கச்சத்தீவை திரும்பப் பெற இந்தியா பேச்சுவார்த்தையா? இலங்கை அமைச்சர் என்ன சொல்கிறார்?

- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரசும் தி.மு.கவும் தாரை வார்த்திருப்பதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியிருக்கிறது. ஆனால், தி.மு.கவும் காங்கிரசும் இதனை மறுக்கின்றன. இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது? இந்தியா - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான போது கருணாநிதி என்ன செய்தார்? இனி மீட்க முடியுமா? கச்சத்தீவு தொடர்பாக இந்தியா - இலங்கை இருநாடுகளிடையே என்ன நடக்கிறது? கச்சத்தீவை மீட்க இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது குறித்து இலங்கை அமைச்சர் அளித்த பதில் என்ன?
தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தில் இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோதி ஞாயிற்றுக்கிழமையன்று வெளியிட்ட ஒரு X வலைதளப் பதிவில், காங்கிரசையும் தி.மு.கவையும் குற்றம்சாட்ட புதிதாக ஒரு விஷயத்தைக் கையில் எடுத்திருந்தார்.
அவர் அந்தப் பதிவில், "கச்சத்தீவை எவ்வளவு அலட்சியமாக காங்கிரஸ் கொடுத்தது என்பதை புதிய தகவல்கள் வெளிப்படுத்துகின்றன. இது ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியிருக்கிறது. நாம் ஒருபோதும் காங்கிரசை நம்ப முடியாது என்பதை மக்களின் மனதில் உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்தியாவின் ஒற்றுமையையும் நலன்களையும் பலவீனப்படுத்துவதே கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரசின் பணியாக இருந்துவருகிறது" என்று குறிப்பிட்டதோடு, நாளிதழ் ஒன்றில் வெளியான கட்டுரையின் இணைப்பையும் பகிர்ந்திருந்தார்.

பட மூலாதாரம், X/Narendra Modi
அந்தக் கட்டுரை, பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் எழுதப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
கட்டுரை கூறுவது என்ன?
"சுதந்திரத்திற்குப் பிறகு அந்தத் தீவின் மீது உரிமை கொண்டாடிய இலங்கை, இந்தியக் கடற்படை தனது அனுமதி இல்லாமல் அங்கே பயிற்சி செய்யக்கூடாது என்று கூறியதாகவும் 1955ல் தனது விமானப் படை பயிற்சியை அங்கே மேற்கொண்டதாகவும் அந்தக் கட்டுரை குறிப்பிட்டது. இந்த விவகாரத்தை முக்கியத்துவமில்லாத விவகாரமாக பிரதமர் 1961ஆம் ஆண்டு மே பத்தாம் தேதி எழுதிய குறிப்பு ஒன்றில் தெரிவித்திருந்தார்.
"இந்தச் சிறிய தீவுக்கு நான் எவ்வித முக்கியத்துவமும் கொடுக்கவில்லை. அதன் மீதான உரிமையை விட்டுத்தர எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இந்த விவகாரம் நீண்ட காலத்திற்கு நிலுவையில் இருப்பதையோ, மீண்டும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படுவதையோ நான் விரும்பவில்லை" என நேரு குறிப்பிட்டிருந்தார்.
இந்தத் தீவின் மீதான உரிமையை பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனி ராமநாதபுரம் ராஜாவுக்கு அளித்திருப்பதால், அதன் மீது நமக்கு உரிமை இருக்கிறது என அப்போதைய அட்டர்னி ஜெனரல் எம்.சி. செடல்வத் கூறியிருந்தார்.
அப்போது வெளியுறவுத் துறையின் இணைச் செயலராக இருந்த கே. கிருஷ்ணாராவ், உரிமை குறித்து உறுதியாக இல்லை. ஆனால் அந்தத் தீவைச் சுற்றி மீன் பிடிக்கும் உரிமையைக் கோர சட்ட ரீதியில் வாய்ப்பு இருக்கிறது என்பதை அவர் குறிப்பிட்டார்.
