22 நிமிடங்கள் தொடர்ந்து கைத்தட்டினால் என்னவாகும்?கான்ஸ் திரைப்பட விழாவில் இது எப்படிச் சாத்தியமானது?

நாம் ஏன் கைத்தட்டுகிறோம்?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ரிச்சர்ட் ஃபிஷரால்
    • பதவி, பிபிசி

கான்ஸ் திரைப்பட விழாவில் 'Horizon: An American Saga' என்ற திரைப்படம் திரையிடப்பட்ட பிறகு, பார்வையாளர்களின் கரவொலி ஏழு நிமிடங்கள் நீடித்தது. பின்னர் அனைவரும் எழுந்து நின்று பாராட்டினர்.

ஒரு படைப்புக்கு பார்வையாளர்கள் ஏழு நிமிடங்கள் கைத்தட்டிப் பாராட்டியது கான்ஸ் திரைப்பட விழா வரலாற்றில் புதிது கிடையாது. 2006-ஆம் ஆண்டு ‘பான்ஸ் லேபிரிந்த்’ (Pan's Labyrinth) எனும் படம் திரையிடப்பட்டபோது பார்வையாளர்களின் கைத்தட்டல் 22 நிமிடங்களுக்கு நீடித்தது. கான்ஸ் திரைப்பட விழா வரலாற்றில் நீண்ட கைதட்டல் பெற்ற படைப்பு இதுதான்.

நான் இதைப் பற்றி கேள்விப்பட்ட போது, ​​'அவ்வளவு நேரம் என்னால் கைத்தட்ட முடியுமா? அதை ஒரு முறை முயற்சி செய்யலாம்' என்று தோன்றியது. கான்ஸ் விழாவின் நீளமான கைதட்டல் நிகழ்வை வீட்டில் முயற்சி செய்ய முடிவெடுத்தேன்.

இவ்வளவு நேரம் என்னால் கைதட்ட முடியுமா என்ற சந்தேகத்துடன் இன்று காலை, என் மகளிடம் டைமரைத் தொடங்கச் சொல்லி, கைதட்ட ஆரம்பித்தேன்.

"அப்பா, ஏன் இப்படி செய்கிறாய்?" என்று என் மகள் கேட்டார்.

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், "இது ஒரு அறிவியல் சோதனை,” என்று பதிலளித்தேன். அறுபது நொடிகள் கடந்தது, அனைத்தும் நன்றாக சென்றது.

"இது எளிமையாக தான் உள்ளது. என்னால் இதனை நீண்ட நேரம் செய்ய முடியும்," என்று நான் நினைத்தேன்.

கொஞ்ச நேரம் கைத்தட்டிக் கொண்டே இருக்கையில் என் மனதில் பல விஷயங்கள் தோன்றியன. என் சொந்த வாழ்கையில் நான் செய்த தேர்வுகள், என் தற்போதைய நிலை, இப்படி நிறைய எண்ணங்கள் ஓடின.

அதே சமயம், நாம் ஏன் கை தட்டுகிறோம்? மனிதர்கள் ஏன் தங்கள் கைகளை ஒன்றாகச் சேர்த்துத் தட்டுகிறார்கள்? இவ்வாறு எப்போது பாராட்ட ஆரம்பித்தார்கள்? மற்ற விலங்குகள் இதைச் செய்யுமா? கான்ஸ் பார்வையாளர்கள் ஏன் விசில் அடிப்பது, பிற ஒலிகள் எழுப்புவது போன்று செய்யாமல் கைத்தட்டுகிறார்கள்?

இப்படிப் பல கேள்விகள் என் மனதில் எழுந்தன.

நாம் எப்போது கைதட்டத் துவங்கினோம்?

உளவியல் நிபுணர் ஆலன் க்ராலி 2023-ஆம் ஆண்டு கைத்தட்டல் பற்றி ஆய்வு செய்தார். நமது வரலாற்றின் ஆரம்பத்தில் இருந்தே மனித இனம் கைதட்டும் பழக்கத்தைக் கொண்டிருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

நமது மூதாதையர்கள் அந்தக் காலகட்டத்தில் பேசும் மொழி இல்லாததால், வேட்டையாடுபவர்களின் இருப்பைக் குறிக்க, எதிரிகளை அச்சுறுத்த, விளையாடுவதற்கு அல்லது வாய்ப்புகளை முன்னிலைப்படுத்த இந்தச் சத்தத்தைப் பயன்படுத்தலாம் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கலாம்.

மேலும் சில விலங்கினங்கள் சக விலங்குகளின் கவனத்தைப் பெற அல்லது நீண்ட தூரம் தொடர்பு கொள்ள கைத்தட்டலை பயன்படுத்துகின்றன. 'கிரே சீல்ஸ்’ (grey seals) எனப்படும் கடல் நாய் நீருக்கடியில் இருக்கும் போது, ​​தன் துணைக்கு வலிமையையும் ஆதிக்கத்தையும் காட்ட கைதட்டல் ஒலியை எழுப்புகிறது.

