தொடர்ந்து குறுக்கிடும் மழை: ஆர்சிபி, சிஎஸ்கேவுக்கு கடைசி வாய்ப்பு என்ன?

ஐபிஎல்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், க.போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ஐபிஎல் டி20 2024 சீசனில் ப்ளே ஆஃப் சுற்றில் 3-ஆவது அணியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நேற்று இடம் பெற்றது. இன்னும் ஒரு அணி யார் என்பதில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

ப்ளே ஆஃப் சுற்றுக்குள் 3 அணிகள் தகுதி பெற்றுள்ளதே தவிர கொல்கத்தாவைத் தவிர மற்ற 3 அணிகளும் எந்தெந்த இடங்களைப் பிடிக்கப்போகின்றன என்பது இதுவரை உறுதியாகவில்லை.

2-ஆவது இடத்தைப் பிடிக்க ராஜஸ்தானுக்கும், சன்ரைசர்ஸ் அணிக்கும், சிஎஸ்கேவுக்கும் வாய்ப்புள்ளது. 3-ஆவது இடத்தைப் பிடிக்க சிஎஸ்கேவுக்கும் வாய்ப்புள்ளது, 4-ஆவது இடத்தைப் பிடிக்க ஆர்சிபிக்கும், சன்ரைசர்ஸ் அணிக்கும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற பல வாய்ப்புகள் அணிக்குள் இருப்பதால் எந்தெந்த அணிகளுக்கு எந்த இடம் என்பது உறுதியாகவில்லை.

ஹைதராபாத்தில் நேற்று நடைபெற இருந்த ஐபிஎல் டி20 தொடரின் 66-வது ஆட்டம் மழை காரணமாக டாஸ்கூட போடாமல் கைவிடப்பட்டது. இதனால் குஜராத் அணிக்கும், சன்ரைசர்ஸ் அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

சன்ரைசர்ஸ் அணி கடந்த 2020ம் ஆண்டுக்குப்பிறகு முதல் முறையாக ஐபிஎல் டி20 தொடரில் ப்ளே ஆஃப் சுற்றில் விளையாடுகிறது. கடந்த 2021, 2022, 2023 ஆகிய சீசன்களில் சன்ரைசர்ஸ் 8-வது இடத்தைப் பிடித்தது.

ஹைதராபாத்தில் நேற்று மாலை முதலே மழை பெய்ததால், ஆட்டம் தாமதமாகத் தொடங்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது. இரவு 8மணிக்கு டாஸ் போடப்பட்டு 8.15 மணிக்கு ஆட்டம் தொடங்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், மழை மீண்டும் பெய்யத் தொடங்கி, கடும் மழையாக மாறியதையடுத்து, இரவு 10.10 மணிக்கு ஆட்டம் கைவிடப்பட்டதாக போட்டி நடுவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

ஐபிஎல்

பட மூலாதாரம், Getty Images

சன்ரைசர்ஸ் அணிக்கு எந்த இடம்?

இதனால் சன்ரைசர்ஸ் அணி 13 போட்டிகளில் 15 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் இருக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.406 ஆக இருக்கிறது. இன்னும் ஒரு ஆட்டம் சன்ரைசர்ஸ் அணிக்கு இருக்கிறது. பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான அந்த கடைசி லீக்கில் சன்ரைசர்ஸ் அணி வென்றால் 17 புள்ளிகள் பெறும். ஒருவேளை அந்த ஆட்டமும் மழையால் கைவிடப்பட்டால் 16 புள்ளிகள் கிடைக்கும், தோல்வி அடைந்தால் 15 புள்ளிகளோடு முடிக்கும்.

2வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணி கடைசி லீக்கில் கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. அந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் வென்றால் 18 புள்ளிகளுடன் 2வது இடத்தைப் பிடிக்கும். தோல்வி அடைந்தால் 16 புள்ளிகளுடன் மோசமான நிகர ரன்ரேட்டில் முடிக்கும். ஒருவேளை சன்ரைசர்ஸ் அணி கடைசி லீக்கில் பஞ்சாப் அணியை வென்று 17 புள்ளிகள் பெற்றால் 2வது இடம் பெறுவது என்பது ராஜஸ்தான் கடைசி லீக்கில் தோற்பதில் இருக்கிறது.

ஹைதராபாத்தில் நடக்கும் அந்த ஆட்டமும் மழையால் தடைபட்டால் சன்ரைசர்ஸ் அணிக்கு 16 புள்ளியோடு முடிக்கும். சன்ரைசர்ஸ் அணி 16 புள்ளிகளோடு முடித்தாலும் 2-ஆவது இடத்தை பிடிக்கலாம், அதற்கு ராஜஸ்தான் அணி கடைசி லீக்கில் தோற்க வேண்டும், சிஎஸ்கே-ஆர்சிபி ஆட்டம் மழையால் கைவிடப்பட வேண்டும். இதுநடந்தால், நிகர ரன்ரேட்டில் ராஜஸ்தானைவிட உயர்ந்து சன்ரைசர்ஸ் 2-ஆவது இடத்தைப் பிடிக்கும், ராஜஸ்தான் 3வது இடத்தைப் பிடிக்கும்.

ஐபிஎல்

பட மூலாதாரம், Getty Images

சிஎஸ்கேவுக்கு 2-ஆவது இடம் கிடைக்குமா?

சிஎஸ்கேவைப் பொருத்தவரை, நாளை பெங்களூரூவில் நடக்கும் ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டாலே சிஎஸ்கே அணி தானாகவே ப்ளே ஆஃப் சுற்றுக்குள் வந்துவிடும்.

