அமெரிக்க அதிபர் விமானத்தில் மாயமாகும் பொருட்கள் - செய்தியாளர்களுக்கு எச்சரிக்கை ஏன்?

பட மூலாதாரம், GETTY IMAGES
அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ விமானத்தில் இருந்து நினைவு பரிசுகளை திருடுவதை நிறுத்துமாறு ஊடகவியலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிப்ரவரியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டின் மேற்கு கடற்கரைக்கு பயணம் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து அவரது ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் இருந்த பொருட்கள் எண்ணப்பட்டதில் அதில் பல பொருட்கள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது.
அதிபரின் விமானத்தில் இருந்து முத்திரையிடப்பட்ட தலையணை கவர்கள், கண்ணாடிகள், தங்க விளிம்பு கொண்ட தட்டுகள் உள்ளிட்ட பல பொருட்கள் காணாமல் போயுள்ளன.
அதிபர் மாளிகையின் செய்திகளை சேகரித்து வெளியிடும் செய்தியாளர்களின் அமைப்பான வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கம், அதிபரின் விமானத்தில் இருந்து பொருட்களை எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது என்று எச்சரித்துள்ளது.
இந்த மாதிரியான நடத்தை செய்தியாளர்களுக்கு உகந்தது அல்ல என்று கடந்த மாதம் இந்த சங்கம் செய்தியாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தது.
பிரஸ் பூல் என்பது ஏர்ஃபோர்ஸ் ஒன்னில் அமெரிக்க அதிபருடன் பயணிக்கும் பத்திரிகையாளர்களைக் குறிக்கிறது.
இந்த வகையான நடத்தை நிறுத்தப்பட வேண்டும் என்று மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது.
பல சமயங்களில் அதிபருடன் பயணிக்கும் போது, செய்தியாளர்களுக்கு நினைவுப் பரிசாக அதிபரின் முத்திரையுடன் கூடிய எம்&எம் சாக்லேட் பாக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.
ஆனால் அமெரிக்க அதிபர் தனது விமானத்தில் கரண்டிகள், தட்டுகள், கட்லரிகள் அல்லது பிற பொருட்களை எடுத்துச் செல்வது இயல்பானது என்றும் தகவல்கள் கூறுகின்றன.
வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவின் அதிபர் மாளிகை செய்தியாளர் மிஷா கொமடோவ்ஸ்கி, அதிபர் விமானத்தில் தன் பயணத்தின் போது தான் சேகரித்த பொருட்களின் தொகுப்பை காட்டுகிறார்.
ஏர் ஃபோர்ஸ் ஒன் லோகோ பொறிக்கப்பட்ட காகிதக் கோப்பையை கையில் ஏந்தியபடி, "இந்த பொருட்களை சேகரிப்பதன் மூலம் நான் எந்தத் தவறும் செய்யவில்லை அல்லது யாரையும் சங்கடப்படுத்தவில்லை" என்று மிஷா தெரிவித்தார்.
"நான் இந்த காகித கோப்பையை தூக்கி எறிய மறந்துவிட்டேன்," என்றும் மிஷா கூறுகிறார்.
மிஷா கொமடோவ்ஸ்கியிடம் அதிபரின் சாக்லேட் பாக்கெட்டும் உள்ளது. அதில் அதிபர் பைடனின் கையொப்பம் உள்ளது.
"இவை சந்தையில் கிடைக்கும் சாதாரண சாக்லேட்டுகள் தான். இதை ஒரு நல்ல பெட்டியில் நிரம்பியுள்ளனர்," என்று அவர் கூறுகிறார்.
அதிபர் விமானத்தில் என்னென்ன இருக்கும்?

ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம், காற்றில் பறக்கும் அதிபரின் அலுவலகம் என்றும் அழைக்கப்படுகிறது. அதிபர் மாளிகை இதை காற்றில் பறக்கும் அதிபர் அலுவலகம் என்று வரையறுக்கிறது.
இந்த விமானம் 4 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டது. இதில் மூன்று தளங்கள் உள்ளன.
அதிபருக்கான தனிப்பட்ட பெரிய சொகுசு அறை, அறுவை சிகிச்சை மேசையுடன் கூடிய மருத்துவ பிரிவு, மாநாடு மற்றும் சாப்பாட்டு அறை, ஒரே நேரத்தில் 100 பேருக்கு உணவு அளிக்கக்கூடிய இடங்கள் மற்றும் பத்திரிகையாளர், விஐபிகள் மற்றும் செயலக ஊழியர்களுக்கு தனி பகுதியும் இதில் உள்ளது.
மேம்பட்ட ஏவியோனிக்ஸ் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்ட இந்த விமானம் ராணுவ விமானமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. வான் தாக்குதலை எதிர்த்து சமாளிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்திற்கு வானிலேயே எரிபொருள் நிரப்ப முடியும். இது வரம்பற்ற நேரம் காற்றில் பறக்கும் திறனை கொண்டுள்ளது. நெருக்கடி காலத்தில் இந்த திறன் மிகவும் முக்கியமானது.
ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் பாதுகாப்பான தகவல் தொடர்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. விமானம் ஒரு நகரும் கட்டளை மையமாக செயல்பட இது அனுமதிக்கிறது.
விமானத்தில் 85 உள் தொலைபேசிகள், இருவழி ரேடியோ மற்றும் கணினி இணைப்புகள் உள்ளன.
ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் அதிபர் முன்பக்கத்தில் அமர்வார். விமானத்தின் பின்புறத்தில் செய்தியாளர்களுக்கான கேலரி உள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