நாம் ஏன் கைத்தட்டுகிறோம்?

பட மூலாதாரம், Getty Images

கைத்தட்டப் பணம் கொடுத்த மன்னர்

இரண்டு நிமிடங்களாகக் கைத்தட்டிக் கொண்டிருக்கிறேன். எனது கைத்தட்டல் பரிசோதனை எனது வளர்ப்பு நாயின் கவனத்தை ஈர்த்தது.

என் நாயைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியதெல்லாம், நாய்களால் கைத்தட்ட முடியாது, ஏனெனில் கைத்தட்டுவதற்கு ஏதுவாக மூட்டுகள் அவற்றுக்கு இல்லை என்பது தான். என்னை உற்று நோக்கும் என் நாயிடம் பேச முடிந்தால், நான் மனித சமூக-கலாச்சார நெறிமுறைகளை பற்றிய ஒரு முக்கியமான ஆய்வில் ஈடுபடுகிறேன் என்று அதனிடம் விளக்க முடியும், ஆனால் நான் சொல்வது அதற்குப் புரியாது. எனவே என்னைப் பார்த்து அது குரைக்கத் துவங்கியது.

ஒருவரின் செயலைப் பாராட்டுவதற்காக மக்கள் கைத்தட்டுகிறார்கள். ஆனால் அதை எப்போது தொடங்கினார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பாராட்டுத் தெரிவிக்க மக்கள் எப்போது கைதட்ட ஆரம்பித்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. பைபிளில் சில இடங்களில் கைத்தட்டல் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும், வழிபாடு செய்யவும் மக்கள் கைத்தட்டியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பண்டைய எகிப்தியர்களும் இதைச் செய்திருக்கலாம்.

இருப்பினும், திரையரங்கத் திரையிடல் அல்லது உரையாற்றுவதைப் பாராட்டி மக்கள் கைதட்டும் பழக்கம் பண்டைய ரோமில் துவங்கியதாகத் தெரிகிறது. நாடகங்களில், காட்சிகளின் முடிவில் 'plaudite' என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த வார்த்தையில் இருந்து தான் 'applause' (கைத்தட்டல்) என்ற வார்த்தை தோன்றியது.

ரோமானியத் தலைவர்களுக்கு, கைதட்டல் என்பது பிரபலத்தின் செல்வாக்கை மதிப்பிடும் அளவீடாகும். அதாவது, சமூக ஊடகங்களில் கிடைக்கும் 'லைக்குகளைப்' போன்றது. கைத்தட்டல் சத்தத்தை அதிகரிக்கச் சில பிரபலங்கள் பணம் கொடுத்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. பேரரசர் நீரோ, தான் வரும் போதெல்லாம் கைத்தட்ட 5,000 வீரர்களை பணம் கொடுத்துப் பணியமர்த்தினார்.

ஒரு பிரெஞ்சுக் கவிஞர் 1500-களில் பலத்த கைதட்டலுக்கு ஈடாக பார்வையாளர்களுக்கு இலவச டிக்கெட்டுகளை வழங்கினார். அடுத்த இரண்டு நூற்றாண்டுகள் முழுவதும், பிரான்சில் தொழில்முறை ஊதியம் பெறும் 'கைதட்டல்காரர்கள்' (claquers) அனைத்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கைத்தட்டும் பணியைச் செய்வது வழக்கமானது.

நாம் ஏன் கைத்தட்டுகிறோம்?

பட மூலாதாரம், Getty Images

சத்தம் எழாமல் கைத்தட்டுவது சாத்தியமா?

வாழ்வதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது என்று என்னை நானே கேள்வி எழுப்பி கொண்டேன். என் கைகள் வலிக்கின்றன. என் திருமண மோதிரத்தை அணிந்து கொண்டிருப்பதற்காக நான் இப்போது வருந்துகிறேன். நடிகை நிக்கோல் கிட்மேன் ஒருமுறை ஆஸ்கார் விருது விழாவில் 'கடல்நாய்’ போன்று வித்தியாசமாக கைத்தட்டியதற்காக கேலி செய்யப்பட்டார். அவர் விரல்களில் மோதிரங்கள் இருந்ததால் அப்படிக் கைத்தட்டியதாக அவர் பின்னர் விளக்கினார்.

கைத்தட்டுவது எளிது. பொதுவாகக் குழந்தை பிறந்து முதல் வருடத்தின் பிற்பகுதி வரை கைத்தட்டுவதற்குப் போதுமான அளவு ஒருங்கிணைப்புத் திறன் இருக்காது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன் பிறகு குழந்தைகள் அதை எளிதாகச் செய்ய முடியும்.

