சூடாகும் உதகை: வறண்ட அணைகள், பூமிக்குள் வெடிக்கும் காரட் - பிபிசி கள ஆய்வு

வறண்டுபோகும் ஊட்டி
    • எழுதியவர், ச.பிரசாந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

நீலகிரி மாவட்டம் உதகையில் 38 ஆண்டுகளுக்குப்பின் 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வறட்சியும், அதீத வெப்பநிலையும் காய்கறிகள் சாகுபடி, காட்டுயிர்ச்சூழல், சுற்றுலா என ஒட்டுமொத்த நீலகிரியையும் கடுமையாக பாதித்துள்ளது.

பிபிசி கள ஆய்வில் பதிவு செய்யப்பட்ட பாதிப்புகள் என்ன? இந்த வெப்பநிலைக்கான காரணம் என்ன?

உதகை
படக்குறிப்பு, ஊட்டி அருகேயுள்ள எமரால்ட் அணையில் கடந்தாண்டு பருவமழையின் போது நிரம்பியிருந்த தண்ணீர் தற்போது முற்றிலுமாக வறண்டுள்ளது

குளிரான உதகையை சுட்டெரித்த வெயில்!

மேற்குத்தொடர்ச்சி மலையின் முக்கிய பல்லுயிர் பெருக்க மண்டலமான உதகையில், ஆண்டு முழுவதிலும் குளிர் நிலவுவதால் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

ஆண்டு முழுவதிலும் குளிர் நிலவுவதால், இங்கு தேயிலை சாகுபடியும், கேரட், பீட்ரூட், முள்ளங்கி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளும் சாகுபடி செய்யப்படுகின்றன. சுற்றுலா, தேயிலை மற்றும் காய்கறிகள் சாகுபடி நீலகிரியின் அடையாளங்களாக உள்ளன.

உதகையை பொறுத்தவரையில் ஆண்டு தோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸிற்கும் குறைவாகவும், கோடை காலங்களில் குறைந்தபட்சமாக 12 டிகிரி முதல் அதிகபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் வரையிலும் நிலவும் என்கிறது வானிலை ஆய்வு மைய புள்ளிவிவரம்.

இப்படியான நிலையில், இந்தாண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி முதல் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு உதகையில் 29 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது.

உதகை ஊட்டி கோடை வெப்பம்
படக்குறிப்பு, 1969ஆம் ஆண்டிலிருந்து ஊட்டியில் ஏப்ரல் மாதம் பதிவான அதிகபட்ச வெப்பநிலை

உதகையில் அதிக வெப்பம் ஏன்?

இந்த திடீர் வெப்பநிலை உயர்வுக்கான காரணங்களை விளக்கிய, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன், ‘‘1951ம் ஆண்டு காலநிலை ஆய்வு மையம் அமைக்கப்பட்ட பின், 1969 ஏப்ரல் 11ம் தேதி ஊட்டியில் 28.1 டிகிரி செல்சியஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பின், 1986ம் ஆண்டு 28.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதுவரையில் பதிவானதை காட்டிலும் இந்த ஆண்டுதான் அதிகபட்சமாக 29 டிகிரியை கடந்துள்ளது. இது உதகையின் சராசரி வெப்பநிலையில் விட 5 டிகிரி செல்சியஸுக்கும் அதிகம்,’’ என்கிறார் அவர்.

வெப்பநிலை அதிகரிப்பிற்கான காரணத்தை முன்வைத்த பாலச்சந்திரன், ‘‘காலநிலை மாற்றம், எல் நினோ பாதிப்பு, நீலகிரியில் கடந்த 25 ஆண்டுகளாக நடந்துள்ள சூழல் மாற்றங்கள், காடுகள் அழிப்பு காரணமாகத்தான் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. இவை தான் ஒரு பகுதியில் வெப்பநிலை மற்றும் மழை பொழியும் சூழலை நிர்ணயிக்கும்’’ என்கிறார் அவர்.

ஊட்டி கோடை வெப்பம்
படக்குறிப்பு, "இந்தாண்டு மார்ச் முதல் ஏப்ரல் வரையில் மழையின்றி வறட்சி ஏற்பட்டதுடன், பல ஆண்டுகளுக்குப்பின் 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது" என்கிறார் விவசாயி தன்விஷ்.