1968ல் இலங்கைப் பிரதமர் டட்லி சேனநாயக இந்தியாவுக்கு வந்தபோது, இந்தத் தீவை இலங்கைக்கு அளிப்பது குறித்து ரகசியப் பேச்சுவார்த்தை நடப்பதாக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. இதற்கு நாடாளுமன்றத்தில் பதிலளித்த இந்திரா காந்தி அரசு, அப்படி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகச் சொல்வதை மறுத்தது. ஆனால், அது சர்ச்சைக்குரிய பகுதி எனக் குறிப்பிட்டது. இரு தரப்பு உறவுகளை மனதில் வைத்து, இந்தியா உரிமை கோர வேண்டுமென்றும் கூறியது.

1973ல் கொழும்புவில் நடந்த வெளியுறவுத் துறை செயலர்கள் மட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு கச்சத் தீவு மீதான உரிமையை விட்டுத்தர இந்தியா முடிவு செய்தது. இந்த விவரம் வெளியுறவுத் துறைச் செயலர் கேவல் சிங் மூலம் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு. கருணாநிதிக்குத் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பில் அந்தத் தீவு மீதான ராமநாதபுரம் ராஜாவின் உரிமையும், தனக்குத்தான் அந்தத் தீவு சொந்தமெனக் கூறும் இலங்கைத் தரப்பால் அதற்கு சாட்சியமாக எவ்வித ஆதாரத்தையும் காட்ட முடியாததும் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால், இலங்கை பிடிவாதமாக இருப்பதாக கேவல் சிங் குறிப்பிட்டார். 1925 முதல் இலங்கை அந்தத் தீவின் மீது உரிமை கோரிவருவதையும் அவர் குறிப்பிட்டார்.
அந்தக் கடற்பகுதியில் எண்ணெய் வளம் இருப்பதை இந்தியா கண்டறிந்திருந்ததாலும் இலங்கை அரசின் மீது சீன ஆதரவுக் குழுக்களின் செல்வாக்கு அதிகரித்துவந்ததாலும் உடனடியாக முதலமைச்சர் அதற்கு ஒப்புக்கொள்ள வேண்டுமென கேவல் சிங் வலியுறுத்தினார். அதற்கு கருணாநிதி ஒப்புக்கொண்டார்" என அந்தக் கட்டுரை கூறுகிறது.

கச்சத்தீவு - பாஜக குற்றச்சாட்டு என்ன?
பிரதமர் நரேந்திர மோதியின் எக்ஸ் வலைதள பதிவிற்குப் பிறகு, தமிழக பா.ஜ.க. தலைவர்கள் பலரும் இந்த விவகாரம் குறித்துப் பேச ஆரம்பித்தனர்.
இதற்குப் பிறகு இந்த விவகாரம் குறித்து மீண்டும் ஒரு பதிவை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோதி, "தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க தி.மு.க. எதையும் செய்யவில்லை. கச்சத் தீவு விவகாரத்தில் புதிதாக வெளிவரும் தகவல்கள் தி.மு.கவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகின்றன. காங்கிரசும் தி.மு.கவும் குடும்பக் கட்சிகள். தங்கள் மகன்களையும் மகள்களையும் வளர்ப்பது பற்றி மட்டும்தான் அவர்கள் கவலைப்படுவார்கள். கச்சத்தீவு விவகாரத்தில் அவர்கள் காட்டிய அலட்சியம் ஏழை மீனவர்களின் நலன்களுக்கு பாதகமாகிவிட்டது" என்று குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
இதற்குப் பிறகு, திங்கட்கிழமையன்று பா.ஜ.கவின் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர். இந்திய மீனவர்களின் உரிமையை பறிகொடுத்துவிட்டு, அதற்குப் பொறுப்பேற்க காங்கிரஸ் மறுப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு, பழைய விவகாரமான கச்சத்தீவு பிரச்னையை பிரச்னையை எழுப்புவதாக கூறுவது தவறு என்று கூறிய அவர், "தொடர்ந்து இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டு வருகிறது. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் இது தொடர்பாக தொடர்ந்து கடிதப் போக்குவரத்து நடந்துவருகிறது" என்றும் குறிப்பிட்டார்.
மேலும், காங்கிரசைச் சேர்ந்த பிரதமர்கள் கச்சத்தீவு விவகாரத்தில் அலட்சியமாக நடந்துகொண்டதாகவும் குறிப்பிட்டார்.
