அம்மாவை அப்பா கொலை செய்ததை கண்டுபிடித்த 11 வயதேயான 'டிடெக்டிவ்' சிறுவன்

அம்மாவை கொன்ற அப்பாவை காவல்துறையில் சிக்க வைத்த 11 வயது சிறுவன்!

பட மூலாதாரம், COLLIER LANDRY

படக்குறிப்பு, கோலியர் லேண்ட்ரி பாயில் தனது தந்தைக்கு எதிரான விசாரணையில் சாட்சியம் அளித்தார்.

-நான் கோலியர் லேண்ட்ரி பாயில்.

- உங்கள் வயது என்ன என்று சொல்லுங்கள்.

-எனக்கு 12 வயது ஆகிறது

- நீங்கள் டிசம்பர் 30 அன்று ஒன்பது மணியளவில் படுக்கைக்குச் சென்றதாகச் சொன்னீர்கள். அன்றிரவு உங்களை தூக்கத்தை தொந்தரவு செய்யும் வகையில் ஏதாவது நடந்ததா?

- என் சகோதரியிடம் இருந்து ஓர் அலறல் சத்தம் கேட்டது. அம்மாவுக்கு ஏதோ பிரச்னை என்றுதான் முதலில் நினைத்தேன். சிறிது நேரம் கழித்து, மூன்று நிமிடங்களுக்கு தொடர்ந்து சத்தமாக கதவை தட்டும் சத்தம் கேட்டது.

- அந்த `ஒலி’ எப்படி இருந்தது என்று விவரிக்க முடியுமா?

- அது மிகவும் வலுவான சத்தமாக இருந்தது.

கோலியர் தனக்கு முன்னால் இருந்த மர மேசையில் தனது இரு கைகளையும் வைத்து வேகமாக தட்டினார்.

- பின்னர், சுமார் ஒன்றரை நிமிடங்களுக்குப் பிறகு, மீண்டும் இதுபோன்ற பலத்த சத்தம் கேட்டது.

கோலியர் மீண்டும் இரண்டு கைகளாலும் மேசையின் மீது தட்டி காண்பித்தார்.

-அந்த சத்தம் மிகவும் அதிகமாக கேட்டதால், நான் பயந்து போனேன்.

-சரி, என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள நீங்கள் படுக்கையில் இருந்து எழுந்தீர்களா?

- இல்லை, நான் அதை செய்யவில்லை.

- நீங்கள் ஏன் எழுந்திருக்கவில்லை என்று நடுவர் மன்றத்திடம் சொல்ல முடியுமா?

ஏனென்றால் நான் என் தந்தையை நினைத்து மிகவும் பயந்தேன், நான் எப்போதுமே அவருக்கு பயப்படுவேன்.

அமெரிக்காவில் ஒரு நீதிமன்றத்தில், வழக்கறிஞர் மற்றும் கோலியர் இடையே நடந்த இந்த உரையாடல் 1990இல் நிகழ்ந்தது, அப்போது கோலியருக்கு வயது 11. தனது தாயைக் கொன்றதற்காக தனது சொந்த தந்தைக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்து, சிறைக்கு அனுப்பிய வழக்கின் உரையாடல் தான் இது.

ஆனால் இந்த கதை நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்கிவிட்டது.

ஆக்ரோஷமான விவாகரத்து கோரிக்கை

அம்மாவை கொன்ற அப்பாவை காவல்துறையில் சிக்க வைத்த 11 வயது சிறுவன்!

பட மூலாதாரம், COLLIER LANDRY

படக்குறிப்பு, கோலியர் தனது குடும்பத்துடன் ஓஹியோவின் மான்ஸ்ஃபீல்டில் வசித்து வந்தார்

கோலியர் தனது பெற்றோரான ஜான் - நோரீன் பாயில் மற்றும் அவரது சகோதரியுடன் அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய நகரமான மான்ஸ்ஃபீல்டில் வசித்து வந்தார்.

