ஐபிஎல் 2024: மும்பை அணியின் தோல்வி இந்திய கிரிக்கெட் அணிக்கு 'எச்சரிக்கை மணி'

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விதான்ஷு குமார்
- பதவி, விளையாட்டு செய்தியாளர், பிபிசி இந்திக்காக
ஐபிஎல் 2024 சீசனுக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், நேற்றைய தினம் (17.5.2024) 10வது முறையாகத் தனது வெற்றிவாய்ப்பை இழந்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
லக்னௌ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோதிய நேற்றைய போட்டியில், முதலில் பேட்டிங் செய்த லக்னௌ அணி 214 என்ற ரன் இலக்கை நிர்ணயித்தது.
இரண்டாவதாகக் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 196 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது லக்னௌ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி.
ஏற்கெனவே இந்த இரு அணிகளும் ப்ளே ஆஃப் போட்டிகளுக்கான வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் ஐபிஎல் தரவரிசை அட்டவணையில் பெரிய பலனைத் தராது என்றாலும், இது அவர்களின் கௌரவத்திற்கான போட்டியாகப் பார்க்கப்பட்டது.
அதில் லக்னௌ அணிக்கு ஆறுதல் கிடைத்திருந்தாலும், மும்பை அணி இந்த சீசனில் மொத்தம் விளையாடிய 14 போட்டிகளில் 10இல் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய மும்பை அணிக்கு 2024ஆம் ஆண்டு தொடர் தோல்விகளைச் சந்தித்து கடைசி இடத்திற்குச் சென்றது ஏன்?
ஜாம்பவான்கள் இருந்த அணி

பட மூலாதாரம், Getty Images
ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்ளும் வெற்றிகரமான அணிகளில் மும்பை அணியும் ஒன்று. இந்த அணி கடைசியாக 2020ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த சீசனில் துபாயில் நடந்த இறுதி ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
மும்பை அணியின் ஆரம்பக் கட்டத்தில் கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் போன்றவர்கள் தலைமையில் இயங்கியுள்ளது என்றாலும், அதன் வெற்றிப் பயணம் ரோகித் சர்மாவின் தலைமையில்தான் தொடங்கியது.
முதன்முதலில் 2013 ஆண்டு ஹிட்மேன் ரோகித் சர்மா தலைமையில் ஐபிஎல் கோப்பையை வென்றது மும்பை அணி. அதன் பிறகு, 2015, 2017, 2019, 2020 ஆகிய நான்கு முறை மும்பை அணியே வென்றது.
ஐபிஎல் வரலாற்றில் 5 வெற்றிகளுடன் மிகவும் வெற்றிகரமான அணியாக வலம் வருகிறது மும்பை அணி. கடந்த ஆண்டு தங்களது 5வது கோப்பையை வென்றதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சாதனையை சமன் செய்தது.
வெற்றிகரமான அணி என்பதைத் தாண்டி, அதிகமான ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட அணி என்ற பெருமையும் மும்பை அணிக்கு உண்டு. இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ஆனால், இந்த முறை அதன் முழு திறமையும் வெளிப்படாமல் போனதோ என்று ரசிகர்களையே சிந்திக்க வைத்துவிட்டது. அதன் மோசமான செயல்பாட்டின் காரணமாக அடுத்த சீசனில் யாரை வைத்துக்கொள்ள வேண்டும், யாரை வெளியே அனுப்ப வேண்டும் என்று அந்த அணியின் நிர்வாகம் சிந்திக்க வேண்டிய கடினமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த முறை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு மும்பை அணி சென்றது ஏன், அதற்கான காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.
புதிய கேப்டன் மீதான விமர்சனம்

