ஆஸ்திரேலியா: சுய சிகிச்சை மூலம் புற்றுநோயை குணப்படுத்திக் கொண்ட மருத்துவர் எப்படி இருக்கிறார்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், டிஃப்பனி டர்ன்புல்
- பதவி, பிபிசி நியூஸ்
மூளைநரம்பு உயிரணுப் புற்றுநோய்க்கு (Glioblastoma) கடந்த ஆண்டு தன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சிகிச்சை முறையின் மூலம் சிகிச்சை பெற்ற உலகின் முதல் நபர், ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேராசிரியர், மருத்துவர் ரிச்சர்ட் ஸ்கோலியர். ஓராண்டுக்குப் பிறகு இப்போது புற்றுநோயில் இருந்து விடுபட்டுள்ளார் ரிச்சர்ட்.
புகழ்பெற்ற மருத்துவரான ரிச்சர்ட் ஸ்கோலியரின் பரிசோதனை முறையிலான சிகிச்சை என்பது மெலனோமா (Melanoma) குறித்த அவரது சொந்த ஆராய்ச்சி அடிப்படையில் செய்யப்பட்டது.
ரிச்சர்ட் ஸ்கோலியரின் மூளைநரம்பு உயிரணுப் புற்றுநோய் மிகவும் தீவிரமான ஒரு நோய். அதனால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகள் ஓராண்டுக்கும் குறைவாகவே உயிர் வாழ்கின்றனர்.
சமீபத்திய எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம், 57 வயதான ஸ்கோலியர், தனது உடலில் புதிதாக எந்தப் புற்றுநோய்க் கட்டியும் உருவாகவில்லை என்பதைத் தெரிந்துகொண்டதாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று (மே 21) அறிவித்தார்.
"உண்மையைச் சொல்வதானால், இந்த ஸ்கேன் எடுக்கும்போது நான் மிகவும் பதற்றமாக இருந்தேன். இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
மெலனோமா குறித்த ஆராய்ச்சி

பட மூலாதாரம், Getty Images
பேராசிரியர் ஸ்கோலியர் ஆஸ்திரேலிய நாட்டின் மிகவும் மதிக்கப்படும் ஒரு மருத்துவர். அவருக்கும் அவரது சக ஊழியரும் தோழியுமான ஜார்ஜினா லாங்குக்கும் இந்த ஆண்டின் சிறந்த ஆஸ்திரேலியர்கள் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இருவரும் இணைந்து செய்த மெலனோமா குறித்த ஆய்வை அங்கீகரிக்கும் வகையில் இது வழங்கப்பட்டது.
மெலனோமா இன்ஸ்டிடியூட் ஆஸ்திரேலியாவின் இணை இயக்குநர்களாக இருக்கும் இந்த இருவரும், கடந்த பத்து ஆண்டுகளாக நோயெதிர்ப்பியல் சிகிச்சை குறித்த ஆய்வைச் செய்து வந்தனர்.
புற்றுநோய் செல்களை தாக்க உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பயன்படுத்தும் முறைதான் நோயெதிர்ப்பியல் சிகிச்சை. சர்வதேச அளவில் பல மெலனோமா நோயாளிகள் இதனால் பயனடைந்துள்ளனர்.
பேராசிரியர் ஸ்கோலியரின் புற்றுநோய்க்கும் ஒரு மருந்தைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையில், அந்த ஆராய்ச்சியைத் தான் பேராசிரியர் லாங், மருத்துவர்கள் குழுவுடன் சேர்ந்து, ஸ்கோலியருக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தினார்.
பேராசிரியர் லாங், இந்த மெலனோமா துறையில் ஒரு புகழ்பெற்ற மருத்துவ புற்றுநோயியல் நிபுணராக விளங்குபவர். புற்றுநோய்க் கட்டியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சைக்கு முன்பு, குறிப்பிட்ட மருந்துகளின் கலவையைப் பயன்படுத்தினால், நோய் எதிர்ப்பு சிகிச்சை சிறப்பாகச் செயல்படும் என்பதை அவரது குழுவினர் கண்டறிந்தனர். எனவே கடந்த ஆண்டு இந்த முறையில் சிகிச்சை பெற்ற உலகின் முதல் மூளைநரம்பு உயிரணுப் புற்றுநோயாளி பேராசிரியர் ஸ்கோலியர்தான்.
சிறப்பு தடுப்பூசி