கோலியர் தனது தாயுடன்தான் பெரும்பாலான நேரத்தை செலவிட்டார். அவரது தந்தை ஜான் சமூகத்தில் அந்தஸ்து மிக்க மருத்துவராக பணியாற்றினார். மக்கள் அவரை மதித்தனர். எப்போதும் வேலை வேலை என்றிருப்பார். கோலியர் சிறிய வயதில் இருந்தே தன் தந்தையை முழுமையாக நம்பினார். ஆனால் 11 வயதில் தன் தந்தையை பற்றிய சில உண்மைகளை கண்டுபிடித்தார். தனது தந்தை வேலையில் அதிக நேரம் செலவிடுவதாக சொல்வது உண்மை இல்லை என்று கோலியருக்கு தெரிய வந்தது.

தனது குழந்தைகளுடன் வசித்து வந்த ஷெர்ரி என்ற பெண் வீட்டிற்கு கோலியரை அவரின் தந்தை இரண்டு முறை அழைத்துச் சென்றார், அந்த சமயத்தில் தனது தந்தை அந்தப் பெண்ணை முத்தமிடுவதை பார்த்த கோலியர் அதிர்ச்சியடைந்தார். வீடு திரும்பியதும், தனது தந்தைக்கு ஒரு காதலி இருப்பதாக தனது தாயிடம் கூறினார்.

ஜான் பாயில் திருமணத்தை தாண்டிய உறவில் இருப்பது இது முதல் முறை அல்ல. தனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது நோரீனுக்கு முன்னரே தெரியும். கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக தனது கணவர் பற்றிய தகவல்களை அறிந்திருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நோரீன் தன் கணவரிடம் முன்வைத்த ஒரே நிபந்தனை, தனது குழந்தைகளை இந்த விவகாரங்களில் ஈடுபடுத்தக் கூடாது என்று கேட்டார். ஜான் பாயிலும் அதை ஏற்றுக்கொண்டார்.

கோலியர் சொன்னதை கேட்டு ஆத்திரமடைந்த நோரீன் தொலைபேசியில் தனது கணவரை அழைத்து சத்தம் போட்டார். தன் மகனை மற்றொரு பெண் வீட்டுக்கு அழைத்துச் சென்றதை சுட்டிக்காட்டி விவாகரத்து கேட்டார். 1989 இன் பிற்பகுதியில், விடுமுறை முடியும் வரை ஒன்றாக இருக்க அவர்கள் இருவரும் முடிவு செய்தனர். பின்னர் 1990 இல், நோரீன் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க முடிவு செய்தார்.

"என் தந்தையின் நடவடிக்கை நாளுக்கு நாள் மிகவும் ஆக்ரோஷமாக மாறியது. நானும் அம்மாவும் அவரை பிரிந்தால் நிம்மதியின்றி தெருவில் வசிப்போம் என்று அவர் சொல்லிக் காட்டினார். எங்கள் முழு வாழ்க்கையையும் அவர் நரகமாக்கி விட்டார்." என்று கோலியர் பிபிசியிடம் விவரித்தார்.

தற்போது கோலியருக்கு 46 வயதாகிறது. அவர் தன் சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்து ஏ மர்டர் இன் மான்ஸ்ஃபீல்ட்(A Murder in Mansfield) என்ற பெயரில் 2017 இல் ஆவணப்படம் வெளியிட்டார்.

ஒரு முறை அவரது தந்தை அவரை ஒரு கடைக்கு அழைத்துச் சென்றார், அங்கு அவர்கள் நீல நிற தார்ப்பாய் விரிப்பை வாங்கினார். ஆனால் அவர் அதற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை. பின்னர் ஒரு நாள் அவரது தந்தை ஒரு பச்சை வெளிப்புற தரை விரிப்பை வாங்கி வந்தார், அதை அவர் வீட்டின் பின் தாழ்வாரத்தில் விரித்தார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பொருத்தமற்ற பொருளை எதற்கு வாங்கி வீட்டில் வைக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது, இதெல்லாம் ஏன் செய்கிறார் என்ற உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வந்தது .

