தொடர்ந்து 6-வது வெற்றி: திக் திக் ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தி ஆரவாரமாக பிளேஆஃபில் நுழைந்த ஆர்சிபி

பட மூலாதாரம், Getty Images
ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளால் துவண்டுபோய் வெளியேறும் நிலையில் இருந்த ஆர்சிபி அணி கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி ஆரவாரமாக பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. பிளே ஆஃப் செல்வது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியில் சென்னையை அபாரமாக வீழ்த்தி ரன் ரேட் அடிப்படையில் ஆர்சிபி அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
மழை அச்சுறுத்தலுக்கு நடுவே பெங்களூருவில் நடைபெறும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள ஆர்சிபி அணி 218 ரன்களை குவித்தது. கோலி, கேப்டன் டூப்பிளசிஸ், ரஜத் படிதார், கேமரூன் கிரீன் ஆகியோர் அந்த அணியின் ரன் உயர்வுக்கு கணிசமாக பங்காற்றியுள்ளனர். சென்னை அணிக்கு ரச்சின் ரவீந்திரா கணிசமாக ரன் சேர்க்க, கடைசி நேரத்தில் ரவீந்திர ஜடேஜா அதிரடியாக ஆடி போராடியும் பிளேஆஃப் செல்வதற்கும் தேவையான ரன் ரேட்டை உறுதிப்படுத்தும் அளவுக்கு சிஎஸ்கே ரன் சேர்க்கவில்லை. இன்றைய ஆட்டத்தில் என்ன நடந்தது?
டாஸ் வென்ற ருதுராஜ் - ஆர்சிபி அபார தொடக்கம்
டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. டூப்பிளசிஸ், கோலி ஆட்டத்தைத் தொடங்கினர். ஷர்துல் வீசிய 2வது ஓவரில் டூப்பிளசிஸ் ஒரு பவுண்டரி, சிக்ஸரும், விராட் கோலி பவுண்டரியும் அடித்தனர். தேஷ்பாண்டே வீசிய 3வது ஓவரில் கோலி 2 சிக்ஸர்கள் உள்பட 13 ரன்கள் விளாசினார்.
அதன்பின் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டு மீண்டும் 8.25 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. மழைக்குப்பின் ஆட்டம் தொடங்கியதும் ஆடுகளத்தின் ஈரப்பதத்தை பயன்படுத்திய சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் ஆர்சிபி ரன்ரேட்டை கட்டுப்படுத்தினர். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் சேர்த்தது.
அதன்பின் ஜடேஜா, சான்ட்னர் ஓவரை குறிவைத்த கோலி, பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். அரைசதத்தை நோக்கி நகர்ந்த கோலி, 29 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்து சான்ட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 10 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் சேர்த்தது.

பட மூலாதாரம், Getty Images
டூப்பிளசிஸ் ரன்அவுட்
அடுத்து பட்டிதார் களமிறங்கி, டூப்பிளசிஸுடன் சேர்ந்தார். ஜடேஜா வீசிய 11வது ஓவரில் டூப்பிளசிஸ் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 20 ரன்கள் சேர்த்து ரன்ரேட்டை உயர்த்தி 35 பந்துகளில் அரைசதம் அடித்தார். கடந்த சில போட்டிகளாக அதிரடியாக ஆடி வரும் பட்டிதாரும் காட்டடிக்கு மாறி தேஷ்பாண்டே ஓவரில் சிக்ஸர் விளாசினார்.
சான்ட்னர் வீசிய 13-வது ஓவரில் டூப்பிளசிஸ் சர்ச்சைக்குரிய வகையில் ரன் அவுட் ஆகினார். சந்தேகத்தின் பலன் பேட்டருக்கு தரவேண்டும் என்ற தார்மீகம் இந்த முறையும் மீறப்பட்டதா என்ற சந்தேகத்தை எழுப்பி, சமூக வலைத்தளங்களில் விவாதத்தை கிளப்பியது. டூப்பிளசிஸ் 39 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 12வது ஓவரில் ஆர்சிபி 100 ரன்களை எட்டியது.

பட மூலாதாரம், Getty Images
கேமரூன் க்ரீன் - பட்டிதார் அதிரடி
அடுத்து கேமரூன் க்ரீன் களமிறங்கி, பட்டிதாருடன் சேர்ந்தார். சிமர்ஜீத் வீசிய 14வது ஓவரில் பட்டிதார் ஒரு பவுண்டரி, சிக்ஸரும், கேமரூன் ஒரு பவுண்டரியும் என் 19 ரன்கள் விளாசினர். இதன்பின் சிமர்ஜீத் சிங் பந்துவீச அழைக்கப்படவே இல்லை. 15வது ஓவர்கள் முடிவில் ஆர்சிபி 2 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் சேர்த்திருந்தது. தாக்கூர் வீசிய 16-வது ஓவரில் பட்டிதார் ஒரு பவுண்டரியும், கிரீன் ஒரு பவுண்டரி, சிக்ஸர் என 17 ரன்கள் எடுத்தனர்.

