450 ஆண்டுகளுக்கு முந்தைய அரிய தங்கப் பொக்கிஷம் ஏற்படுத்தும் தீராத சர்ச்சை

குயிம்பாயா புதையல் : ஸ்பெயினிடம் இருந்து கொலம்பிய அரசாங்கம் உரிமை கோருவதின் பின்னணி 

பட மூலாதாரம், GETTY

    • எழுதியவர், சாண்டியாகோ வனேகாஸ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

'கிம்பாயா புதையல்' (Quimbaya treasure) என்பது தென்னமெரிக்காவில் ஸ்பெயின் காலனியாதிக்கம் காலூன்றுவதற்கு முந்தைய பொற்கொல்லர்களால் உருவாக்கபட்ட மிக தனித்துவமான கலை பொருட்களின் தொகுப்பு. இவை கொலம்பியாவின் கடந்த காலத்தை நினைவூட்டும் பொக்கிஷமாக பார்க்கப்படுகிறது.

இந்தக் கலைப்பொருட்களுக்குத் தற்போது இரண்டு நாடுகள் உரிமை கோருகின்றன. கடந்த மே 9ஆம் தேதி கொலம்பியா அரசாங்கம் ஸ்பெயின் அரசாங்கத்திடம் கிம்பாயா புதையல் சேகரிப்பைத் திருப்பித் தருமாறு வலியுறுத்தியுள்ளது.

கொலம்பிய கலாசார அமைச்சர் ஜுவான் டேவிட் கொரியா மற்றும் வெளியுறவு அமைச்சர் லூயிஸ் கில்பர்டோ முரில்லோ ஆகியோர் கையெழுத்திட்ட கடிதத்தில், "கொலம்பியாவிற்கு கலைப்பொருட்கள் மீண்டும் கிடைப்பது நாட்டின் கலாசார இறையாண்மையை நிலைநாட்டும். இந்த ஆண்டு ஜனவரியில் ஸ்பெயின் அரசாங்கம் அறிவித்த 'அருங்காட்சியகங்களின் காலனித்துவ நீக்கக் கொள்கைக்கு' ஏற்ப இருக்கும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கொலம்பியாவின் கடிதம் தொடர்பான அவர்களின் கருத்துகளைத் தெரிந்து கொள்ள ஸ்பெயின் அரசாங்கத்தை பிபிசி முண்டோ சேவை தொடர்பு கொண்டது, ஆனால் அதற்குப் பதில் கிடைக்கவில்லை.

அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்ட கலைப்பொருட்கள்

கடந்த 1893ஆம் ஆண்டில் கொலம்பிய ஜனாதிபதியான கார்லோஸ் ஹோல்குயின் மல்லாரினோவால் அப்போதைய ஸ்பெயினின் ராணி ரீஜண்ட் மரியா கிறிஸ்டினா டி ஹப்ஸ்பர்கோ-லோரெனாவுக்கு இந்தக் கலைப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

ஹோல்குயின், ஸ்பெயினின் பட்டத்து ராணிக்கு 'கிம்பாயா’ கலைப் பொருட்களை அன்பளிப்பாக அளித்தது மட்டுமின்றி ஒரு கடிதம் ஒன்றையும் வழங்கினார். அதில் கிம்பாயா கலைப்பொருட்களை வர்ணித்து, "கொலம்பியா பழங்குடியினரின் செயல் திறனில் உருவான மிகவும் முழுமையான மதிப்புமிக்க, மிகச் சிறந்த தங்கம்," என்று விவரித்திருந்தார்.

நாட்டின் பொக்கிஷமாகக் கருத வேண்டிய கிம்பாயா கலைப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டதற்கு ஒரு காரணம் இருந்தது. 1891இல் பதிவான ஓர் ஆவணத்தின்படி, "எல்லை நிர்ணயம் தொடர்பாக வெனிசுலா உடனான பிரச்னையில் மத்தியஸ்தம் செய்து, அவர் எங்களுக்கு வழங்கிய சேவைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அன்பளிப்பு கொடுத்தோம்," என்று இருந்தது.

