திருமணம் தாண்டிய உறவு தேடிய 3.7 கோடி பேர் அம்பலம் - ஹேக்கரின் செயலால் குடும்பங்களில் பிரளயம்

பட மூலாதாரம், PA
- எழுதியவர், அதாஹுல்பா அமெரிஸ்
- பதவி, பிபிசி உலக செய்திகள்
"வாழ்க்கை சிறிது, எனவே திருமணம் மீறிய உறவை வைத்துக்கொள்ளுங்கள்" என்ற முழக்கத்தை பயன்படுத்தி, ஆஷ்லே மேடிசன் என்ற நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள திருமணம் தாண்டிய உறவின் மீது ஆர்வம் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான நபர்களை ஈர்த்துள்ளது.
ஆனால் ஹேக்கர்கள் இந்த நிறுவனத்தின் 3.2 கோடி சந்தாதாரர்களின் தனிப்பட்ட தரவுகள் மற்றும் மிகவும் ரகசியமான தகவல்களை பொதுவெளிக்கு கொண்டு வந்ததால் இவர்களில் பலரது வாழ்க்கையில் பூகம்பமே வெடித்துள்ளது.
இதில் பலருக்கும் விவாகரத்துகள், குடும்பம் மற்றும் சுற்றுப்புறத்திலிருந்து ஒதுக்கி வைப்பது, தற்கொலைகள் என விளைவுகள் மோசமானதாக மாறியுள்ளன.
இந்நிலையில், இந்த டேட்டிங் தளம் குறித்த கதையை டோபி பாட்டன் இயக்க “ஆஷ்லே மேடிசன்: செக்ஸ், லைஸ் அண்ட் ஸ்கேன்டல்ஸ்" என்ற பெயரில் மூன்று அத்தியாயங்கள் கொண்ட குறுந்தொடராக வெளியிட்டுள்ளது நெட்ஃப்ளிக்ஸ்.

பட மூலாதாரம், Getty Images
ஆஷ்லே மேடிசன் என்பது என்ன?
அன்றாட வாழ்க்கையில் டிஜிட்டல் உலகின் "டாட் காம்ஸ்" களுக்குள் மனித குலம் சிக்கிக்கொண்டிருக்கும் நிலையில், திருமணத்திற்கு வெளியே ஒரு உறவைத் தேடிக்கொண்டிருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான டிஜிட்டல் சந்தை ஒன்று காலியாக இருப்பதை கனடாவை சேர்ந்த டேரன் ஜே. மோர்கென்ஸ்டெர்ன் உணர்ந்தார்.
2002 ஆம் ஆண்டில் ஆஷ்லே மேடிசன் என்ற இணையதளம் ஒன்றை தொடங்கினார் அவர். இதில் உறுப்பினராக சேரும் நபர்கள் தங்கள் பகுதியில் உள்ள திருமணத்தை தாண்டிய உறவில் ஆர்வத்துடன் இருக்கும் நபர்களை கண்டறிவதற்காக தங்களது தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் பாலியல் விருப்பங்களை பதிவேற்றிக் கொள்ளலாம்.
தற்காலத்தில் இருக்கும் பல டேட்டிங் தளங்களை போலவே, இந்த தளத்திலும் பெண்கள் பிறருடன் உரையாடலைத் தொடங்க பணம் கட்டத் தேவையில்லை. ஆனால், ஆண்கள் பணம் கட்டினால் மட்டுமே மற்றவருடன் பேச முடியும்.
நிறுவனத்தை தொடங்கி சில ஆண்டுகள் கழித்து, 2007 இல் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி நோயல் பைடர்மேனின் திறன்மிக்க, அதிவேகமான அதே நேரத்தில் சர்ச்சைக்குரிய சந்தைப்படுத்துதல் உத்தி மூலம் இந்த தளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்தது.
பெரும்பாலான விளம்பர நிறுவனங்கள் இந்த தளம் குறித்து விளம்பரப்படுத்த மறுத்துவிட்ட நிலையில், அமெரிக்காவில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்வுகளில் தானே தோன்றிய பைடர்மேன், “துரோகம் செய்வது உறவில் சில நன்மைகளையும் ஏற்படுத்தும்” என்று விளம்பரம் செய்ய ஆரம்பித்தார்.
இணையதளங்கள், ஊடகங்கள் மற்றும் விளம்பரப் பலகைகள் என பல வழிகளிலும் இதேபோன்ற வித்தியாசமான விளம்பரங்கள் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
ஊடக கவனத்தை பெற்ற பிறகு இந்த நிறுவனம் பல நாடுகளுக்கும் தனது சேவையை விரிவு செய்தது. அதன் பலனாக அதிகபட்சமாக கடந்த தசாப்தத்தில் அதன் பயனர் எண்ணிக்கை 3.7 கோடி என்று கூறியது அந்நிறுவனம்.
