பறவைக்காய்ச்சல் என்றால் என்ன? அது பசும்பால் மூலம் பரவுகிறதா?

பறவைக்காய்ச்சல்

பட மூலாதாரம், Getty Images

'ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா' என்று அறியப்படும் பறவைக்காய்ச்சல் வைரஸின் எச்சங்கள் அமெரிக்கச் சந்தைகளில் விற்கப்படும் மாட்டுப்பாலில் காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது அதன் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெக்சாஸ், கன்சாஸ் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் H5N1 வைரஸ் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்க உணவு மற்றும் மருந்துத் துறை (FDA) சார்பில், மே 10 அன்று பால் கடைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட 300 மாதிரிகளைப் பரிசோதனை செய்த பிறகு, பேஸ்ச்சரைஸ் (pasteurize) செய்யப்பட்ட பாலில் உயிருள்ள வைரஸ் எதுவும் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை என்று தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் நேரடியாக விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவாது என்றாலும், ஏப்ரல் மாதம் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட மாடுகளோடு நேரடித் தொடர்பில் இருந்த பண்ணைப் பணியாளர் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதாக பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன.

அவர் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கான வைரஸ் எதிர்ப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

இந்த வைரஸ் பாதிப்பு அரிதானது என்றாலும், பாலூட்டிகளில் இருந்து மனிதர்களுக்கும் இந்த வைரஸ் பரவும் என்பதற்கு இவர் ஒரு உதாரணம் என்று நோய் கட்டுப்பாட்டு மையம் (CDC) தெரிவித்துள்ளது.

எப்படி இந்த வைரஸ் ஒரு இனத்திலிருந்து மற்றொரு இனத்திற்குப் பரவுகிறது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்களிடம் தற்போது எந்த பதிலும் இல்லை.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் விலங்கு அறிவியல் பேராசிரியர் டாக்டர் ஹுய்ஜுன் சோவ் கூறுகையில், "ஒரு விலங்கிலிருந்து மற்றொரு உயிரினத்திற்கும் ஒரு உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினத்திற்கும் வைரஸ் பரவுவதற்கு காரணமான மரபணு மாற்றங்கள் (பிறழ்வுகள்) பற்றி மேலும் ஆராய்ச்சி தேவை,” என்று தெரிவித்தார்.

பிபிசியிடம் பேசிய அவர், "இந்த வகையான பிறழ்வுகள் ஒரே இனத்தைச் சேர்ந்த விலங்குகளுக்கு இடையில் அல்லது வெவ்வேறு இனங்களுக்கு இடையே வைரஸ் பரவுவதை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம்," என்று கூறினார்.

பறவைக்காய்ச்சல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, H5N1 பறவைக் காய்ச்சல் வைரஸ் அமெரிக்காவின் பல மாநிலங்களில் பசுக்களில் கண்டறியப்பட்டுள்ளது
பறவைக்காய்ச்சல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, H5N1 வைரஸ் முதன்முதலில் 1996ஆம் ஆண்டு சீனாவில் பரவியதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

பறவைக்காய்ச்சல் என்பது என்ன? அது எப்படி பரவுகிறது?

பறவைக் காய்ச்சல் என்பது நூற்றாண்டுகளாக இருந்து வரும் ஒன்று மற்றும் கோழி மற்றும் காட்டுப் பறவைகள் போன்ற உயிரினங்களில் காணப்படும் தொற்று நோயாகும்.

பறவைகள் மட்டுமின்றி, வன விலங்குகளான நரிகள், காட்டு நாய்கள், கடல் மற்றும் நீர்வாழ் உயிரிகளான சீல், நீர்நாய் போன்ற பாலூட்டிகளையும் இந்த வைரஸ் பாதிக்கிறது.

இந்த H5N1 வைரஸ் முதன்முதலில் 1996-ஆம் ஆண்டு சீனாவில் பதிவாகியுள்ளது.

பறவைகளின் எச்சங்கள், எச்சில்கள் அல்லது அசுத்தமான உணவு மற்றும் நீர் மூலம் இந்த நோய் சில நாட்களில் ஒட்டுமொத்த பறவை கூட்டத்திற்கே பரவுகிறது.

பொதுவாக இந்த வைரஸ் மனிதர்களைத் தாக்குவதில்லை.

ஆனால் உலக சுகாதார அமைப்பு (WHO), “கோழிகளுடன் நேரடித் தொடர்பு அல்லது அசுத்தமான சுற்றுச்சூழலின் மூலம் மனிதர்களுக்கு இந்த வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படும் அரிதான நிகழ்வுகள் உலகின் பல பகுதிகளில் பதிவாகியுள்ளன,” என்று கூறுகிறது.

