ஓபியாய்டு: உலகையே போதைக்கு அடிமையாக்கும் மருந்துகளின் மையமாக சீனா மாறியது எப்படி?

உலகையே அச்சுறுத்தும் ஓபியாய்டுகள் - சீனா இதன் மையமாக மாறியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

மார்ச் 2024 இல், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் வியன்னாவில் ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் தொடர்பான ஆணையத்தில் உரையாற்றினார்.

இதன் போது, ​​அமெரிக்காவில் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களின் மரணத்திற்கு மிகப்பெரிய காரணம் சிந்தெடிக் மருந்துகள் (synthetic drugs - தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்னைகளுக்காக பயன்படுத்தப்படும் மனோவியல் மருந்துகள்) அல்லது செயற்கை ஓபியாய்டுகள் என்று அவர் கூறியிருந்தார்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் செயற்கை மருந்துகளை அதிக அளவில் உட்கொண்டதால் ஒரு லட்சத்து 8 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். அமெரிக்கா மட்டுமல்ல, கனடாவும் சக்தி வாய்ந்த செயற்கை ஓபியாய்டுகள் குறித்த பிரச்னையால் போராடி வருகிறது.

ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் செயற்கை ஓபியாய்டுகளின் அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவது கடினம். மேலும், செயற்கை ஓபியாய்டுகளை தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான பிரச்னை இப்போது உலகின் பல நாடுகளில் உள்ளது.

உலகில் எந்த ஒரு நாடும் இந்த பிரச்னையை தனியாக சமாளிக்க முடியாது என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் கூறினார்.

உலகளவில் செயற்கை ஓபியாய்டுகள் ஒரு பிரச்னையாக உள்ளதா என்பது குறித்து இக்கட்டுரையில் புரிந்துகொள்வோம்.

உலகையே அச்சுறுத்தும் ஓபியாய்டுகள் - சீனா இதன் மையமாக மாறியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

ஓபியாய்டுகள் என்றால் என்ன?

ரிக் ட்ரெபிள் ஒரு தடயவியல் வேதியியலாளர். அவர் மருந்துகளை தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான ஆய்வு மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட பிரிட்டன் அரசாங்கத்தின் குழுவின் ஆலோசகராக உள்ளார். அவர் பிபிசியுடன் பேசுகையில், செயற்கை ஓபியாய்டு என்பது ஓபியத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் பொருளின் அதே விளைவைக் கொண்ட ஒரு பொருள் என்று கூறினார்.

"ஓபியம் பாப்பி தாவரம் (ஓபியாய்டு மருந்துகளின் ஆதாரம்) அல்லது ஓபியத்தில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் ஓபியாய்டுகள் என்று அழைக்கப்படுகின்றன. உதாரணமாக, மார்ஃபின் மற்றும் ஹெராயின். இவை ஓபியம் பாப்பி போன்ற இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. அதேசமயம், செயற்கை ஓபியாய்டுகள் ஆய்வகங்களில் தயாரிக்கப்படுகின்றன. செயற்கை ஓபியாய்டுகள் மார்ஃபினை விட நூற்றுக்கணக்கான மடங்கு சக்தி வாய்ந்தவை" என்றார் அவர்.

தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படும் ஓபியாய்டுகள் நமது மூளையின் எந்த பகுதியை பாதிக்கிறதோ, அதே பகுதியை இந்த சிந்தெடிக் மருந்துகள் அல்லது செயற்கை ஓபியாய்டுகள் பாதிக்கின்றன. ஓபியாய்டுகள் வலி நிவாரணிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

ரிக் ட்ரெபிள் கூறுகையில், “செயற்கை ஓபியாய்டுகளில் ஒரு ஏற்பி உள்ளது, இது வலியைக் குறைக்க அல்லது நோயாளியை மயக்கமடையச் செய்யப் பயன்படுகிறது. ஆனால், இந்த ஏற்பியின் மோசமான விளைவு என்னவென்றால், அது ஒரு நபரின் சுவாச மண்டலத்தை அடக்குகிறது. இந்த ஓபியாய்டு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டால், அந்த நபர் மூச்சுத் திணறலால் இறக்கக்கூடும்" என்றார்.