பட மூலாதாரம், Getty Images
மும்பை இந்தியன்ஸ் இந்த சீசனில் இதுவரை வெற்றிகரமான கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை மாற்றி, அவருக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது.
தனது ஆரம்ப நாட்களில் மும்பை அணிக்காக விளையாடிய பாண்டியா, கடந்த இரண்டு சீசன்களில் குஜராத் அணியின் கேப்டனாக இருந்தார். அதில் அந்த அணி ஒருமுறை சாம்பியன் பட்டம் வென்றதோடு, ஒருமுறை இறுதிச்சுற்றுக்கும் வந்தது.
ஆனால், இந்த ஆண்டு அவர் மும்பை அணிக்குத் திரும்பி வந்தது வெற்றிகரமாக அமையவில்லை. அவர் கிரிக்கெட் ரசிகர்களால் கேலி செய்யப்பட்டார், அவரது ஆட்டமும் பெரியளவில் இருக்கவில்லை.
குஜராத் அணிக்காக இரண்டு சீசன்களில் 38 ரன்கள் சராசரியுடன் 800 ரன்களுக்கு மேல் எடுத்த ஹர்திக் பாண்டியா, மும்பைக்காக 14 இன்னிங்ஸ்களில் 216 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவருடைய சராசரி வெறும் 18. பந்துவீச்சில் அவர் 35 ரன்கள் சராசரியில் 11 விக்கெட்டுகளை எடுத்தார்.
ஹர்திக் பாண்டியா கேப்டனான பிறகு தனது சமூக ஊடக பக்கத்தில், “நாங்கள் உங்கள் கேப்டனை போலவே இருக்கிறோம், பெயர் பாண்டியா” என்று ஒரு பதிவிட்டார். முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி அதை நினைவுபடுத்தினார். ரோகித் சர்மாவை நீக்கியதை ரசிகர்கள் சரியான முடிவாகக் கருதாததால் இந்தப் பதிவு அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது.
தொடக்க ஆட்டக்காரர்களின் தோல்வி

பட மூலாதாரம், Getty Images
இந்த ஆண்டு ஐபிஎல் பேட்ஸ்மேன்கள் மற்றும் தொடக்க ஆட்டக்காரர்களின் ஆட்டம் அணிகளின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தது.
டிராவிஸ் ஹெட், பில் சால்ட், சுனில் நரைன், ரிதுராஜ் கெய்க்வாட் போன்ற பேட்ஸ்மேன்கள் தங்கள் அணிகளுக்கு நிலையான நல்ல தொடக்கத்தை வழங்கினர். ஆனால், மும்பையின் இரண்டு பிரீமியம் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா, இஷான் கிஷன் ஆகியோர் தங்கள் அணிக்கு வலுவான தொடக்கத்தைக் கொடுக்கத் தவறிவிட்டனர்.
ரோகித் சர்மா ஒரு சதம், அரை சதத்துடன் சிறிதளவு பங்களித்திருந்தாலும் அது அணிக்குப் போதுமானதாக இருக்கவில்லை.
இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், ஒரு போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்ததை நினைவுபடுத்தினார். ஆனால் அந்தப் போட்டியில் மும்பை தோல்வியடைந்தது. மும்பை இந்தியன்ஸின் முந்தைய வெற்றிகளில் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பெரிய பங்கு இருந்தது. ஆனால், இம்முறை அவரால் ஒரு சாம்பியனாக விளையாட முடியவில்லை. அதன் விளைவு அணியிலும் தெரிந்தது.
அதேநேரம் அந்த அணியின் இரண்டாவது தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 14 இன்னிங்ஸ்களில் 22 ரன் சராசரியுடன் 320 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
மிடில் ஆர்டரில் குறைந்த ஸ்திரத்தன்மை

பட மூலாதாரம், Getty Images
மும்பையின் மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோர் ரன்களை எடுத்தனர். ஆனால் ஆரம்ப பின்னடைவுக்குப் பிறகு அணியின் ஸ்கோரை அதிகரிக்கும் பொறுப்பில் அவர்கள் அடிக்கடி சிக்கிக்கொண்டனர்.
இருவரும் சேர்ந்து 750 ரன்கள் எடுத்தனர். ஆனால், இந்த ரன்கள் சாம்பியன் அணிகளில் அதிக ரன் எடுத்தவர்களைவிட மிகக் குறைவு. இதுதவிர, மும்பையின் மிடில் ஆர்டரில் ஸ்திரத்தன்மை இல்லாததால், அவர்களது மற்ற பேட்ஸ்மேன்களுக்கு இது மறக்கமுடியாத காலகட்டமாக அமைந்துவிட்டது.
ஹர்திக் பாண்டியா 14 இன்னிங்ஸ்களில் 216 ரன்கள் எடுத்தார் மற்றும் பந்துவீச்சில் 11 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஆனால், ஒரு கேப்டனாக அவரது பேட்டிங் மோசமாக இருந்தது. அவரது பந்துவீச்சும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருக்கவில்லை.
பும்ராவுக்கு துணை இல்லை