பட மூலாதாரம், Getty Images
தேஷ்பாண்டே வீசிய 17-வது ஓவரில் பட்டிதார் 2 சிக்ஸர்கள் உள்பட 17 ரன்களை சேர்த்தார். தாக்கூர் வீசிய 18-வது ஓவரையும் கீரீன் வெளுத்து வாங்கி 2 சிக்ஸர்களை விளாசினார். அதே ஓவரில் பட்டிதார் 41 ரன்களில் மிட்ஷெலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து தினேஷ் கார்த்திக் களமிறங்கினார்.
தேஷ் பாண்டே வீசிய 19-வது ஓவரில் கார்த்திக் சிக்ஸர்,பவுண்டரி என சிறிய கேமியோ ஆடி 14 ரன்களில் தோனியிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல் ஷர்துல் வீசிய கடைசி ஓவரில் சிக்ஸர், பவுண்டரி என கேமியோ ஆடிய 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.
20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் சேர்த்தது. கேமரூன் 38 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நடுப்பகுதி ஓவர்களில் ஆர்சிபி விளாசல்
ஆர்சிபி அணி நடுப்பகுதி ஓவர்களில்தான் 77 ரன்களைச் சேர்த்து ஸ்கோரை உயர்த்தியது. குறிப்பாக ஜடேஜா வீசிய 11வது ஓவரில் 20 ரன்கள், தீக்சனா வீசிய 12வது ஓவரில் 10 ரன்கள், சிமர்ஜீத் வீசிய 14வது ஓவரில் 19 ரன்கள், தாக்கூர் வீசிய 16-வது ஓவரில் 17 ரன்கள் ஆர்சிபி ஸ்கோர் உயர காரணமாக அமைந்தது. சிஎஸ்கேஅணி கடைசி 4 ஓவர்களில் மட்டும் 63 ரன்களை வாரி வழங்கியது, 5 ஓவர்களில் 80 ரன்களை ஆர்சிபி சேர்த்தது. 2024 சீசனில் சிஎஸ்கே அணி டெத் ஓவரில் வழங்கிய அதிகபட்ச ரன்கள் இதுவாகும்.
மழைக்குப்பின் ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக மாறியதை சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தத் தவறியதே அதிகமான ரன்கள் செல்ல காரணமாகும். அது மட்டுமல்லாமல் சென்னைக்கு இதுவரையிலான ஆட்டங்களில் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய பதீரணா, முஸ்தபிசுர் போன்றவர்கள் இல்லாதது பெரும் பின்னடைவாக அமைந்தது.

பட மூலாதாரம், Getty Images
முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய ஆர்சிபி
219 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சிஎஸ்கே அணி களமிறங்கியது. கெய்க்வாட், ரவீந்திரா இருவரும் ஆட்டத்தைத் தொடங்கினர். மேக்ஸ்வெல் முதல் ஓவரை வீசினார்.
மேக்ஸ்வெல் வீசிய முதல் ஓவர், முதல் பந்தில் கெய்க்வாட் அடித்த ஷாட்டை ஷார்ட் ஃபைன் திசையில் யாஷ் தயால் கேட்ச் பிடிக்க டக்அவுட்டில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அந்த ஓவரில் ரவீந்திரா பவுண்டரி அடித்தார். ஆர்சிபி அணி அதிரடி பந்துவீச்சைத் தொடங்கி, சிஎஸ்கேவை மிரட்டியது.