பல்வேறு கலாச்சாரங்களில் கைத்தட்டல் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக கட்டை விரல் மற்றும் நடுவிரலைப் பயன்படுத்திச் சொடக்குவது போன்ற செய்கைகளும் சில நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுகின்றன. கவிதை வாசிப்பு, சொற்பொழிவு போன்ற நிகழ்வுகளில் விரல்களைச் சொடக்குவது வழக்கமாகக் கையாளப்படுகிறது. விரல்களைச் சொடக்குவது, குறைந்த முயற்சியில் திறம்பட உரத்த சத்தத்தையும் உருவாக்குகிறது.

"கைத்தட்டல் மிகவும் சிறப்பானது. அதிக ஒலி அளவு கொண்ட சமிக்ஞை. பாராட்டைப் பதிவு செய்ய எளிமையான, விரைவான மற்றும் பயனுள்ள செயலாகும்," என்று க்ராலி குறிப்பிடுகிறார். கைத்தட்டலின் மற்றொரு முறை நம் கைகளைத் தொடை மீது தட்டிச் சத்தம் எழுப்புவது. ஆனால் இந்தச் சத்தம் பெரிதாகக் கேட்காது.

இறுதியாக, கைதட்டல் என்பது சத்தமாகக் கத்துவது, ஆரவாரம் செய்வது, சத்தமிடுவது, அல்லது கூக்குரலிடுவதைக் காட்டிலும் சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு செயல் ஆகும். அநாகரீகமாகக் கூச்சலிடுவதைக் காட்டிலும், கைதட்டல் கண்ணியமாகவும் இலகுவாகவும் இருக்கும். அதே சமயம் உற்சாகத்தையும் ஏற்படுத்தும்.

மேலும் சத்தம் எழுப்பாமல் கைத்தட்டும் முறையும் உள்ளது. அதனை 'கோல்ஃப் கைதட்டல்' (golf clap) என்பார்கள். விளையாட்டுக் களத்தில் வீரர்களை திசை திருப்பாமல் விரல்களை மெதுவாக உள்ளங்கையில் தட்டுவதை கோல்ஃப் கைதட்டல் என்பார்கள்.

நாம் ஏன் கைத்தட்டுகிறோம்?

பட மூலாதாரம், Getty Images

கைத்தட்டல் பாராட்ட மட்டுமா பயன்படுத்தப்படுகிறது?

என் மனம் அலைபாய ஆரம்பித்தது. 2021-ஆம் ஆண்டு கான்ஸ் விழாவில் நடந்த நீண்ட கைத்தட்டலின் போது, நடிகர் ஆடம் டிரைவர் சிகரெட்டைப் பற்ற வைத்தார். ஆனால் நான் இப்போது அப்படிச் செய்ய விரும்பவில்லை. புகைபிடிக்கும் போது கைதட்டுவது ஆபத்தானது.

சில ஆராய்ச்சியாளர்கள், கைத்தட்டல் 'பாராட்டுவது' மட்டுமின்றி மேலும் சில விஷயங்களையும் குறிக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர். உதாரணமாக, சில சமயங்களில், தேசிய கீதம் முடிந்ததும் கைத்தட்டுவார்கள். பார்வையாளர்கள் மனதளவில் அடுத்த நிகழ்வுக்குத் தங்களைத் தயார்படுத்தி கொள்வார்கள்.

சில சமயங்களில் இது சமூக உறவுகளை வளர்க்கும் செயலாகவும் இருக்கும். எடுத்துக்காட்டாக, கொரோனா பொது முடக்கத்தின் போது, ​​ சில நாடுகளில் கைதட்டும்படி மக்களை வலியுறுத்தினர். மேலும் சில மருத்துவர்கள், செவிலியர்களைப் பாராட்ட மக்கள் கைத்தட்டினர்.

இருப்பினும், கைத்தட்டல் சத்தம் சில சமயங்களில் வெறுப்பு உணர்வையும் ஏற்படுத்துகிறது. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கைதட்டல் பல நேரங்களில் வெறுப்பை ஏற்படுத்தும். சில சமயங்களில் பாரம்பரிய இசைக் கச்சேரியில் பாடல்கள் முடிவதற்கு முன்னால் கைதட்டும் அப்பாவி நபர் மீது பரிதாபம் தோன்றும்.

கைத்தட்டல் ஒரு நோயா?

என் மகளுக்குச் சலிப்பாகிவிட்டது. "நான் பிறகு வருகிறேன்," என்று அவர் அறையை விட்டு வெளியேறினார். "தயவு செய்து போகாதே," என்று நான் கெஞ்சினேன். ஆனால் அவர் போய்விட்டார்.