உலகையே அச்சுறுத்தும் ஓபியாய்டுகள் - சீனா இதன் மையமாக மாறியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

தவறாகப் பயன்படுத்தப்படும் செயற்கை ஓபியாய்டுகள்

1950களில், மருந்து நிறுவனங்கள் ஓபியாய்டுகளின் நன்மை பயக்கும் பண்புகளைப் பிரதிபலிக்கும் அடிப்படையில், செயற்கை ஓபியாய்டுகளை உருவாக்கத் தொடங்கின. இப்போது சந்தையில் நூற்றுக்கணக்கான செயற்கை ஓபியாய்டுகள் உள்ளன.

ஃபெண்டானில் (Fentany)l என்பது அத்தகைய நன்கு அறியப்பட்ட செயற்கை ஓபியாய்டு ஆகும்.

ரிக் ட்ரெபிள் கூறுகையில், “அறுவை சிகிச்சைக்கு முன் நோயாளியை மயக்கமடையச் செய்ய பலமுறை செயற்கை ஓபியாய்டுகள் கொடுக்கப்படுகின்றன. அந்த நேரத்தில், நோயாளியின் சுவாசத்தைப் பராமரிக்க ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. மார்ஃபின் பயன்படுத்தினால், நோயாளி நீண்ட நேரம் மயக்கநிலையில் இருக்கிறார். ஆனால் செயற்கை ஓபியாய்டுகளைப் பயன்படுத்தினால் இது நடக்காது. பிரசவத்தின் போது வலியைக் குறைக்க செயற்கை ஓபியாய்டுகள் பயன்படுத்தப்படுகின்றன“ என்றார்.

புற்றுநோயாளிகளின் வலியைக் குறைக்க செயற்கை ஓபியாய்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. பல நாடுகளில், செயற்கை ஓபியாய்டுகள் வலி நிவாரணிகளாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், 1990களில், அதன் தவறான பயன்பாடு பற்றிய நிகழ்வுகள் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கின.

அமெரிக்காவில் சில மருத்துவர்கள் செயற்கை ஓபியாய்டுகளை அதிகமாகப் பரிந்துரைத்ததால், ஒரு சமூகத்தில் உள்ள ஏராளமான மக்கள் அதற்கு அடிமையாகியுள்ளனர் என்று ரிக் ட்ரெபிள் கூறுகிறார். அதன் அதிகப்படியான பயன்பாட்டை நிறுத்த அமெரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தபோது, ​​போதைக்கு அடிமையானவர்கள் மாற்று வழிகளைத் தேடத் தொடங்கினர். இந்த ஓபியாய்டு அமெரிக்க போதை மருந்து சந்தையில் ஹெராயினின் இடத்தைப் பிடித்துக்கொண்டது. மக்கள் ஹெராயினுக்குப் பதிலாக ஃபெண்டானில் பயன்படுத்தத் தொடங்கினர்.

உலகையே அச்சுறுத்தும் ஓபியாய்டுகள் - சீனா இதன் மையமாக மாறியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

பாதிக்கப்பட்ட உலக நாடுகள்

பல நாடுகளின் அரசாங்கங்கள் சட்டவிரோத ஓபியாய்டுகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளை தடை செய்துள்ளன.

ஆனால், சட்டவிரோதமாக இதனை உற்பத்தி செய்பவர்கள், அவற்றில் பயன்படுத்தப்படும் பொருட்களின் கலவையை மாற்றுவதன் மூலம் புதிய ஓபியாய்டுகளை தயாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

நெட்டாசின் ஓபியாய்டுகள் இப்போது பல இடங்களில் விற்கப்படுவதாக ரிக் ட்ரெபிள் கூறுகிறார். ஃபெண்டானிலை விட நெட்டாசின் வலிமையான மருந்து.