'காய்கறிகள் சாகுபடியில் 50% மகசூல் குறைவு’

அதீத வெப்பநிலையால் காய்கறி சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் விவசாயி தன்விஷ் (30).

கேரட் தோட்டத்தின் ஒவ்வொரு பகுதியையும், அறுவடைப் பணிகளையும் நம்மிடம் காண்பித்துக் கொண்டே பேசத் துவங்கிய தன்விஷ், ‘‘எட்டு ஆண்டுகளாக முழு நேரமாக விவசாயம் செய்கிறேன். கேரட், பீட்ரூட், முள்ளங்கி போன்ற மண்ணுக்குள் விளையும் காய்கறிகள், ஸ்ட்ராபெரி போன்றவை அதிகபட்சமாக 22 – 24 டிகிரி செல்சியஸ் வரை தான் தாங்கும்."

"இந்தாண்டு மார்ச் முதல் ஏப்ரல் வரையில் மழையின்றி வறட்சி ஏற்பட்டதுடன், பல ஆண்டுகளுக்குப் பின் 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால், காய்கறிகளின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு 50 சதவீதம் வரை மகசூல் குறைந்துள்ளது,’’ என்கிறார் அவர்.

உதகை ஊட்டி கோடை வெப்பம்
படக்குறிப்பு, வெப்பத்தால் பூமிக்குள்ளேயே வெடித்து காணப்படும் கேரட்

பூச்சிக்களின் தாக்குதல் அதிகரிப்பு

அறுவடை நடக்கும் பகுதிக்கு நம்மை அழைத்துச் சென்று பாதிப்புகளை விளக்க, அங்கு குவிக்கப்பட்டிருந்த தரமான கேரட் மற்றும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்பட்ட கேரட்டை பிரித்து காண்பித்தார்.

‘‘இந்தாண்டு மழை குறைந்ததால் மண்ணில் ஈரப்பதம் மிகவும் குறைந்து, எவ்வளவு நீர் தெளித்தாலும் மண் ஈரப்பதமின்றி காய்ந்து விடுகிறது. அதிக வெப்பநிலையால் காய்கறிகள் மண்ணிற்குள்ளேயே வெடித்தும், கோடுகள் விழுந்தும் தரம் பாதித்து, மகசூல் 50 சதவீதம் வரையில் குறைந்துள்ளது. பூச்சிகளின் தாக்குதல் அதிகரித்து அவற்றை கட்டுப்படுத்த முன்பு ஏக்கருக்கு 5 மில்லி லிட்டர் பூச்சி மருந்து தெளித்த நிலையில், தற்போது 30 மில்லி லிட்டர் பயன்படுத்த வேண்டியுள்ளது,’’ என்று தன்விஷ் கூறினார்.

உதகை ஊட்டி கோடை வெப்பம்
படக்குறிப்பு, நீலகிரி காய்கறிகளுக்கு இனி விலை அதிகரிக்கும் என்கிறார் காய்கறி விவசாயி முத்துக்குமார்.

தன்விஷ் போலவே, விளைநிலத்தில் பூச்சி தாக்குதல்களை தானும் எதிர்கொண்டதாக தெரிவிக்கிறார் மற்றொரு விவசாயி பிரகாஷ்.

‘‘கேரட், முள்ளங்கி உள்பட பலவகை காய்கறிகள் சாகுபடி செய்துள்ளேன். வெப்பநிலை அதிகரித்ததுடன், வறட்சி ஏற்பட்டதால், காய்கறிகளுக்கு நன்மை செய்யும் பூச்சிக்களின் எண்ணிக்கை குறைந்து தீமை செய்யும் பூச்சிக்களின் தாக்குதல் மிகவும் அதிகரித்துள்ளது. ஒட்டுப்பொறி, பூச்சி மருந்து என பலமுறைகளை கையாண்டும் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை,’’ என வருத்தத்துடன் பிரகாஷ் தெரிவித்தார்.

உதகை ஊட்டி கோடை வெப்பம்
படக்குறிப்பு, உதகையில் விளைவிக்கப்படும் முட்டைகோஸ்

வறட்சியின் பிடியில் முக்கிய அணைகள்

விவசாயிகளின் பாதிப்புகளை பதிவு செய்த நாம், அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா அணைகளை பார்வையிட்ட போது அவற்றின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து கிட்டத்தட்ட முழுமையாக வறண்ட நிலையில் இருந்ததை காண முடிந்தது.