கச்சத்தீவைக் கொடுப்பதற்கு தி.மு.க. எதிராக இருப்பதாகக் காட்டிக்கொண்டாலும், இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது முழுமையாக அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார் ஜெய்சங்கர்.
ஜெய்சங்கர் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதிலடி
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஜெய்சங்கர் வெளியுறவுச் செயலாளராக இருந்தபோது, 2015 ஜனவரி 27ஆம் தேதி வெளியுறவு அமைச்சகம் அளித்த பதிலை இப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் ஜெய்சங்கர் மறுக்கிறாரா?
இந்த ஒப்பந்தம், இந்தியாவுக்குச் சொந்தமான நிலப்பரப்பைக் கையகப்படுத்துவது அல்லது விட்டுக்கொடுப்பது ஆகியவற்றை உள்ளடக்கியதாக இல்லை, ஏனெனில் கேள்விக்குரிய பகுதி ஒருபோதும் வரையறுக்கப்படவில்லை. ஒப்பந்தங்களின்படி, கச்சத்தீவு இந்தியா-இலங்கை சர்வதேச கடல் எல்லைக் கோட்டின் இலங்கைப் பகுதியில் அமைந்துள்ளது. என்று 2015ஆம் ஆண்டில் கச்சத்தீவு குறித்த ஆர்.டி.ஐ கேள்விக்கு வெளியுறவு அமைச்சகம் பதில் அளித்துள்ளது" என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், X/Jairam Ramesh
கச்சத்தீவு - இலங்கை அமைச்சர் பதில் என்ன?
கச்சத்தீவை மீண்டும் இந்தியாவுடன் சேர்க்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதற்கு நேர்மாறாக இலங்கை அமைச்சரின் பேச்சு அமைந்துள்ளது. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள தமிழர் வம்சாவளியைச் சேர்ந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “இலங்கையைப் பொறுத்தவரையில் கச்சத்தீவு இலங்கை எல்லைக்குள் உள்ளது. நரேந்திர மோதி அரசு இலங்கையுடன் நல்லுறவைக் கொண்டுள்ளது. கச்சத்தீவு தொடர்பாக இந்தியாவிடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை. அப்படி ஏதேனும் கூறப்பட்டால் அதற்கு இலங்கை வெளியுறவு அமைச்சகம் பதிலளிக்கும்” என்று கூறியுள்ளார்.
இலங்கை அமைச்சர் தொண்டமான் இந்திய அரசின் சார்பில் இது தொடர்பாக எந்த விதமான பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை மறுத்துள்ளார். எந்தவொரு புதிய அரசாங்கத்தின் விருப்பத்திற்கும் ஏற்ப நாட்டின் எல்லையை மாற்ற முடியாது என்று மற்றொரு இலங்கை அமைச்சர், கூறியுள்ளார்.
பெயரை வெளிப்படுத்த விரும்பாத அந்த அமைச்சர், “சரியோ தவறோ, கச்சத்தீவு அதிகாரப்பூர்வமாக இலங்கையின் ஒரு பகுதி. வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டவுடன், எந்த புதிய அரசும் வந்து அதை மாற்றச் சொல்ல முடியாது. ஆனால், கச்சத்தீவு தொடர்பாக இலங்கை அமைச்சரவையில் எந்த விவாதமும் நடைபெறவில்லை, அது குறித்து இந்தியா பேசவில்லை.
கச்சத்தீவின் இருபுறமும் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். இது தமிழக மீனவர் பிரச்சினை என்றால் கச்சத்தீவை இதனுடன் இணைப்பது சரியல்ல. ஏனெனில் இந்திய மீனவர்களின் பிரச்னை அவர்கள் மீன் பிடிக்க பயன்படுத்தும் வலைகள் பற்றியது. "இந்திய கடல் எல்லைக்கு வெளியே மீன்பிடிக்கும் இந்த முறை சர்வதேச கடல்சார் சட்டங்களின்படி சட்டவிரோதமானது." என்று கூறியதாக அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

கச்சத்தீவு - உண்மையில் நடந்தது என்ன?
தமிழ்நாட்டில் கச்சத்தீவு விவகாரம் பல முறை முக்கியமான அரசியல் பிரச்னையாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கச்சத்தீவு விவகாரம் தேசிய அளவில் விவாதிக்கப்படுவது கடந்த பல வருடங்களில் இதுவே முதல் முறை.
