நரேந்திர மோதிக்கு சவால்விட்ட கேஜ்ரிவால் - பாஜக அலுவலகம் நோக்கிச் சென்ற ஆம் ஆத்மி தலைவர்கள்

பட மூலாதாரம், ANI
டெல்லி மதுபான வழக்கில் பிணையில் உள்ள முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் பிரதமர் நரேந்திர மோதிக்கு சவால் ஒன்றை விடுத்திருந்தார். அதன்படி இன்று(19.5.2024) மதியம் தனது கட்சித் தலைவர்களோடு டெல்லியில் உள்ள பாஜகவின் அலுவலகத்திற்கு வருவதாகத் தெரிவித்திருந்தார்.
கேஜ்ரிவால் வெளியிட்டுள்ள வீடியோவில், “நாளை மதியம் 12 மணிக்கு என்னுடைய கட்சித் தலைவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருடனும் உங்களது அலுவலகத்திற்கு வருகிறேன். யாரையெல்லாம் சிறையில் அடைக்க விரும்புகிறீர்களோ, அடைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.
இந்நிலையில் இன்று கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி தலைவர்கள் பேரணியாகச் சென்றபோது காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சியை பாஜக நசுக்க நினைப்பதாகவும், ஆனால் ஆம் ஆத்மி என்பது ஒரு சித்தாந்தம், எனவே நீங்கள் சிறைக்கு அனுப்பும் தலைவர்களின் எண்ணிக்கையைவிட, அதிகமான புதிய உறுப்பினர்கள் கட்சிக்கு வந்துகொண்டே இருப்பார்கள் என்றும் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
அதேநேரம், கேஜ்ரிவாலின் இந்த அறிவிப்பு வெறும் விளம்பரம் மட்டுமே என்று பாஜக கூறியுள்ளது. பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவ், ஸ்வாதி மலிவால் விவகாரத்தில் அமைதி காக்கும் கேஜ்ரிவால் நாடகமாடிக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் பேசிய அவர், “நாடகத்தை நிறுத்துங்கள் கேஜ்ரிவால். நாங்கள் உங்களிடம் ஒரு கேள்வி மட்டுமே கேட்டோம். உங்களின் வீட்டிற்கு உள்ளேயே உங்களது கட்சியின் பெண் தலைவர் தாக்கப்பட்டுள்ளார். ஆனால், ஒருமுறைகூட நீங்கள் அதுகுறித்து வாய் திறக்கவில்லை. ஆறு நாட்கள் கடந்தும், உங்களிடம் இருந்து ஒரு வார்த்தையைக்கூட என்னால் பார்க்க முடியவில்லை,” என்று கூறியுள்ளார்.
மேலும், “ஊடக சந்திப்பில் நிறைய விஷயங்களை நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள், ஆனால் உங்களது சகோதரிக்காக ஒரு வார்த்தையாவது பேசியிருக்கலாம். ஜான்சி ராணி என்று நீங்கள் கூறிய பெண் குறித்து ஒரு வார்த்தை பேசக்கூட நீங்கள் வெட்கப்படுகிறீர்கள்,” என்றும் அவர் கூறினார்.
கேஜ்ரிவால் கூறியது என்ன ?
பாஜக அலுவலகம் நோக்கிய பேரணி தொடங்குவதற்கு முன்பு, கட்சியின் தலைமையகத்தில் கட்சியினர் மத்தியில் அரவிந்த் கேஜ்ரிவால் உரையாற்றினார்.
"பிரதமர் மோதி ஆம் ஆத்மி கட்சியை முற்றிலுமாக அழிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக ஆபரேஷன் `ஜாது’ என்ற பெயரில் நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். எங்களை அறிந்த பலரும் அவரை சந்திக்க செல்கின்றனர். அவர்கள் பிரதமர் மோதி, ஆம் ஆத்மி கட்சியை பற்றி பேசுகிறார் என்கின்றனர். ஆம் ஆத்மி வேகமாக வளர்ந்து வருவதாகவும், அதன் பணிகளை பற்றி நாடு முழுவதும் பேசப்படுகிறது என்றும் அவர் சொல்கிறாராம். வரும் காலங்களில் ஆம் ஆத்மி கட்சி தேசிய அளவில் பாஜகவுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று மோதி கூறியிருக்கிறார்.
எனவே, எதிர்காலத்தில் பாஜகவுக்கு சவாலாக மாறாமல் இருக்க, இந்தக் கட்சியை இப்போதே ஒழிக்க வேண்டும் என்று மோதி நினைக்கிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, அவர்கள் (பாஜக) எங்கள் கட்சி பிரமுகர்களை கைது செய்து வருகின்றனர். மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் இவர்களை தொடர்ந்து, நேற்று எனது தனிச் செயலர் கூட கைது செய்யப்பட்டார். எங்கள் கட்சியினரை ஒவ்வொருவராக கைது செய்கிறீர்கள். இன்று நாங்கள் அனைவரும் ஒன்று கூடியிருக்கிறோம், நீங்கள் எங்களை கைது செய்யலாம். நாங்கள் பயப்படவில்லை.”
வரும் காலத்தில், ஆம் ஆத்மி கட்சியின் வங்கிக் கணக்குகள் பறிமுதல் செய்யப்படும். ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகத்தை காலி செய்ய வைத்து சாலையில் நிறுத்துவார்கள். ஒரு கேஜ்ரிவாலை கைது செய்தால், இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான கேஜ்ரிவால்கள் பிறப்பார்கள் என்பதை பிரதமரிடம் கூற விரும்புகிறேன் " என்று கேஜ்ரிவால் கூறினார்.
பாஜக கூறுவது என்ன?