"கைத்தட்டல் சில சமயங்களில் சமூகத் தொற்றாகவும் மாறிவிடுகிறது. ஒரு அறையில் மிகப்பெரிய கூட்டத்திற்கு மத்தியில், பெரும்பாலானோர் கைத்தட்டும் போது, கைத்தட்டும் எண்ணம் இல்லாதவர்களும் தானாகக் கைத்தட்டுவார்கள். அதாவது மக்கள் உள் விருப்பத்தால் அல்லாமல் சமூக அழுத்தத்தால் கை தட்டலாம்," என்று க்ராலி குறிப்பிடுகிறார்.

2013-ஆம் ஆண்டில், ரிச்சர்ட் மான் தலைமையிலான குழு, பின்னர் ஸ்வீடனில் உள்ள உப்சாலா பல்கலைக்கழகத்தில், கல்வி விரிவுரைகளுக்கு பிறகு மாணவர்கள் மத்தியில் நடப்பதை கவனித்தார். ஒவ்வொரு விரிவுரைக்கு பின்னரும் யாராவது கைத்தட்டினால் உடனே ஒட்டுமொத்த கூட்டமும் கைத்தட்டியது. கைதட்டலின் ஆரம்பம் பெரும்பாலும் ஒரு நோய் பரவும் முறையை போன்றே பின்பற்றுவதை அவர்கள் கண்டறிந்தனர்.

நாம் ஏன் கை தட்டுகிறோம்?

சுருக்கமாக பதில் சொல்ல வேண்டுமெனில், நிறைய சத்தம் போடுவதற்கும், நமது பாராட்டுகளைக் காட்டுவதற்கும், ஒன்றாகச் சேர்ந்து மகிழ்வதால் வரும் சமூகப் பிணைப்பை வலுப்படுத்துவதற்கும் இது மிகச் சிறந்த வழியாகும்.

ஆனால் மிக நீண்ட கைதட்டலை எப்படி விவரிப்பது?

2013-இல், பிபிசி செய்தியிடம் பேசிய ரிச்சார்ட் மன் (Richard Mann), "கைதட்டலின் நீளம் பாராட்டின் தரமாகப் பார்க்கப்படுவதில்லை. நீங்கள் தொடங்குவதற்கு (கைத்தட்டல்) உங்களைச் சுற்றி சமூக அழுத்தம் இருக்கும். ஆனால் நீங்கள் கைத்தட்டத் துவங்கியவுடன், யாரோ ஒருவர் அதை நிறுத்தும் வரை, நிறுத்தக்கூடாது என்ற வலுவான நோக்கம் ஏற்படுகிறது," என்றார்.

மான்-இன் இந்தக் கண்டுபிடிப்பை கான்ஸ் விழாவின் நீண்ட கைதட்டல் நிகழ்வுடன் பொருத்திப் பார்த்தால் சரியாக இருக்கும்.

நாம் ஏன் கைத்தட்டுகிறோம்?

பட மூலாதாரம், Getty Images

10 நிமிடங்களுக்கு மேல் கடந்துவிட்டது..

இந்தக் கட்டத்தில், கைத்தட்டல் ஒலி அந்நியமாகவும் மிகவும் மெல்லிய சத்தமாகவும் மாறும். என் கைகள் வேறொருவருக்குச் சொந்தமானது போல் இருக்கின்றன. 2006-ஆம் ஆண்டில் 22 நிமிடங்களை எட்டிய கேன்ஸில் பார்வையாளர்களை நான் கற்பனை செய்து பார்க்கிறேன். அவர்கள் எப்படி உணர்ந்தார்கள் என்று ஆச்சரியப்படுகிறேன். அவர்கள் இறக்கும் வரை கைத்தட்டலாம் என்று நினைத்தார்களா? அவர்கள் சில உயர்ந்த உணர்வு நிலையை அடைந்தனரா? எப்படித்தான் அவ்வளவு நேரம் கைதட்டினார்கள்?

என்னால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. என் கைகள் மரத்துப் போகும் முன் கைத்தட்டுவதை நிறுத்த முடிவு செய்கிறேன்.

மேலும் இந்தக் கட்டுரையை நான் எழுத வேண்டும் என்பதால் இதோடு கைத்தட்டுவதை நிறுத்திக் கொள்கிறேன்.

இருப்பினும், நான் என் வாழ்க்கையில் முன்பு கைத்தட்டியதை விட இம்முறை நீண்ட நேரம் நான் தொடர்ந்து கைத்தட்டினேன் என்பதோடு என் பரிசோதனையை முடிக்கிறேன்.

என் மகள் என் செயலால் எரிச்சலடைந்திருக்கலாம். ஆனால் நான் இவ்வளவு நேரம் கைத்தட்டியது நிச்சயமாக கைதட்டலுக்கு தகுதியானது தானே?

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)