விமானம் சில நேரங்களில் திடீரென குலுங்குவது ஏன்? இது எவ்வளவு ஆபத்தானது?

பட மூலாதாரம், Getty Images
சமீபத்தில், லண்டனிலிருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் நடுவானில் குலுங்கியதால் (டர்புலன்ஸ் - turbulence) ஒருவர் உயிரிழந்துள்ளார், பலர் காயமடைந்துள்ளனர்.
விமானம் பறந்து கொண்டிருக்கும் உயரம் திடீரெனத் தாழ்ந்ததால், உள்ளே இருந்த பயணிகளும் அவர்களின் உடைமைகளும் தூக்கிவீசப்பட்டன. தாய்லாந்தின் பாங்காக்கில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அடிக்கடி விமானத்தில் பயணிப்பவர்கள், ஒரு விமானம் குலுங்கும் போது ஏற்படும் திடீர் உலுக்குதலை அறிந்திருப்பார்கள். இது விமானத்தை வெவ்வேறு திசைகளில் நகர்த்தலாம், விமானம் பறந்து கொண்டிருக்கும் உயரத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
பெரும்பாலான நேரங்களில் மேகங்களில் மேலும் கீழும் காற்று வீசும் போது, விமானங்கள் குலுங்கும் என்று பிபிசி வெதரின் முன்னாள் விமானப்படை அதிகாரியான சைமன் கிங் கூறுகிறார்.
அவற்றில் பெரும்பாலானவை மிகவும் லேசானதாக இருக்கும். ஆனால் , இடியுடன் கூடிய 'குமுலோனிம்பஸ்' மேகம் போன்ற பெரிய மேகங்களில், காற்றின் மாறுபட்ட இயக்கங்கள் மிதமான அல்லது கடுமையான குலுங்கலை ஏற்படுத்தும்.

பட மூலாதாரம், Reuters
‘இந்த வகை விமானக் குலுங்கலைத் தவிர்ப்பது கடினம்’
மேகங்கள் இல்லாத இடத்தில் நடைபெறும் மற்றொரு விதமான குலுங்கல் இருக்கிறது. இது, மேகங்கள் அற்ற ‘தெளிவான காற்றில்’ நடைபெறும் குலுங்கலாகும். இந்த வகை குலுங்கல் எங்கு நடைபெறுகிறது என்பதை கண்டறிய கடினமானதாக இருக்கும்.
இந்த வகை குலுங்கல் ‘ஜெட் ஸ்ட்ரீமைச்' சுற்றி நிகழ்கிறது. வானில் வேகமாக ஒரு நதி பாய்ந்து சென்றால் எப்படி இருக்கும், அது போல வேகமாக செல்லும் காற்று தான் 'ஜெட் ஸ்ட்ரீம்' எனப்படுகிறது. இது பொதுவாக 40,000-60,000 அடி உயரத்தில் காணப்படும் என்று விமான வல்லுநர் மற்றும் வணிக பைலட் கை கிராட்டன் கூறுகிறார்.
ஜெட் ஸ்ட்ரீமில் பாயும் காற்றின் வேகத்துக்கும் அதைச் சுற்றியுள்ள காற்றின் வேகத்துக்கும் இடையில் மணிக்கு 100 மீட்டர் வேகம் வித்தியாசம் இருக்கும் என்று அவர் கூறுகிறார். வேகமாக நகரும் காற்றுக்கும் மெதுவாக நகரும் காற்றுக்கும் இடையிலான உரசல்கள் குலுங்கலை ஏற்படுத்தும். இவை எப்போதும் இருக்கும், இவற்றைத் தவிர்ப்பது மிகவும் கடினம்.
உதாரணமாக, ஐரோப்பாவிலிருந்து வட அமெரிக்காவுக்கு விமானம் மூலம் செல்கிறீர்கள் என்றால், இதை முற்றிலும் தவிர்ப்பது மிகவும் கடினம் என்கிறார் கிராட்டன். இது கடுமையான குலுங்கல்களை ஏற்படுத்தும் என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
விமான குலுங்கல் எவ்வளவு ஆபத்தானது?
கிரான்ஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் இணை பேராசிரியரான கிராட்டன் கூறுகையில், குலுங்கல்களால் ஏற்படும் மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ளும் வகையில் விமானங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன, என்றார்.
குலுங்கல் காரணமாக ஒரு விமானம் முற்றிலும் அழிய 'சாத்தியமில்லை' என்றும் அவர் கூறுகிறார்.
எனினும், இது ஒரு விமானத்திற்கு எந்த நன்மையும் செய்யாது. அதனால்தான் விமானிகள் அதைத் தவிர்க்க அல்லது மெதுவாக இயக்க முயல்வார்கள். மேலும் சீட் பெல்ட் அணிய அறிவுறுத்துவார்கள்.