பிரிட்டனில் அளவுக்கதிகமாக நெட்டாசின் மருந்தை உட்கொண்டதால் இறந்த சம்பவங்களும் உள்ளன. பிரிட்டன் அரசாங்கம் ஃபெண்டானில் மற்றும் நெட்டாசின்-ஐ தடை செய்துள்ளது. ஆனால், பலர் இந்த மருந்துகளை இணையம் மூலம் பெற்று தங்கள் சுற்றுப்புற பகுதிகளில் விற்கின்றனர். உண்மையில், இப்போது செயற்கை ஓபியாய்டுகளின் தவறான பயன்பாடு உலகின் பல நாடுகளில் பரவியுள்ளது.

சிந்தெடிக் மருந்து பிரச்சனை

போதைப்பொருள் மற்றும் குற்றவியல் ஆய்வுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆராய்ச்சித் துறையின் தலைவர் டாக்டர் ஏஞ்சலா மே, உலகில் போதைப்பொருள் மற்றும் ஓபியாய்டை தவறாக பயன்படுத்துதல் பற்றிய தகவல்கள் மிகக் குறைவாகவே உள்ளன என்று கூறுகிறார்.

"உலகளவில் போதைப்பொருள் தொடர்பான இறப்புகளில் 70 சதவிகிதம் ஓபியாய்டு தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படுகிறது என்று மதிப்பிடலாம். மற்ற மருந்துகளுடன் ஒப்பிடும்போது ஓபியாய்டு பிரச்னை எவ்வளவு தீவிரமானது என்பதை இது காட்டுகிறது" என்கிறார் அவர்.

அமெரிக்காவில் இந்த பிரச்னைக்கு முக்கிய காரணம் ஃபெண்டானிலின் பயன்பாடு ஆகும். ஆனால், உலகின் பிற நாடுகளில் இந்த பிரச்னை மற்ற செயற்கை ஓபியாய்டுகளால் பரவுகிறது.

டாக்டர் ஏஞ்சலா மே கருத்துப்படி, செயற்கை ஓபியாய்டுகள் போதைக்காக உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்க பகுதிகளில் டிராமடோல் போதைக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

அவர் கூறுகையில், "நைஜீரியாவில் மட்டுமே இதைப் பயன்படுத்துவோர் குறித்த உறுதியான எண்ணிக்கை எங்களிடம் உள்ளன. அங்கு குறைந்தது 50 லட்சம் பேர் போதைக்காக டிராமாடோலை எடுத்துக்கொள்கிறார்கள். கானா, செனகல் மற்றும் பெனினிலும் இந்த பிரச்னை உள்ளது" என்றார்.

உலகையே அச்சுறுத்தும் ஓபியாய்டுகள் - சீனா இதன் மையமாக மாறியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

அபின் சாகுபடி தடை செய்யப்பட்டபோது என்ன நடந்தது?

இருபது ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானில் அபின் சாகுபடியை தாலிபன்கள் தடை செய்தனர். அதன் பிறகு, பல ஐரோப்பிய நாடுகளில் போதைக்கு செயற்கை ஓபியாய்டுகளின் பயன்பாடு அதிகரித்தது.

2000 ஆம் ஆண்டில் அபின் சாகுபடிக்கு தாலிபன்கள் தடை விதித்த பிறகு ஹெராயின் தட்டுப்பாடு ஏற்பட்டதாக மருத்துவர் ஏஞ்சலா மே கூறுகிறார். வடக்கு ஐரோப்பாவின் சில நாடுகளில் - எடுத்துக்காட்டாக, எஸ்டோனியாவில் - போதைக்கு செயற்கை ஓபியாய்டுகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

ஆனால், 2001 ஆம் ஆண்டின் இறுதியில், அமெரிக்கா ஆப்கானிஸ்தானைத் தாக்கி தாலிபன்களின் ஆட்சியை அகற்றியது. அபின் சாகுபடி மீதான தடை நீக்கப்பட்டது. ஆனால், 2022 இல், தாலிபன் மீண்டும் ஆப்கானிஸ்தானில் ஆட்சிக்கு வந்தது. இதையடுத்து, அபின் சாகுபடி தடை செய்யப்பட்டது.