உதகையில் அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா, முக்கூர்த்தி உள்பட மொத்தமுள்ள ஆறு அணைகள் 90 சதவீதம் வறண்டுள்ளதாகவும், அணைகளின் நீர் வழித்தடமான வனமும் வறட்சியின் பிடியில் உள்ளதாக சூழலியலாளர்கள் தெரிவித்தனர்.

உதகை ஊட்டி கோடை வெப்பம்
படக்குறிப்பு, " அதீத வெப்பத்தால் அணைப்பகுதிக்கு நீர் தரக்கூடிய சோலைக்காடுகளும், வனப்பகுதியும் பசுமை இழந்து வறட்சியாக காணப்படுகின்றன" என்கிறார் சூழலியலாளர் ஜனார்த்தன் நஞ்சுண்டன்.

‘வன விலங்குகள் குடியிருப்பை தேடி வருகின்றன’

நம்மிடம் பேசிய நீலகிரியை சேர்ந்த சூழலியலாளர் ஜனார்த்தன் நஞ்சுண்டன், ‘‘வெப்பநிலை அதிகரித்துள்ளதுடன் இந்தாண்டு மழையின்றி வறட்சியும் ஏற்பட்டு உள்ளதால், அணைப்பகுதிக்கு ஆண்டு முழுவதிலும் நீர் தரக்கூடிய சோலைக்காடுகளும், வனப்பகுதியும் பசுமை இழந்து வறட்சியாக காணப்படுகின்றன."

"காடுகளில் நாங்கள் ஆய்வு செய்த போது, யானை, காட்டு மாடு, சிறுத்தை என பல வனவிலங்குகள் தண்ணீரின்றி தவிப்பதை காண முடிந்தது. அவை குடிநீர், உணவு தேடி உதகை நகர் பகுதிக்குள் வருவதையும் பார்க்க முடிகிறது,’’ என்கிறார் அவர்.

வறட்சியால் காட்டுயிர்கள் வேறு பகுதிகளைத் தேடி பயணிப்பதாக தெரிவிக்கிறார், நீலகிரி என்விரோன்ட்மென்ட் மற்றும் கல்ச்சுரல் சர்வீஸஸ் டிரஸ்ட் நிறுவனர் சிவதாஸ்.

‘‘கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களின் வனப்பகுதி எல்லையாக நீலகிரி மாவட்டம் அமைந்துள்ளது. இந்த அதீத வெப்பம் மற்றும் மழையில்லாத சூழலால் காட்டுயிர்கள் உணவு நீர் தேடி குடியிருப்புகளுக்கு வருவது மட்டுமின்றி, மற்ற மாநிலத்தின் வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்து செல்கின்றன,’’ என்கிறார் சிவதாஸ்.

"நீலகிரியின் சோலைக்காடுகளில் உற்பத்தியாகும் நீர், நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாய பாசனத்திற்கும் உயிர்நாடியாக உள்ளது. இந்த வறட்சி நிச்சயம் வரும் நாட்களில் மற்ற மாவட்டங்களையும் பாதிக்கும்" என்கிறார் சிவதாஸ்.

உதகை ஊட்டி கோடை வெப்பம்
படக்குறிப்பு, அதீத வெப்பம் மற்றும் மழையில்லாத சூழலால் காட்டுயிர்கள் உணவு நீர் தேடி குடியிருப்புகளுக்கு வருவது மட்டுமின்றி, மற்ற மாநிலத்தின் வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்து செல்கிறது,’’ என்கிறார் சிவதாஸ்.

"சூடான ஊட்டியாக மாறிவிட்டது"

தொடர்ந்து பல ஆண்டுகளாக உதகைக்கு சுற்றுலா வரும் சிலரிடம் நாம் பேசிய போது அவர்கள், ‘இதுவரை கோடை சுற்றுலாவில் நாங்கள் பார்த்திராத உதகையை காண்கிறோம். சமவெளிப்பகுதிகளைப் போல இங்கும் வெப்பம் அதிகமாக உள்ளது,’’ என்றனர்.