தீவிரமான குலுங்கல் ஏற்படும் போது, ஒரு விமானத்திற்குக் கட்டமைப்புச் சேதங்கள் ஏற்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடுமையான குலுங்கலின் போது சீட் பெல்ட் அணியாமல் இருக்கும் பயணிகள் தூக்கி வீசப்பட வாய்ப்புண்டு.
ஆனால் குலுங்கலின் விளைவாக இறப்புகள் மற்றும் காயங்கள் ஏற்படுவது மிக அரிதானதே என்று விமான பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.
விமானப் போக்குவரத்து நிபுணர் ஜான் ஸ்ட்ரிக்லேண்ட் கூறுகையில், லட்சக்கணக்கான விமானங்கள் இயக்கப்படும் சூழலில் கடுமையான குலுங்கல் காரணமாக் ஏற்படும் காயங்கள் 'ஒப்பீட்டளவில் அரிதானவை' என்று கூறுகிறார்.
2009 மற்றும் 2022-க்கு இடையில் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட விமான நிறுவனங்களில், குலுங்கல்கள் காரணமாக 163 'கடுமையான காயங்கள்' ஏற்பட்டதாக அமெரிக்காவின் தேசியப் போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியம் தெரிவித்துள்ளது. ஒரு ஆண்டுக்கு சராசரியாக 12 நிகழ்வுகள் ஏற்படுகின்றன.
விமானிகள் குலுங்கல்களை எவ்வாறு கையாளுகிறார்கள்?
விமானிகள் பறப்பதற்கு முன்பு சில விமான முன்னறிவிப்பைப் பெறுவார்கள், இதில் வானிலை தரவு அடங்கும். அவர்கள் இந்தத் தகவலை அறிந்து கொண்டு தங்கள் பாதைகளைத் திட்டமிடுவார்கள்.
உதாரணமாக, இடியுடன் கூடிய மழை நிகழ்வுகளை அவர்கள் தவிர்த்துக் கொள்ள முடியும். ஆனால் 'தெளிவான காற்று' குலுங்கலைத் தவிர்ப்பது அவ்வளவு எளிதல்ல.
அதே வழித்தடங்களில் அவர்களுக்கு முன்னால் சென்ற மற்ற விமானங்களும் ஏதேனும் குலுங்கல்கள் இருந்தால் தெரிவிப்பார்கள் என்று கிராட்டன் கூறுகிறார். அந்தப் பாதைகளில் செல்வதை விமானிகள் தவிர்க்க முயற்சிப்பார்கள், அல்லது அதன் தாக்கத்தை குறைக்க விமானத்தின் வேகத்தை குறைப்பார்கள்.
விமான குலுங்கலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விமானக் குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயணிகள் பாதுகாப்பாக இருக்க என்ன செய்யலாம்?
பயணிகளைப் பொறுத்தவரை, சீட் பெல்ட் அணிந்து கொண்டு இருக்க வேண்டும். குலுங்கல் எப்போது நடைபெறும் என்று கணிக்க முடியாததால், எல்லா நேரங்களிலும் பயணிகளை சீட் பெல்ட் அணிந்துகொள்ளுமாறு விமானிகள் அறிவுறுத்துகிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
விமானக் குலுங்கல்கள் அடிக்கடி ஏற்படுகின்றவா?
சில ஆராய்ச்சியாளர்கள் காலநிலை மாற்றம் விமானக் குலுங்கல்களை அதிகமாக்கியுள்ளது என்று கருதுகின்றனர்.
கடந்த ஆண்டு, இங்கிலாந்தில் உள்ள ரீடிங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 1979 மற்றும் 2020-க்கு இடையில் கடுமையான விமான குலுங்கல்கள் 55% அதிகரித்துள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
கார்பன் வெளியேற்றம் காரணமாக காற்றின் வெப்பம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக் அதிக உயரத்தில் காற்றின் வேகத்தில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதுவே விமான குலுங்கல்கள் அதிகரிக்க காரணம் என்று அவர்கள் கூறினர்.
விமானக் குலுங்கல்களின் அதிகரிப்புக்கு, விமானப் பயன்பாட்டின் அதிகரிப்பும் காரணமாக இருக்கலாம் என்று கை கிராட்டன் கூறுகிறார்.
விமானங்கள் அதிகமாகப் பறக்கும் வானில், ஒரு விமானத்திலிருந்து மற்றொரு விமானம் குறைந்தபட்ச பாதுகாப்பான தூரத்தில் இருக்க வேண்டும் என்பதால், ஒரு வழிதடத்தை தவிர்ப்பது விமானிகளுக்கு எளிதானதாக இருக்காது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