இதன் தொடர்ச்சியாக இந்த தளம் ஒழுக்கம் நிறைந்த பாரம்பரிய குடும்ப அமைப்புக்கு அச்சுறுத்தல் தரும் விதமாக செயல்படுவதாக பலரும் இதை விமர்சனம் செய்யத் தொடங்கினர். ஆனால், அது இதன் உரிமையாளர்களை எந்த வகையிலும் தொந்தரவு செய்யவில்லை.
இந்த ஆவணப்படத்தில் பேசியுள்ள அந்நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் கூட, “மோசமான விளம்பரங்கள் என்று எதுவுமில்லை, இங்கு எல்லா விளம்பரமும் நல்லதுதான்” என்று கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
தரவுகளை கசிய விட்ட ஹேக்கர்கள்
பயனர்களின் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பிற்காக முழுமையான விருப்புரிமை, தீவிரமான இரகசியத் தன்மை மற்றும் மிக உயர்ந்த பாதுகாப்பு அளிக்க உறுதியளித்திருந்தது இந்நிறுவனம்.
இருப்பினும், இந்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் ஆவணப்படத்தில் ஒப்புக்கொள்வது போல், இது ஒரு பொய்யான வாக்குறுதி. இந்த நிறுவனம் தனது தரவுகளை போதுமான அளவு பாதுகாக்கவில்லை.
2015 ஆம் ஆண்டில், தி இம்பாக்ட் டீம் என்று அழைக்கப்படும் ஒரு குழு ஆஷ்லே மேடிசனின் சர்வர்களுக்குள் நுழைந்து அதன் ஒட்டுமொத்த தகவல்களையும் வெளியே எடுத்து விட்டது.
நிறுவனத்தின் செயல்பாடுகளை 30 நாட்களுக்குள் நிரந்தரமாக நிறுத்தவில்லையென்றால், டார்க் வெப் தளத்தில் அனைத்து தகவல்களையும் கசிய விட்டுவிடுவோம் என்றும் அந்த குழு எச்சரித்தது.
யார் இதை செய்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்ற முனைப்பில், அவசரஅவசரமாக அந்நிறுவனம் திறமையான ஹேக்கர்களை பயன்படுத்தியது. இதனால், ஹேக்கர்கள் வைத்த கோரிக்கைக்கு அது ஒப்புக்கொள்ளவில்லை. இறுதியில் அவர்கள் அந்த தகவல்களை கசிய விடுவதையும் அதனால் தடுக்க முடியவில்லை.
அந்நிறுவனம் தனது கோரிக்கையை ஏற்காததால், சுமார் 3.2 கோடி பயனர்களின் பெயர்கள், புகைப்படங்கள், முகவரிகள், மின்னஞ்சல்கள் மற்றும் பாலியல் விருப்பங்கள் ஆகியவற்றை டார்க் வெப்பில் ஹேக்கர்கள் வெளியிட்டனர்.
சமீபத்தில் வெளியான தரவுகளில் அந்தரங்கப் படங்கள், கிரெடிட் கார்டு எண்கள் மற்றும் அதன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஆகியவையும் அடங்கும்.

பட மூலாதாரம், NETFLIX
விரைவிலேயே இந்த தரவுகள் டார்க் வெப்பிலிருந்து, பொதுவெளியில் பயன்படுத்தப்படும் இணையப் பக்கங்களில் கிடைக்க தொடங்கியது. இதன் மூலம் ஒருவரின் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுவதன் வழியாகவே, அவர் ஆஷ்லே மேடிசன் தளத்தை பயன்படுத்தியுள்ளாரா, இல்லையா என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது.
இதனால், இந்த தளத்தின் முக்கிய சந்தையான அமெரிக்காவில் பெரும் பிரளயமே வெடித்தது. பலரும் தங்களது கணவர், மனைவி, நண்பர், பக்கத்து வீட்டுக்காரர், மத போதகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் என இந்த தளத்தை பயன்படுத்திய அனைவரின் தரவுகளையும் பொதுவெளியில் வெளிப்படுத்தி வந்தனர்.
இந்த ஆவணப்படத்தின் முக்கிய நபர்களில் ஒரு ஜோடியான பிரபல டெக்சாஸ் யூடியூபர்கள் சாம் மற்றும் நியா ரேடரின் சிறப்பான திருமண வாழ்வும் சாம், ஆஷ்லே மேடிசனின் பயனாளர் என்று தெரிய வந்த போது உடைந்து நொறுங்கியுள்ளது.
இதுகுறித்த உறுதியான ஆதாரங்கள் இல்லை என்றாலும், ஆஷ்லே மேடிசனின் பயனாளர்களின் தரவு கசிந்ததன் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பல ஜோடிகளின் திருமண வாழ்வு முடிவுக்கு வந்துள்ளது.