இதில் அதிகமான பாதிப்புகள், ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உள்ளிட்டப் பல நாடுகளில் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

அமெரிக்காவில் இரண்டு நபர்களுக்கு H5N1 நோய்த்தொற்றின் பாதிப்பு பதிவாகியுள்ளது. அதில் ஒன்று 2022-ஆம் ஆண்டு பதிவாகியுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர் குணமடைந்துவிட்டார். மற்றொரு பாதிப்பு 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதிவாகியுள்ளது.

பறவைக்காய்ச்சல்
படக்குறிப்பு, கடந்த 20 ஆண்டுகளில் H5N1 வைரஸால் பாதிக்கப்பட்ட 888 பேரில் 463 பேர் உயிரிழந்துள்ளனர்.

அறிகுறிகள் என்ன?

உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, கடந்த 20 ஆண்டுகளில் 888 பேர் H5N1 பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 463 பேர் உயிரிழந்துள்ளனர். மனிதர்களில் இந்த வைரஸின் இறப்பு விகிதம் 52% ஆகும்.

வைரஸால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு அருகில் இருப்பதன் மூலமோ அல்லது அவற்றைக் கையாள்வது, கொல்வது, வெட்டுவது மூலமோ அல்லது அந்த விலங்குகளின் உடல்சார் திரவங்களால் மாசடைந்துள்ள இடத்தில் இருப்பது உள்ளிட்ட விஷயங்கள் மனிதர்களில் வைரஸ் தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம்.

அப்படி இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, காய்ச்சல் அறிகுறிகளான சுவாசப் பிரச்னைகள், கண் நோய்த்தொற்றுகள் மற்றும் நிமோனியா போன்ற உயிருக்கு ஆபத்தான அறிகுறிகளை உருவாக்கலாம் என்று நோய் கட்டுப்பாட்டு மையம் (CDC) தெரிவித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த நோயின் தீவிரம் அது பாதிக்கப்பட்ட நபரின் உடல்நலம் மற்றும் அந்தத் தொற்றைப் பொறுத்தது.

பறவைக்காய்ச்சல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, "நச்சுநீக்கம் செய்யப்படாத பச்சைப் பாலில் உள்ள பரவலான நோய்க்கிருமிகள் உணவு தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது," என்று எஃப்.டி.ஏ எச்சரிக்கிறது.

பால் குடிப்பது பாதுகாப்பானதா?

அமெரிக்க அதிகாரிகள் மற்றும் எஃப்.டி.ஏ உள்ளிட்ட அரசு நிறுவனங்கள், பேஸ்ச்சரைஸ் செய்யப்பட்டப் பாலில் காணப்படும் மரபணு எச்சங்கள் நோயை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளன.

பேஸ்ச்சரைஸேஷன் என்னும் நச்சுநீக்கச் செயல்முறையானது, பாலைக் குறிப்பிட்ட வெப்பநிலையிலும், குறிப்பிட்ட நேரத்திற்கும் சூடாக்குவதன் மூலம் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை நீக்கும் ஒரு செயல்பாடு.

இது பாலை பயன்படுத்துவதற்கான ஆயுட்காலத்தை அதிகரிக்கிறது.

"நச்சுநீக்கம் செய்யப்படாத பச்சைப் பாலில் உள்ள பரவலான நோய்க்கிருமிகள் உணவு தொடர்பான உடல்நலப் பிரச்னைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது," என்று எஃப்.டி.ஏ எச்சரிக்கிறது.

H5N1 வைரஸ் பரவுவதை எவ்வாறு தடுப்பது?

பறவைக்காய்ச்சல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த 20 ஆண்டுகளில் 23 நாடுகளில் மனிதர்களுக்கு H5N1 வைரஸ் பரவியுள்ளது.

பசுக்களில் வைரஸ் கண்டறியப்பட்டதிலிருந்து அமெரிக்காவில் பால் பண்ணைகள், மாட்டிறைச்சி மற்றும் பால் பொருட்கள் ஆகியவற்றைக் கண்காணித்து வருவதாக எஃப்.டி.ஏ கூறியுள்ளது.

இந்நிலையில், கொலம்பியாவைத் தொடர்ந்து, கனடா போன்ற அண்டை நாடுகளும் அமெரிக்காவில் இருந்து கால்நடைகளை இறக்குமதி செய்வதற்குக் கடுமையான விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரங்களின்படி, கடந்த 20 ஆண்டுகளில் 23 நாடுகளில் H5N1 வைரஸ் தொற்று மனிதர்களுக்குப் பரவியுள்ளதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவில் இந்த வைரஸ் தொற்றால் ஒருவர் பாதிக்கப்படுவதற்கு முன்பே, இதே போன்றதொரு தொற்று பாதிப்பு வியட்நாமில் 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பதிவாகியுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட வயது முதிர்ந்த நபர் அதற்கு முன்பு எந்த ஒரு மருத்துவ பிரச்னையும் இல்லாமல் இருந்த போதிலும், தொற்று பாதிப்புக்குப் பின்பு உயிரிழந்தார்.