பட மூலாதாரம், ANI
கேஜ்ரிவாலின் அறிவிப்புக்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசியுள்ள பாஜகவின் செய்தித்தொடர்பாளர் ஷேஜாத் பூனாவாலா, "முதலில் ஊழல், பின்னர் முறைகேடுகள், அதற்குப் பின் தொடர் பிரசாரம், இப்போது அரவிந்த் கேஜ்ரிவாலின் உணர்ச்சி சித்திரவதை" என்று கூறினார்.
அவர் கூறுகையில், “உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதற்குப் பதிலாக கேஜ்ரிவால் நேரடியான கேள்விகளுக்கு, நேரடியான பதில்களைக் கொடுக்க வேண்டும்” என்றார்.
மேலும், “தற்போதைய கேள்வி என்னவெனில், தீவிரமான குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ள பிபவ் குமாருக்கு நீங்கள் ஏன் பாதுகாப்பு வழங்குகிறீர்கள்? முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தில், அவரோடு உதவியாளரும் லக்னெள அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். முதல்வர் வீட்டிலேயே அவர் இருந்துள்ளார்,” என்று பேசினார் அவர்.
பூனாவாலா, “உங்களது பெண் எம்.பி உங்களுடைய உதவியாளரால் தாக்கப்பட்டதாக முதல் செய்தியாளர் சந்திப்பில் சஞ்சய் சிங் சொன்னது உண்மையா? அல்லது அதிலிருந்து 72 மணிநேரம் கழித்து அதை மறுத்துப் பேசும் தகவல் உண்மையா?” என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், “ஏன் நீங்கள் பயப்படுகிறீர்கள். உங்களது உதவியாளர் உங்களைப் பற்றி ஏதாவது வெளியே சொல்லிவிடுவார் என்று பயமா? நீங்கள் எடுத்திருக்கும் நிலைப்பாடு பெண்களுக்கு எதிரானது,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
‘பாஜக ஆம் ஆத்மி தலைவர்களை சிறையில் அடைக்க நினைக்கிறது’

பட மூலாதாரம், Getty Images
சனிக்கிழமை மாலை வீடியோ ஒன்றை வெளியிட்ட கேஜ்ரிவால், தனது கட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்டதோடு, ஆம் ஆத்மி கட்சியை பாஜக அழிக்க விரும்புவதாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும் பேசிய அவர், “ஆம் ஆத்மி கட்சிக்குப் பின்னால் அவர்கள் எப்படி வருகிறார்கள் என்பதை நீங்களே பார்க்கிறீர்கள். ஒருவர் பின் ஒருவராக அவர்கள் ஆம் ஆத்மியின் தலைவர்களை சிறையில் அடைத்துக் கொண்டிருக்கிறார்கள்."
"நான், மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், சத்யேந்திர ஜெயின் என அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். இப்போது எனது உதவியாளரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசுகையில், “ராகவ் சதா சமீபத்தில்தான் லண்டனில் இருந்து திரும்பினார். தற்போது அவரையும் சிறையில் அடைக்கப் போவதாகக் கூறுகின்றனர். இன்னும் சில நாட்களில் சௌரப் பரத்வாஜையும் சிறையில் அடைப்பார்கள், அடுத்து அதிஷியையும் சிறையில் போடுவார்கள்,” என்றார் கேஜ்ரிவால்.
‘நாங்கள் செய்த தவறு என்ன?’

