காஷ்மீரில் ஒரு தொகுதியில் கூட பாஜக போட்டியிடாதது ஏன்? அங்கே யாரை ஆதரிக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆகிப் ஜாவேத்
- பதவி, ஸ்ரீநகர், காஷ்மீர்
ஆளும் பாரதிய ஜனதா அரசு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370ஐ நீக்கி 4 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்நிலையில் தற்போது நடந்து வரும் 18வது மக்களவைத் தேர்தலில் காஷ்மீர் பகுதியில் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளது பாஜக.
இந்துக்கள் அதிகம் வாழக்கூடிய ஜம்மு பகுதியின் இரண்டு தொகுதிகளில் தனது வேட்பாளர்களை களமிறக்கியுள்ள பாஜக, இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள மூன்று தொகுதிகளில் ஒன்றில் கூட போட்டியிடவில்லை.
பாஜகவின் இந்த முடிவிற்கு காரணம் இங்குள்ள மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கோபமே என்றும், அதை அந்த கட்சியே ஒப்புக்கொள்வதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.
கடந்த பல ஆண்டுகளாகவே காஷ்மீருக்கும், டெல்லிக்கு இடையிலான உறவு பதட்டம் நிறைந்ததாகவே இருந்து வருகிறது. இந்திய அரசுக்கு எதிரான தீவிரவாதமும், அதற்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளும் கடந்த 30 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களை பறித்துள்ளன.
கடந்த 2019ஆம் ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ பிரதமர் நரேந்திர மோதியின் அரசு நீக்கி, காஷ்மீரை ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்த போது நிலைமை மேலும் மோசமானது.
2019இல் இந்த பிரிவை நீக்கிய பிறகு, மத்திய அரசு இங்கு இணையம் உள்ளிட்ட வசதிகளை கட்டுப்படுத்தியது. மூன்று முன்னாள் முதலமைச்சர்களை வீட்டுக் காவலில் வைத்ததுடன், நூற்றுக்கணக்கான தலைவர்களை நீண்ட நாட்கள் சிறையில் அடைத்தது.
அதிலிருந்து, பிரதமர் மோதி மற்றும் அவரது அமைச்சர்கள் இந்த சட்டப்பிரிவை நீக்குவதற்கான முடிவின் மூலம் காஷ்மீர் பகுதியில் அமைதியை நிலைநாட்டி விட்டதாக கூறி வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
பாஜகவின் முடிவுக்கு என்ன காரணம்?
கடந்த சில ஆண்டுகளில், காஷ்மீரின் உள்ளூர் பாஜக தலைவர்கள் அங்கு தங்களது கட்சியை விரிவுபடுத்துவதற்காக 'வீட்டுக்கு வீடு பிரசாரங்களை' செய்து விரிவான பணியை மேற்கொண்டுள்ளனர்.
இதனாலும் கூட, இந்தத் தேர்தலில் எந்த வேட்பாளரையும் நிறுத்தாத அக்கட்சியின் முடிவு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்துக்கள் அதிகமாக உள்ள ஜம்முவின் இரண்டு தொகுதிகளும் தற்போது பாஜகவிடம் உள்ளன.
2019 ஆம் ஆண்டு, ஜம்முவில் இருந்து ஜுகல் கிஷோர் சர்மா மற்றும் உதம்பூரில் இருந்து ஜிதேந்திர சிங் ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்றனர்.
ஆனால் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதியான காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள மூன்று இடங்களில் ஒன்றில் கூட பாஜக வெற்றி பெறல்லை.

பட மூலாதாரம், Getty Images
ஜம்மு-காஷ்மீர் பாஜகவின் தலைமை செய்தித் தொடர்பாளர் சுனில் சேத், கட்சிக்கு தேர்தல்கள் முக்கியமில்லை, ‘மக்களின் மனங்களை’ வென்றெடுப்பதே பிரதானம் என்று கூறுகிறார்.
அவர் பேசுகையில், “காஷ்மீரை நாட்டின் மற்ற பகுதிகளுடன் முழுமையாக ஒருங்கிணைக்க எங்களுக்கு 75 ஆண்டுகள் ஆனது என்றும், இதை வெறும் தேர்தலில் வெல்வதற்காக செய்தோம் என்ற எண்ணத்தை உருவாக்க விரும்பவில்லை” என்றும் கூறினார்.
ஆனால், அரசியல் நிபுணர்கள் இதற்கு வேறு காரணத்தை முன்வைக்கின்றனர். இங்கு வெற்றி பெறுவது அவ்வளவு சுலபம் இல்லை என்பது பாஜகவுக்கு தெரியும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
அரசியல் ஆய்வாளர் நூர் அகமது பாபா கூறுகையில், “ஜம்மு காஷ்மீரில் இருந்து 370வது சட்டப்பிரிவை நீக்கியது சாதனை என சொல்வது மற்ற மாநிலங்களில் வேண்டுமானால் எடுபடலாம், ஆனால் இங்குள்ள மக்கள் இந்த முடிவை விரும்பவில்லை” என்கிறார்.
2019 இல் தான் எடுத்த முடிவு சரி என்பதை காட்டுவதற்காகவும், அதன் எதிரொலி வாக்கெடுப்பின் வழியாக வெளிப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவுமே பாஜக தற்போது இந்த முடிவை எடுத்துள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர் எதிர்க்கட்சியினர்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஓமர் அப்துல்லா இதுகுறித்து பேசுகையில், “சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதன் மூலம் மக்கள் மகிழ்ச்சியடைந்திருந்தால், தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பாஜக பின்வாங்கியிருக்காது” என்கிறார்.
