வாக்குப்பதிவுக்கு பிறகு படிவம் 17சி-ஐ வெளியிட மறுக்கும் தேர்தல் ஆணையம் - அதில் என்ன இருக்கிறது?

பட மூலாதாரம், Reuters
2024 மக்களவைத் தேர்தலில் இதுவரை ஐந்து கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவு முடிந்தவுடன் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு தொடர்பான தகவல்களை வெளியிடும்.
ஆனால் இவை இறுதிப் புள்ளிவிவரங்கள் அல்ல.
எந்தக் கட்டமாக இருந்தாலும் அது முடிந்து சில நாட்களில் வாக்குப்பதிவு சதவிகிதத்தின் இறுதிப் புள்ளி விவரங்களைத் தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது.
இந்தத் தேர்தலில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட முதல்கட்ட மற்றும் இறுதி புள்ளிவிவரங்களில் உள்ள வேறுபாடு குறித்து எதிர்க்கட்சிகளும் பல நிபுணர்களும் கேள்விகளை எழுப்புகின்றனர்.
இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது.
இந்த நிலையில் இந்த மனுவை இன்று (மே 24) விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், இந்தத் தரவுகளை வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்க மறுத்துவிட்டது.
தற்போது இந்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் என்ன சொன்னது?

பட மூலாதாரம், Reuters
வாக்குப்பதிவு முடிந்த 48 மணி நேரத்திற்குள் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பதிவான வாக்குகளின் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association for Democratic Reforms - ADR) தனது மனுவில் கோரியிருந்தது.
படிவம் 17சி-இன் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் ஏ.டி.ஆர் தனது மனுவில் கூறியிருந்தது.
இந்த விவகாரம் குறித்து பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் மே 17-ஆம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
மே 22-ஆம் தேதி தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து பதில் அளித்தது.
"ஒவ்வொரு வாக்குச்சாவடியின் வாக்குப்பதிவு விவரங்களையும் இணையதளத்தில் வெளியிடுவது தேர்தல் நடவடிக்கையில் குழப்பத்தை ஏற்படுத்தும்," என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
வாக்குப்பதிவு சதவிகிதம் குறித்த தகவல்களை வழங்குவதில் ஏற்படும் தாமதம் குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. தேர்தல் ஆணையம் இத்தகைய குற்றச்சாட்டுகளை நிராகரித்தது.
படிவம் 17சி அளிக்கப்படாதது பற்றி குறிப்பிட்ட தேர்தல் ஆணையம், "முழுமையான தகவல்களை வழங்குவதும், படிவம் 17சி-யை பகிரங்கப்படுத்துவதும் சட்டப்பூர்வ கட்டமைப்பின் ஒரு பகுதி அல்ல. இதனால் தேர்தல் நடக்கும் இடங்களில் குழப்பம் ஏற்படும். இந்தத் தரவுகளின் படங்கள் மார்ஃபிங் செய்யப்படலாம்,” என்று குறிப்பிட்டது.
தேர்தல் ஆணையத்தின் பதில் குறித்து காங்கிரஸின் கேள்வி

பட மூலாதாரம், EPA
தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளி விவரங்களில் உள்ள வேறுபாடு குறித்தும் காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பதிவில், "இந்த 1 கோடியே 7 லட்சம் வாக்கு எண்ணிக்கை வித்யாசத்தின்படி, ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் 28,000 வாக்குகளின் அதிகரிப்பு உள்ளது. இது மிகப்பெரிய எண்ணிக்கை. பா.ஜ.க கணிசமான இடங்களை இழக்கக்கூடும் என்று கருதப்படும் மாநிலங்களில் இந்த வேறுபாடு அதிகமாக உள்ளது. இங்கே என்ன நடக்கிறது?" என்று குறிப்பிட்டிருந்தார்.
காங்கிரஸ் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி மே 23-ஆம் தேதி ஒரு செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்.
“தேர்தல் ஆணையம் அளித்துள்ள பதில் விசித்திரமாக உள்ளது. ஒருவகையில் அது முரண்பாடானது. தேர்தல் ஆணையத்தின் இந்த பதில் ஒரு தப்பிக்கும் வழிமுறையாகும். அதேசமயம் தேர்தல் ஆணையத்திடம் பணம் செலுத்துவதன் மூலம் யார் வேண்டுமானாலும் அதே தரவுகளைப் பெறலாம்,” என்று சிங்வி கூறினார்.
இது துரதிர்ஷ்டவசமானது என்றும் தேர்தல் ஆணையம் ஒரு பக்கமாக சாய்வதை இது காட்டுகிறது என்றும் சிங்வி கூறினார். "தரவுகள் மாற்றப்படக்கூடும், மார்பிங் செய்யப்படக்கூடும் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. அப்படிப் பார்த்தால் எந்த தரவையும் பதிவேற்ற முடியாது,” என்றார் அவர்.
சமீபத்தில் ஒரு தனியார் சேனலுடன் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, தேர்தல் ஆணையம் தரவுகளைத் தாமதமாக வெளியிடுவது குறித்துப் பேசினார். தற்போதுதான் தேர்தல் ஆணையம் முற்றிலும் ஒரு சுதந்திர அமைப்பாக மாறியுள்ளது என்று அவர் சொன்னார்.
காங்கிரஸ் ஆட்சியின் போது இருந்த தேர்தல் ஆணையர்கள் இப்போதும் காங்கிரஸின் சித்தாந்தத்தை ஆதரித்து வருவதாக பிரதமர் மோதி கூறினார்.
அத்தகைய சூழ்நிலையில் படிவம்17சி என்றால் என்ன, அதில் என்ன தகவல்கள் இருக்கின்றன, என்ற கேள்விகள் எழுகின்றன.

பட மூலாதாரம், ECI
படிவம் 17சி என்றால் என்ன?
எளிமையான மொழியில் சொன்னால், ஒரு வாக்குச் சாவடியில் எத்தனை வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது பற்றிய தகவல் படிவம் 17சி-யில் இருக்கும்.
படிவம் 17சி, தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் உள்ளது. பின்வரும் தகவல்கள் இந்தப் படிவத்தில் நிரப்பப்படும்.
- EVM எந்த வரிசை எண்ணை சேர்ந்தது?
- வாக்குச் சாவடியில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை
- 17-A இன் கீழ் வாக்காளர்கள் பதிவேட்டில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை
- விதி 49-AM-ன் கீழ் வாக்களிக்க அனுமதிக்கப்படாத வாக்காளர்களின் எண்ணிக்கை
- வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை
- வாக்கு சீட்டுகளின் எண்ணிக்கை
- ஆறு வாக்குச்சாவடி முகவர்களின் கையொப்பங்கள்
- தேர்தல் அதிகாரியின் கையெழுத்து

பட மூலாதாரம், ECI
இந்தப் படிவத்தின் அடுத்த பகுதியும் உள்ளது. வாக்கு எண்ணும் நாளில் அது பயன்படுத்தப்படும்.
இந்தப் படிவத்தில் ஒரு வேட்பாளர் எத்தனை வாக்குகள் பெற்றார் என்று எழுதப்படும்.
தேர்தல் நடத்தை நெறிமுறைகள் 1961-இன் 49A மற்றும் 56C-இன் கீழ், தேர்தல் அதிகாரி வாக்குகள் பற்றிய தகவல்களை படிவம் 17C-இன் பகுதி-1 இல் நிரப்ப வேண்டும்.
வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தல் அதிகாரி இந்தத் தகவலை வாக்குச்சாவடி முகவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