பொம்மை தலையணையில் ஒளித்து வைத்த பட்டியல்

அம்மாவை கொன்ற அப்பாவை காவல்துறையில் சிக்க வைத்த 11 வயது சிறுவன்!

பட மூலாதாரம், COLLIER LANDRY

படக்குறிப்பு, தன் அம்மாவுடன் கோலியர்

நோரீன் தனது திருமணத்தை விட்டு வெளியேற முழுமூச்சில் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினார். அதே சமயம் கோலியரிடம், அவரின் தந்தையைப் பற்றி மேலும்மேலும் பல விஷயங்களைச் சொன்னார்.

“நவம்பர் 1989இல், என் அம்மா என்னைப் பள்ளியில் இருந்து அழைத்து வந்து ஒரு சிறிய உணவகத்திற்கு கூட்டி வந்தார். நாங்கள் காரில் இருந்தோம், அப்போது என் அம்மா என்னிடம்: 'கோலியர், நீ ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். நான் உன்னை விட்டு எங்குமே செல்லமாட்டேன். நான் ஒருவேளை உன்னை பிரிகிறேன் என்றால், அது கண்டிப்பாக உன் தந்தையால் தான் இருக்கும். என்றைக்காவது உன் அப்பா, `உன் அம்மா போய்விட்டார்’ என்று சொன்னால், அவர் என்னை கொன்று விட்டார் என்று அர்த்தம். அவரை நம்பாதே ' என்றார்.

சிறுவன் தனது தாயின் நண்பர்கள் அனைவரின் தொலைபேசி எண்களையும் பட்டியலிட்டு எழுதி, அதை தனது படுக்கை அறையில் இருக்கும் பொம்மை தலையணைக்குள் மறைத்து வைத்தார்.

அன்று டிசம்பர் 30, 1989. கோலியர் தனது வளர்ப்பு சகோதரி மற்றும் தாயுடன் வீட்டில் இருந்தார். அவர்களுடன் தங்கியிருந்த தந்தைவழி பாட்டிக்காக அனைவரும் காத்திருந்தனர். கோலியரின் அப்பா அந்த பாட்டியை வீட்டில் விட்டுவிட்டு எங்கோ கிளம்பினார்.

"அன்று தான் நான் என் அம்மாவை கடைசியாகப் பார்த்தேன்," என்று கோலியர் விவரிக்கிறார். டிசம்பர் 31, 1989 அன்று, கோலியர் நள்ளிரவில் ஒரு அலறல் சத்தம் கேட்டு கண்விழித்தார். மேலும் சில நிமிடங்கள் கழித்து மீண்டும் பலத்த சத்தம் கேட்டது. கதவை யாரோ பலமாக தட்டுவது போன்ற சத்தம் கேட்டது. அந்த சத்தங்களுக்கு மத்தியில் தனது தந்தை மிகவும் தாழ்ந்த குரலில் ஏதோ முணுமுணுப்பதை கோலியர் கேட்டார்.

“நான் எழுந்து போய் என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டுமா? அல்லது நான் இப்படியே படுக்கையில் இருக்கலாமா? நான் படுக்கையில் மறைந்து கொண்டேன். அப்போது யாரோ மெதுவாக இறங்கி நடக்கும் சத்தம் கேட்டது. அங்கு சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தேன். மணி 3:18 ஆனது மீண்டும் போர்வைக்குள் சென்றேன்.

நான் படுக்கை மீது அந்த போர்வையினுள் என்னால் முடிந்தவரை அமைதியாக இருந்தேன், வாசலில் காலடிகளை கவனித்தேன். என்னை நானே பரிசோதித்துப் பார்த்தேன். எனக்கு ஒன்றும் ஆகவில்லை. என்ன நடந்தது? ஏதேனும் பேயாக இருக்குமா? வேண்டாம் வெளியே பார்க்க வேண்டாம்.” என்று தொடர்ந்தார்.

