சிஎஸ்கே அணியிடம் தோல்வி: ராஜஸ்தானால் 2-வது இடத்தை தக்க வைக்க முடியுமா?
ஐபிஎல் டி20 தொடரின் 61-வது லீக் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் சேர்த்தது. எளிய இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 10 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி தனது 50-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் ரன் சேர்க்க திணறல்
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி சென்னையில் இன்று விளையாடிய தனது கடைசி லீக் போட்டி பல வகையில் சென்னைக்கு முக்கியமானதாக இருந்தது. புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்தில் இருந்த சென்னை அணி பிளேஆஃப் செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
நடப்புத் தொடரில் 11வது முறையாக டாஸில் தோற்ற ருதுராஜ் பகல் ஆட்டத்தில் டாஸ் என்பது ஒரு பெரிய காரணியாக இருக்காது என தெரிவித்தார்.
டாஸ் வென்று பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி பவர் பிளேவான முதல் ஆறு ஓவர்களில் 42 ரன்கள் எடுத்திருந்தது. அதற்குள் இரண்டு தொடக்க வீரர்களையும் அந்த அணி பறிகொடுத்திருந்தது.
சென்னையின் வேகப்பந்துவீச்சாளர் சிமர்ஜீத் சிங், பட்லரை 21 ரன்களுக்கும் ஜெய்ஸ்வாலை 24 ரன்களுக்கும் பெவிலியனுக்கு அனுப்பிவைத்தார்.

பட மூலாதாரம், Getty Images
சிமர்ஜீத் கலக்கல் பந்துவீச்சு
சிமர்ஜீத்த்தின் விக்கெட் வேட்டை அதோடு நிற்கவில்லை அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சனை 15 ரன்களுக்கு வெளியேற்றினார்.
15 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 94 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
சென்னை அணியின் பவுலர்களும் பீல்டர்களும் கச்சிதமாக செயல்பட்டு 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணியை 141 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர். அதிகபட்சமாக ரியான் பராக் 35 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார்.
சிமர்ஜீத் சிங் 4 ஓவர்களில் 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் எடுத்திருந்தார். இதில் கவனிக்க வேண்டியது அவர் வீசிய 13 டாட் பால்களை தான். கடைசி ஓவரில் துஷார் தேஷ்பாண்டே இரண்டு விக்கெட்டுகள் எடுத்தார்.
ரவீந்திரா அதிரடி தொடக்கம்
எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணிக்கு ரச்சின் ரவீந்திரா இம்முறை சிறந்த தொடக்கம் தந்தார். ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சைஅவர் நாலாபுறமும் சிதறடித்தார். சக நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் பவுல்ட் வீசிய மூன்றாவது ஓவரில் ரவீந்திரா ஒரு பவுண்டரி மற்றும் அப்பர் கட் ஆடி தேர்ட் மேன் திசையில் ஒரு சிக்ஸர் விளாசினார்.
27 ரன் எடுத்திருந்த ரவீந்திரா அடுத்த ஓவரிலேயே அஷ்வினின் மாயாஜால சுழலில் Across the line ஆடச்சென்று அவரிடமே கேட்ச் கொடுத்தார்.
6 ஓவரில் சென்னை அணி 56 ரங்களுக்கு 1 விக்கெட் இழந்து வலுவான நிலையில் இருந்தது. இடதுகை பேட்ஸ்மேன் ரவீந்திராவுக்கு எதிராக Off Spinner அஷ்வினை பயன்படுத்தி விக்கெட் சாம்சன் விக்கெட் எடுத்தார். ஆனால், வலது கை பேட்ஸ்மேன்கள் மிட்சல் மற்றும் கெய்க்வாட் ஆகியோருக்கு எதிராக லெக் Spinner சாஹலை பயன்படுத்தாதது ராஜஸ்தான் அணிக்கு பாதகமாக அமைந்தது.
இறுதியாக, 8வது ஓவரில் சாஹலை கொண்டு வந்த சாம்சன் ஆக்ரோஷமாக ஆடிக்கொண்டிருந்த மிட்சலின் விக்கெட்டை தட்டி தூக்கினார்.
அஷ்வின் வீசிய 14-வது ஓவரில் ஒரு சிக்ஸ் இரண்டு பவுண்டரி விளாசிய ஷிவம் துபே 11 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்தார். அவரை அஷ்வின் வெளியேற்றினார்.
