RCB vs CSK: 'ஆர்சிபி வெற்றிக்கு தோனிதான் காரணம்' - தினேஷ் கார்த்திக் பேசியது என்ன?

பட மூலாதாரம், SPORTZPICS
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
விராட் கோலியின் கண்களில் ஏறக்குறைய கண்ணீரே வந்துவிட்டது. டுப்ளெஸ்ஸியால் மகிழ்ச்சியை, உணர்ச்சிகளை அடக்க முடியவில்லை. மகேந்திர சிங் தோனியே இதுபோல் விரக்தியான மனநிலையில், யாரும் பார்த்தது இல்லை, போட்டி முடிந்தபின் அவரை யாரும் பார்க்க முடியவில்லை.
இதுபோன்று ஏராளமான உணர்ச்சிகரமான சம்பவங்கள், திருப்பங்கள், சுவாரஸ்யம் நிறைந்த காட்சிகள் நேற்று பெங்களூரு சின்னசாமி அரங்கில் நடந்தது.
பெங்களூரு சின்னசாமி அரங்கில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 68வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றது.
முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் சேர்த்தது. 219 ரன்கள் சேர்த்தால் வெற்றி, 201 ரன்கள் சேர்த்தால் ப்ளே ஆஃப் சுற்று என்ற இலக்குடன் சிஎஸ்கே அணி களமிறங்கியது. ஆனால், 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் சேர்த்து 27 ரன்களில் தோல்வி அடைந்தது. ப்ளே ஆஃப்புக்கு செல்ல முடியாமல் 10 ரன்களில் சிஎஸ்கே வெளியேறியது.
மூன்று வாரங்களுக்கு முன்

பட மூலாதாரம், SPORTZPICS
ஆர்சிபி அணி இந்த சீசனை மிகவும் மோசமாகத் தொடங்கியது. சிஎஸ்கேவுடன் முதல் போட்டியில் தோல்வி, அதன்பின் 8 போட்டிகளில் ஒரே வெற்றி மட்டுமே ஆர்சிபி பெற்றது. கடந்த 3 வாரங்களுக்கு முன்புவரை ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது.
ஆர்சிபி அணி போட்டியில் இருந்து வெளியேறிவிடும் என்று கூறப்பட்டது. ஆனால், விடா முயற்சி, தன்னம்பிக்கை போராட்ட குணம் ஆகியவற்றை கடந்த 6 போட்டிகளிலும் வெளிப்படுத்தி தொடர்ந்து 6 வெற்றிகளைப் பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி அணி முன்னேறியுள்ளது.
ஆர்சிபி அணி 68 போட்டிகளுக்குப் பின்
ஆர்சிபி அணி ஐபிஎல் டி20 தொடரில் 9வது முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் முன்னேறியுள்ளது. அதேநேரம், சிஎஸ்கே அணி 3வது முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறுகிறது.
ஏறக்குறைய 68 போட்டிகளுக்குப் பின்புதான் ப்ளே ஆஃப் சுற்றில் விளையாடப் போகும் 4வது அணி தேர்வாகியுள்ளது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி என 4 அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் வந்தாலும் எந்த அணி யாருடன் மோதப் போகிறது என்பது இன்று நடக்கும் 2 ஆட்டங்களுக்குப் பின்புதான் தெரிய வரும்.
ஆர்சிபியின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களாக நடுவரிசையில் பட்டிதார், கேமரூன் அடித்த ஸ்கோர், கேப்டன் டுப்ளெஸ்ஸியின் அரைசதம், அற்புதமான கேட்ச், ஃபீல்டிங் ஆகியவற்றைக் கூறலாம். இதைவிட முக்கியமானது கடைசி 2 பந்துகளை டிபெண்ட் செய்த யாஷ் தயாலின் பந்துவீச்சு என பலவற்றைப் பட்டியலிடலாம். ஆனால், இறுதியாக ஆட்டநாயகன் விருது கேப்டன் டுப்ளெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது.
