்பமாகவும் வறண்டதாகவும் இருக்கும், அதேசமயம் குளிர்காலம் குளிர்ச்சியாகவும் பனிப் பொழிவாகவும் இருக்கும். வெளிப்புற வெப்பநிலை பூஜ்ஜிய டிகிரி சென்டிகிரேடில் இருந்து 30 டிகிரி சென்டிகிரேட் வரை மாறுபடும், ஆனால் உள்ளே வெப்பநிலை எப்போதும் 13 டிகிரி சென்டிகிரேடாக இருக்கும்.
இப்பகுதியில் உள்ள மனிதர்களால் உருவாக்கப்பட்ட குகைகள் சற்று மேம்பட்டு குளிரூட்டும் திறன்களுடன் உள்ளன. இது தட்பவெப்பத்தை தாங்கும் வடிவமைப்பை கொண்ட ஒரு கட்டட நுட்பமாகும். இன்று, ஆயிரக்கணக்கான டன் உருளைக்கிழங்கு, எலுமிச்சை, முட்டைகோஸ் மற்றும் பிற பொருட்கள் கப்படோசியாவின் பண்டைய காட்சியகங்கள் மற்றும் பாதைகளில் குவிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற தேவைகளை பூர்த்தி செய்யவே அத்தகைய பல கட்டமைப்புகள் கட்டப்படுகின்றன.
பயனுள்ள தீர்வு

பட மூலாதாரம், Getty Images
கூபர் பெடியின் முக்கிய நகரம் ஒன்று உள்ளது. முதலில் பார்க்கும்போது, இது ஒரு சாதாரண பழைய குடியேற்றம் போல் தெரிகிறது. தெருக்களில் இளஞ்சிவப்பு தூசி படிந்து, உணவகங்கள், பார்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் பெட்ரோல் நிலையங்கள் வரிசையாக உள்ளன. சிகரத்தின் உச்சியில் நகரத்தின் மரம் ஒன்று உள்ளது, ஒரு உலோக சிற்பமும் உள்ளது. கூபர் பெடி பார்ப்பதற்கு வெறிச்சோடி உள்ளது. கட்டங்கள் ஒவ்வொன்றும் வெகு தொலைவில் அமைந்துள்ளன.
ஆனால் பூமிக்கு அடியில் எல்லாம் தெளிவாக இருக்கிறது. கூபர் பெடியில் உள்ள சில நிலத்தடி தங்குமிடங்கள்(dugouts) பொதுவான கட்டங்கள் வழியாக அணுகப்படுகின்றன. உள்ளே நுழைந்தவுடன், நிலத்தடி பாதைகள் விரிவாகின்றன. ரிபா போன்ற மற்ற இடங்கள் மிகவும் தெளிவாக தெரிகிறது. ரிபா ஒரு முகாம் ஆகும், அங்கு மக்கள் தங்கள் கூடாரங்களை பல மீட்டர் நிலத்தடியில் அமைத்துக்கொள்ளலாம். அவற்றிலிருந்து இருண்ட சுரங்கங்களுக்குள் நுழையலாம்.
கூபர் பெடியில், கூரை இடிந்து விழுவதைத் தவிர்க்க நிலத்தடி கட்டடங்கள் குறைந்தபட்சம் நான்கு மீட்டர்கள் (13 அடி) நிலத்துக்குக் கீழ் இருக்க வேண்டும், மேலும் பாறைகளுக்கு அடியில் இருப்பதால் வெப்பநிலை எப்போதும் 23 டிகிரி செல்சியஸாக இருக்கும். தரைக்கு மேலே வசிப்பவர்கள் கடுமையான வெப்பம் மற்றும் குளிர்காலத்தை எதிர்கொள்கின்றனர். அங்கு வெப்பநிலை வழக்கமாக இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். நிலத்தடி வீடுகளில் ஆண்டு முழுவதும் சீரான வெப்பநிலை இருக்கும்.
நிலத்தடியில் வாழ்வதால் கிடைக்கும் பெரிய நன்மைகளில் ஒன்று பணம். கூபர் பெடி தனது சொந்த மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. அதில் 70 சதவீதம் காற்று மற்றும் சூரிய ஆற்றல் மூலம் பெறப்படுகிறது, ஆனால் குளிரூட்டிகளை இயக்குவது மிகவும் செலவு பிடிக்கும்.