தூங்குவது போல் நடித்து கொண்டிருந்த சிறுவன் கோலியர், அவர்கள் வெளியேறுவதைப் பார்த்தார். அப்படியே படுத்து எப்படியோ தூங்கிவிட்டார். கண்விழித்த போது சூரியன் உதித்திருந்தது. நேராக அம்மாவின் அறைக்கு ஓடினார்.

படுக்கையில் தாள்கள் அலங்கோலமாக கிடந்ததை கோலியர் கவனித்தார். காரணம் அவரின் அம்மா தூங்கி எழுந்தவுடன் படுக்கையை சரிசெய்து விட்டு தான் அடுத்த வேலையை பார்ப்பார். ஏதோ நடந்திருப்பதை கோலியர் புரிந்து கொண்டார். ஜான் இடுப்பில் டவலுடன் சோபாவில் அமர்ந்திருப்பதைப் பார்த்தார். அவர் குளித்துவிட்டு வந்திருந்தார்.

“அம்மா எங்கே?” என்று அப்பாவிடம் கேட்டா கோலியர்.

அவரது தந்தை அவரைப் பார்த்து அமைதியாக பதிலளித்தார்: "கோலியர், அம்மா கொஞ்சம் வெளியூர் சென்றிருக்கிறார். " என்று சொன்னார். கோலியருக்கு புரிந்தது. அப்பா அம்மாவை ஏதோ செய்திருக்கிறார் என்று கண்டுபிடித்தார்.

நள்ளிரவில் எனக்கும் உன் அம்மாவுக்கு பிரச்னை ஏற்பட்டது. நோரீன் என் பணம், காதலி மற்றும் விவாகரத்து பற்றி பேசி சண்டை போட்டார்” என்று கோலியரிடம் ஜான் சொன்னார்.

- நள்ளிரவில் நான் கேட்ட அந்த சத்தம் எப்படி வந்தது?

- உன் அம்மா பர்ஸை என் மீது எறிந்தாள், அதனால் பர்ஸ் சுவரில் மோதிய சத்தத்தை நீ கேட்டிருக்க வேண்டும்.

- இருமுறை கேட்டதே?

- ஆம், ஆம், பர்ஸ் தூக்கி எறிந்த சத்தம் தான் கோலியர்.

அந்த நேரத்தில் அவரது பாட்டி அங்கு வந்தார். சண்டைக்குப் பிறகு நோரீன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், அவர்கள் போலீஸை அழைக்கப் போவதில்லை என்றும் பாட்டி கூறினார் .

"பயப்பட வேண்டியதில்லை. உன் அம்மா திரும்பி வருவார். இதற்கு முன்னரும் இப்படி செய்திருக்கிறார்” என்று பாட்டி சமாதானப்படுத்தினார்.

அம்மாவை கொன்ற அப்பாவை காவல்துறையில் சிக்க வைத்த 11 வயது சிறுவன்!

பட மூலாதாரம், COLLIER LANDRY

படக்குறிப்பு, கோலியரின் பெற்றோர் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தனர், ஆனால் ஜான் பாயில் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு அவர்கள் கோலியரை வளர்ப்பு சகோதரி பிரிந்து சென்றார்.

சிறுவனை நம்பிய துப்பறியும் நிபுணர்

கோலியர் தன் தந்தையை நம்பவில்லை. இதற்கு முன்பு தாய் இப்படி வீட்டை விட்டு வெளியேறியது இல்லை.

வயர்லெஸ் போனை எடுத்துக்கொண்டு, தன் அறைக்கு ஓடி, தான் பொம்மை தலையணையில் இருந்த தொலைப்பேசி எண்களின் பட்டியலை தேடினார். குளியலறைக்கு சென்று பூட்டிக்கொண்டு அந்த பட்டியலில் இருந்த எண்களுக்கு அழைக்க ஆரம்பித்தார். தாயின் நண்பர்களிடம் நடந்ததை கூறினான்.