'ஆட்டநாயகன் நான் இல்லை'

பட மூலாதாரம், SPORTZPICS
ஆர்சிபி கேப்டன் டுப்ளெஸ்ஸி கூறுகையில் “என்ன மாதிரியான ஆட்டம். அற்புதமான சூழல். உள்நாட்டு ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெறுவது மகிழ்ச்சி. ராஞ்சியில் 5 டெஸ்ட் போட்டிகளை விளையாடிய உணர்வு இருந்தது.
நாங்கள் 175 ரன்களுக்குள் டிபெண்ட் செய்யத் திட்டமிட்டோம். இந்த வெற்றி பெருமையாக இருக்கிறது. பேட்டர்கள், பந்துவீச்சாளர்கள் என பலரும் பங்களிப்பு செய்தனர்.
என்னைப் பொருத்தவரை ஆட்டநாயகன் விருதை யாஷ் தயாலுக்கு அர்ப்பணிக்கிறேன். ஆர்சிபி-சிஎஸ்கே ஆட்டம் உண்மையில் அற்புதமானது, ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி, வெற்றிக்கு அவர்களின் ஆதரவும் காரணம்,” எனத் தெரிவித்தார்.
ஆர்சிபி மீண்டு வர யார் காரணம்?
தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்து துவண்டிருந்த ஆர்சிபி அணி, தொடரைவிட்டே வெளியேறும் நிலையில் இருந்தது. ஆனால், ஆர்சிபி பேட்டர்கள் காட்டிய தன்னம்பிக்கை, விடாமுயற்சி அணியைக் கட்டி இழுத்து மேலே அழைத்து வந்தது.
குறிப்பாக இதே பெங்களூரு மைதானத்தில் சன்ரைசர்ஸ் அணி 288 ரன்கள் சேர்த்தபோது, ஆர்சிபி 262 ரன்கள் சேர்த்து பதிலடி கொடுத்தது. இந்த ஆட்டம்தான் ஆர்சிபிக்கு திருப்புமுனையாக மாறியது.
இவ்வளவு தகுதியான பேட்டர்கள் இருப்பதை ஆர்சிபி உணர்ந்தது. அதன் விளைவு, அடுத்த 7 போட்டிகளில் ஆர்சிபியின் ரன்ரேட் 11.37 ஆக எகிறியது. ஆனால், முதல் 6 போட்டிகளில் ஆர்சிபியின் ரன்ரேட் 8.94 ஆகத்தான் இருந்தது. இந்தப் போட்டியில் ஆர்சிபி அணி தனது நம்பிக்கையை மேம்படுத்திக்கொண்டது.
'வின்டேஜ்' கோலி

பட மூலாதாரம், SPORTZPICS
கடந்த 2016ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் கோலியை பார்த்த உணர்வு ரசிகர்களுக்கு இந்த சீசனில் அவரது ஆட்டத்தைப் பார்த்தபோது ஏற்பட்டது. 2016இல் கோலி 973 ரன்கள் 4 சதங்களை விளாசினார். இந்த சீசனில் ஆர்சிபி அணி தொடர்ந்து பெற்ற 5 வெற்றிகளில் கோலி 3 அரைசதங்களை அடித்து கோலி 708 ரன்களை விளாசியுள்ளார். அது மட்டுமல்லாமல் இதுவரையில்லாத வகையில் இந்த சீசனில் கோலியின் சிக்ஸர் அடிக்கும் திறன் மேம்பட்டு 37 சிக்ஸர்களை விளாசி முன்னணியில் இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் பவர்ப்ளேவில் அணியின் ரன்ரேட்டை உயர்த்தும் வித்தையைக் கற்றுள்ள கோலி, கடந்த 7 போட்டிகளில் 193 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினார். ஆனால், முதல் 6 போட்டிகளில் 161 ஸ்ட்ரைக் ரேட்டில் கோலி பேட் செய்தார். 2024 சீசனில் இதுவரை கோலியின் பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 163 ஆக இருக்கிறது.