மறுபுறம், கூபர் பெடியில் நிலத்தடி வீடுகளில் வாழ்வது ஒப்பீட்டளவில் மலிவானது. மூன்று படுக்கையறைகள் கொண்ட ஒரு வீடு சமீபத்திய ஏலத்தின் போது சுமார் 26,000 டாலருக்கு விற்கப்பட்டது. இருப்பினும், இவற்றில் பல வீடுகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் கொஞ்சம் பழுதுபார்க்க வேண்டிய நிலையில் உள்ளன. ஆனால் இங்குள்ள விலை மதிப்பீடுகளுக்கும் அருகிலுள்ள பெரிய நகரமான அடிலெய்டில் உள்ளவற்றுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது.
அடிலெய்டில் சராசரி வீட்டின் விலை 4,57,000 டாலர்கள் ஆகும். கூபர் பெடியில் இங்கு ஆபத்தான பூச்சிகள் ஒன்று கூட இல்லை என்பது மற்றொரு நன்மை.
"நீங்கள் சாலையில் நடக்கும்போது ஈக்கள் உங்கள் உடலை சுற்றி பறக்கின்றன. ஆனால், இங்கே அந்த பிரச்னை இல்லை. ஏனென்றால் அவை இருட்டிலும் குளிரிலும் இருக்க விரும்புவதில்லை. இங்கும் ஒலி, ஒளி மாசு இல்லை" என்று ரைட் கூறுகிறார்.
ஒரு சுவாரஸ்யமாமான விஷயம் என்னவெனில், நிலத்தடி வாழ்க்கை முறை பூகம்பங்களுக்கு எதிராக சில பாதுகாப்பை வழங்கக்கூடும். அதை விவரிக்கும் ரைட், நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் போது அதிர்வுறும் ஒலியை இந்த வீடுகள் உருவாக்குகிறது. மக்கள் அதனை வைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும்.
"எங்களிடம் இரண்டு நிலத்தடி வீடுகள் உள்ளன, இதுவரை நிலநடுக்கத்தை உணர்ந்ததில்லை" என்று ரைட் கூறுகிறார். (இருப்பினும், நிலநடுக்கத்தின் போது நிலத்தடி கட்டமைப்பின் பாதுகாப்பு அதன் அளவு, சிக்கலான தன்மை மற்றும் ஆழத்தை பொருத்து மாறுப்படும்)
சிறந்த அமைப்பு

பட மூலாதாரம், Getty Images
காலநிலை மாற்றத்தின் விளைவுகளைச் சமாளிக்க நிலத்தடி வீடுகள் மக்களுக்கு உண்மையில் உதவுமா? அப்படியிருந்தால் இத்தகைய வீடுகள் ஏன் அதிகமாக இல்லை?
"கூபர் பெடியில் நிலத்தடி தங்குமிடங்களை உருவாக்குவதற்கு நடைமுறையில் பல காரணங்கள் உள்ளன. முதலாவது பாறை. இங்கு பாறைகள் மிகவும் மென்மையானது. நீங்கள் அதை சிறிய கத்தி அல்லது உங்கள் விரல் நகத்தால் கூட கீற முடியும்," என்கிறார் சுற்றுலா தகவல் மையத்தின் பேரி லூயிஸ்.
1960கள் மற்றும் 70களில், கூபர் பெடி குடியிருப்பாளர்கள் படிக கற்களின் சுரங்கங்களை கட்டியதைப் போலவே தங்கள் வீடுகளையும் விரிவுபடுத்தினர்.
அவர்கள் பாறைகளை குடைந்து வீடுகளை உருவாக்க வெடிகள் மற்றும் மண்வெட்டிகளைப் பயன்படுத்தினர். பல உள்ளூர்வாசிகள் கைவிடப்பட்ட சுரங்க அமைப்புகளை தொடக்கப் புள்ளியாகப் பயன்படுத்தியதால், அதிகம் தோண்ட வேண்டிய அவசியமில்லை. இன்று அவர்கள் தொழில்துறை சுரங்கப்பாதை கருவிகளைக் கொண்டு தோண்டுகிறார்கள்.
