ஐபிஎல் தொடரால் இந்திய மகளிர் அணியை புறக்கணிக்கிறதா பிசிசிஐ? ரசிகர்களுக்கு தெரியாமல் போன சாதனைகள்

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியை புறக்கணிக்கிறதா பிசிசிஐ

பட மூலாதாரம், PHOTO BY SAZZAD HOSSAIN/SOPA IMAGES/LIGHTROCKET VIA GETTY IMAGES

படக்குறிப்பு, மே 5 அன்று டாக்காவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஹர்மன்ப்ரீத் கவுர்.
    • எழுதியவர், ஷார்தா உக்ரா
    • பதவி, மூத்த விளையாட்டு செய்தியாளர்

மே 6 அன்று வங்கதேசத்தின் சில்ஹெட் நகரில் நடந்த சர்வதேச மகளிர் டி20 போட்டியில் முதன்முறையாக இந்தியாவுக்காக விளையாட களமிறங்கிய போது, கிரிக்கெட் வீராங்கனை ஆஷா ஷோபனா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. 33 வயதில் சர்வதேச போட்டிகளில் விளையாட அறிமுகமானதன் மூலம், அதிக வயதில் அறிமுகமான இந்திய வீராங்கனை என்ற பெருமையும் இவருக்கு கிடைத்துள்ளது.

நடந்து முடிந்த வங்கதேசத் தொடரை ஒளிபரப்பிய சேனல், ஷோபனாவின் அறிமுகப் போட்டிக்கு பிறகு அவரை மைதானத்தில் வைத்து நேர்காணல் செய்தது. அப்போது அருகில் நின்றிருந்த இந்திய வீராங்கனைகள் ஷோபனாவின் பேச்சைக் கேட்டு மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசுவதற்காக செய்தியாளர் சந்திப்பு அறையை ஆஷா ஷோபனா அடைந்தபோது, ​​அங்கு ஒரு பத்திரிகையாளர் மட்டுமே அவருக்காக காத்திருந்தார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

இந்த டி20 தொடரில் 5-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்திருந்தது இந்தியா. இளம் கேப்டனையும், ஆற்றல் நிறைந்த வீராங்கனைகளையும் கொண்ட வங்கதேச அணியை வீழ்த்தியிருந்தது இந்திய பெண்கள் அணி.

இந்த தொடரின் கடைசி ஆட்டத்தில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ராதா யாதவ் ஆட்டநாயகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முழு தொடரிலும் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் தொடரின் நாயகியாகவும் அவர் அறிவிக்கப்பட்டார்.

ஃபேன்கோட் ஸ்ட்ரீமிங் சேவை மட்டும் இல்லை என்றால், இந்தத் தொடர் நடந்ததே வெளியே தெரியாமல் போயிருக்கும். இவ்வளவு சிறப்பான வெற்றியைப் இந்திய மகளிர் அணி பதிவு செய்தும் அது குறித்து பெரிதாக பேசப்படாதது ஏன்?

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியை புறக்கணிக்கிறதா பிசிசிஐ

பட மூலாதாரம், SAJJAD HUSSAIN/AFP VIA GETTY IMAGES

படக்குறிப்பு, பெண்கள் பிரிமியர் லீக் 2024 போட்டியில் ஆஷா ஷோபனா.

பிசிசிஐ செய்தது என்ன?

இந்தத் தொடர் ஐபிஎல் நடக்கும் அதே சமயத்தில் நடைபெற்றதால், இதுகுறித்த செய்திகளை வழங்க இந்திய ஊடக நிறுவனங்கள் தங்களது செய்தியாளர்களை வங்கதேசத்திற்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமற்ற ஒன்றாக இருக்கும்.

ஏனென்றால் ஊடக உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு செய்திப் பிரிவுகள் இந்த சமயத்தில் மிகக் குறைந்த செய்தியாளர்களைக் கொண்டே வேலை செய்கின்றன. ஆனால் இந்த முழு விவகாரத்திலும் பிசிசிஐயின் நிலைப்பாடு தான் மிகவும் ஆச்சரியமாக உள்ளது.

ஆன்லைன் நேரடி ஒளிபரப்பு வர்ணனையைத் தவிர வேறு எதையும் பிசிசிஐ செய்யவில்லை.

ஐபிஎல் போட்டிகளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள அபரிமிதமான தகவல்களைத் தவிர்த்து, ஒவ்வொரு நாளும் ஊடகங்களுக்கு ஐபிஎல் குறித்து அதிகளவிலான செய்திகளை அனுப்புகிறது பிசிசிஐ.