பெங்களூருவில் நாளை(சனிக்கிழமை) நடக்கும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக பல்வேறு வானிலை கணிப்புகள் கூறுகின்றன. ஒருவேளை அந்த ஆட்டம் நடந்து சிஎஸ்கே அணி வென்றால், 16 புள்ளிகள் பெறும். மழையால் கைவிடப்பட்டால் 15 புள்ளிகள் பெறும்.

ஆர்சிபி-சிஎஸ்கே இடையிலான ஆட்டம் நடந்து, அதில் சிஎஸ்கே வென்றால், 16 புள்ளிகள் பெற்று வலுவான நிகர ரன்ரேட்டில் 2-ஆவது இடத்தைப் பிடிக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால், அதற்கு கொல்கத்தாவிடம் ராஜஸ்தான் தோற்க வேண்டும், சன்ரைசர்ஸ்-பஞ்சாப் ஆட்டம் மழையால் கைவிடப்பட வேண்டும் இது நடந்தால், சிஎஸ்கே 16 புள்ளிகளோடு வலுவான நிகர ரன்ரேட்டில் 2வது இடத்தைப் பிடிக்கலாம். 3வது இடத்தை சன்ரைசர்ஸ் அணியும், 4வது இடத்தை ராஜஸ்தானும் பிடிக்கலாம்.

அதேநேரம் சன்ரைசர்ஸ் அணி தனது கடைசி லீக்கில் பஞ்சாப் அணியை வென்றால் 17 புள்ளிகளோடு 2ஆவது இடத்தை உறுதி செய்ய ராஜஸ்தான் அணி கடைசி லீக்கில் கொல்கத்தாவிடம் தோற்க வேண்டும். ஒருவேளை கொல்கத்தாவை வெல்லும் பட்சத்தில் ராஜஸ்தான் அணி 18 புள்ளிகளோடு 2வது இடத்தைப் பிடிக்கும். சன்ரைசர்ஸ் பஞ்சாபை வென்றால் 17 புள்ளிகளோடு 3வது இடத்தையும், சிஎஸ்கே-ஆர்சிபி இரு அணிகளில் ஏதாவது ஒன்று 4வது இடத்தைப் பிடிக்கலாம்.

ஐபிஎல்

பட மூலாதாரம், Getty Images

ராஜஸ்தான் 2வது இடம் பெறுமா?

ராஜஸ்தான் அணி உறுதியாக ப்ளே ஆஃப் சுற்றில் 2வது இடத்தைப் பிடிக்க முடியும். ஆனால், அதற்கு கொல்கத்தா அணியை கட்டாயமாக வென்றால் 18 புள்ளிகளோடு 2வது இடத்தைப் பிடிக்கலாம். ஒருவேளை ராஜஸ்தான் அணி கடைசி லீக்கில் தோற்றால், சன்ரைசர்ஸ் அணியும் கடைசி லீக்கில் தோற்க வேண்டும், சிஎஸ்கே-ஆர்சிபி இடையிலான ஆட்டமும் மழையால் கைவிடப்பட்டு சிஎஸ்கே 15 புள்ளிகளோடு முடிக்க வேண்டும். இவ்வாறு நடந்தால் 16 புள்ளிகளோடு ராஜஸ்தான் 2-ஆவது இடத்தை பிடிப்பதில் சிக்கல் வராது.

ஒருவேளை பஞ்சாப்வுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டமும் மழையால் கைவிடப்பட்டு சன்ரைசர்ஸ் அணிக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டால், 16 புள்ளிகள் கிடைத்துவிடும், நிகர ரன்ரேட்டில் ராஜஸ்தானைவிட உயர்வாக இருப்பதால், 2வது இடத்தை சன்ரைசர்ஸ் பிடிக்கும். ராஜஸ்தான் 3வது இடத்துக்கு தள்ளப்படும். க்கும், 15 புள்ளிகளுடன் சிஎஸ்கே 4வது இடத்தைப் பிடிக்கும்.

ஒருவேளை கொல்கத்தாவிடம் ராஜஸ்தான் அணி தோற்றால் 16 புள்ளிகளோடு முடிக்கும், நிகரரன்ரேட் சரியும். பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டால் சன்ரைசர்ஸ் அணிக்கு ஒருபுள்ளி வழங்கப்பட்டால் 16 புள்ளிகளோடு முடிக்கும். ஆர்சிபி அணியை சிஎஸ்கே வென்றால் 16 புள்ளிகளோடு 2வது இடத்தை பிடிக்கும், நிகர ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் 4வது இடத்துக்கு தள்ளப்படும். ஒருவேளை மழை காரணமாக ஆர்சிபி, சிஎஸ்கேவுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டால் சிஎஸ்கே 15 புள்ளிகளோடு 4வது இடத்தையும், ராஜஸ்தான் 16 புள்ளிகளோடு 3வது இடத்தையும் பிடிக்கும்.

ஐபிஎல்

பட மூலாதாரம், Getty Images

ஆர்சிபி-க்கு ப்ளே ஆஃப் வாய்ப்பிருக்கிறதா?

ஆர்சிபியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு தற்போது வருணபகவான் கையில் இருக்கிறது. நாளை நடக்கும் கடைசி லீக் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டால் சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் செல்லும். ஒருவேளை போட்டி நடந்தால், ஆர்சிபி 200 ரன்கள் எடுக்கும்பட்சத்தில், 18 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். அல்லது 200 ரன்கள் இலக்கை 11 பந்துகள் மீதம் இருக்கும்போது சேஸிங் செய்ய வேண்டும் ஆர்சிபி அணி.

அவ்வாறு நடந்தால் சிஎஸ்கே அணியைவிட நிகர ரன்ரேட்டில் உயர்ந்து ப்ளே ஆஃப் செல்லலாம். நாளை ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் ஆர்சிபி ப்ளே ஆஃப் கனவு கலைந்துவிடும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)