ஐபிஎல் பிளேஆப்: ஆர்சிபியுடன் மோசமாகத் தோற்றாலும் பிளேஆப் சுற்றுக்கு சிஎஸ்கே தகுதிபெற முடியுமா?

பட மூலாதாரம், Getty Images
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பஞ்சாப் அணியிடம் தோற்றதால், அந்த அணி பிளேஆப் சுற்றின் முதல் இரண்டு இடத்தைப் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் சிஎஸ்கே, ஹைதராபாத் அணிகள் முதல் இரண்டு இடங்களைப் பிடிப்பதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
ஏற்கெனவே கொல்கத்தா அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், ராஜஸ்தான் அணியும் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. 2 இடங்களுக்கு சிஎஸ்கே, ஆர்சிபி, ஹைதராபாத் அணிகள் தீவிரமாகப் போட்டியிடுகின்றன. அதே நேரத்தில் டெல்லி மற்றும் லக்னௌ அணிகளுக்கு மிகச் சொற்பமான வாய்ப்பும் இருக்கிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 13 போட்டிகளில் 9 வெற்றி 3 தோல்வி, ஒரு ரத்து என 19 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்து, நிகர ரன்ரேட்டிலும் வலுவாக 1.428 என இருக்கிறது.
அடுத்த இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 போட்டிகளில் 8 வெற்றி, 5 தோல்வி என 16 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் நீடிக்கிறது. தொடர்ந்து 4 தோல்விகளைச் சந்தித்தாலும், ராஜஸ்தான் அணி தனது 2-ஆவது இடத்திலிருந்து கீழே இறங்கவில்லை. நிகர ரன்ரேட் 0.273 எனக் குறைந்திருக்கிறது. எனினும் பிளேஆப் சுற்றுக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டது.
குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளின் ப்ளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துவிட்டது. டெல்லி, லக்னௌ அணிகளுக்கும் ஏறக்குறைய அதே நிலைதான்.

பட மூலாதாரம், Getty Images
சிஎஸ்கே அணிக்கு இரண்டாவது இடம் கிடைக்குமா?
சிஎஸ்கே அணி 13 போட்டிகளில் 7 வெற்றி, 6 தோல்வி என 14 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் நீடித்து வருகிறது. நிகர ரன்ரேட்டில் ராஜஸ்தான் அணியை விட உயர்ந்து 0.528 என வலுவாக இருக்கிறது. சிஎஸ்கே அணி கடைசி லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை வரும் சனிக்கிழமை எதிர்கொள்கிறது.
இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வென்றால், 16 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்யும். ஏற்கெனவே வலுவான நிகர ரன்ரேட்டில் சிஎஸ்கே அணி இருப்பதால், 16 புள்ளிகளுடன் சன்ரைசர்ஸ் சிஎஸ்கே ப்ளே ஆஃப் சுற்றில் 3-ஆவது அல்லது 4-ஆவது இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது.
ஒருவேளை சிஎஸ்கே அணி கடைசி லீக் ஆட்டத்தில் ஆர்சிபியுடன் தோல்வி அடைந்தாலும், மிகக் குறைந்த ரன்கள் வித்தியாசம் மட்டுமே இருந்தால் சிஎஸ்கே அணிக்கு 4-ஆவது இடம் கிடைக்க வாய்ப்புண்டு.
உதாரணத்துக்கு ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் எடுத்தால் சிஎஸ்கே அணி 18 ரன்களுக்குக் குறைவான ரன்கள் வித்தியாசத்தில் தோற்க வேண்டும். அல்லது சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் எடுத்தால், அதிகபட்சமாக 10 க்கும் குறைவான பந்துகள் இருக்கும்போது தோற்க வேண்டும். அப்படி நடந்தால் சிஎஸ்கே தோற்றாலும் 4-ஆவது இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது.
சிஎஸ்கே அதிக ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபியுடன் தோற்றால், சன்ரைசர்ஸ் அணி தனது கடைசி இரு ஆட்டங்களிலும் மோசமான தோல்வியைச் சந்தித்தால் மட்டுமே, சிஎஸ்கே அணிக்கு வாய்ப்புக் கிடைக்கும்.

பட மூலாதாரம், Getty Images
டெல்லி கேபிடல்ஸ்க்கு வாய்ப்புள்ளதா?
தனது கடைசிப் போட்டியில் லக்னௌவை வென்ற டெல்லி அணி 14 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்தில் இருக்கிறது. ஆனால், நிகர ரன்ரேட் மைனஸ் 0.377 ஆக இருக்கிறது.
சன்ரைசர்ஸ், சிஎஸ்கே, ஆர்சிபி, லக்னௌ ஆகிய அணிகளில் மூன்று அணிகள் தங்களது கடைசிப் போட்டிகளிலும் மோசமாகத் தோற்க வேண்டும். அப்படி நடந்தால் கணக்கீட்டு அடிப்படையில் சிறிய அளவில் டெல்லிக்கு வாய்ப்பு உண்டு.