இந்தச் சம்பவம் நடந்து 132 ஆண்டுகளுக்குப் பிறகு, கொலம்பியா கிம்பாயா கலைப் பொருட்களைத் திருப்பிக் கேட்கிறது. அதன் அரசியலமைப்பு நீதிமன்றம் 'இந்த அன்பளிப்பு சட்டவிரோதமாக செய்யப்பட்டது’ என்று முடிவுக்கு வந்துள்ளது.

"எங்கள் பொக்கிஷம் மீண்டும் நாடு திரும்புவது முக்கியமான தருணமாக இருக்கும். அது இந்த நாட்டின் பூர்வீக மக்களுக்கு மரியாதை செலுத்துவது போன்றது,” என்று கொலம்பியாவின் கலாசார அமைச்சர் பிபிசி முண்டோ சேவைக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

குயிம்பாயா புதையல் : ஸ்பெயினிடம் இருந்து கொலம்பிய அரசாங்கம் உரிமைகோருவதின் பின்னணி 

பட மூலாதாரம், GETTY

படக்குறிப்பு, குயிம்பாயா கலைப்பொருட்கள்

'அற்புதமான கண்டுபிடிப்பு'

கிம்பாயா கலைப் பொருட்களின் புதையல் 1890இல் உள்ளூர் குவாக்ரோஸால் (வணிக நோக்கத்திற்காக பொக்கிஷங்களை தேடுபவர்கள்) ஃபிலாண்டியா நகராட்சியில் ஸ்பானிய காலனிய காலகட்டத்திற்கு முந்தைய கல்லறைகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, 'குவாக்வேரியா’ (guaquería) என்ற நடவடிக்கைக்காக கலைப்பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன. இது, பணத்துக்காக ஸ்பானிய காலனிய காலத்திற்கு முந்தைய பொக்கிஷங்களைத் தேடுவதில் கொலம்பியாவில் பல குடும்பங்கள் ஈடுபட்டிருந்த ஒரு வணிகச் செயல்.

இந்தச் செயலுக்கு அப்போதைய சட்டம்கூட ஆதரவாக இருந்தது. அதன்படி இந்தப் பழமையான பொக்கிஷங்கள், தங்கம், வெள்ளி மற்றும் விலைமதிப்பற்ற கற்கள் அனைத்தும் கண்டுபிடித்தவருக்கு சொந்தம்.

இன்று ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட்டில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள 122 கலைப்பொருட்கள், ஃபிலாண்டியாவில் இருந்த கல்லறைகளில் காணப்பட்ட மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவானவை, இதில் உலோக வேலைப்பாடுகள் நிறைந்த கலைப்பொருட்கள் மட்டுமல்ல, மண்பாண்டங்கள், கற்கள் ஆகியவையும் அடங்கும்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்தக் கலைப் பொருட்கள் ஆரம்பகால கிம்பாயா காலத்துடன் ஒத்துப் போகின்றன, அதாவது அவை 16ஆம் நூற்றாண்டில் இப்பகுதியில் ஸ்பானியர்களால் கண்டுபிடிக்கப்பட்டதைவிட மிகவும் முந்தைய கலாசாரங்களில் இருந்து வந்தவை.

பல நூறு கலைப்பொருட்கள் என்னவாயின?

இந்தக் கலைப்பொருள் சேகரிப்பில் இருந்து மேலும் 74 பொருட்கள் அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் உள்ளன, மேலும் இந்தப் புதையலில் இருந்த இன்னும் பல நூறு கலைப்பொருட்கள் தற்போது எங்குள்ளது என யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை.

'பாங்க் ஆஃப் தி ரிபப்ளிக்’ ஆவணங்களின்படி, கிம்பாயா புதையல் கண்டுபிடிக்கப்பட்ட காலகட்டத்தில் 'அது ஒரு மகத்தான விவகாரமாக பார்க்கப்பட்டது’ என்றும் 'கொலம்பிய பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாக வெளியானது' என்றும் விவரிக்கப்பட்டுள்ளது. அன்றைய காலகட்டத்தின் தலைப்புச் செய்திகளில் , 'விலைமதிப்பற்ற கண்டுபிடிப்பு’ என்று பதிவிட்டுள்ளனர்.