இந்தியா கச்சத்தீவு மீதான தனது உரிமையில் உறுதியாக இல்லை என்பது உண்மைதான் என்கிறார் கச்சத்தீவு குறித்து பல நூல்களை எழுதியவரும் சென்னை பல்கலைக் கழகத்தின் தெற்கு மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான மையத்தின் முன்னாள் இயக்குநருமான வி. சூரியநாராயண்.
"கச்சத்தீவு விவகாரத்தில் ஒரு முடிவு எட்டப்படுமானால், அது சரிந்துகொண்டிருக்கும் சிறீமாவோவின் இமேஜிற்கு பெரிய அளவில் உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தியா தனது அண்டை நாடுகளை ஆதிக்கம் செலுத்தத் திட்டமிடுகிறது என்று இலங்கையிலிருந்த இடதுசாரி சக்திகள் குரலெழுப்பி வந்தன. கச்சத்தீவு விவகாரத்தை அதற்கு ஒரு உதாரணமாக சுட்டிக்காட்டின. கச்சத்தீவை இலங்கைக்கு வழங்குவது அந்த வாதத்தை முறியடிக்கும் என நம்பப்பட்டது" என்று தனது நூலில் குறிப்பிடுகிறார் சூர்யநாராயண்.
1974ஆம் ஆண்டின் ஒப்பந்தம் செய்யப்பட்ட போது, கச்சத்தீவை இந்தியாவுக்குச் சொந்தமான தீவாகக் கருதாமல், சர்ச்சைக்குரிய பகுதியாகக் கருதி இந்தியா முடிவெடுத்து எனக் குறிப்பிடும் வி. சூர்யநாராயண், அந்தத் தீவு தனக்குச் சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களைப் பற்றிக் கவலைப்படவில்லை என்கிறார்.
மேலும், 1974ஆம் ஆண்டில் ஒப்பந்தத்தின் கீழ் இந்திய மீனவர்களுக்கு சில உரிமைகள் அளிக்கப்பட்டிருந்தன. அந்த உரிமைகள், 1976ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் நீக்கப்பட்டன. இப்படியாகத்தான் அந்தத் தீவு மீதான உரிமையை இந்தியா முழுவதுமாக இழந்தது என்கிறார் அவர்.

கச்சத்தீவு - ஒப்பந்தம் கையெழுத்தான போது கருணாநிதி என்ன செய்தார்?
கச்சத்தீவை இலங்கைக்கு அளிக்கும் விவகாரத்தில் அப்போதைய தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்தது என்கிறார் வி. சூர்யநாராயண். "இது தொடர்பாக பிரதமர் இந்திரா காந்தியைச் சந்திக்க முதலமைச்சர் மு. கருணாநிதியும் அமைச்சர் எஸ். மாதவனும் சென்றனர். பிரதமரைச் சந்தித்த போது இந்த விவகாரத்தில் தனது கடுமையான எதிர்ப்பை மு. கருணாநிதி தெரிவித்ததாக மாதவன் சொன்னார்.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை ஒரு கடிதமாக எழுதி பிரதமரிடம் அளித்தார் மு. கருணாநிதி. மாநில அரசு சேகரித்த ஆதாரங்களின்படி, கச்சத்தீவின் மீது இலங்கை அரசானது ஒருபோதும் இறையாண்மையைச் செலுத்தியதில்லை என்பதைச் சுட்டிக்காட்ட போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. கச்சத்தீவைக் கட்டுப்படுத்திய ராமநாதபுரம் ராஜா எந்தக் காலகட்டத்திலும் இலங்கை அரசுக்கு வாடகையோ, ராயல்டியோ செலுத்தியதில்லை என கருணாநிதி தனது கடிதத்தில் சுட்டிக்காட்டினார்" என்கிறார் சூர்யநாராயண்.