"ஒரு நல்ல சுரங்கப்பாதை இயந்திரம் ஒரு மணிநேரத்திற்கு ஆறு கன மீட்டர் பாறையை தோண்டி எடுக்க முடியும். எனவே,ம் நீங்கள் ஒரு மாதத்திற்குள் ஒரு பெரிய பகுதியை தோண்டியெடுக்க முடியும்" என்கிறார் ரைட்.
சுரங்கத்தின் அருகில் இருந்த ஒரு நிலத்தடி வீட்டில் ஒரு நபர் குளித்து கொண்டிருந்தபோது, சுவரில் பதிக்கப்பட்ட பெரிய ரத்தினத்தைக் கண்டுபிடித்தார். ஹோட்டல் ஒன்றின் விரிவாக்கத்தின் போது 985,000 டாலர்கள் மதிப்புள்ள ஒரு படிகம் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், மணற்கல் பயன்படுத்துவது கட்டமைப்பு ரீதியாக வலுவானது. எனவே, எந்த கூடுதல் கட்டுமானப் பொருட்களும் இல்லாமல் உயர் கூரையுடன் எந்த வடிவ குகை அறைகளையும் உருவாக்கலாம். உண்மையில், கூபர் பெடியில் சுரங்கப்பாதை அமைப்பது மிகவும் எளிதானது, பல உள்ளூர்வாசிகள் நிலத்தடி நீச்சல் குளங்கள், விளையாட்டு அறைகள், பெரிய குளியலறைகள் மற்றும் அதிநவீன வாழ்க்கை அறைகள் கொண்ட பெரிய, ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்கின்றனர்.
உள்ளூர்வாசி ஒருவர் தனது வீட்டை ஒரு பெரிய கோட்டை என்று விவரித்தார். 50,000 செங்கற்களால் கட்டப்பட்ட வீட்டின் ஒவ்வொரு அறைக்கும் வளைவு கதவுகள் இருந்தன.
"இங்கு சில அற்புதமான நிலத்தடி வீடுகள் உள்ளன," என்று ரைட் கூறுகிறார். இங்குள்ள சில குடியிருப்பாளர்கள் மிகவும் தனித்து வசிப்பவர்கள். நீங்கள் இரவு உணவுகு அழைக்கப்பட்டால் மட்டுமே அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்.
ஈரப்பதம் தான் இங்கு பிரச்னை
எல்லா நிலப்பரப்பிலும் கூபர் பெடி போல் வீடு கட்டுவது சாத்தியம் இல்லை. எந்தவொரு நிலத்தடி கட்டமைப்பிலும் ஒரு பெரிய சவாலாக இருப்பது ஈரப்பதம்.
மனிதர்கள் வாழக் கூடிய தன்மை உள்ள பாறைகள் பல வறண்ட பகுதிகளில் உள்ளன. கொலராடோவில் உள்ள மேசாவில் பாறையில் கட்டப்பட்ட கோபுரங்கள் மற்றும் சுவர்கள் முதல் ஜோர்டானின் பெட்ராவில் இளஞ்சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்ட பாரிய கோயில்கள், கல்லறைகள் மற்றும் அரண்மனைகள் வரை பாறையின் தன்மை பயன்படுத்த ஏதுவானதாக இருந்தது. இரானில் உள்ள சஹந்த் மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள காண்டோவன், இன்றைய காலக்கட்டத்தின் கடைசி பாறைகளில் உருவான கிராமங்களில் ஒன்றாகும். இப்பகுதியில் கோடை முழுவதும் சராசரியாக மாதத்திற்கு 11 மில்லிமீட்டர் மழை மட்டுமே பெய்யும்.