'The Quimbaya Treasure' என்ற புத்தகத்தின் இணை ஆசிரியரான தொல்பொருள் ஆய்வாளர் அனா வெர்டே, "இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் அசாதாரணமானதாக இருந்திருக்க வேண்டும். வணிகர்கள் மற்றும் சேகரிப்பாளர்கள் இப்படி ஒரு புதையல் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள்,” என்று ஒப்புக் கொள்கிறார்.

கிம்பாயா கண்டுபிடிப்புக்குப் பிறகு, கலைப்பொருட்கள் விநியோகஸ்தர் மற்றும் சேகரிப்பாளர்கள் இடையே பெரும் ஆர்வம் எழுந்தது. வணிகத்திற்காக இந்தக் கலைப் பொருட்கள் பல உரிமையாளர்களிடையே கைமாறியது.

'சட்டவிரோதமான அன்பளிப்பு'

குயிம்பாயா புதையல் : ஸ்பெயினிடம் இருந்து கொலம்பிய அரசாங்கம் உரிமைகோருவதின் பின்னணி 

பட மூலாதாரம், GETTY

படக்குறிப்பு, கிம்பாயா புதையல் கண்டுபிடிக்கப்பட்ட ‘ஃபிலாண்டியா’ - காபி கலாசார நிலப்பரப்பின் ஒரு பகுதியாகும், இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகும்.

கொலம்பிய அரசாங்கம் ஆகஸ்ட் 1891இல், இந்த முழு கலைப் பொருட்களையும் வாங்கியது. அதில் 433 பொருட்கள் இருந்தன. ஸ்பானி காலனியவாதிகள் அமெரிக்காவுக்கு வந்த நான்காவது நூற்றாண்டைச் சிறப்பிக்க ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பெரிய கண்காட்சிக்கு அதை எடுத்துச் செல்ல கொலம்பியா அரசு நினைத்தது.

அப்போதிருந்த, கார்லோஸ் ஹோல்குயின் மல்லாரினோவின் பழமைவாத அரசாங்கம், இந்தக் கலைப்பொருட்களை ஸ்பானிஷ் பட்டத்து ராணிக்கு 'அன்பளிப்பாக' வழங்கியது. இன்று, பல வரலாற்று ஆவணங்கள் இது ரகசியமாக எடுக்கப்பட்ட முடிவு என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

தற்போதைய கொலம்பிய கலாசார அமைச்சரின் கூற்றுப்படி, "இந்த அன்பளிப்பு முற்றிலும் முரண்பாடாக, ரகசியமாக, சட்டவிரோதமாக வழங்கப்பட்டது."

கிம்பாயா புதையல் ஏற்கனவே 8 மாதங்கள் மாட்ரிட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1893-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி​​​​அதிகாரப்பூர்வமாக ஆஸ்திரியாவின் ராணி மரியா கிறிஸ்டினாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தப் புதையல் அப்போதிருந்து ஸ்பானிஷ் தேசிய தொல்பொருள் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. அதன் பின்னர் 1941-ஆம் ஆண்டில் இது அமெரிக்காவின் அருங்காட்சியகத்தின் தொகுப்பின் ஒரு பகுதியாக மாறியது.

கொலம்பியாவின் நீண்ட கால கோரிக்கை

குயிம்பாயா புதையல் : ஸ்பெயினிடம் இருந்து கொலம்பிய அரசாங்கம் உரிமைகோருவதின் பின்னணி 

பட மூலாதாரம், GETTY

படக்குறிப்பு, ஸ்பெயில் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள அமெரிக்காவின் அருங்காட்சியகம் ஹிஸ்பானிக் காலத்திற்கு முந்தைய தொல்பொருள் மற்றும் காலனித்துவ கலைகளின் தொகுப்பை காட்சிப்படுத்துகிறது.

கொலம்பிய அரசாங்கம் 2017 முதல் கிம்பாயா புதையலைத் திருப்பித் தரக் கோருவதை நிலுவையில் வைத்துள்ளது. அரசியலமைப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அவர்கள் காத்திருந்தனர். அந்த நீதிமன்றம் கொலம்பியாவை சேர்ந்த ஃபிலிப் ரின்கோனுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது, அவர் 2006-ஆம் ஆண்டு தொடுத்த வழக்கில் "ஸ்பானிய ராணிக்கு ஜனாதிபதி ஹோல்குயின் அன்பளிப்பு வழங்கியது சட்டவிரோதமான செயல், ஏனெனில் அது அரசால் அங்கீகரிக்கப்படவில்லை," என்று குறிப்பிட்டிருக்கிறார்.