குறிப்பாக, நியூ ஆர்லியன்ஸைச் சேர்ந்த போதகரான ஜான் கிப்சன் போன்றவர்கள் இந்த நிகழ்வின் நீட்சியாக மோசமான விளைவுகளை சந்திக்க நேர்ந்தது. அவர் இந்த தளத்தை பயன்படுத்துகிறார் என்று தெரிய வந்ததும் சமூகமே அவரை ஒதுக்கி வைத்தது. அவரது மனைவி கூறிய தகவலின்படி, அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார்.
இந்த அனுபவங்களுக்கு மாறாக, வெளிப்படையான உறவில்(Open Relationship) இருந்து வரும் ஜோடி ஒன்று இந்த தளம் தங்களுக்கு நல்ல அனுபவத்தையே தந்ததாகவும், இது தங்களது உறவுக்கு ஊக்கமளித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
திருமண உறவில் ஏமாற்றுபவர்களின் பட்டியல் இந்த தளத்திலிருந்து வெளியானது, அந்த நிறுவனத்தின் நேர்மையின்மை மற்றும் மோசடியையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இதில் சுமார் 40% பெண்களே இருப்பதாக கூறப்பட்டாலும், அந்த தரவுகளில் சிறிய பகுதியே பயனர்களுடையது என்று கண்டுபிடிக்கப்பட்டது. வெளியான தரவுகளில் பல ஆண்களை ஈர்ப்பதற்காக நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட போலி கணக்குகள் ஆகும்.
கூடுதலாக, தங்களது கணக்குகளை நீக்கிய பயனர்களுக்கு 19 அமெரிக்க டாலர்கள் செலுத்தி, முழுமையாக அவற்றை அழிக்கும் தேர்வை வழங்கி வந்தது அந்த தளம். ஆனால், அதுவும் பொய், இந்த கணக்குகளும் கூட 2015 ஹேக்கிங்கின் போது கசிய விடப்பட்டன.
இது மட்டுமின்றி அந்த ஹேக்கிங் குழு மேலும் பலரை அம்பலப்படுத்தும் விதமாக தனிப்பட்ட முறையில், சிஇஓ நோயல் பைடர்மேனின் மின்னஞ்சல் முகவரியில் இருந்து மின்னஞ்சல்களையும் அனுப்பியது.

பட மூலாதாரம், NETFLIX
ஆஷ்லே மேடிசனுக்கு என்ன ஆனது?
இந்த சம்பவத்தை தொடர்ந்து 2015ஆம் ஆண்டு நோயல் பைடர்மேன் தனது சிஇஓ பதவியில் இருந்து விலகினார்.
ஆஷ்லே மேடிசன் நிறுவனத்திற்கு எதிராக இழப்பீடு கேட்டு நீதிமன்றங்களில் வழக்குகள் குவிந்தன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் சிலருக்கு 11 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடை அந்நிறுவனம் வழங்க வேண்டியிருந்தது.
ஆனாலும், அந்த தளம் முடங்கவில்லை. தற்போது நம்பர் 1 திருமணமானவர்களுக்கான டேட்டிங் தளமாக தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வது மட்டுமின்றி, சில நாடுகளில் 8 கோடி பயனர்களை கொண்டுள்ளதாகவும் கூறி வருகிறது.
தொடரின் இயக்குநர் டோபி பாட்டன், இந்த கதையை பாரபட்சமற்ற முறையில் அணுக வேண்டும் என்று தான் நினைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
"ஆஷ்லே மேடிசனை பயன்படுத்தியவர்களை சங்கடப்படுத்துவதற்கு பதிலாக, அவர்கள் ஏன் அந்தத் தளத்தை நோக்கி ஈர்க்கப்பட்டார்கள் என்பதில் நாங்கள் அதிக ஆர்வம் காட்டினோம் . அவர்கள் எதைத் தேடினார்கள்? அவர்களின் உறவுகளில் என்ன நடக்கிறது? மேலும், முக்கியமாக, "இணையர் தரப்பு கூறுவது என்ன?" போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தினோம் என்று நெட்ஃப்ளிக்ஸிடம் பாட்டன் கூறியுள்ளார்.
உறவில் துரோகம் செய்வது என்பது மோசமானது மற்றும் மனதை உடைக்கும் ஒரு விஷயம் தான். ஆனால், ஆஷ்லே மேடிசன் தளத்தில் உறுப்பினராக இருந்த 3.7 கோடி பயனர்கள் நமக்கு உணர்த்தும் தகவல் வேறானதாக இருக்கிறது.
அது என்னவெனில், "வாழ்க்கையில் ஒரு நபரோடு மட்டும் உறுதியாக வாழ்வது சிக்கலானது" என்பது என்று அவர் அவர் கூறுகிறார்.
எது எப்படியோ, இந்த மோசமான பாதிப்புக்கு காரணமாக ஹேக்கரை இன்று வரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












