ஸ்வாதி மாலிவால் விவகாரம்: கேஜ்ரிவால் உதவியாளர் பிபவ் குமார் கைது - சட்டவிரோதம் என ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

பட மூலாதாரம், SONU MEHTA/SANJEEV VERMA/HINDUSTAN TIMES/GETTY IMAGES
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி ஸ்வாதி மாலிவால், கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டதாக காவல்துறையில் வாக்குமூலம் அளித்துள்ள விவகாரம் டெல்லி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் “ஒவ்வொரு முறையும் போலவே, இம்முறையும் இந்த அரசியல் ஹிட்மேன் தன்னை காப்பாற்றிக்கொள்ளத் தொடங்கியுள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவைத் தொடர்ந்து, டெல்லி அரசியல் வட்டாரத்தில் மீண்டும் சலசலப்பு அதிகரித்துள்ளது. இந்தப் பதிவில், ஸ்வாதி மாலிவால், “தனது ஆதரவாளர்களை ட்வீட் செய்ய வைப்பதன் மூலம், எந்தக் குறிப்பிட்ட விவரமும் இன்றி வீடியோவை போடுவதன் மூலம், இந்தக் குற்றத்தைச் செய்துவிட்டுத் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதாக உணர்கிறார். யாராவது வீட்டிற்குள் ஒருவரை அடிப்பதை வீடியோ எடுப்பார்களா? அறையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும்போது உண்மை அனைவருக்கும் தெரிய வரும்,” என்றும் அவர் எழுதியுள்ளார்.
ஸ்வாதி மாலிவால் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல், “உன்னால் முடிந்தவரை தாழ்ந்து செல், கடவுள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். என்றோ ஒரு நாள் உண்மை உலகுக்குத் தெரிய வரும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த 52 விநாடிகள் வீடியோ ஸ்வாதி மாலிவால் மீது தாக்குதல் நடத்தப்பட்டதன் வீடியோ எனக் கூறப்படுகிறது.
சில காவலாளிகள் ஸ்வாதியை வெளியே போகச் சொல்வது வீடியோவில் கேட்கிறது. ஆனால், அவர் செல்ல மறுப்பதாகவும் அதில் கேட்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் சமூக ஊடக பக்கத்தில் இருந்து இந்த வீடியோவை ரீட்வீட் செய்து, இது ‘ஸ்வாதி மாலிவாலின் உண்மை’ என்று விவரிக்கப்பட்டுள்ளது.
பிபவ் குமார் கைது சட்டவிரோதமானது என ஆம் ஆத்மி கூறுவது ஏன்?

பட மூலாதாரம், ANI
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ஸ்வாதி மாலிவாலை முதல்வர் இல்லத்தில் வைத்து தாக்கியதாக பிபவ் குமார் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து முதலமைச்சர் இல்லத்தில் வைத்து, பிபவ் குமார் கைது செய்யப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
ஸ்வாதி மாலிவால் தன் மீது தாக்குதல் நடந்ததாக, டெல்லி காவல்துறையில் வியாழன் அன்று புகார் கொடுத்தார். அதன் பின்னர் பிபவ் குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அடுத்த நாளே (வெள்ளிக்கிழமை), கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார், முதல்வர் இல்லத்தில் பாதுகாப்புகளைத் தாண்டி அத்துமீறி ஸ்வாதி உள்ளே நுழைந்ததாக டெல்லி காவல்துறையிடம் புகார் அளித்தார், ஆனால் அவரின் புகார் குறித்து இதுவரை எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை.
பிபவ் குமார் காவல்துறையால் கைது செய்யப்பட்டது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பிரிவு தலைவர் சஞ்சீவ் நசீர் கூறுகையில், எப்ஐஆரின் நகல் இதுவரை தனக்குக் கிடைக்கவில்லை என்றும் சட்டப்படி இப்படி கைது செய்வது தவறு என்றும் கூறியுள்ளார்.
சஞ்சீவ் நசியர் ஏ.என்.ஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், "பிபவ் குமாரை காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். அதற்கு முன்னதாக எங்கள் சார்பில் நீதிமன்றத்தில் விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளோம். நாடு முழுவதும் எஃப்ஐஆர் நகல் பரவி வருகிறது. ஆனால் இன்னும் பிபவ் குமாருக்கும் அவரது வழக்கறிஞர் கைக்கும் வரவில்லை."
"மேலும் எந்த அறிவிப்பும் இல்லாமல் போலீசார் பிபவ் குமாரை அழைத்துச் சென்றனர். பிரிவு 41A-இன் கீழ் கைது நடவடிக்கைக்கு முன்னர் அறிவிக்க வேண்டியது அவசியம். நாங்கள் உள்ளே சென்று பிபவ் குமார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டாரா அல்லது கைது செய்யப்பட்டாரா என்பதை அறிய விரும்பினோம். ஆனால் பிபவ் குமாரை சந்திக்க எங்களை அனுமதிக்கவில்லை. இது சட்டப்படி தவறு,” என்றார்.
தாக்குதல் சம்பவம் மற்றும் போலீஸ் எஃப்.ஐ.ஆர்