எவ்வாறாயினும், கொலம்பியாவின் முன்னாள் அதிபர்களான ஹுவான் மானுவல் சாண்டோஸ் மற்றும் இவான் டுக் ஆகியோரின் அரசாங்கம் அதனை ஏற்கவில்லை. தற்போதைய அரசாங்கம் அதனை முன்னெடுத்துள்ளது.

"ஸ்பெயினிடமிருந்து கலைப்பொருட்களைத் திரும்பப் பெறுவது ஒரு பரிகாரச் செயலாக இருக்கும். எவ்வளவு காலம் கடந்தாலும், அமெரிக்காவில் ஸ்பெயின் நடத்திய தொடர் பாதிப்புகளை நம்மால் மறக்க முடியாது. கலைப்பொருட்களை திரும்பக் கேட்பது பழிவாங்கும் உணர்வில் அல்ல, ஒரு இழப்பீடாக இருக்கும் என்ற நோக்கத்தில் தான்,” என்று அமைச்சர் கொரியா விளக்கினார்.

கொலம்பியாவின் கோரிக்கைக்கு ஸ்பெயின் அரசு பதிலளிக்கவில்லை.

இந்த ஆண்டு ஜனவரியில், ஸ்பெயின் அரசாங்கம் "கிம்பாயா புதையலை வைத்திருப்பதற்கான உரிமை அல்லது சட்டப்பூர்வத்தன்மை குறித்து எந்த சந்தேகமும் இல்லை. அந்தக் கலைப்பொருட்கள் ஸ்பானிய அரசின் சேகரிப்பின் ஒரு பகுதியாகும்," என்றும் கூறியது.

அதே நேரத்தில், கொலம்பியா அனுப்பிய கடிதத்தை பெற்றவர்களில் ஒருவரான ஸ்பெயின் கலாசார அமைச்சர் எர்னஸ்ட் உர்டாசுன், 'அருங்காட்சியகங்களின் காலனித்துவ நீக்கம்' கொள்கையை அறிவித்தார்.

ஏப்ரலில் El País செய்தித்தாளில் வெளியிடப்பட்ட பேட்டியில், அமெரிக்க அருங்காட்சியகத்தின் இயக்குனர் இது தொடர்பாக பேசுகையில் "எல்லா வழக்குகளையும் மறுபரிசீலனை செய்ய நான் தயாராக இருக்கிறேன், ஆனால் கோரப்படும் அனைத்து கலைப்பொருட்களையும் திருப்பித்தர வேண்டிய அவசியமில்லை. மேலும், கலைப்பொருட்கள் கொள்ளையடிக்கப் பட்டவையா என்பது போன்ற அளவு கோல்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்," என்றார்.

இந்தக் கருத்துடன் கொரியா முரண்படுகிறார்.

"சட்டத்துக்குப் புறம்பான அன்பளிப்பை ஒருவர் ஏற்கக்கூடாது, நீங்கள் அவற்றை ஏற்றுக் கொண்டால், அவை யாருக்குச் சொந்தமானவை என்பதைப் பற்றிச் சிந்திப்பது நல்லது. கிம்பாயா புதையல் எந்த வகையிலும் ஜனாதிபதி ஹோல்குயினுக்கு சொந்தமானது அல்ல, ஆனால் அது பற்றி கலந்தாலோசிக்க படாமல் அவர் பரிசளித்துள்ளார்," என்று அவர் கூறினார்.

கொலம்பிய அமைச்சர் மேலும் கூறுகையில், இந்தக் கலை சேகரிப்பு திரும்பப் பெறப்பட்டால், கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்ட பிலாண்டியா நகராட்சியில் இருந்து சுமார் 30கி.மீ. தொலைவில் உள்ள பெரேராவில் உள்ள தொல்பொருள் அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக மாறும் என்றும் கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)