பட மூலாதாரம், Getty Images
வேகப்பந்து வீச்சாளர்கள் ஜோடியாக வேட்டையாடுவார்கள் என்று ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு. ஆனால், இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அப்படியொரு வசதி கிடைக்கவில்லை.
இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மிகப்பெரிய பலவீனம், பந்துவீச்சில் ஜஸ்ப்ரித் பும்ராவை ஆதரிக்க முடியாமல் போனதுதான். பும்ரா 13 இன்னிங்ஸ்களில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்ப்பிள் தொப்பிக்கான போட்டியில் நீடித்தாலும், மறுமுனையில் மும்பையால் வெற்றிபெற முடியவில்லை.
பல போட்டிகளில், ஹர்திக் பாண்டியா பும்ராவை முதலில் பந்துவீச விடாததை வர்ணனையாளர்கள் விமர்சித்தனர். பும்ராவை தவிர மும்பையின் வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுக்கத் தவறி ரன்களை அள்ளிக் கொடுப்பதில் முதலிடம் பிடித்தனர். இந்தக் காரணங்கள் மும்பையை போட்டியில் கடைசி இடத்தில் வைத்தது. இது இந்திய அணி தேர்வாளர்களுக்கும் தலைவலியை அதிகரித்துள்ளது.
மும்பையின் தோல்வி இந்திய அணிக்கு எச்சரிக்கை மணியாக இருப்பது ஏன்?
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்தது அவர்களுக்கு மட்டுமல்ல, இந்திய டி20 அணிக்கும் ஒரு மோசமான செய்தி.
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் மும்பை அணியின் 4 வீரர்கள் இடம்பெற்று முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
ரோகித் சர்மா கேப்டனாகவும் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் சூர்யகுமார் யாதவ் மிடில் ஆர்டர் பேட்டிங் பொறுப்பையும் ஜஸ்ப்ரித் பும்ரா வேகப்பந்துவீச்சாளராகவும் இருக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
பும்ரா தொடர்ந்து விக்கெட்டுகளை எடுத்தாலும், சூர்யகுமார் யாதவும் மெதுவான தொடக்கத்திற்குப் பிறகு அதிரடி ஆட்டத்தைக் காட்டினாலும், ரோகித் சர்மா மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா இருவரின் ஃபார்ம் மும்பைக்கு கவலை அளிக்கிறது.
விளையாட்டு இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கூட, “இருவரையும் மும்பை அணியில் இருந்து விடுவிக்க வேண்டும். அவர்கள் வெற்றி பெற பெறவில்லை என்றால், எப்படி அவர்கள் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும், இந்தியாவுக்காக போட்டிகளை வெல்ல முடியும்?” என்று கேள்வியெழுப்பினார்.
ஐசிசி டி20 உலகக்கோப்பையில், இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை ஜூன் 5ஆம் தேதியும் பாகிஸ்தானை ஜூன் 9ஆம் தேதியும் எதிர்கொள்கிறது. ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்களின் ஆட்டத்தைப் பார்க்கும்போது, இந்த ஆண்டும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி கோப்பையைப் பறிக்காது என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் டிம் பெயின் போன்ற வீரர்கள் கூறி வருகின்றனர்.
அணியில் இருக்கும் பெயர்களைப் பார்த்தால், ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் போன்ற பெரிய பெயர்கள் தெரிந்தாலும், உலகக்கோப்பையில் பெயர்கள் பெரியது, தத்துவம் சிறியது என்ற பழமொழி உண்மையாகலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












