தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த ஆர்சிபி அணி எழுச்சி பெற்றது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
இந்த ஐபிஎல் சீசனில் தொடர் தோல்விகளைச் சந்தித்துவந்த பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, அடுத்தடுத்து 6 வெற்றிகளைப் பெற்று பிளேஆப் சுற்றில் நுழைந்திருக்கிறது.
2008ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடர் தொடங்கியதிலிருந்து கடந்த 16 சீசன்களாக ஆர்சிபி அணி கோப்பையை வென்று கொடுக்கும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் ஏமாற்றமே மிஞ்சுகிறதே தவிர இதுவரை கோப்பையை ஆர்சிபி வெல்லவில்லை.
2024 ஐபிஎல் டி20 சீசனையும் ரசிகர்கள் வழக்கம்போல் ஆர்சிபி அணியை அதிக எதிர்பார்ப்புடன் உற்று நோக்கினர். ஏனென்றால், ஐபிஎல் ஏலத்தில் ஏராளமான இளம் வீரர்கள், வெளிநாட்டு வாங்கப்பட்டதால், ஏதாவது மாயஜாலத்தை ஆர்சிபி நிகழ்த்தும் என நினைத்திருந்தனர்.
அல்சாரி ஜோஸப், டாப்லி, கேமரூன் கிரீன், பெர்குஷன், டாம் கரன் என பல வீரர்கள் வந்துள்ளதால் ஆர்சிபி அணி நிச்சயம் இந்த முறை பெரிய வெற்றிகளைப் பெற்று கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எண்ணினர். ஆனால் ஒரு மாத காலமாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலேயே தங்கியிருந்தது ஆர்சிபி.

பட மூலாதாரம், Getty Images
தொடர் தோல்விகளால் விரக்தி
ஆர்சிபி அணி இந்த சீசனில் முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியிடம் சென்னையில் தோற்றது. அதன்பின் பஞ்சாப் கிங்ஸ் அணியை வென்றபின் ஃபார்முக்கு ஆர்சிபி வந்துவிட்டதாக ரசிகர்கள் சிலாகித்தனர். ஆனால், அடுத்தடுத்து ஆர்சிபி 6 தோல்விகள் சந்தித்து ரசிகர்களை உச்சகட்ட வேதனைக்கும், வெறுப்புக்கும் ஆளாக்கியது.
கடந்த 3 வாரங்களுக்கு முன்புவரை ஆர்சிபி அணி 8 போட்டிகளில் 7 தோல்விகளைச் சந்தித்திருந்தது, தொடரை விட்டே வெளியேறும் நிலைக்கு வந்துவிட்டது. ரசிகர்களிடம் இருந்து ஆதங்க, கோபம் தெறிக்கும் வார்த்தைகள் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டன.
ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்த வீரர்கள் சரியில்லை, ப்ளேயிங் லெவனில் தேர்ந்தெடுத்த வீரர்கள் சரியில்லை, பந்துவீச்சு சரியில்லை, ஆல்ரவுண்டர்கள் இல்லை, தரமான சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லை என ரசிகர்களிடம் இருந்தும், கிரிக்கெட் விமர்சகர்களிடம் இருந்தும் ஏராளமான விமர்சனங்கள், கேள்விகள், சமூக வலைத்தளங்களிலும், டிவி சேனல்களிலும் வந்தவாறு இருந்தன.

பட மூலாதாரம், Getty Images
நம்பிக்கையிழந்த ஆர்சிபி வீரர்கள்
ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்தபோது, ஒவ்வொரு போட்டியிலும் அணி வீரர்கள் முகம் இறுக்கத்துடன், சோகம் சூழ்ந்திருந்ததைக் காண முடிந்தது. ஒரு விக்கெட் வீழ்த்தினால்கூட பெரிதாக உற்சாகம் இல்லாமல் இருந்ததை மைதானத்தில் முடிந்தது.
அதிலும் கொல்கத்தாவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 222 ரன்களைச் சேஸிங் செய்து ஒரு ரன்னில் தோற்றபோது ஆர்சிபி வீரர்களின் நிலை பரிதாபமாக இருந்தது. ஆனால்,அந்தத் தோல்விதான் கடைசியாக இருக்க வேண்டும் என்பது போல அடுத்தடுத்த போட்டிகள் வந்தன.

பட மூலாதாரம், Getty Images
அடுத்தடுத்து குவித்த வெற்றிகள்
ஏப்ரல் 25-ஆம் தேதிக்குப்பின் ஆர்சிபியின் முகமே மாறியது. அடுத்தடுத்து 5 வெற்றிகளை அள்ளி ரசிகர்கள் எதை எதிர்பார்த்தார்களோ அதை வழங்கி, உற்சாகப்படுத்தியது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த அணி 5-6வது இடத்துக்கு முன்னேறியது.
தங்கள் முதல் சுற்றில் எந்தெந்த அணிகள் மோசமாகத் தோற்கடித்தனவோ, அந்த அணிகளை ஆர்சிபி அணி பழிவாங்கியது.
உதாரணமாக பெங்களூருவில் ஏப்ரல் 15ம் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 287 ரன்கள் சேர்த்து ஆர்சிபி அணியை கண்ணீர்விட வைத்தது. அதில், ஆர்சிபி அணி 262 ரன்கள் வரை எடுத்து போராடித் தோற்றது.
அடுத்த 10 நாட்களில் நிலைமை தலைகீழாக மாறியது, சன்ரைசர்ஸ் அணியை 207 ரன்களை சேஸிங் செய்யவிடாமல் சுருட்டி அதன் பலவீனத்தை மற்ற அணிகளுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது ஆர்சிபி.