"என்னால் காவல்துறையை அழைக்க முடியாது என்று என் தந்தை என்னிடம் கூறினார். அதனால் நீங்கள் காவல்துறையை அழைத்து என் அம்மா பற்றி சொல்லுங்கள்" என்று அவர் நோரீனின் நண்பர்களிடம் கூறினார்.

போலீஸார் வீட்டிற்கு வந்து கதவை தட்டினர். பாட்டி கதவை திறந்தார். அவர்களைப் பார்த்ததும் பாட்டி பயந்துவிட்டார்.

"உன் தந்தை உன்னைக் காவல்துறையை அழைக்க வேண்டாம் என்று சொன்னார் அல்லவா!" பாட்டி திட்டினாள்.

சிறுவன் காவல் அதிகாரிகளில் ஒருவரை ஓரமாக இழுத்து அவரிடம் சொன்னான்: “ என் அம்மாவுக்கு ஏதோ நடந்திருக்கிறது. எனக்கு என் தந்தை மீது சிறிதும் நம்பிக்கை இல்லை .“ என்றார்.

முதலில் அவர்கள் கோலியரை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, ஆனால் சிறுவனின் வற்புறுத்தலுக்கு பிறகு வழக்கு பதிவு செய்தனர்.

புத்தாண்டு தினத்தன்று, டேவிட் மெஸ்மோர் என்ற துப்பறியும் நபர் நோரீன் காணாமல் போன வழக்கை விசாரிக்க தொடங்கினார்.

நோரீன் வீட்டுக்கு டேவிட் மெஸ்மோர் வந்தார். அன்று காலை அப்பா கிளம்பி கொண்டிருந்தார். பாட்டி கவலையுடன் தன் மகனை அழைக்க சமையலறைக்குச் சென்றார்.

இது கோலியருக்கு கிடைத்த பொன்னான சந்தர்ப்பம்.

துப்பறியும் நபரிடம் சென்று, அவரின் கண்களை நேராகப் பார்த்து, "என் அம்மா ஒருபோதும் என்னை தனியாக விட்டு செல்லமாட்டார். உங்கள் தொடர்பு எண்ணை கொடுங்கள். நாளை நான் பள்ளிக்குச் செல்கிறேன், என்னால் இங்கே பேச முடியாது என்பதால் நான் உங்களை தொலைபேசியில் அழைக்கிறேன்" என்று அவர் விளக்கினார்.

பெரும்பாலான குழந்தைகள் இந்த கட்டத்தில் குழப்பமாக இருப்பார்கள், தங்கள் தாயின் இழப்பால் குழப்பமடைந்து மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். தந்தையைப் பற்றி எண்ணி பயப்படுவார்கள், ஆனால் கோலியர் அப்படி பயப்படவில்லை. அச்சிறுவரின் உணர்ச்சிகள் இடைநிறுத்தப்பட்டது போல் இருந்தது.

கோலியர் அடுத்த நாள் பள்ளிக்கு வந்தார், அங்கு அவர் நேரடியாக தலைமையாசிரியரின் அலுவலகத்திற்குச் சென்று துப்பறியும் அதிகாரி எண்ணுக்கு அழைத்தார்.

கோலியரின் பள்ளிக்கு டேவிட் வந்தார், சிறுவன் தனக்குத் தெரிந்த அனைத்தையும் அவரிடம் சொன்னார்.

"டேவ், நான் வீட்டிற்கு சென்றதும், நான் என் அம்மாவின் உடலைக் கண்டுபிடிக்க முடியுமா என்று வீட்டு அடித்தளத்தில் பார்க்கப் போகிறேன். நான் என் அம்மாவின் பையைத் தேடப் போகிறேன். அவர் கிளம்புவதாக இருந்தால், அவர் தன் பையை எடுத்துச் சென்றிருக்க வேண்டும். என் தந்தையின் நடத்தையை பருந்து போல் கவனிக்க போகிறேன்” என்று கூறினார்.

கோலியர் ஒரு `லிட்டில் டிடெக்டிவ்’ ஆனார்.