விராட் கோலி சுழற்பந்துவீச்சுக்கு திணறுகிறார், பவர்ப்ளேவில் சுழற்பந்துவீசப்பட்டாலே கோலியின் ரன் சேர்க்கும் திறன் குறைந்துவிடுகிறது என்ற விமர்சனத்துக்கு நேற்று சான்ட்னர், ஜடேஜா ஓவர்களில் சிக்ஸர்களை விளாசி பதிலடி கொடுத்தார். இந்த சீசனில் முதல் 9 போட்டிகளில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக கோலி 123 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்த நிலையில், அடுத்த 4 போட்டிகளில் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 167 ஆக உயர்ந்தது.
இந்த ஆட்டத்திலும் 40 நிமிடங்கள் மழைக்குப் பின் ஆட்டம் தொடங்கியபோது, திடீரென சிஸ்கே பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஆர்சிபி ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஆனால், கோலி துணிச்சலாக சான்ட்னர், ஜடேஜா ஓவர்களை குறிவைத்து அடித்து மீண்டும் ரன்ரேட்டை உயர்த்தினார்.
பட்டிதார், கிரீன், ஜேக்ஸ் எழுச்சி

பட மூலாதாரம், SPORTZPICS
கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆர்சிபி தோல்விக்குப் பின் மேக்ஸ்வெல் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், “கடந்த 6 இன்னிங்ஸ்களாக நான் வெறும் 32 ரன்கள் மட்டும்தான் சேர்த்துள்ளேன். என்னால் சரிவர பேட் செய்ய முடியவில்லை. ஆதலால், என்னை அணி நிர்வாகம் ப்ளேயிங் லெவனில் இருந்து விலக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
அதன்பின் மேக்ஸ்வெல் இடத்துக்கு வில் ஜேக்ஸ் கொண்டுவரப்பட்டார். தனது 3வது ஆட்டத்தில் 22 பந்துகளில் ஜேக்ஸ் அரைசதம் அடித்தார். பஞ்சாப் அணிக்கு எதிராக 25 பந்துகளில் அரைசதமும், அடுத்த 10 பந்துகளில் சதத்தையும் ஜேக்ஸ் எட்டி நடுவரிசைக்கு நம்பிக்கையூட்டினார்.
அது மட்டுமல்லாமல் ரஜத் பட்டிதார், லாம்ரோர், கேமரூன் என நடுவரிசையின் முக்கியத்துவத்தை உணர்ந்து பேட் செய்யத் தொடங்கினர். அதிலும் குறிப்பாக நடுவரிசை ஓவர்களில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக பட்டிதர் ஆக்ரோஷ ஆட்டத்தை கடந்த 7 போட்டிகளில் வெளிப்படுத்தினார். இந்த 7 போட்டிகளில் மட்டும் பட்டிதார் 254 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி 135 ரன்கள் சராசரி வைத்துள்ளார். இந்த ஆட்டத்திலும் 41 ரன்கள் விளாசிய பட்டிதாரால் ஆர்சிபி அணி இந்த சீசனில் 6வது முறையாக 200 ரன்களுக்கு மேல் சேர்த்தது.
இதில் பட்டிதாரின் 5 அரை சதங்களும் 30 பந்துகளுக்குள் அடிக்கப்பட்டவை, பெரும்பாலும் சுழற்பந்துவீச்சில் வெளுக்கப்பட்டவை. குறிப்பாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக பட்டிதார் சதம் அடித்தபோது, ரஷித் கான் ஓவரில் மட்டும் 6,6,4,6,6 என வெளுத்தார்.