பட மூலாதாரம், ANI
முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை முதல்வர் இல்லத்தில் தாக்கியதாக ஸ்வாதி மாலிவால் குற்றம் சாட்டியதில் இருந்து இந்த முழு விவகாரமுமே மே 13 காலையில் தொடங்கியது.
இந்த வழக்கில் வியாழக்கிழமை மாலை டெல்லி போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் பிபவ் குமார் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
ஸ்வாதி மாலிவாலின் எஃப்.ஐ.ஆர் பிபவ் குமார் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. அதோடு, முதல்வர் இல்லத்தில் அவருக்கு என்ன நடந்தது என்பதை விரிவாகக் கூறுகிறது.
பிடிஐ செய்தி முகமையின் செய்திப்படி, ஸ்வாதி மாலிவால் வெள்ளிக்கிழமை டெல்லி காவல்துறை குழுவுடன் திஸ் ஹசாரி நீதிமன்றத்திற்குச் சென்றார். அங்கு அவர் மாஜிஸ்திரேட் முன்பாகத் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார்.
முன்னதாக திங்கள்கிழமையன்று, இது தொடர்பாகத் தங்களுக்கு எந்தப் புகாரும் வரவில்லை என்று டெல்லி போலீசார் தெரிவித்தனர். வடக்கு டெல்லி டிஜிபி முகேஷ் குமார் மீனா ஊடகங்களிடம் கூறுகையில், ஸ்வாதி மாலிவால் சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தை அடைந்ததாகவும் ஆனால் பின்னர் புகார் அளிப்பதாகக் கூறி அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் கூறினார்.
போலீசாரின் கூற்றுப்படி, திங்கட்கிழமை காலை 9:34 மணியளவில் பெண் ஒருவர் அவசர உதவி அழைப்பு மூலம் அழைத்து முதலமைச்சரின் இல்லத்தில் தான் தாக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இந்த அழைப்புக்குப் பிறகு, ஸ்வாதி மாலிவால் காவல் நிலையத்தை அடைந்தார்.
அந்த அவசர அழைப்போடு போலீஸ் டைரியில் பதிவாகியுள்ள எண் ஸ்வாதி மாலிவாலுடையது. அவசர அழைப்பில் அழைத்தவரை மேற்கோள் காட்டி, “தான் தற்போது முதல்வர் வீட்டில் இருப்பதாக அந்தப் பெண்மணி கூறுகிறார். அவர் முதல்வரின் உதவியாளர் பிபவ் குமாரால் மோசமாகத் தாக்கப்பட்டதாகக் கூறினார்” என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
‘எனக்கு நடந்தது மிகவும் மோசமானது’

பட மூலாதாரம், Getty Images
முன்னதாக வியாழனன்று, ஸ்வாதி மாலிவால் எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்துப் பதிவிட்டிருந்தார். அதில் அவர் “காவல்துறையிடம் தனது வாக்குமூலத்தை அளித்துள்ளதாக” தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவி ஸ்வாதி மாலிவால், முதன்முறையாகத் தனது தரப்பைப் பகிரங்கமாக முன்வைத்தார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “எனக்கு நடந்தது மிகவும் மோசமானது. எனக்கு நடந்தது குறித்து காவல்துறையிடம் எனது வாக்குமூலத்தை அளித்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன்,” என்று குறிப்பிட்டார்.
“கடந்த சில நாட்கள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். மற்ற தரப்பினரின் உத்தரவின் பேரில் இது நடக்கிறது எனக் கூறி, என் நற்பெயரைப் படுகொலை செய்ய முயன்றவர்களையும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்,” என்று கூறினார்.
மேலும், “இந்தச் சம்பவத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று பாஜகவினரிடம் சிறப்பு வேண்டுகோள் விடுக்கிறேன்,” என்றும் ஸ்வாதி மாலிவால் குறிப்பிட்டார்.
டெல்லி அரசின் அமைச்சர் அதிஷி என்ன கூறினார்?