துப்பறியும் நிபுணர் மெஸ்மோர், கோலியரை நம்பினார். அடுத்த சில வாரங்களுக்கு கிட்டத்தட்ட தினமும் ஜான் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார். கோலியரின் தந்தையிடம் வழக்கு குறித்து பேசுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் காவல்துறையிடம் பேச மறுத்தார்.

கோலியர் துப்பறியும் அதிகாரியுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். விசாரணையில் உதவுவதற்காக அவருக்கு தகவல்களை தெரிவித்தார். ஆனால் துப்பறியும் நபர் தீவிரமாக விசாரிக்க முயன்றபோது, அவருக்கு சில சொந்த பிரச்னைகள் ஏற்பட்டன.

ஜான் பாயில் பணக்காரராகவும் செல்வாக்கு மிக்கவராகவும் இருந்ததால், உயர் அதிகாரியை வைத்து காவல்துறையிடம் இந்த வழக்கை மறந்து விடுமாறு உத்தரவிட வைத்தார்.

துப்பறியும் அதிகாரிக்கு ஒன்று மட்டும் புரிந்தது. "இந்தக் குழந்தைக்கு ஏதோ ஒன்று தெரியும்."

பொருந்தாத இரண்டு புகைப்படங்கள்

அம்மாவை கொன்ற அப்பாவை காவல்துறையில் சிக்க வைத்த 11 வயது சிறுவன்!

பட மூலாதாரம், COLLIER LANDRY

படக்குறிப்பு, கோலியர் லேண்ட்ரி (வலது) 2017 இல் திரையிடப்பட்ட A Murder in Mansfield என்ற அவரது கதையைப் பற்றிய ஆவணப்படத்திற்காக அவரது தந்தையை சந்தித்தார்.

“என் அப்பா என்னிடம், அவரின் அலுவலகத்திற்கு வர சொல்லி கேட்டார். அவருக்கு அங்கு ஏதோ சில ஆவணங்களை தேட வேண்டி உள்ளதாக சொன்னார். நான் அவரை கண்காணிக்க வேண்டும் என்று அவருடன் போக சம்மதித்தேன்”என்று கோலியர் கூறினார்.

“திரும்பி வரும் வழியில் ஒரு பெட்ரோல் பங்கில் நின்றோம். என் தந்தை பெட்ரோல் நிலையத்திற்குள் நுழைந்தார், நான் அவரின் காரை சோதனை செய்த போது, அதில் இரண்டு புகைப்படங்களைக் கண்டேன். ஒன்று நான் இதுவரை பார்த்திராத வீட்டிலிருந்து எடுத்தது. மற்றொன்று அவரது காதலி அவரது இரண்டு குழந்தைகள் பிளாஸ்டிக் சுற்றப்பட்ட பார்சல் முன் அமர்ந்திருந்தனர் "என்று அவர் நினைவு கூர்ந்தார்.

கோலியர் புகைப்படங்களை பற்றி மெஸ்மோரிடம் கூறினார். மான்ஸ்ஃபீல்டில் இருந்து மூன்று மணி நேர பயணத்தில் பென்சில்வேனியாவின் ஈரி நகரில் ஒரு புதிய மருத்துவமனையை நிறுவியதோடு, நோரீன் காணாமல் போனதுக்கு முன்னதாக ஜான் பாயில் அங்கு ஒரு புதிய வீட்டையும் வாங்கி குடியேறினார் என்பதை கண்டுபிடித்தனர்.

மெஸ்மோர் அந்த வீட்டு விற்பனை விவகாரத்தை கையாண்ட ரியல் எஸ்டேட் முகவரைத் தொடர்பு கொண்டு சந்தேகப்படும்படி ஏதாவது நடந்ததா என்று விசாரித்தார்.

கோலியரின் தந்தை ஜான், அந்த வீட்டை வாங்குவதற்கு மிகவும் அவசரம் காட்டியதாகவும், அந்த வீட்டின் அடித்தளத்திற்கு கீழ் என்ன இருக்கிறது என்று கேட்டதாகவும், அதை மேலும் விரிவாக்கம் செய்ய முடியுமா என்று கேட்டதாவும் அந்த முகவர் அவரிடம் கூறினார்.