பட மூலாதாரம், Getty Images
அவரது புற்றுநோய் கட்டியின் குணாதிசயங்களுக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்ட சிறப்பு தடுப்பூசி ஒன்று அவருக்குப் போடப்பட்டது. இது மருந்துகளின் புற்றுநோயைக் கண்டறியும் சக்தியை அதிகரிக்கிறது.
அவர் ஆண்டின் தொடக்கத்தை, கடினமான இரண்டு மாத சிகிச்சையில் செலவழித்தார். வலிப்பு, கல்லீரல் பிரச்னைகள் மற்றும் நிமோனியாவை கையாள்வதில் அந்த இரண்டு மாதங்கள் சென்றன. இப்போதுதான் ஆரோக்கியமாக இருப்பதாக பேராசிரியர் ஸ்கோலியர் கூறுகிறார்.
அவர் தனது வழக்கமான உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்கிவிட்டார். 'வழக்கமான' என்றால் 15 கிமீ (9.3 மைல்) ஓட்டப்பயிற்சி.
"நிச்சயமாக என்னுடைய மூளைநரம்பு உயிரணுப் புற்றுநோய் முழுவதும் குணமாகிவிட்டது என்று அர்த்தம் இல்லை. ஆனால் புற்றுநோய்க் கட்டி திரும்பி வரவில்லை என்பதை அறிவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதனால் என் மனைவி கேட்டி மற்றும் மூன்று அற்புதமான குழந்தைகளுடன் என் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்க இன்னும் சிறிது கால அவகாசம் கிடைத்திருக்கிறது," என்றார்.

பட மூலாதாரம், Getty Images
உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் மூளை புற்றுநோயால் பாதிக்கப்படும் சுமார் 3,00,000 பேருக்கு உதவக்கூடிய ஒரு கண்டுபிடிப்பின் இறுதிக் கட்டத்தில் இருவரும் இருக்கிறார்கள்.
இந்த முறையில் புற்றுநோயை முழுமையாக குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவுதான் என்று பேராசிரியர் ஸ்கோலியரும் பேராசிரியர் லாங்கும் கூறியுள்ளனர். ஆனால் இந்தச் சோதனை சிகிச்சையானது பேராசிரியர் ஸ்கோலியரின் ஆயுளை நீட்டிக்கும் மற்றும் விரைவில் மூளைநரம்பு உயிரணுப் புற்றுநோயாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகளாக மாற்றப்படும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
பேராசிரியர் ஸ்கோலியரின் சிகிச்சையின் முதல் வாரங்களின் முடிவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அறிவியல் ஆய்வறிக்கையை அவர்கள் தற்போது மதிப்பாய்வு செய்து வருகின்றனர். ஆனால் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட சிகிச்சை முறையை உருவாக்குவதற்கு இன்னும் அதிக காலம் தேவைப்படும் என பேராசிரியர் லாங் கூறுகிறார்.
"நாங்கள் முழு தரவுகளையும் சேகரித்துள்ளோம், இதன் மூலம் அடுத்த கட்டத்திற்கான அடித்தளத்தை உருவாக்குகிறோம். இதனால் அதிகமான மக்களுக்கு உதவ முடியும்," என்று அவர் கூறினார்.
மேலும், "நாங்கள் இன்னும் முழுமையான சிகிச்சையை எட்டவில்லை. நாங்கள் உண்மையில் கவனம் செலுத்த வேண்டியது என்னவென்றால், இந்த அறுவை சிகிச்சைக்கு முந்தைய, கூட்டு நோயெதிர்ப்பு சிகிச்சை வகை அணுகுமுறை அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு வேலை செய்கிறது என்பதை நிரூபிப்பதுதான்,” என பேராசிரியர் லாங் கூறுகிறார்.
‘புற்றுநோய்க் கட்டி மீண்டும் வராமல் இருக்க வேண்டும்’

பட மூலாதாரம், Getty Images
மருத்துவர் ரோஜர் ஸ்டுப். மூளைநரம்பு உயிரணுப் புற்றுநோய் சிகிச்சைக்கான தற்போதைய நெறிமுறைக்கு இவரது பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிபிசியிடம் பேசிய அவர், “பேராசிரியர் ஸ்கோலியரின் சிகிச்சை சரியாகச் செயல்படுகிறதா என்பதை இப்போதே சொல்ல முடியாது,” என்று கூறியிருந்தார்.
"ஸ்கோலியரின் முந்தைய முடிவுகள் ‘ஊக்கமளிப்பதாக’ இருந்தாலும், மீண்டும் 12 அல்லது 18 மாதங்களுக்கு புற்றுநோய்க் கட்டி மீண்டும் வராமல் இருக்க வேண்டும், அப்போதுதான் முழுமையான மகிழ்ச்சியடைய முடியும்," என்று அவர் கூறினார்.
தனது சிகிச்சையால் உருவாக்கப்பட்ட தரவு குறித்து பெருமைப்படுவதாகவும், இந்தப் பரிசோதனையை ஆதரித்ததற்காக அவரது குடும்பத்தினருக்கும் அவரது மருத்துவக் குழுவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் பேராசிரியர் ஸ்கோலியர் கூறினார்.
"நான் பணிபுரியும் குழுவை நினைத்துப் பெருமைப்படுகிறேன். இந்தப் பாதையில் உள்ள ஆபத்தை அறிந்து அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள் என்பதில் நான் பெருமைப்படுகிறேன்."
"நாங்கள் செல்லும் திசை சரியானதுதான் என்ற நம்பிக்கையை இது எனக்கு அளிக்கிறது,” என்கிறார் பேராசிரியர் ஸ்கோலியர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