டாக்டர் ஏஞ்சலா மே கூறுகையில், “பல நாடுகளின் சந்தைகளில் ஹெராயினுக்கு பதிலாக சக்திவாய்ந்த செயற்கை ஓபியாய்டுகள் வருவது கவலை அளிக்கிறது. உலகளவில் பார்த்தால், ஹெராயின் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில் 25 சதவீதம் பெண்கள். அதாவது, ஆண்கள் ஹெராயினை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால், போதைக்கு செயற்கை ஓபியாய்டுகளைப் பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது" என்றார்.

"இதற்கு ஒரு காரணம் என்னவென்றால், பல இடங்களில் மருந்து கடைகளில் வாங்கலாம் என்பது. இரண்டாவது காரணம், சட்டவிரோதமான இடங்களில் இருந்து ஹெராயின் வாங்குவதற்கு பெண்கள் வெட்கப்படுகிறார்கள்" என்றார்.

ஆனால், செயற்கை ஓபியாய்டுகளின் பரவல் அதிகரிப்பதற்கு என்ன காரணம்? இதற்கு ஏஞ்சலா மே பதில் கூறுகையில், “ஒரு காரணம், தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் ஹெராயின் போன்ற மருந்துகள் ஆப்கானிஸ்தான், மியான்மர் மற்றும் மெக்சிகோ போன்ற சில நாடுகளில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன, ஏனெனில் அது அங்குள்ள வானிலை மற்றும் நிலத்தைப் பொறுத்தது. அதேசமயம், செயற்கை ஓபியாய்டுகள் எங்கு வேண்டுமானாலும் தயாரிக்கப்படலாம். நாட்டில் உள்ள ஆய்வகங்களில் குறைந்த விலையில் தயாரிக்கப்படுவதோடு, அதைக் கடத்துவதும் எளிது” என்கிறார்.

ஃபெண்டானில் எங்கு உற்பத்தி செய்யப்படுகிறது?

செயற்கை ஓபியாய்டுகளின் உற்பத்தி மற்றும் கடத்தல் பற்றிய விரிவான தகவலுக்கு, புலனாய்வுப் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பென் வெஸ்ட்ஹாஃப் என்பவரிடம் பிபிசி பேசியது. இதுகுறித்து அவருடைய ‘ஃபெண்டானில் இங்க்' (Fentanyl Inc.) எனும் புத்தகத்தில் நிறைய விவாதிக்கப்பட்டது.

அவரைப் பொறுத்தவரை, அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் சட்டவிரோத ஃபெண்டானில் சீனாவில் தயாரிக்கப்படுகிறது. அவர் சீனாவில் ஃபெண்டானில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் உற்பத்தி செய்யப்படும் ஃபெண்டானில் தொழிற்சாலைகளுக்கு ரகசியமாக சென்றார்.

இந்த ஆய்வகங்களில் அவர் ஒரு கடத்தல்காரர் போல் காட்டிக்கொண்டு, அதிக அளவு ஃபெண்டானிலை வாங்க விரும்புவதாகக் கூறினார்.

அவர் கூறுகையில், “நான் ஷாங்காய் நகருக்கு அருகிலுள்ள ஒரு ஆய்வகத்திற்குச் சென்றேன், அது மிகவும் சிறியதாக இருந்தது, அங்கு 5-6 பேர் வேலை செய்கிறார்கள். ஆனால், அங்கு அதிக அளவு ஃபெண்டானில் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. நான் அவரிடம் பொருட்களை வாங்குவது பற்றி பேசினேன், ஆனால் எங்களுக்கு இடையே பண பரிவர்த்தனை எதுவும் இல்லை” என்றார்.