பட மூலாதாரம், Atishi/X
ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக டெல்லி அரசின் அமைச்சர் அதிஷி வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளர் சந்திப்பு நடத்தினார்.
அதிஷி கூறுகையில், “பாஜக சதி செய்தது. இந்தச் சதியின் கீழ் ஸ்வாதியை கேஜ்ரிவாலின் வீட்டிற்கு பாஜக அனுப்பியது. கேஜ்ரிவால் மீது பொய் வழக்கு போடுவதே இந்தச் சதியின் நோக்கம். இந்தச் சதியின் முகம் ஸ்வாதி. எந்த முன்னறிவிப்பும் இன்றி ஸ்வாதி முதல்வர் இல்லத்தை அடைந்தார். முதல்வர் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதே அவரது நோக்கமாக இருந்தது,” என்று குறிப்பிட்டார்.
மேலும், “ஸ்வாதி கொடுத்த புகாரில், இந்த எஃப்.ஐ.ஆரில் தன்னைக் கொடூரமாகத் தாக்கியதாகவும் குத்தி காயப்படுத்தியதாகவும் ஸ்வாதி கூறுகிறார். அந்தக் காயத்திற்குப் பிறகு வலியால் புலம்புவதாகவும் தனது உடைகள் கிழிந்ததாகவும் அவர் கூறுகிறார். அந்த வீடியோவில் அவர் காவலாளிகளை மிரட்டுவதைக் காண முடிகிறது. ஸ்வாதி மாலிவாலின் குற்றச்சாட்டுகள் தவறானவை,” என அதிஷி கூறியுள்ளார்.
தாக்குதல் பற்றிய பேச்சு உண்மையில்லை என்றால், ஏன் சஞ்சய் சிங் ஸ்வாதியிடம் தவறாக நடந்துகொண்டார் என்று அதிஷியிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அதிஷி, “அப்போது சஞ்சய் சிங்குக்கு முழு விஷயமும் தெரியாது,” என்றார்.
குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசிய ஸ்வாதி மாலிவால்

பட மூலாதாரம், ANI
அதிஷியின் குற்றச்சாட்டுகளுக்கு ஸ்வாதி மாலிவால் பதிலளித்துள்ளார். ஸ்வாதி மாலிவால் சமூக ஊடக பக்கத்தில், “நேற்று கட்சிக்கு வந்த தலைவர்கள் 20 வருட உறுப்பினரை பாஜகவின் முகவராக அறிவிக்கின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு, செய்தியாளர் சந்திப்பில் முழு உண்மையையும் கட்சி ஏற்றுக்கொண்டது. இன்று மீண்டும் பழைய கதைக்கே திரும்புகிறது,” என்று குறிப்பிட்டார்.
“இந்த குண்டர்கள் கட்சியை அச்சுறுத்துகின்றனர். நான் கைது செய்யப்பட்டால் அனைத்து ரகசியங்களையும் வெளியிடுவேன்,” என்று ஸ்வாதி மாலிவால் குற்றம்சாட்டினார்.
மேலும், “பரவாயில்லை, நாடு முழுவதும் உள்ள பெண்களுக்காக நான் தனியாகப் போராடி வருகிறேன். எனக்காகவும் போராடுவேன். நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துங்கள், நேரம் வரும்போது முழு உண்மையும் வெளிவரும்,” என்றார்.

பட மூலாதாரம், Getty Images
ஆம் ஆத்மி கட்சி முன்பு கூறியது என்ன?
இந்த விவகாரம் குறித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங் செய்தியாளர்களிடம் செவ்வாயன்று பேசியபோது, “நேற்று மிகவும் கண்டிக்கத்தக்க சம்பவம் நடந்தது. அதைப் பற்றி நான் உங்களிடம் கூற விரும்புகிறேன்,” என்றார்.
எம்.பி, சஞ்சய் சிங் கூறுகையில், “நேற்று காலை அரவிந்த் கேஜ்ரிவாலை சந்திப்பதற்காக ஸ்வாதி மாலிவால் அவரது இல்லத்திற்கு வந்தார். அவர் கேஜ்ரிவாலுக்காக டிராயிங் அறையில் காத்திருந்தார். இதற்கிடையில் பிபவ் குமார் அங்கு வந்து அவரிடம் தவறாக நடந்துகொண்டார்.”
பிபவ் குமார் கேஜ்ரிவாலுக்கு நெருக்கமானவராகக் கருதப்படுகிறார். சஞ்சய் சிங் மேற்கொண்டு பேசும்போது, “இந்த முழு சம்பவத்தையும் டெல்லி முதல்வர் அறிந்துள்ளார். அவர் இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுப்பார். ஸ்வாதி மாலிவால்ஜியை பொறுத்தவரை அவர் நாட்டிற்கும் சமூகத்திற்கும் நிறைய பணிகளைச் செய்துள்ளார். அவர் ஒரு மூத்த தலைவர். பழைய தலைவர்களில் ஒருவர்,” என்றார்.
வியாழனன்று லக்னௌவில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சஞ்சய் சிங், “மணிப்பூருக்குள் கார்கில் வீரரின் மனைவி நிர்வாணமாக அணிவகுத்துச் செல்லப்பட்டார். நூற்றுக்கணக்கான பெண்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். ஆனால், பிரதமர் மோதி அமைதியாக இருந்தார். ஆகையால் ஸ்வாதி மாலிவால் விவகாரத்தில் பாஜக அரசியல் செய்யக்கூடாது,” என்று கூறினார்.
தேசிய மகளிர் ஆணையத்தின் முன் ஆஜராகாத பிபவ் குமார்