மேலும், "இந்த கடல்சார் ஒப்பந்தமானது மாநில அரசின் உரிமையைக் கடுமையாக பாதித்தாலும் அந்த ஒப்பந்தத்தின் ஷரத்துகளைக் கூட மாநில அரசுடன் விவாதிக்க மத்திய அரசு முன்வரவில்லை என தொடர்ந்து சொல்லிவந்தார் கருணாநிதி. பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த காலத்தில் அவர் பிரதமர் இந்திரா காந்தியையும் வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகளையும் சந்தித்து கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானது என்றும் அதனை இலங்கைக்குக் கொடுக்கக் கூடாது என்றும் தொடர்ந்து வலியுறுத்தினார். தமிழக மக்களின் கோபத்தையும் அதிருப்தியையும் காட்டும் வகையில் 1974 ஜூன் 29ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. 1974 ஆகஸ்ட் 21ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது" என்கிறது வி. சூர்யநாராயணின் புத்தகம்.

பட மூலாதாரம், Getty Images
1974 ஆகஸ்ட் 21ஆம் தேதி முதலமைச்சர் மு. கருணாநிதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பின்வரும் தீர்மானத்தைக் கொண்டுவந்தார்: "இந்தியாவுக்குச் சொந்தமான கச்சத்தீவுடன் தமிழ்நாட்டிற்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கச்சத்தீவு தொடர்பாக இந்திய அரசு எடுத்துள்ள முடிவு குறித்து இந்த மன்றம் ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கிறது. இந்திய அரசு தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கச்சத்தீவின் மீது இந்திய இறையாண்மையைத் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் இலங்கையுடனான ஒப்பந்தத்தைத் திருத்த வேண்டும் என்றும் அதன் மூலம் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் இந்த மன்றம் இந்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது". இந்தத் தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விட்டு நிறைவேற்றப்பட்டது.
ஆனால், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு. கருணாநிதி அந்தத் தருணத்திலேயே நீதிமன்றத்திற்குச் சென்றிருக்க வேண்டும் என்கிறார் வி. சூர்யநாராயண். "மேற்கு வங்கத்தில் இருக்கும் பேருபரி பகுதியை கிழக்கு பாகிஸ்தானோடு இணைக்க அப்போதைய பிரதமர் நேரு முடிவுசெய்தபோது, அம்மாநிலத்தின் காங்கிரஸ் முதல்வரான பி.சி. ராய் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அது தடுத்து நிறுத்தப்பட்டது" என்கிறார் அவர்.
ஆனால், 1974, 1976ஆம் ஆண்டின் ஒப்பந்தங்களை இப்போது முறித்துக்கொள்வது சாத்தியமில்லை என்கிறார் அவர். "சர்வதேச ஒப்பந்தங்களுக்கு என ஒரு புனிதத்தன்மை உண்டு. அதை மீறக்கூடாது. பல அண்டை நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. அவையெல்லாம் சிக்கலுக்குள்ளாகும்" என்கிறார் வி. சூர்யநாராயண்.
கச்சத்தீவு - திமுக விளக்கம் என்ன?
கச்சத்தீவு விவகாரத்தைப் பொறுத்தவரை அந்தத் தருணத்தில் தி.மு.க. முடிந்த அளவு எதிர்ப்பைப் பதிவுசெய்தது என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான கான்ஸ்டைன்டீன். "கேவல் சிங் முதலமைச்சரைச் சந்தித்து இந்த விவகாரத்தை விளக்கும்போது, இந்த ஒப்பந்தம் நிலம் தொடர்பான ஒப்பந்தம் மட்டும்தான். அந்த நிலத்தின் மீது உள்ள மீன் பிடி உரிமைகள் அப்படியே நீடிக்கும் என்று கூறினார். காரணம், அந்த நிலம் இந்தியாவுக்குச் சொந்தம் என்பதற்கான ஆவணங்கள் நம்மிடம் இல்லை. மாறாக, யாழ்ப்பாணத்துடன் அந்தப் பகுதி இணைந்திருந்ததைக் காட்டும் ஆவணங்கள் உள்ளன என்றார் கேவல் சிங். இருந்தபோதும் ஒப்பந்தம் கையெழுத்தானதும் தி.மு.க. அரசு அது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.
1974ல் வழங்கப்பட்ட உரிமைகள், 1976ல் பறிக்கப்பட்டன. அப்போது தி.மு.க. அரசு கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தது. இந்த விவகாரத்தில் தி.மு.கவைக் குற்றம்சாட்டுவது முழுக்க முழுக்க அபத்தமானது" என்கிறார் கான்ஸ்டைன்டீன்.