மேலும், "பின்னர் நான் வூஹானில் ஒரு ஆய்வகத்தைப் பார்த்தேன். அது ஃபெண்டானில் பயன்படுத்தப்படும் உலகின் மிகப்பெரிய ரசாயனத் தொழிற்சாலையாக இருக்கலாம். அந்த நிறுவனத்தில் சுமார் 700 பேர் பணிபுரிந்தனர். அவர்களில் பலர் ஒரு ஹோட்டலில் இருந்து வேலை செய்தனர். நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு இருந்தனர்” என்றார்.

உலகையே அச்சுறுத்தும் ஓபியாய்டுகள் - சீனா இதன் மையமாக மாறியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - சீன அதிபர் ஷி ஜின்பிங் (கோப்புப்படம்)

சீனா எப்படி மையமாக மாறியது?

இந்த செயற்கை ஓபியாய்டின் உற்பத்தி மையமாக சீனா மாறியதன் காரணம் என்ன?

பென் வெஸ்ட்ஹாஃப் கூறுகையில், "இதற்குக் காரணம், அதை அங்கு உற்பத்தி செய்வது மலிவானது. பயிற்சி பெற்ற வேதியியலாளர்களும் விஞ்ஞானிகளும் அதிக எண்ணிக்கையில் சீனாவில் காணப்படுகின்றனர். சீனாவில் முறையான மருந்துகளை உற்பத்தி செய்யும் பல மருந்து நிறுவனங்கள் உள்ளன. ஆனால், அவர்களுடன் சேர்ந்து ரசாயனங்கள் மற்றும் மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்களும் உள்ளன. அவை சீனாவில் சட்டபூர்வமானவை. ஆனால் அமெரிக்கா போன்ற பிற நாடுகளில் சட்டவிரோதமானது" என்றார்.

இந்த ரசாயனங்கள் நேரடியாக அமெரிக்காவை சென்றடைவதில்லை. அவை முதலில் மெக்சிகோவிற்கு அனுப்பப்படுகின்றன.

இந்த ரசாயனங்கள் மிக வேகமாகவும் பயனுள்ளதாகவும் இருப்பதால் ஒரு கிலோ ரசாயனத்தில் இருந்து மில்லியன் கணக்கான மாத்திரைகளை தயாரிக்க முடியும் என்று பென் வெஸ்ட்ஹாஃப் கூறுகிறார். எனவே, பத்து முதல் இருபது கிலோ வரையிலான ரசாயனங்களை கொள்கலன்களில் மறைத்து அனுப்புவது மிகவும் எளிதானது. மெக்சிகோவில், போதைப்பொருள் விற்பனையாளர்கள் அல்லது கடத்தல் கும்பல்கள் தங்கள் தொழிற்சாலைகளில் ஃபெண்டானில் மாத்திரைகள் தயாரிக்க இந்த ரசாயனத்தை பயன்படுத்துகின்றனர்.

பென் வெஸ்ட்ஹாஃப் கூறுகையில், “மெக்சிகோவில் இவற்றை தயாரிக்கும் கும்பல்கள், காடுகளில் சிறிய தொழிற்சாலைகளை அமைப்பதன் மூலம் சட்டவிரோத செயற்கை மருந்துகளை தயாரிக்கின்றன. அதைத் தயாரிக்கும் நபர்கள் பயிற்சி பெற்றவர்கள் அல்ல, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் இந்த ஆய்வகங்களை நகரங்களிலும் அமைக்கின்றனர் என்று நான் கேள்விப்பட்டேன்" என்றார்.