செய்தியாளர் சந்திப்புகள், நடுவர் முடிவுகள் மற்றும் சமூக ஊடக செயல்பாடுகளுக்கான இணைப்புகள் இதில் அடங்கும். ஆனால் பெண்கள் டி20 தொடர் குறித்து முழு அமைதி காக்கிறது பிசிசிஐ.

ஒரு வகையில், பிசிசிஐயின் ஊடகக் குழு, பெண்கள் தொடர் பற்றிய செய்திகளில் இருந்து முழுமையாக விலகிக் கொண்டது. தொடர் குறித்த மின்னஞ்சல்கள் இல்லை, ஆன்லைன் பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கான இணைப்புகள் இல்லை, காணொளிகள் இல்லை, சமூக ஊடகப் பதிவுகள் கூட இல்லை.

இந்த வங்கதேச தொடர் முழுவதும், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பல சாதனைகள் படைத்துள்ள நிலையில், இத்தகைய புறக்கணிப்பு நடந்துள்ளது.

ஆஷா ஷோபனாவின் சர்வதேச போட்டிகளுக்கான அறிமுகம் மட்டுமல்லாது, ஹர்மன்ப்ரீத் கவுர் தனது 300வது சர்வதேச போட்டியிலும், ஷெபாலி வர்மா தனது 100வது சர்வதேச போட்டியிலும் விளையாடினார்கள்.

இந்த தொடரில், சர்வதேச மகளிர் டி20 போட்டியில் இந்தியாவுக்காக 2,000 ரன்களைக் கடந்த முதல் ஜோடி என்ற பெருமையை ஷெபாலி - ஸ்மிருதி மந்தனா ஜோடி பெற்றுள்ளது.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியை புறக்கணிக்கிறதா பிசிசிஐ

பட மூலாதாரம், PHOTO BY SAZZAD HOSSAIN/SOPA IMAGES/LIGHTROCKET VIA GETTY IMAGES

படக்குறிப்பு, ஹர்மன்ப்ரீத் கவுர்

ஊடக மேலாளரையும் காணவில்லை

பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள சர்வதேச மகளிர் அணிக்கான பக்கத்தில் ‘ஏப்ரல் 15’ அன்று வெளியான செய்தி மட்டுமே உள்ளது. அதன் பிறகு எந்த செய்தியும் இல்லை.

ஏப்ரல் 15ஆம் தேதி வெளியான அந்தச் செய்தி, வங்கதேசத்துடனான டி20 தொடருக்கான இந்திய மகளிர் அணியின் அறிவிப்பு பற்றியது.

இந்தப் பிரிவில் கடைசியாக பதிவேற்றப்பட்ட காணொளி ஏப்ரல் 28, 2024 என்ற தேதியில் இருந்தது. அதில் வங்கதேசத்துடனான முதல் டி20 போட்டிக்குப் பிறகு யாஸ்திகா பாட்டியா பேசுவதைக் காண முடிந்தது.

ஊடக மேலாளர் இல்லாமல் இந்திய மகளிர் அணி வங்கதேசம் சென்றது. ஊடக மேலாளர் என ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தாலும் கூட அவரை எங்கும் காணவில்லை.

ஒரு போட்டி குறித்த அடிப்படை விஷயங்களை ஊடக நிறுவனங்களுக்கும், நிருபர்களுக்கும் தெரிவிப்பதில், ஊடக மேலாளரின் பங்கு முக்கியமானது. அணியின் சுற்றுப்பயணத்தின் போது நாட்டின் ஊடக நிறுவனங்களுக்கு போட்டிகள் தொடர்புடைய தகவல், சிறப்பு அம்சங்கள் மற்றும் நேர்காணல்கள் ஆகியவற்றை அவர் வழங்குவார்.

ஆனால் இப்போது தேர்தல் மற்றும் ஐபிஎல் ஆகிய இரண்டு காரணங்களால் செய்தித்தாள்களில் அதிக இடம் இல்லை என்பது உண்மை தான். அதே வேளை, பிசிசிஐயின் மீடியா பிரிவில் பணிபுரிபவர்கள் தயார் செய்து கொடுக்கும் நல்ல செய்திகள், தகவல்களை வெளியிடுவதில் டிஜிட்டல் மீடியாவுக்கு எந்த பிரச்னையும் இருப்பதில்லை.

எனவே பெண்கள் கிரிக்கெட் குறித்த செய்திகளை முன்னெடுத்துச் செல்வதும், ஊக்குவிப்பதும், மேம்படுத்துவதும் பிசிசிஐயின் நோக்கமாக இருந்திருந்தால் இது நடந்திருக்கும்.