பட மூலாதாரம், Getty Images
பதற்றத்தில் கெய்க்வாட்
மேக்ஸ்வெல் ஐபிஎல் தொடரில் முதல் ஓவரில் விக்கெட் வீழ்த்துவது இது 3வது முறையாகும். பவர்ப்ளேயில் மேக்ஸ்வெல் வீழ்த்திய 9-வது விக்கெட் இதுவாகும். ஐபிஎல் தொடரில் 175 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டாலே கெய்க்வாட் பதற்றமடைந்து பலமுறை விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.
175 ரன்களுக்கு மேல் நிர்ணயிக்ககப்பட்ட போட்டிகளில் கெய்க்வாட் 11 இன்னிங்ஸ்களில் 92 ரன்கள் மட்டுமே சேர்த்து 11 ரன்கள் சராசரி வைத்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
ரஹானே - ரவீந்திரா அதிரடி
அடுத்து களமிறங்கிய மிட்ஷெல், ரவீந்திராவுடன் சேர்ந்தார். சிராஜ் வீசிய 2வது ஓவரில் மிட்ஷெல் ஒரு பவுண்டரி உள்பட 7 ரன்கள் சேர்த்தார். யாஷ் தயால் வீசிய 3வது ஓவரின் 2வது பந்தில் மிட்ஷெல் மிட்ஆஃப் திசையில் கோலியிடம் கேட்ச் கொடுத்து 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ரஹானே, சிக்ஸருடன் அதிரடியாகத் தொடங்கினார்.
யாஷ் தயால் வீசிய 6வது ஓவரில் ரவீந்திரா ஒரு பவுண்டரியும், ரஹானே 2 பவுண்டரிகளும் என 15 ரன்கள் சேர்த்தனர். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே 2 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் சேர்த்தது.
கரன் ஷர்மா வீசிய 8வது ஓவரை குறிவைத்த ரஹானே பவுண்டரியும், ரவீந்திரா ஒரு சிக்ஸரும் விளாசி 14 ரன்கள் சேர்த்தனர். ஆனால் ஸவ்ப்னில் சிங் ஓவரை ரஹானே, ரவீந்திராவால் அடிக்கமுடியவில்லை. ஸ்வப்னில் வீசிய முதல் ஓவரில் 6 ரன்கள் சேர்த்த சிஎஸ்கே பேட்டர்கள் அவர் வீசிய 9வது ஓவரிலும் 7 ரன்கள் மட்டுமே சேர்த்தனர்.
10வது ஓவரை பெர்குஷன் வீசினார். முதல் பந்தை பெர்குஷன் ஸ்லோவர் பாலாக வீச, ரஹானே அவசரப்பட்டு பெரிய ஷாட்டுக்கு முயன்றார். ஆனால், கவர் திசையில் டூப்பிளசிஸிடம் கேட்ச் கொடுத்து ரஹானே 33 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் சென்றார். 3வது விக்கெட்டுக்கு ரஹானே, ரவீந்திரா ஜோடி 66 ரன்கள் சேர்த்துப் பிரிந்தது. இந்த ஓவரில் பெர்குஷன் 2 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

பட மூலாதாரம், Getty Images
கோலி, டூப்பிளசிஸ் வேண்டுகோளை நிராகரித்த நடுவர்கள்
மேக்ஸ்வெல் வீசிய 11-வது ஓவரில் திணறிய சிஸ்கே பேட்டர்கள் ரவீந்திரா, துபே இருவரும் 4 ரன்கள் மட்டுமே சேர்த்ததால், சிஎஸ்கேவுக்கு அழுத்தம் ஏற்பட்டது. பெர்குஷன் வீசிய 12-வது ஓவரின் முதல் பந்தை நோபாலாக வீசவே அதை ரவீந்திரா பவுண்டரிக்கு அனுப்பினார்.
ஈரப்பதம், பனிப்பொழிவு காரணமாக பந்தை பந்துவீச்சாளர்களால் பிடிக்க முடியவில்லை என்று நடுவர்களிடம் கோலி, டூப்பிளசிஸ் கேட்டனர். ஆனால், பந்தை மாற்ற நடுவர்கள் மறுத்துவிட்டனர். ப்ரீஹிட் பந்தில் ரவீந்திரா ஒரு சிக்ஸரும், அடுத்தபந்தில் மற்றொரு சிக்ஸரையும் விளாசி 19 ரன்கள் சேர்த்தனர்.
ரச்சின் ரன்அவுட் - துபே தடுமாற்றம்
மேக்ஸ்வெல் 13வது ஓவரை வீசினார். 3வது பந்தில் துபே தூக்கி அடிக்க அதை பிடிக்காமல் சிராஜ் கோட்டைவிட்டார். ஆனால் கடைசிப் பந்தில் ரவீந்திரா அடித்துவிட்டு 2வது ரன் ஓடும்போது, ஏற்பட்ட குழப்பத்தால் ரவீந்திரா 61 ரன்களில் ரன்அவுட் செய்யப்பட்டார்.
அடுத்து ஜடேஜா களமிறங்கி, துபேயுடன் சேர்ந்தார். தொடக்கத்தில் இருந்து திணறிய துபே இந்த முறையும் ஜொலிக்கவில்லை. கேமரூன் வீசிய 14-வது ஓவரில் ஸ்லோவர் பந்தை துபே தூக்கி அடிக்க முற்பட்டு, பெர்குஷனிடம் கேட்ச் கொடுத்து 7 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து 5 இன்னிங்ஸ்களில் துபே அதிகபட்சம் 10 ரன்களைக் கூட தாண்டவில்லை.