இந்த விவகாரத்தை அரசியலாக்குவதன் மூலம் பா.ஜ.க. எவ்விதமான பலனையும் பெற முடியாது என்கிறார் கான்ஸ்டைன்டீன். "பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்தவர்கள் இப்போது இந்த விவகாரத்தைப் பேசுவது ஏன்? இப்போதும்கூட, நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கச்சத்தீவை மீட்போம் என உறுதியளிக்கவில்லை. தமிழ்நாட்டிற்கு பா.ஜ.க. அரசு எதையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை நாங்கள் முன்வைக்கும், அதற்கு பதில் சொல்ல முடியாமல் இதைச் செய்கிறார்கள். இதெல்லாம் அரசியல் சித்து விளையாட்டு. இதற்கு எந்த பலனும் இருக்காது" என்கிறார் அவர்.

கச்சத்தீவு - நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா?
கான்ஸ்டைன்டீன் கருத்தையே எதிரொலிக்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். இந்த விவகாரம் எந்த வகையிலும் பா.ஜ.கவுக்கு பலனளிக்காது, மாறாக எதிர்மறையாகச் செல்லலாம் என்கிறார் அவர்.
"இந்த விவகாரத்தை இப்படி விவாதிப்பதே தவறு. காரணம், இது தொடர்பாக, அ.தி.மு.க., தி.மு.க., வேறு சில தனி நபர்கள் தொடர்ந்த வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன. தவிர, கச்சத்தீவு ஒப்பந்தம் ஏற்பட்ட சூழலை புரிந்துகொள்ளாமல் பேசுகிறார்கள். 1974ஆம் ஆண்டு மே மாதம் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, பொக்ரானில் அணுகுண்டு சோதனை செய்தார். இதனால் சர்வதேச அரங்கில் இந்தியா தனிமைப்பட்டது. அப்போது, இலங்கையை இந்தியா பக்கமே வைத்திருக்கவே இதை செய்ததாகப் பார்க்கலாம்" என்கிறார் ஷ்யாம்.
1974ல் இந்தியாவும் வங்கதேசமும் தங்களது எல்லைகளை வரையறுக்கும் போது இந்தியா சில பகுதிகளை விட்டுக்கொடுத்தது. அதற்கு இந்தியா தனது அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டியிருந்தது. "அதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டம் 100வது முறையாகத் திருத்தப்பட்டது. இது நடந்தது 2015ல் நரேந்திரமோதியின் ஆட்சியில்தான். அதற்காக, அவர் இந்திய நிலப்பகுதியை விட்டுக்கொடுத்துவிட்டார் என்று சொல்ல முடியுமா? இரு நாட்டு எல்லைகளை வரையறுக்கும்போது, சில நிலப்பரப்புகளை விட்டுத்தருவது நடந்தே ஆகும்" என்கிறார் ஷ்யாம்.

ஆனால், கச்சத்தீவு விவகாரத்தை பிரதமரே எழுப்புவது போன்ற தாக்குதலை தி.மு.க. எதிர்பார்த்ததா? "பா.ஜ.க. தமிழ்நாட்டிற்கு ஏதாவது செய்ததா என்ற கேள்வியை முதலமைச்சர் மீண்டும் மீண்டும் முன்வைத்து வருகிறார். நாங்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்த போது தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத்தந்தது, மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொண்டுவந்தது போல அவர்களால் ஏதாவது ஒரு சாதனையைச் சொல்ல முடியுமா எனக் கேட்டார் முதலமைச்சர். அவர்களால் எந்த பதிலும் சொல்ல முடியாத நிலையில், இதைப் போல எதையாவது செய்வார்கள் என்று எதிர்பார்த்தோம்" என்கிறார் தி.மு.கவின் கான்ஸ்டைன்டீன்.
இந்த விவகாரத்திற்கு இப்போதைக்கு நேரடியாக பதில் சொல்வதை தி.மு.க. தவிர்க்கும்; ஆனால், பா.ஜ.க. இதனை மேலும் மேலும் பெரிதாக்கினால் அவர்களும் தீவிரமாக பதில் சொல்ல ஆரம்பிப்பார்கள் என்கிறார் ஷ்யாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