அதேபோல தினேஷ் கார்த்திக், கேமரூன் க்ரீன் ஆகியோரும் கடந்த 7 போட்டிகளாக நடுவரிசையின் கட்டமைப்புக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர். இதேபோன்றுதான் நேற்றைய ஆட்டத்திலும் நடுவரிசைக்கு பட்டிதாரும், கேமரூனும் பெரும் பலமாகவும் சிஎஸ்கேவுக்கு அச்சுறுத்தலாகவும் இருந்தனர். 7 முதல் 16 ஓவர்கள் வரை ஆர்சிபி அணி 2 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் சேர்த்தது. ஆனால் சிஎஸ்கே அணி 80 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
பந்துவீச்சில் முன்னேற்றம்

பட மூலாதாரம், SPORTZPICS
ஆர்சிபி அணியின் பந்துவீச்சு கடந்த 7 போட்டிகளாக முன்னேறி விக்கெட்டுகளை வீழ்த்தும் திறனை வளர்த்துக்கொண்டது. முதல் 8 போட்டிகளில் ஆர்சிபி அணி 38 விக்கெட்டுகளை வீழ்த்தியது, எக்கானமி ரேட்டும் 10க்கும் அதிகமாக இருந்தது. குறிப்பாக சிராஜ் 7 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருந்தார்.
ஆனால், கடந்த 5 போட்டிகளில் ஆர்சிபி பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. கடந்த 5 போட்டிகளில் 41 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆர்சிபி 20 சராசரி வைத்தது, கொல்கத்தாவுக்கு அடுத்தாற்போல் 14 ஸ்ட்ரைக் ரேட் பந்துவீச்சில் வைத்துள்ளது.
முதல் சில போட்டிகளில் மயங்க் தாகர், மேக்ஸ்வெலுக்கு பந்துவீச ஆர்சிபியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. கரன் ஷர்மா முதல் 6 போட்டிகளில் தேர்வு செய்யப்படவே இல்லை. ஆர்சிபியின் சுழற்பந்துவீச்சு பலவீனமாக இருந்தது.
ஆனால் 9வது ஆட்டத்தில் ஸ்வப்னில் சிங் வந்து சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக மார்க்ரம், கிளாசன் விக்கெட்டுகளை வீழ்த்தியபின் ஆர்சிபியின் சுழற்பந்துவீச்சுக்கு உயிர் அளிக்கப்பட்டது. சுழற்பந்துவீச்சாளர்கள் புத்துணர்ச்சியுடன் பந்துவீசினர். அது மட்டுமல்லாமல் ஸ்வப்னில் சிங்கோடு, யாஷ் தயால், கேமரூன் ஆகியோரும் கடந்த சில போட்டிகளாக விக்கெட் வீழ்த்தும் திறனை மேம்படுத்தினர்.
குறிப்பாக யாஷ் தயால் நேற்று முதல் ஓவரில் கைப்பற்றிய மிட்ஷெல் விக்கெட்டும், கடைசி ஓவரில் தோனியின் விக்கெட்டை சாய்த்து, கடைசி 2 பந்துகளை வீசிய விதமும்தான் ஆட்டத்தின் மையப்புள்ளியாக இருந்தது.
சிஎஸ்கே செய்த தவறுகள்

பட மூலாதாரம், SPORTZPICS
அணிக்குத் தேவைப்படும் நேரத்தில் பந்துவீச்சாளர்கள், பேட்டர்கள் பேட் செய்தாதது சிஎஸ்கே தோல்விக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக சிஎஸ்கே பந்துவீச்சு திறனற்று இருந்தது. கடைசி 4 ஓவர்களில் மட்டும் 63 ரன்களையும், கடைசி 5 ஓவர்களில் 83 ரன்களையும் சிஎஸ்கே அணி விட்டுக் கொடுத்தது. அது மட்டுமல்லாமல் நடுப்பகுதி ஓவர்களான 7 முதல் 16 ஓவர்கள் வரை 113 ரன்களை சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் ஆர்சிபிக்கு வாரி வழங்கினர். தீக்சனா, சான்ட்னர் இருவரைத் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களுமே ஓவருக்கு 12 ரன்களுக்கு மேல் வழங்கினர்.