இதுவரையில் உதகையில் நாங்கள் மின் விசிறி, ஏசி பயன்படுத்தியது இல்லை, இந்த வெப்பநிலையால் சமவெளிப்பகுதி போல் அவற்றை பயன்படுத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் ஊட்டியில் வசிக்கும் 78 வயதான தாஸ்.

நம்மிடம் பேசிய தாஸ், ‘‘எனக்கு விபரம் தெரிந்து, வெப்பநிலை அதிகரித்தாலும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருந்துள்ளது. இந்தாண்டு போல் தொடர்ந்து அதிக வெப்பநிலையை நான் பார்த்தது இல்லை. இனி நீங்கள் சூடான உதகைக்குதான் சுற்றுலா வர முடியும்,’’ என்கிறார் அவர்.

உதகை ஊட்டி கோடை வெப்பம்
படக்குறிப்பு, "இந்தாண்டு உதகையில் 29 டிகிரி செல்சியஸும், கோத்தகிரி, குன்னூர், கூடலூரில் அதைவிட அதிக வெப்பம் பதிவாகியுள்ளது" என்கிறார் மாவட்ட ஆட்சியர் அருணா.

’50 ஆண்டுகளாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது’

பிபிசி தமிழிடம் பேசிய ஆட்சியர் அருணா, ‘‘தரவுகளை நாங்கள் ஆய்வு செய்த போது உதகையில் 50 ஆண்டுகளாக தொடர்ந்து வெப்பநிலை உயர்ந்து வருவது தெரியவருகிறது. இந்தாண்டு உதகையில் 29 டிகிரி செல்சியஸும், கோத்தகிரி, குன்னூர், கூடலூரில் அதைவிட அதிகமாகவும் வெப்பம் பதிவாகியுள்ளது." என்றார்.

"குடியிருப்புகள் அதிகரிப்பு, சுற்றுலா பயணிகளின் வாகனங்களில் வெளியாகும் கார்பன் டை ஆக்ஸைடு அதிகரிப்பு என பல காரணங்களால் இது நடந்துள்ளது. தற்போது, கட்டங்கள் அதிகம் கட்டப்படுவதை தடுக்க பல விதிமுறைகளை வகுத்துள்ளோம். சர்க்யூட் பஸ் சேவை துவங்கி, அதிக வாகனங்களில் செல்வதற்கு பதிலாக பல சுற்றுலா பயணிகளை பஸ்களில் பயணிக்க வைக்கிறோம். விரைவில் எலெக்ட்ரிக் பஸ் பயன்படுத்தப்படும்,,’’ என்றார்.

"காடுகளின் பரப்பு குறையாமல் பாதுகாத்து மழையை அதிகரிக்கவும், சுற்றுச்சூழல் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிப்படுத்தவும், விவசாயிகளின் பாதிப்புகளுக்கு தீர்வு காணவும் தனியாக காலநிலை கமிட்டி அமைத்துள்ளோம். அனைத்து துறைகளையும் அழைத்து நீலகிரியின் சூழலை பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் செய்கிறோம்,’’ என ஆட்சியர் அருணா விளக்கம் அளித்துள்ளார்.

உதகை ஊட்டி கோடை வெப்பம்
படக்குறிப்பு, முளைக்கும்போதே தரம் பாதிக்கப்பட்டுள்ள கேரட்

'தொடர்ந்து அறிவுரை வழங்கி வருகிறோம்'

பூச்சி தாக்குதலை குறைக்க தோட்டக்கலைத்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என உதகை தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் ஷிபிலா மேரியிடம் நாம் விளக்கம் கேட்டோம்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர்," வெப்பம் அதிகரித்துள்ளதால் பூச்சி தாக்குதல் அதிகரித்து, காய்கறிகள் சாகுபடி கணிசமாக பாதித்துள்ளது. விவசாயத் தோட்டங்களில் ஆய்வு செய்து எந்த வகையான பூச்சி தாக்குதல் அதிகம் உள்ளது என்பதை கண்டறிந்து, அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இனி வரும் நாட்களில் இயற்கை காரணங்களால் பாதிப்பு ஏற்பட்டால் விவசாயிகள் இழப்பீடு பெற காப்பீடு செய்யவும் அறிவுரை வழங்கியுள்ளோம்," என்கிறார் அவர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)