மேலும், “அவர்கள் (பாஜக) தங்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை என்றும், தங்கள் அடையாளத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்திருக்கிறார்கள்” என்றும் கூறுகிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
பாஜக எந்த கட்சியை ஆதரிக்கும்?
ஜம்மு காஷ்மீரில் ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேசிய மாநாட்டுக் கட்சி தவிர, மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி), மக்கள் மாநாடு (பிசி), ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் களத்தில் உள்ளன.
பாஜக இந்தத் தேர்தலில் 'மக்கள் மாநாடு' மற்றும் 'ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி' ஆகியவற்றை ஆதரித்து வருவதாகவும், அவைதான் பாஜகவின் பினாமி கட்சிகள் எனவும் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர்கள் மீண்டும் மீண்டும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த இரு கட்சிகளுடனான கூட்டணி குறித்து பாஜக அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும், வடக்கு மற்றும் மத்திய காஷ்மீரில் வலுவான ஆதரவைக் கொண்டுள்ள சில கட்சிகளுக்கு அக்கட்சி ஆதரவு அளிக்கும் என்று பாஜக வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளன.
கடந்த மாதம் ஜம்மு காஷ்மீர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ரவீந்தர் ரெய்னா, எங்களுக்கு எந்த கட்சியின் சித்தாந்தத்துடன் ஒத்துப்போகிறதோ அந்த கட்சிகளுக்கு ஆதரவளிப்போம் என்று தெரிவித்திருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஏமாற்றத்தில் உள்ளூர் பாஜகவினர்
காஷ்மீர் தேர்தல் களத்தில் இருந்து ஒதுங்கி நிற்கும் பாஜகவின் முடிவு, களத்தில் உள்ள அதன் தொண்டர்களை அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து அவர்கள் தேர்தலுக்காக தயாராகி வருவதாக கூறுகின்றனர்.
இதுகுறித்து வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக தொண்டர் ஷபீர் அகமது சர்கார் கூறுகையில், “நாங்கள் வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்தித்து அரசு மக்களுக்காக என்ன செய்துள்ளது என்பதை அவர்களிடம் கூறி வருகிறோம்” என்றார்.
இதேபோல், வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக தொண்டர் ஃபிடா ஹுசைனும் கட்சியின் முடிவால் ஏமாற்றமடைந்துள்ளார். ஆனால், எதுவாக இருப்பினும் கட்சியின் முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.
1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த பகுதியில் பாஜக தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்வது இதுவே முதல் முறை என்பதால் இந்த முடிவு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
என்னதான் பாஜக இங்கு பாரம்பரிய ரீதியிலான ஆதரவை பெற்றிருக்கவில்லை என்றாலும், அதன் தொண்டர்கள் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்திருப்பதாக கூறுகின்றனர் அரசியல் நிபுணர்கள்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த முடிவின் மூலம் அங்கு இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. அப்போது மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்த பாஜக, ஜம்முவில் மொத்தமுள்ள 87 இடங்களில் 25 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பாஜக மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி இடையிலான கூட்டணி முறிந்ததை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
பின் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றியை பதிவு செய்தது. அப்போது காஷ்மீரிலும் கூட அது மூன்று இடங்களில் வெற்றி பெற்றது.

பட மூலாதாரம், Getty Images
ஜம்மு மற்றும் காஷ்மீரின் தேர்தல் கணக்கில் மாற்றம்
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜம்முவுக்கு 6 இடங்கள் கூடுதலாகவும், காஷ்மீருக்கு ஒரு இடம் மட்டுமே கூடுதலாகவும் கிடைக்கும் வகையில் அரசு சட்டமன்றத்தின் இடங்களை பிரித்தது .
தற்போது இங்கு ஒட்டுமொத்த சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. (2019 வரை, ஜம்முவில் 37 சட்டமன்ற இடங்களும், காஷ்மீரில் 46 சட்டமன்ற இடங்களும் இருந்தன.)
இதற்குப் பிறகு, தேர்தல் அரசியலில் இந்துக்களின் செல்வாக்கை அதிகரிக்க ஜம்மு-காஷ்மீரில், பாஜக தொகுதிகளை அதிகரிப்பதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
ஆனால், பாஜக சில தேர்தல்களில் வெற்றி பெற்றாலும், களத்தில் தனது செல்வாக்கை உருவாக்க முடியவில்லை என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து அரசியல் ஆய்வாளர் பாபா கூறுகையில், "இந்தப் பகுதி டெல்லியின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் இங்குள்ள மக்கள் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமையுடன் இணைப்புக் கொண்ட ஒரு அரசை விரும்புகிறார்கள்" என்கிறார்.
வேலையின்மை அதிகரிப்பு, அரசியலில் உள்ளூர் தலைவர்கள் இல்லாமை மற்றும் பாதுகாப்புப் படையினரால் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பிற காரணிகளும் இங்கு தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு அதிகரித்துள்ளதாக உள்ளூர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர்.
மக்கள் ஜனநாயகக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மோஹித் பான் கூறுகையில், "பாஜக நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் கூட, காஷ்மீரை இழப்பது அதற்கு மிகப்பெரிய தோல்வியாக இருக்கும்" என்றார்.
அதை தவிர்ப்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பாஜக விலகி நிற்பதாக கூறுகிறார் அவர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