பட மூலாதாரம், Getty Images
ஐம்பது நாட்கள் சிறையில் இருந்துவிட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள கேஜ்ரிவால், 'நான் ஏன் கைது செய்யப்பட்டேன் என்று எனக்கு தெரியவில்லை' என்று கூறினார்.
அதுகுறித்து அவர் கூறுகையில், “அவர்கள் ஏன் எங்களை சிறையில் அடைக்க விரும்புகிறார்கள் என்று யோசிக்கையில், அவர்கள் செய்ய முடியாததைச் செய்திருக்கிறோம். டெல்லியில் ஏழைக் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க நாங்கள் ஏற்பாடு செய்தோம், அரசுப் பள்ளிகளைச் சிறப்பானதாக மாற்றியிருக்கிறோம்."
“டெல்லியில் அரசுப் பள்ளிகளை மூட அவர்கள் விரும்புகிறார்கள். நாங்கள் நல்ல அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களை உருவாக்கியுள்ளோம். ஆனால், அவர்கள் அந்த மையங்களையும், அரசு மருத்துவமனைகளையும் மூட நினைக்கிறார்கள்,” என்றார்.
‘பிரதமர் சிறையை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்’

பட மூலாதாரம், Getty Images
அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்ந்து பேசியபோது, பிரதமர் சிறையை வைத்து விளையாடிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
அவர் பேசுகையில், “பிரதமருக்கு நான் சொல்ல விரும்புவது, பிரதமரே நீங்கள் சிறையை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள், மாறி மாறி ஒவ்வொருவராக சிறைக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறீர்கள். சில நேரங்களில் மணீஷ் சிசோடியா, சில நேரங்களில் சஞ்சய் சிங், சில நேரத்தில் கேஜ்ரிவாலை சிறைக்கு அனுப்புகிறீர்கள்.”
“நாளை மதியம் என்னுடைய கட்சியின் தலைவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நானே உங்களது பாஜக தலைமை அலுவலகத்திற்கு வருகிறேன். உங்களுக்கு யாரையெல்லாம் சிறையில் அடைக்க வேண்டுமோ, அவர்கள் அனைவரையும் சிறையில் அடையுங்கள், நாங்கள் அனைவரும் சேர்ந்தே சிறைக்குச் செல்கிறோம்,” என்றார்.
இதைத் தொடர்ந்து இன்று(19.5.2024) ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் உட்பட அனைவரும் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாகச் சென்றபோது காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது அந்த இடத்திலேயே முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், இதர அமைச்சர்கள் மற்றும் தலைவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
‘ஆம் ஆத்மி கட்சி ஒழிந்து போகாது’

பட மூலாதாரம், Getty Images
தலைவர்களை சிறையில் அடைப்பதால் ஆம் ஆத்மி கட்சி ஒன்றும் ஒழிந்துவிடாது என்று கூறிய கேஜ்ரிவால், தொடர்ந்து எங்கள் கட்சியின் ஆதரவாளர்கள் பெருகிக்கொண்டே இருப்பார்கள் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களைச் சிறையில் அடைப்பதன் மூலம், ஒட்டுமொத்த கட்சியையே ஒழித்து விடலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?"
"முயற்சி செய்து பாருங்கள், அது நடக்கவே நடக்காது. ஆம் ஆத்மி கட்சி என்பது இந்த நாடு முழுவதும் பரவலாக உள்ள ஒரு சித்தாந்தம். அது மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளது.
நீங்கள் எங்கள் கட்சித் தலைவர்களைச் சிறையில் அடைத்தால், இந்த நாடு அதைவிட நூறு மடங்கு அதிகமான தலைவர்களை உருவாக்கிக் கொடுக்கும்,” என்று கூறினார்.
சர்ச்சையில் ஆம் ஆத்மி கட்சி
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான ஸ்வாதி மலிவால், அரவிந்த் கேஜ்ரிவாலின் அதிகாரபூர்வ இல்லத்தில் கேஜ்ரிவாலின் உதவியாளரால் தாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையடுத்து கேஜ்ரிவாலுக்கு நெருக்கமானவரும், அவரது உதவியாளருமான பிபவ் குமார் தன்னைத் தாக்கியதாக ஸ்வாதி மலிவால் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் சனிக்கிழமையன்று பிபவ் குமார் கைது செய்யப்பட்டார்.
இதற்குப் பிறகு, ஆம் ஆத்மி கட்சிக்குள் நிலைமை சரியாகத்தான் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில், நீண்ட நாட்களாக வெளிநாட்டில் இருந்த அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ராகவ் சதா, சனிக்கிழமையன்று கேஜ்ரிவாலை சந்திக்க வந்திருந்தார்.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருந்த முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், 50 நாட்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
ஜூன் 1 வரை அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அதற்குப் பின் ஜூன் 2ஆம் தேதி மீண்டும் அவர் சிறைக்குச் செல்ல வேண்டும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