பட மூலாதாரம், Getty Images
ஆர்சிபி மீண்டு வந்தது எப்படி?
தொடர்ந்து 6 தோல்விகள் சந்தித்து துவண்டிருந்த ஆர்சிபி, மீண்டெழுந்து அடுத்தடுத்து 5 வெற்றிகளைப் பெற்று வியப்படைய வைத்துள்ளது. இது எவ்வாறு சாத்தியம், அதிலும் தொடர்ந்து 5 வெற்றிகள் எவ்வாறு கிடைத்தது, பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங்கில் எவ்வாறு சரியான ‘காம்பிஷேனைப்’ பெற்றது, பங்களிப்பு எவ்வாறு சீராக இருக்கிறது என்பது ஆய்வுக்குரிய விஷயமாக இருக்கிறது.
மேக்ஸ்வெல் சிறந்த ஆல்ரவுண்டர், சிராஜ் டெத்ஓவர் பந்துவீச்சாளர் என்ற நம்பிக்கையில் ஆடும் லெவனில் மாற்றம் செய்யாமல் தொடர்ந்து வீரர்களை களமிறக்கிய ஆர்சிபிக்கு முடிவுகளும் மாறாமல் தோல்வியாகவே வந்தன. சென்னை சேப்பாக்கத்தில் 15 ஆண்டுகளாக சிஎஸ்கே அணியை வீழ்த்த முடியாமல் குனிவுடன் ஆர்சிபி வெளியேறியது.
குறிப்பாக சிஎஸ்கே அணிக்கு எதிராக முதல் ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அனுஜ் ராவத்துக்கு அதன்பின் வாய்ப்பு தரப்படவில்லை, வியாசக் விஜயகுமார் அற்புதமாக பந்துவீசி சின்னச்சாமி மைதானத்தில் 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தியவருக்கு அதன்பின் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

பட மூலாதாரம், Getty Images
ஒரு ரன்னில் தோற்றபிறகு நடந்தது என்ன?
கொல்கத்தா அணியிடம் ஒரு ரன்னில் தோற்றபின், ஆர்சிபி அணி துணிச்சலாக ப்ளேயிங் லெவனில் மாற்றம் செய்து ஏலத்தில் எடுக்கப்பட்ட இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வந்தது.
விராட் கோலியின் பேட்டிங் பெரும்பாலான போட்டிகளில் நம்பிக்கை தரும் வகையில் இருந்திருக்கிறது. முதல் வரிசையில் இறங்கும் பிற ஆட்டக்காரர்களும் கணிசமாக ரன் எடுக்கிறார்கள். ஆகவே, நடுவரிசையில் மாற்றத்தைச் செய்தது ஆர்சிபி. மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக வில் ஜேக்ஸைக் கொண்டுவந்தது. ரூ.17.50 கோடிக்கு வாங்கப்பட்ட கேமரூன் கிரீனை கீழ் வரிசையில் களமிறக்கி பேட்டிங்கை பலப்படுத்தியது. ரஜத் பட்டிதாரை நடுவரிசை, ஒன்டவுனில் களமிறக்கியது. ஆர்சிபி அணி செய்த மாற்றத்துக்கு நல்ல பலன் கிடைத்திருப்பதை தொடர் வெற்றிகள் உணர்த்துகின்றன.
குறிப்பாக, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வில் ஜேக்ஸ் அதிரடியை யாரும் மறந்திருக்க முடியாது. 21 பந்துகளில் அரைசதம் அடித்த ஜேக்ஸ், அடுத்த 10 பந்துகளில் 50 ரன்கள் அடித்து சதம் கண்டார். 206 ரன்களை ஆர்சிபி 16 ஓவர்களில் சேஸிங் செய்து தங்களின் முடிவு சரியானது என்பதை நிரூபித்தது.
அதேபோல பந்துவீச்சிலும் வீரர்களை மாற்றியிருக்கிறது ஆர்சிபி. சிராஜுக்கு சில போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டது. லாக்கி பெர்குஷன், யாஷ் தயால் ஆகியோரோடும், கேமரூன் கிரீனை பந்துவீச வைத்தும் ஆர்சிபி களமிறங்கியது.