அதேபோன்று ஈரப்பதமான பகுதிகளில் நிலத்தடி கட்டடம் கட்டுவதும் மிகவும் கடினம். லண்டனின் 19 ஆம் நூற்றாண்டின் நிலத்தடி சுரங்கங்கள் ஈரப்பதத்தால் பாதிக்கப்படாதபடி செங்கல் அடுக்குகளில் கட்டப்பட்டன. ஆனால், இந்த முன்னெச்சரிக்கைகள் இருந்தபோதிலும் ஈரப்பதத்தால் பாதிக்கப்பட்டு கருப்பு அச்சுகள் தொடர்ந்து உருவாகின்றன. உலகெங்கிலும் அதிக மழை பெய்யும் பகுதிகளில் உள்ள அடித்தளங்கள், பதுங்கு குழிகள் மற்றும் கார் நிறுத்துமிடங்களை இந்தப் பிரச்னை பாதிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவது காற்றோட்டம் இல்லாதது. காற்று பற்றாக்குறையால், நிலத்தடி கட்டமைப்புகளின் சுவர்களில் ஈரப்பதம் ஏற்படுகிறது. மற்றொன்று நிலத்தடி நீர். நிலத்தடி குடியிருப்புகள் நீர் ஆதாரங்களுக்கு அருகில் கட்டப்பட்டால் பிரச்னைகளை உருவாக்கும்.
இஸ்ரேலில் உள்ள ஹசான் குகைகளை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இது ரோமானியர்களின் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க யூத மக்களால் கட்டப்பட்ட நிலத்தடி இடங்களின் சிக்கலான கட்டட அமைப்பாகும்.
இது சமையலறைகள், அரங்குகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. குகையில் 66 மீட்டர் கீழே, வெப்பநிலை வெளிப்புறத்தை விட கணிசமான அளவு குறைவாக உள்ளது, ஆனால் ஈரப்பதம் நாற்பது சதவீதமாக இரட்டிப்பாகிறது. குகை அமைப்பு நிலத்தடி நீர் அதிகமாக இருக்கும் தாழ்நிலங்களின் நுண்துளை பாறையில் கட்டப்பட்டிருப்பது ஒரு காரணமாமாக இருக்கலாம். குறுகிய பாதைகள் மற்றும் சிறிய நுழைவுவாயில்கள் காரணமாக இங்கு குறைவான காற்று சுழற்சியைக் கொண்டுள்ளது.
கூபர் பெடி நிலத்தடியில் வறண்ட காலநிலை உள்ளது. "இங்கு நுண்துளை பாறைகள் வறண்டு காணப்படுகின்றன” என்று ரைட் கூறுகிறார்.
மேலும் காற்றோட்ட வாயில்கள் ஆக்ஸிஜனின் போதுமான விநியோகத்தை உறுதி செய்வதற்கும் வீட்டின் இயக்கத்திலிருந்து ஈரப்பதத்தை அகற்றுவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வாயில்கள் பெரும்பாலும் கூரை வழியாக மேலே செல்லும் சாதாரண குழாய்களாக இருக்கும்.
இந்த ஹீட்வேவ்-ப்ரூஃப் பதுங்கு குழிகளில் சில குறைபாடுகளும் உள்ளன. லூயிஸ் தற்போது அந்த இடத்தில் உள்ள அவரது நிலத்தடி வீடு இடிந்து விழுந்ததை அடுத்து, மேலே உள்ள கேரவன் பூங்காவில் வசிக்கிறார்.
"இப்படி இடிந்து விழுவது அடிக்கடி நடக்காது. இது மோசமான நிலத்தில் கட்டப்பட்டது" என்று லூயிஸ் கூறுகிறார்.
இப்படி சில பிரச்னைகள் இருந்த போதிலும், லூயிஸ் தனது நிலத்தடி வாழ்நாளை அன்புடன் நினைவுகூர்கிறார், அதேநேரத்தில் ரைட் தற்போதைய அதிக வெப்பநிலையை எதிர்கொள்ளும் அனைவரும் நிலத்தடி வீடுகளில் இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்.
"நீங்கள் வெப்பத்தால் பாதிக்கப்படாமல் இருக்க இது ஒரு நல்ல வழி" என்று அவர் கூறுகிறார்.
கூபர் பெடியின் வினோதமான மணல் பிரமிடுகள் விரைவில் மற்ற பகுதிகளிலும் கட்டமைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