விசாரணை வேகமெடுத்தது மற்றும் கோலியரின் தந்தையால் அதை உணர முடிந்தது.

"என் தந்தை என்னை உட்காரவைத்து, ' கோலியர் உனக்கு நன்றாக தெரியும், அம்மா நம்மை இப்படிப்பட்ட நிலையில் விட்டுச் சென்றது உனக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும், அது உன்னை மிகவும் பாதித்துள்ளது என்று எனக்குத் தெரியும், அது என்னையும் மிகவும் பாதித்துவிட்டது. உன் அம்மாவை நான் மிகவும் நேசித்தேன். எனக்கு அடுத்த வாரம் புளோரிடாவில் ஒரு மருத்துவ மாநாடு உள்ளது, நாம் இருவரும் அங்கு சேர்ந்து போகலாமா? ” என்று கேட்டார்.

கோலியர் இது நல்ல யோசனையல்ல என்று உணர்ந்தார்.

எனவே அவர் பள்ளியில் இருந்து அடுத்த நாள் மெஸ்மோருக்கு போன் செய்து, "நீங்கள் என்னை புளோரிடாவிற்கு அழைத்துச் செல்ல விரும்புகிறீர்களா, நான் அங்கு சென்றால் திரும்பி வரமாட்டேன். என் அப்பா அங்கே அழைத்து செல்லவிருக்கிறார். நான் முற்றிலும் பயந்துவிட்டேன்." என்று கூறினார்.

நீல நிற தார்ப்பாயும் பச்சை கம்பளமும்

அம்மாவை கொன்ற அப்பாவை காவல்துறையில் சிக்க வைத்த 11 வயது சிறுவன்!

பட மூலாதாரம், COLLIER LANDRY

படக்குறிப்பு, ஜான் பாயில் ஜனவரி 24, 1990 அன்று கைது செய்யப்பட்டார்.

ஜனவரி 24 காலை, அவரது தாயார் காணாமல் போன நான்கு வாரங்களுக்குள், கோலியரும் அவரது வளர்ப்பு சகோதரியும் அவர்களது வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர். சமூக சேவை ஊழியர்களுடன் மெஸ்மோர் நின்று கொண்டிருந்தார்.

புலனாய்வாளர்கள் தாயின் உடலைத் தேடி வீட்டை சோதனை செய்தனர். அடித்தளத்தையும் ஆய்வு செய்தனர். அடுத்த நாள், புலனாய்வாளர்கள் நோரீன் பாயிலின் உடலைக் கண்டுபிடித்தனர்.

கோலியரின் தாயார் அந்த புதிய வீட்டின் அடித்தளத்திற்கு கீழ் புதைக்கப்பட்டிருந்தார் .

“நீ உன் தந்தைக்கு எதிராக சாட்சி சொல்ல வேண்டியதில்லை என்று அரசு தரப்பு என்னிடம் கூறியது. ஆனால் நான் உண்மை என்னவென்று எனக்குத் தெரியும் என்பதால் அவர் குற்றவாளி என்பதை உறுதிப்படுத்த விரும்பினேன்."

கோலியரின் தந்தை வாங்கி வந்த நீல நிற தார்ப்பாயால் நோரீனின் உடல் சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது. அவர்களது மான்ஸ்ஃபீல்ட் வீட்டின் பின்புற வராண்டாவில் விரிக்கப்பட்ட அந்த பச்சைக் கம்பளம் அடித்தளத்தில் புதிய சிமெண்டை மூடுவதற்கு பயன்படுத்தப்பட்டது.

ஜான் பாயில் கொலை செய்ததற்கு தண்டனை பெற்றார். கோலியர் பள்ளி முடித்ததும், தன் பெயரில் இருந்த தனது தந்தையின் கடைசி பெயரை நீக்கி, கோலியர் லேண்ட்ரி என்று மாற்றிக் கொண்டார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)