பட மூலாதாரம், Getty Images
சுழற்பந்துவீச்சில் ஹசரங்கா, சஹல் இல்லாத நிலையில் கரன் சர்மா மட்டுமே ஐபிஎல் அனுபவம் உடையவர். கரன் சர்மாவோடு, இளம் வீரர் ஸ்வப்னில் சிங்கை ஆர்சிபி பயன்படுத்தியது. ஆனால், ஸ்வப்னில் சிங் பந்துவீச்சு எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அமையவே பவர்ப்ளே ஓவரிலேயே ஸ்வப்னில் சிங் பந்துவீசும் அளவுக்கு நம்பிக்கையைப் பெற்றார், விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
பட்டிதாருக்கு அதிக சுதந்திரம் வழங்கி, ஒன்டவுனில் களமிறக்கியபின் அவரின் பங்கு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. பட்டிதார் கடைசியாக ஆடிய 5 இன்னிங்ஸ்களில் 4 அரைசதம் அடித்திருக்கிறார். ஆனால், சீசன் தொடக்கத்தில் பட்டிதாரை, தொடக்க வீரராகவும், ஒன்டவுனிலும் மாற்றி, மாற்றி ஆர்சிபி களமிறக்கிக் கொண்டிருந்தது.
மேக்ஸ்வெல் ஃபார்மில் இல்லை என்பதைத் தெரிந்தபின், அவரை முற்றிலுமாக ஆர்சிபி நிர்வாகம் பெஞ்சில் அமரவைத்தது துணிச்சலான முடிவாகவே கருதப்படுகிறது. அதேபோல, மகிபால் லாம்ரோர், மயங்க் தாகர், ஆகாஷ் தீப், விஜயகுமார் என இளம் வீரர்களை சுழற்சி முறையில் ஆர்சிபி ஒவ்வொரு போட்டியிலும் வாய்ப்பளித்தது.

பட மூலாதாரம், Getty Images
மாற்றங்கள் பற்றி ஆர்சிபி கேப்டன் கூறுவது என்ன?
ஆர்சிபி அணி மீண்டெழுந்து வந்துள்ளது குறித்து கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில், “இந்த சீசனின் முதல் பாதி எங்களுக்குச் சரியாக இல்லை.ஆனால் இப்போது பந்துவீச்சு, பேட்டிங்கிலும் முழுமையாக ஒருங்கிணைந்து செயல்படுகிறோம். இந்த வெற்றிக்காக பின்புலத்தில் அதிகமாக உழைத்துள்ளோம், சரியான கலவையில் அணியை தாமதமாகவே அமைத்துள்ளோம். எங்களிடம் பல வகையான பந்துவீச்சாளர்கள் இருப்பதை இப்போதுதான் கண்டறிந்துள்ளோம்.” என்கிறார்.
“யாஷ் தயால், பெர்குஷன் பங்களிப்பு அற்புதமாக இருக்கிறது. இதுபோன்ற துணிச்சலான கிரிக்கெட்டை விளையாடத்தான் விரும்புகிறோம். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இதைவெற்றியோடு அடுத்த சுற்றுக்கு செல்ல விரும்புகிறோம்” எனத் தெரிவித்தார்.
ஆர்சிபி அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் ஜிம்பாப்பேவின் பிரபலமான முன்னாள் வீரர் ஆன்டி பிளவர் இதற்கு முன் பிஎஸ்எல், சிபிஎல், ஹன்ட்ரட், ஐஎல்டி20 என பல தொடர்களில் பல அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்து சாம்பியன்ஷிப்பை பெற வழிகாட்டியாக இருந்துள்ளார். அணியை புதிய பாதைக்குத் திருப்பியதில் அவரது பங்கும் இருந்திருக்கக் கூடும்.

பட மூலாதாரம், Getty Images
2010-ம் ஆண்டு வரலாறு திரும்புமா?
2010ம் ஆண்டு ஐபிஎல் சீசனை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். ஏனென்றால் சிஎஸ்கே தொடர்ந்து 4 தோல்விகளைச் சந்தித்து தொடரை விட்டே வெளியேறிவிடும் என்று எண்ணப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து 3 வெற்றிகள், அதன்பின் ஒரு தோல்வி, அடுத்து ஒரு வெற்றி என மீண்டு 14 புள்ளிகளைப் பெற்றது. 14 புள்ளிகளோடு அந்த தொடரில் சிஎஸ்கே அணிக்குப் போட்டியாக, ஆர்சிபி, கொல்கத்தா,டெல்லி ஆகிய அணிகள் போட்டியிட்டன. ஆனால் நிகர ரன்ரேட்டில் உயர்வாக இருந்ததால், சிஎஸ்கே 3-ஆவது இடத்தையும், ஆர்சிபி 4-வது இடத்தையும் ப்ளே ஆப் சுற்றில் பெற்றது.
அரையிறுதியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியையும், இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சிஎஸ்கே சாம்பியன் பட்டத்தை வென்றது.
அதுபோன்றுதான் இந்த முறை ஆர்சிபி அணியும் தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த பின்பும் அடுத்தடுத்து 6 வெற்றிகளைப் பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருக்கிறது.
2010-ஆம் ஆண்டில் சிஎஸ்கே முதன் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதைப் போல ஆர்சிபி அணி இந்த சீசனில் கோப்பையை வென்று 16 ஆண்டு கால தாகத்தை தணிக்குமா என்று அந்த அணி ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