அதன் பிறகு, அங்கு தயாரிக்கப்பட்ட சட்டவிரோத செயற்கை மருந்துகள் அமெரிக்காவிற்கு அனுப்பப்படுகின்றன. இந்த கடத்தலை தடுக்க அமெரிக்காவின் எல்லை பாதுகாப்புப் படை தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் ஆனால் அதை தடுப்பது மிகவும் கடினம் என்றும் பென் வெஸ்ட்ஹாஃப் கூறுகிறார். ஏனெனில், ஹெராயினை விட ஃபெண்டானில் ஐம்பது மடங்கு அதிக திறன் கொண்டது அல்லது சக்தி வாய்ந்தது. அத்தகைய சூழ்நிலையில், ஒரு கிலோ ஃபெண்டானிலைப் பிடிப்பது கடினம், ஏனெனில் அதை எளிதில் மறைக்க முடியும்.

பென் வெஸ்ட்ஹாஃப் கூறுகையில், "இதை தயாரிப்பது மிகவும் மலிவானது, எனவே கடத்தல்காரர்களைப் பிடிப்பதால் இதன் வணிகச் சங்கிலியை உடைக்க முடியாது. மாறாக, அதைப் பயன்படுத்துபவர்களுக்கு இது எவ்வளவு ஆபத்தானது என்பதை நாம் உணர்த்த வேண்டும். ஒரு கேளிக்கை விருந்தில் உட்கொள்ளும் சட்டவிரோத ஃபெண்டானில் மாத்திரை மரணத்தையும் ஏற்படுத்த முடியும்" என்றார்.

உலகையே அச்சுறுத்தும் ஓபியாய்டுகள் - சீனா இதன் மையமாக மாறியது எப்படி?

பட மூலாதாரம், EPA-EFE/REX/SHUTTERSTOCK

“போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை”

ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிட்யூஷனின் மூலோபாயம் மற்றும் பாதுகாப்பில் மூத்த ஆராய்ச்சியாளர் டாக்டர் வாண்டா ஃபெல்பாப் பிரவுன், சட்டவிரோத ஃபெண்டானில் மற்றும் பிற செயற்கை ஓபியாய்டுகள் குறித்த பிரச்னைக்காக பல நாடுகள் ஒன்றையொன்று குற்றம் சாட்டுகின்றன என்று கூறுகிறார்.

கடந்த மூன்று ஆண்டுகளில், சிந்தெடிக் மருந்துகளின் சிக்கலைச் சமாளிக்க அமெரிக்கா 179 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது, ஆனால் அதை மட்டும் கட்டுப்படுத்த முடியாது.

அவர் கூறுகையில், “நாட்டில் சட்டவிரோத செயற்கை ஓபியாய்டுகளின் சிக்கலைத் தீர்க்க அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகள் அவசியம்.அவற்றை திறம்பட செயல்படுத்துவதும் முக்கியம். ஆனால், சீனாவும் மெக்சிகோவும் இந்த திசையில் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை, இது கவலைக்குரிய விஷயம்” என தெரிவித்தார்.

அரசியல் காரணங்களால் அமெரிக்காவுடனான இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பதற்றம் நிலவி வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் இந்த திசையில் நிச்சயமாக சில முன்னேற்றம் ஏற்பட்டது.

டாக்டர் வாண்டா ஃபெல்பாப் பிரவுன் மேலும் கூறுகையில், “2017 முதல் 2019 வரை, சீனா இந்த திசையில் ஒத்துழைப்பை அதிகரித்தது. அப்போது, ​​அங்கிருந்து ஃபெண்டானில் அனுப்புபவர்களுக்கு எதிராக சீனா சட்ட நடவடிக்கை எடுத்தது. 2019 ஆம் ஆண்டில், ஃபெண்டானில் வகை மருந்துகளுக்கு சீனா கட்டுப்பாட்டை விதித்தது. பதிலுக்கு, அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசாங்கம், தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளைத் தளர்த்தவும் சீனாவின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட வரி விகிதத்தைக் குறைக்கவும் சீனா விரும்பியது" என்றார்.

சீனா இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது?