வங்கதேசத்திற்கு வெளியே, இந்தியாவை தளமாகக் கொண்ட நிருபர்கள், இந்த டி20 தொடரை குறித்த செய்திகளை மக்களுக்கு வழங்க விரும்பிய போது, தங்களது தனிப்பட்ட தொடர்புகளைப் பயன்படுத்தியே அதைச் செய்ய வேண்டியிருந்தது.

தங்களது நண்பர்கள், வங்கதேசத்தில் உள்ள சக செய்தியாளர்கள் மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தையும் தொடர்பு கொண்டு செய்திகளை சேகரித்தனர்.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியை புறக்கணிக்கிறதா பிசிசிஐ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியது என்ன?

வியாழன் இரவு, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மும்பையில் சில பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பில், வீடியோ அல்லது ஆடியோ பதிவு செய்ய ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. குறிப்புகளை எடுத்துக்கொள்வதன் மூலம் மட்டுமே அவர்களால் தகவல்களைப் பதிவு செய்ய முடியும்.

அங்கு வந்திருந்த பத்திரிகையாளர்கள் இந்திய மகளிர் அணிக்கான எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஷாவிடம் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த அவர், “அக்டோபர் 3 முதல் 20 வரை வங்கதேசத்தின் டாக்கா மற்றும் சில்ஹெட்டில் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. அங்குள்ள கள நிலைமைகளை இந்திய மகளிர் அணி அறிந்து கொள்ளவே, சமீபத்தில் முடிவடைந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் போட்டிகள் நடத்தப்பட்டன.” என்றார்.

ஐந்து மாதங்களுக்குப் பிறகு, அதுவும் பருவமழைக்குப் பிறகு ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

பெண்கள் பிரீமியர் லீக் (WPL) அற்புதமான வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், டிக்கெட் விற்பனையில் மட்டும் 5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் ஷா கூறினார்.

பெண்கள் கிரிக்கெட்டில் தனது அர்ப்பணிப்பைப் பற்றி பெருமை கொள்கிறார் ஷா.

செய்தி நிறுவனமான பி.டி.ஐ. தகவல்படி, “பெண்கள் கிரிக்கெட் வலுவடைந்து வருவதாகவும், ஆண்கள் கிரிக்கெட்டிற்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இதற்கும் கொடுக்கப்படுகிறது” என்று ஷா கூறியுள்ளார்.

“ஆண்கள் கிரிக்கெட்டில் நாங்கள் சிறப்பாக செயல்படுவதால், 51 சதவீதம் பெண்கள் கிரிக்கெட்டிலும், 49 சதவீதம் ஆண்கள் கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்துகிறோம். அதனால் தான் பெண்கள் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம்.

போட்டிகளுக்கான ஊதியத்தையும் உயர்த்தியுள்ளதால் வீராங்கனைகளுக்கும் அதிக வருமானம் கிடைக்கும்.” என்று கூறினார் பிசிசிஐ செயலாளர் ஷா.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியை புறக்கணிக்கிறதா பிசிசிஐ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிரிக்கெட் வீராங்கனை ஷெபாலி வர்மா

பெண்கள் கிரிக்கெட்டில் 51 சதவீதம் கவனம் செலுத்துவது நல்லது தான். ஆனால் வங்கதேசத்துடனான டி20 தொடர் விஷயத்தில் அது உண்மையாக இருக்காது.

ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வங்கதேசம் சென்ற இந்தியா ‘ஏ’ ஆடவர் அணியுடன் ஊடக மேலாளர் சென்றிருக்கவில்லை என்றால், அங்கிருந்து தலைமையகத்திற்கும் இந்திய ஊடகங்களுக்கும் போட்டிகள் குறித்த தகவல்கள், செய்திகளை அனுப்பியிருக்க மாட்டார்கள்.

போட்டி ஊதியத்தை உயர்த்தும் முடிவு நல்லதாக தோன்றினாலும், பெண்கள் கிரிக்கெட்டுக்காக முறையாக ஒரு காலண்டர் தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு சீசனிலும் போதுமான போட்டிகளை அவர்கள் விளையாடினால் மட்டுமே அது பலன் தரும்.

வருடம் முழுவதும் பெண்கள் கிரிக்கெட்டுக்கு உதவுவது பற்றி பேசுவதற்கும் அதை நடைமுறைப்படுத்துவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.

தலைப்புச் செய்திகளில் இடம்பெற வேண்டுமென ஒருவர் நினைக்கும்போது மட்டும் இதைச் செய்யக்கூடாது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)