பட மூலாதாரம், Getty Images
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ப்ளே ஆஃப் வாய்ப்பு எப்படி?
சன்ரைசர்ஸ் அணி 12 போட்டிகளில் 14 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட்டில் 0.406 என வலுவாக இருந்தாலும், சிஎஸ்கே அணியைவிட குறைவுதான். சன்ரைசர்ஸ் அணி தனக்கிருக்கும் இரு ஆட்டங்களிலும் வென்றால் 18 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யலாம். இரண்டாவது இடம்கூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
ஒருவேளை சன்ரைசர்ஸ் அணி ஒரு ஆட்டத்தில் வென்று, ஒரு ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் 16 புள்ளிகள்தான் கிடைக்கும். இருப்பினும் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.
ஆனால் இரு ஆட்டங்களிலும் சன்ரைசர்ஸ் தோற்றால், ரன்ரேட் அடிப்படையில் ஆர்சிபியும், சென்னையும் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கு வாய்ப்புள்ளது. அப்போது, சன்ரைசர்ஸ் வெளியேறும்.

பட மூலாதாரம், Getty Images
லக்னெளவுக்கு இனியும் வாய்ப்பு இருக்கிறதா?
லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 12 புள்ளிகள் பெற்றிருந்தாலும், நிகர ரன்ரேட் படுமோசமாக மைனஸ் 0.787 என்று குறைந்துள்ளது. அடுத்த ஆட்டத்தில் வென்றாலும் நிகர ரன்ரேட் அந்த அணிக்கு பெரிய தடைக்கல்லாக மாறியுள்ளது.
லக்னெள அணி 14 புள்ளிகள் பெறும் பட்சத்தில் கொல்கத்தா, சன்ரைசர்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோசமாகத் தோற்றால், ப்ளே ஆஃப் சுற்று உறுதி செய்யலாம். ஆனால் கடைசிப் போட்டியில் லக்னௌ அணி மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
ஆர்சிபி ப்ளே ஆஃப் செல்லுமா?
ஆர்சிபி அணி தொடர்ந்து 5 வெற்றிகளுடன் 13 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது, நிகர ரன்ரேட் 0.387 என வலுவாக வைத்துள்ளது.
ஆர்சிபி அணி கடைசி லீக் ஆட்டத்தில் வென்றாலும் 14 புள்ளிகள்தான் பெற முடியும். அப்போது ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆப் செல்வதற்கு வாய்ப்புள்ளது.
அதேபோல் கணிசமான வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை ஆர்சிபி வெல்ல வேண்டும்.
உதாரணத்துக்கு ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் எடுத்தால் 18 ரன்களுக்கு அதிகமான வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். அல்லது சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் எடுத்தால், குறைந்தபட்சம் 10 க்கும் அதிகமான பந்துகள் இருக்கும்போது வெற்றிபெற வேண்டும். அப்படி நடந்தால் 3 அல்லது 4-ஆவது இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது.
ஒருவேளை சன்ரைசர்ஸ் அணி தனது அடுத்த இரு போட்டிகளிலும் மோசமாகத் தோற்று ரன்ரேட்டில் குறைந்தால், சிஎஸ்கே அணியை வென்றாலே ஆர்சிபி பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.

பட மூலாதாரம், Getty Images
சிஎஸ்கே, ஆர்சிபி இரு அணிகளும் பிளே ஆப் செல்ல முடியுமா?
கணக்கீட்டின் அடிப்படையில் இரு அணிகளும் பிளேஆப் செல்வதற்கும் வாய்ப்புள்ளது. இதற்கு சன்ரைசர்ஸ் அணி தனது இரு போட்டிகளிலும் மோசமாகத் தோல்வியடைய வேண்டும். அப்போது ரன்ரேட் குறைவதுடன், 14 புள்ளிகள் மட்டுமே பெற்றிருக்கும். அதன் பிறகு ஆர்சிபி அணி சென்னை அணியை குறைந்த ரன் வித்தியாசத்தில் தோற்கடிக்கும்போது இரு அணிகளுமே பிளே ஆப் செல்ல வாய்ப்புள்ளது. 4 அல்லது 5அணிகள் 14 புள்ளிகளுடன் இருக்கும்போது அதிக ரன்ரேட் வைத்திருப்பதால் ஆர்சிபி மற்றும் சென்னை அணிகளுக்கு வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