ஆனால் சீனாவின் இந்த கோரிக்கையை அமெரிக்கா நிறைவேற்றவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதிபர் பைடன் ஆட்சிக்கு வந்த பிறகும், அமெரிக்காவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை, சீனா ஒத்துழைப்பை நிறுத்தியது.

அமெரிக்கா மட்டுமல்ல, சீனாவும் நல்லுறவு இல்லாத அனைத்து நாடுகளிடமும் இந்த அணுகுமுறையைக் கொண்டுள்ளது என்கிறார் வாண்டா ஃபெல்பாப் பிரவுன். அதே சமயம், ஃபெண்டானில் போதை பழக்கத்தை அமெரிக்காவின் உள்நாட்டுப் பிரச்னை என்றும், அதற்கு தங்கள் நாடு பொறுப்பல்ல என்றும் சீனா கூறுகிறது. ஆனால், கடந்த ஆண்டு நவம்பரில் கலிஃபோர்னியாவில் அதிபர் ஜோ பைடன் மற்றும் அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரின் சந்திப்புக்குப் பிறகு, பரஸ்பர ஒத்துழைப்புக்கு உடன்பாடு ஏற்பட்டது. ஃபெண்டானில் பயன்படுத்தப்படும் பொருட்களை தயாரிக்கும் மெக்சிகன் கும்பல்களுக்கு விற்பனை செய்த நிறுவனங்களை சீனா மூடியது.

டாக்டர் வாண்டா ஃபெல்பாப் பிரவுனின் கூற்றுப்படி, சீனா உண்மையில் ஃபெண்டானில் பயன்படுத்தப்படும் பொருட்களின் விநியோகத்தை நிறுத்தியிருந்தாலும், இந்த நடவடிக்கையின் விளைவுகள் களத்தில் பிரதிபலிக்க இன்னும் நீண்ட காலம் எடுக்கும்.

மெக்சிகோ என்ன செய்கிறது?

ஆனால், மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர், இதற்கு எதிரான நடவடிக்கையின் பின்னணியில், மெக்சிகோ எந்த வெளிநாட்டு அரசாங்கத்திற்கும் காவல்துறையாக செயல்படாது என்று கூறினார்.

கடந்த ஆண்டு, மெக்சிகோவின் வெளியுறவு அமைச்சகம் அங்கு ஃபெண்டானில் உற்பத்தி செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டை நிராகரித்தது.

டாக்டர் வாண்டா ஃபெல்பாப் பிரவுன் மெக்சிகோ, இத்தகைய சில பெரிய கும்பல்களின் தலைவர்களை கைது செய்து அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளதாக நம்புகிறார், ஆனால் அங்கிருந்து ஃபெண்டானில் கடத்தப்படுவதற்கு எதிராக மிகக் குறைந்த நடவடிக்கையே எடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் கடத்தல் மட்டுமின்றி செயற்கை ஓபியாய்டு போதை பழக்கத்தையும் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் கூறுகிறார்.

செயற்கை ஓபியாய்டுகள் உலகளவில் ஒரு பிரச்னையா? அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பாவின் பல நாடுகளில் செயற்கை ஓபியாய்டுகளுக்கு அடிமையாதல் மற்றும் அவற்றை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரச்னைகள் தீவிரமாகி வருகின்றன.

ஒரு நாட்டில் அவற்றின் கடத்தல் மற்றும் உற்பத்தி தடைசெய்யப்பட்டவுடன், கடத்தல்காரர்கள் உடனடியாக அவற்றை உற்பத்தி செய்து மற்ற வழிகளில் கடத்தத் தொடங்கி புதிய சந்தைகளைத் தேடத் தொடங்குகிறார்கள்.

இன்று இது பெரிய பிரச்னையாக இல்லாத நாடுகளில் கூட எதிர்காலத்தில் இந்தப் பிரச்னை பரவலாம் என்கிறார் நமது நிபுணர் டாக்டர் வெண்டா ஃபெல்பாப் பிரவுன்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)