பட மூலாதாரம், Getty Images
டூப்பிளசிஸ் அற்புத கேட்ச்
அடுத்து சான்ட்னர் களமிறங்கி, ஜடேஜாவுடன் சேர்ந்தார். சிராஜ் 15வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் ரன் சேர்க்க ஜடேஜா, சான்ட்னர் தடுமாறினர். கடைசிப் பந்தை சிராஜ் ஃபுல்டாசாக வீச, சான்ட்னர் தூக்கி அடிக்கவே அதை அற்புதமாக டூப்பிளசிஸ் கேட்ச் பிடித்து, ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
சிஎஸ்கே அணி 115 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் அடுத்த 14 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசி 2 ஓவர்களில் சிஎஸ்கே ஒருபவுண்டரி கூட அடிக்கவில்லை.
7-வது விக்கெட்டுக்கு தோனி களமிறங்கி, ஜடேஜாவுடன் சேர்ந்தார். கேமரூன் வீசிய 16-வது ஓவரில் தோனி பவுண்டரி அடிக்க அந்த ஓவரில் சிஎஸ்கே 9 ரன்கள் சேர்த்தது.

பட மூலாதாரம், Getty Images
யாஷ் தயால் வீசிய 17-வது ஓவரில் ஜடேஜா ஒரு சிக்ஸரும், தோனி ஒருபவுண்டரியும் அடிக்க சிஎஸ்கே 13 ரன்கள் சேர்த்தது. சிஎஸ்கே அணியும் 150 ரன்களை எட்டியது. சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற, 18 பந்துகளில் 50 ரன்கள் தேவைப்பட்டது.
சிராஜ் வீசிய 18-வது ஓவரின் முதல் பந்தில் ஜடேஜா லாங் ஆஃப்பில் சிக்ஸர் விளாசி, 4வது பந்தில் பவுண்டரி அடித்து அந்த ஓவரில் 15 ரன்கள் சேர்த்தனர். சிஎஸ்கே ப்ளே ஆஃப் செல்ல கடைசி 2 ஓவர்களில் 35 ரன்கள் தேவைப்பட்டது.
19-வது ஓவரை பெர்குஷன் வீசினார். முதல் பந்து நோபாலாக வீசவே ப்ரீஹிட் கிடைத்தது. அந்த பந்தில் தோனி பெரிய ஷாட்டுக்கு முயன்றார் ஆனால் ஒரு ரன் மட்டுமே கிடைத்தது. ஜடேஜா வந்து பவுண்டரி அடித்து அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார். தோனியும் ஒரு பவுண்டரி அடிக்கவே ஆட்டம் பரபரப்பானது. கடைசிப் பந்தில் ஜடேஜா சிக்ஸர் அடிக்கவே ஆட்டத்தில் டென்ஷன் எகிறியது.

பட மூலாதாரம், Getty Images
சிஎஸ்கே ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. யாஷ் தயால் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் தோனி சிக்ஸர் விளாசினார். 2வது பந்திலும் தோனி பெரிய ஷாட்டுக்கு முயன்று, பவுண்டரி எல்லையில் ஸ்வப்னில் சிங்கிடம் கேட்ச் கொடுத்து 25 ரன்களில் ஆட்டமிழந்தார்
கடைசி 4 பந்துகளில் சிஎஸ்கே ப்ளே ஆஃப்சுற்றுக்கு தகுதி பெற 11 ரன்கள் தேவைப்பட்டது. ஷர்துல் தாக்கூர் களமிறங்கி ஜடேஜாவுடன் இணைந்தார். 3வது பந்தில் தாக்கூர் ரன் ஏதும் அடிக்கவில்லை. 3 பந்துகளில் சிஎஸ்கேவுக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. 4-வது பந்தில் தாக்கூர் ஒரு ரன் எடுத்தார். கடைசி 2 பந்துகளில் சிஎஸ்கே ப்ளே ஆஃப் செல்ல 10 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்ட்ரைக்கில் ஜடேஜா இருந்தார், 5வது பந்தில் ஜடேஜா ரன் ஏதும் எடுக்கவில்லை. அப்போதே யாஷ் தயால் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார், கோலி உற்சாகத்தில் குதித்தார். கடைசிப் பந்திலும் ஜடேஜா ரன் அடிக்காததால் ஆர்சிபி அணி போட்டியை வென்று, ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

பட மூலாதாரம், Getty Images
சிஎஸ்கே அணி 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் சேர்த்து 27 ரன்களில் தோல்வி அடைந்து ஐபிஎல் போட்டியிலிருந்து வெளியேறியது. கடந்த 3 வாரங்களுக்கு முன்புவரை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.
யாஷ் தயால் முதல் பந்தில் சிக்ஸர் கொடுத்தாலும், அடுத்தடுத்த பந்தில் பெரிய “கம்பேக்” கொடுத்து, தோனி விக்கெட்டையும் வீழ்த்தி, ஸ்லோவர் பந்துகளால் வெற்றியை உறுதி செய்து ஹீரோவாக மாறினார்.