இந்தப் பறவைக்காய்ச்சலில் இருந்து மனிதர்களை பாதுகாத்துக் கொள்ள எந்தவிதமான தடுப்பூசிகளும் இல்லை.

பறவைக்காய்ச்சல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பறவைக் காய்ச்சல் என்பது கோழி மற்றும் காட்டுப் பறவைகளில் காணப்படும் ஒரு தொற்று நோயாகும்.

மனிதர்களுக்கிடையே பரவுமா?

இந்த பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு அரிதாகவே பரவும் என்றாலும், சமீபத்தில் பதிவாகி வரும் H5N1 தொற்று குறித்து உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் உலகளாவிய இன்ஃப்ளூயன்ஸா திட்டத்தின் தலைவர் டாக்டர் வென்கிங் ஜாங் கூறுகையில், "மனிதர்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு நோய்த்தொற்றும் மனித உடலில் தன்னைப் பெருக்கிக் கொள்ளக் குறிப்பிட்ட வைரஸ் செய்யும் முயற்சி. இதற்கான வாய்ப்புகள் அரிதாக இருந்தாலும் கூட, ஒருமுறை அந்த வைரஸ் தனது முயற்சியில் வென்றுவிட்டால், அதுவே வைரஸ் தொற்று பரவலின் தொடக்கமாகும்," என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும், கோவிட்-19 தொற்றுநோய் பரவல் காலத்தில் கிடைத்த கால அனுபவமும், அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளும் வைரஸ் பரவுவதைத் தடுக்க உதவும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில், பறவைக் காய்ச்சல் பரவும் நாடுகளுக்குச் சென்றால், உணவுக்கு முன்னும் பின்னும் அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும் என்பதும் அடங்கும்.

மேலும் குறிப்பாக, கோழி இறைச்சி தொடர்பான உணவுகளில் கவனமாக இருக்கவும். உயிருள்ள கோழி மற்றும் பறவைகளிடம் நேரடியாக தொடர்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

அமெரிக்காவிற்கு வெளியே H5N1 வைரஸ் பரவுவதைத் தடுக்க மனிதர்கள், பால் மாடுகள், வீட்டு விலங்குகள் மற்றும் வனவிலங்குகளுக்கான ஒரே சுகாதாரக் கொள்கை தேவை என்று மருத்துவர் ஜோ கூறுகிறார்.

கோவிட்-19 தொற்றுநோய் பரவலின் போது பின்பற்றப்பட்ட சில கொள்கைகள் தற்போது பறவைக் காய்ச்சல் பரவுவதைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார் அவர்.

"உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச கண்காணிப்பு பிரிவுகளுக்கு இடையேயான தொடர்புகளைப் பயன்படுத்துவது, தரவுகளைப் பகிர்ந்து கொள்வது, விரைவான நோயறிதல் செயல்முறை மூலம் நோயை அடையாளம் காண்பது உள்ளிட்டவற்றிற்கான தேவை உள்ளது," என்று அவர் விளக்குகிறார்.

அமெரிக்காவில் தற்போது பதிவாகியுள்ள இந்த வைரஸ் மனிதனுக்கு மனிதன் பரவியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதுவே ஒரு தொற்று சமூக பரவலாக மாறுமா அல்லது மாறாதா என்பதை தீர்மானிக்கும் முக்கிய காரணியாகும்.

இருப்பினும், டெக்சாஸ் பண்ணைத் தொழிலாளி ஒருவருக்கு பசுக்களிடம் இருந்து பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது கவலைத் தரக்கூடிய விஷயம் என்று மருத்துவர் ஜோ கூறுகிறார்.

மேலும், "இந்த ஆபத்தான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நாம் கவனமாக இருக்க வேண்டும்," என்று அவர் எச்சரித்துள்ளார்.

"இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த வைரஸ் பூனைகளுக்கும் பரவியுள்ளது. பாதிக்கப்பட்டப் பூனைகளில் 50%-க்கும் மேற்பட்டவை பச்சைப் பாலைக் குடித்ததால் இறந்துள்ளன. சுற்றுச்சூழல் நிலைமைகளைப் பொறுத்து எந்த நேரத்திலும் பிறழ்வுகள் நிகழலாம். அவற்றை அடையாளம் காண்பதில் தாமதம் ஏற்படலாம். வைரஸ் பாதிக்கும் உயிரினம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகள் காரணமாக இந்தப் பிறழ்வுகள் எப்போது, ​​​​எங்கு நிகழும் என்பதைக் கணிப்பது கடினம்," என்று ஜோ கூறுகிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)