பட மூலாதாரம், X@NCWINDIA
ஸ்வாதி மாலிவால் வழக்கைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள தேசிய மகளிர் ஆணையம், அரவிந்த் கேஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் பிபவ் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிபவ் குமார் மே 17 வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு ஆணையத்தின் முன் ஆஜராக வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்பட்டார். ஆனால், அவர் இன்று தேசிய மகளிர் ஆணையத்தின் முன்பாக ஆஜராகவில்லை.
ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா இதை பிபிசி செய்தியாளர் தில்னவாஸ் பாஷாவிடம் உறுதிப்படுத்தினார். அதோடு, பிபவ் குமாருக்கு இன்று இரண்டாவது சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதற்கும் வரவில்லையெனில் அவர் போலீஸ் உதவியுடன் அழைத்து வரப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.
நோட்டீஸ் கொடுக்க பிபவ் குமாரின் வீட்டிற்கு மகளிர் ஆணையக் குழு சென்றதாகவும் ஆனால் அவர் வீட்டில் இல்லையென்றும் ரேகா ஷர்மா தெரிவித்தார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நோட்டீஸை வாங்க பிபவ் குமாரின் மனைவி மறுத்துவிட்டார். எனது குழுவினர் இன்று மீண்டும் போலீசாருடன் அவரது வீட்டிற்குச் சென்றனர். அவர் தேசிய மகளிர் ஆணையத்தின் முன் ஆஜராகவில்லையெனில், நாங்களே அங்கு சென்று விசாரணை நடத்துவோம்,” என்று கூறினார். அதோடு ஸ்வாதி மாலிவாலையும் சென்று சந்திப்பதாக அவர் கூறினார்.
“ஸ்வாதிஜியை ட்விட்டரில் குரல் எழுப்பும்படி கேட்டுக்கொண்டிருந்தேன். ஆனால், கட்சித் தலைவரின் வீட்டில் நடந்த சம்பவத்தால் அவர் அதிர்ச்சியில் இருப்பதாக நான் கருதினேன். பெண்கள் பிரச்னைகளை எப்போதும் எழுப்பிய ஒரு எம்.பி.யே தாக்கப்பட்டார்,” என்றும் ரேகா ஷர்மா கூறினார்.
அரசியல் எதிர்வினைகள்

பட மூலாதாரம், ANI
ஸ்வாதி மாலிவால் தொடர்பான இந்த வழக்கில் அரசியல் எதிர்வினைகள் தொடர்கின்றன. பாஜக தலைமையகத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
ஸ்வாதி மாலிவால் சம்பவம் குறித்துப் பேசிய நிர்மலா சீதாராமன், “மாநிலங்களவை உறுப்பினரான தனது கட்சியின் பெண் உறுப்பினர் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல் குறித்து அரவிந்த் கேஜ்ரிவால் அமைதியாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது. இது உண்மையில் நம்ப முடியாதது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தச் சம்பவத்திற்கு கேஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.
மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், “பெண்களை மதிக்கும் கலாசாரம் நம்முடையது. ஆம் ஆத்மி கட்சியில் என்ன நடந்தாலும் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் அவரது கட்சியை நாடு மன்னிக்காது. நாட்டின் வரலாற்றில் இதுவே முதல்முறை. ஒரு முதல்வர் சிறைக்கு அனுப்பப்பட்டதும் அவரது வீட்டில் ஒரு பெண் தாக்கப்பட்டதும் ஏமாற்றமளிக்கிறது. ஏனெனில் அவர் (ஸ்வாதி மாலிவால்) நம் நாட்டில் ஒரு தெய்வமாக நடத்தப்படுகிறார்,” என்றார்.
டெல்லி மகிளா மோர்ச்சா அமைப்பினர் வெள்ளிக்கிழமை காலை முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்வாதி மாலிவால் விவகாரத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் பதவி விலக வேண்டுமென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