பேட்டிங்கில் கடந்த சில போட்டிகளாக ஃபார்மில் இல்லாத பேட்டர்களின் நிலை நேற்றும் தொடர்ந்தது. குறிப்பாக ஷிவம் துபே கடந்த 5 போட்டிகளாக 10 ரன்களைக்கூட தாண்டாத நிலையில் நேற்றும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பட மூலாதாரம், SPORTZPICS
ரஹானே இந்த சீசன் முழுவதும் ஃபார்மில் இல்லை என்பதை நேற்றும் 33 ரன்களில் ஆட்டமிழந்து நிரூபித்தார். கடந்த சீசனில் ரஹானே ஆடிய விதத்துக்கும் இந்த சீசனில் அவரின் பேட்டிங்கிற்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது.
ரூ. 14 கோடிக்கு வாங்கப்பட்ட டேரல் மிட்ஷெல் இந்த சீசனில் சில போட்டிகளில் மட்டுமே பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்டார். மற்ற வகையில் நேற்றைய முக்கியமான ஆட்டத்தில் தவறான ஷாட்டை ஆடி 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அது மட்டுமல்லாமல் கேப்டன் கெய்க்வாட் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தது, சிஎஸ்கே தோல்விக்கு முதல் காரணமாக அமைந்தது. ஒட்டுமொத்தத்தில் பேட்டிங்கில் கெய்க்வாட்டை தவிர வேறு எந்த பேட்டரும் கடந்த சில போட்டிகளாக ஃபார்மில் இல்லை.
சிஎஸ்கே முன்னாள் சாம்பியன், தோனி இருக்கிறார், கெய்க்வாட் ஃபார்ம் ஆகிய பெரிய அடையாளத்துடனே கடந்த சில போட்டிகளை சிஎஸ்கே வென்றது. ஆனால், அந்த அடையாளங்களை ஆர்சிபி தகர்த்தவுடன் சிஎஸ்கேவின் நிலை மோசமானது.
கெய்க்வாட் என்ன சொல்கிறார்?

பட மூலாதாரம், SPORTZPICS
சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில், “பெங்களூரு ஆடுகளம் சிறப்பானது. சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சிறிதளவு ஒத்துழைத்தது. 14 போட்டிகளில் 7 வெற்றிகளும் அருமையானவை.
கான்வே, பதீராணா ஆகியோரின் காயம், முஸ்தபிசுர் இல்லாதது அணியில் சமநிலை இல்லாத சூழலை ஏற்படுத்தி கடினமாக்கியது. வீரர்கள் காயமடையும்போது, அணியில் சமநிலை ஏற்படுத்துவது சிரமமான விஷயம். ஆனாலும் நடப்பவை நடந்தன. வெற்றிக்காக முழுமையாக உழைத்தோம் முடியவில்லை, தனிப்பட்ட ரீதியில் எனக்கு தோல்வி வேதனைதான்,” எனத் தெரிவித்தார்.
'ஆர்சிபி வெற்றிக்கு தோனிதான் காரணம்'
ஆர்சிபி அணியின் வெற்றிக்கு தோனிதான் காரணம் என்ற வகையில் ஆர்சிபி விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், SPORTZPICS
போட்டி பரபரப்பான கட்டத்தை நெருங்கியபோது யஷ் தயால் வீசிய 20ஆவது ஓவரின் முதல் பந்தில் தோனி சிக்ஸர் விளாசினார். அப்போது பந்து மைதானத்தை விட்டுச் சென்றது. இதனால் புதிய பந்து வழங்கப்பட்டது.
"மழை காரணமாக ஈரமாக இருந்த பழைய பந்தைவிட புதிய பந்து பந்துவீசச் சிறப்பாக இருந்ததாக" தினேஷ் கார்த்திக் கூறினார். தினேஷ் கார்த்திக்கின் இந்தக் கருத்து சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
சிஎஸ்கே கேப்டன்ஷிப்பை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் தோனி வழங்கினாலும், இந்த சீசனில் தோனி முழுமையான பங்களிப்பை வழங்கவில்லை என்ற விமர்சனம் இந்தத் தொடர் முழுவதுமே எழுந்தது. வழக்கத்திற்கு மாறாக இந்த சீசனில் தோனி கடைசி வரிசையில்தான் களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