சென்னை அணிக்கு இலக்கை அடைவது இனி சவாலாக இருக்காது என்று நினைத்தபோது,15.5-வது ஓவரில் யாரும் எதிர்பாராத ஒன்று நடந்தது. ஜடேஜா ரன் எடுக்க ஓடும்போது சாம்சன் ஸ்டம்பை நோக்கி வீசிய திசையில் ஜடேஜா ஓடியதால் பந்து ஜடேஜா மீது பட்டது. இதனையடுத்து Fielding-ற்கு இடையூறு செய்ததாக கூறி நடுவர்கள் ஜடேஜாவுக்கு அவுட் கொடுத்தனர்.

பட மூலாதாரம், Getty Images
கேப்டன் ருதுராஜின் சாதுர்யமான ஆட்டம்
5 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் கேப்டன் ருதுராஜ் சூழலை உணர்ந்து டி20 போட்டியில் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடி 38 பந்துகளில் 41 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.
கடைசி ஓவரில் ஐந்து ரன்கள் தேவை என்ற நிலையில் இம்பேக்ட் பிளேயர் சமீர் ரிஸ்வி இரண்டு பவுண்டரிகள் அடித்து ஆட்டத்தை சிஎஸ்கே அணிக்கு வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார். இதனால், பெவிலியனில் அடுத்த விக்கெட்டிற்கு களமிறங்க தயாராக இருந்த தோனிக்கு அதற்கான தேவை எழவில்லை.
சென்னை அணி வென்றாலும் கூட, தோனி களமிறங்குவார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்கள் சிறிது ஏமாற்றம் அடைந்தனர் என்றால் மிகையல்ல.
இதன் மூலம் ஏழாவது வெற்றியை பதிவு செய்துள்ள சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
சிஎஸ்கே ப்ளே ஆஃப் வாய்ப்பு எப்படி?
இந்த வெற்றியால் சிஎஸ்கே அணி 13 போட்டிகளில் 7 வெற்றி, 6 தோல்வி என 14 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நிகர ரன்ரேட்டில் ராஜஸ்தான் அணியை விட உயர்ந்து 0.528 என வலுவாக இருக்கிறது. சிஎஸ்கே அணி கடைசி லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது.
இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வென்றால், 16 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்யும். ஏற்கெனவே வலுவான நிகர ரன்ரேட்டில் சிஎஸ்கே அணி இருப்பதால், 16 புள்ளிகளுடன் சன்ரைசர்ஸ், டெல்லி, லக்ளெ அணிகள் போட்டியிட்டாலும் சிஎஸ்கே ப்ளே ஆஃப் சுற்றில் 3வது அல்லது 4வது இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது.
ஒருவேளை சிஎஸ்கே அணி கடைசி லீக் ஆட்டத்தில் ஆர்சிபியுடன் தோல்வி அடைந்து, ஆர்சிபி அணி இன்று நடக்கும் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வென்றாலும், 14 புள்ளிகளுடன் இரு அணிகளும் கடைசி இடத்துக்கு போட்டியிடும். ஆனால், நிகர ரன்ரேட்டில் சிஎஸ்கே வலுவாக இருப்பதால், குறைந்தபட்சம் 4வது இடம் கிடைக்க வாய்ப்புண்டு.
ராஜஸ்தானுக்கு 2வது இடம் கிடைக்குமா?
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 போட்டிகளில் 8 வெற்றி, 4 தோல்வி என 16 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது. தொடர்ந்து 3 தோல்விகளைச் சந்தித்தாலும், ராஜஸ்தான் அணி தனது 2வது இடத்திலிருந்து கீழே இறங்கவில்லை, நிகர ரன்ரேட்டும் பெரிதாக குறையாமல் 0.349 என நீடிக்கிறது. ராஜஸ்தான் அணிக்கு இன்னும் 2 லீக் ஆட்டங்கள் உள்ளன. அதில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான ஆட்டத்தில் வென்றாலும், கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டம் ராஜஸ்தானுக்கு சவாலாக இருக்கும். இன்னும் ஒரு போட்டியில் ராஜஸ்தான் அணி வென்றால்கூட 18 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யும்.
அதேநேரம், சன்ரைசர்ஸ் அணி தனக்கிருக்கும் கடைசி 2 லீக் ஆட்டங்களில் ஒன்றில் வென்று ஒன்றில் தோற்றால், ராஜஸ்தான் 2வது இடத்தைப் பிடிக்கும். சன்ரைசர்ஸ் அணி கடைசி 2 லீக் ஆட்டங்களிலும் வென்று, ராஜஸ்தான் அணி ஒரு ஆட்டத்தில் மட்டும் வென்றால், நிகர ரன்ரேட் அடிப்படையில் 2வது இடம் தீர்மானிக்கப்படும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



