அமெரிக்காவை வீழ்த்தி இந்தியாவின் முன்னணி வணிக கூட்டாளியாக மாறிய சீனா - எச்சரிக்கும் ஜெய்சங்கர்

இந்தியா - சீனா

பட மூலாதாரம், REUTERS/ADNAN ABIDI

    • எழுதியவர், மான்சி டாஷ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

கொல்கத்தாவில் சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.

சீனாவிடம் இருந்து இந்தியா ஏன் இவ்வளவு இறக்குமதி செய்கிறது என்ற கேள்வியையும் முன்வைத்த அவர், சீனாவுடன் இவ்வளவு வர்த்தகம் செய்வது இந்தியாவுக்கு நல்லதா என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், உற்பத்தித் துறையில் நாட்டிற்கான தற்சார்பின் முக்கியத்துவம் குறித்து ஜெய்சங்கர் பேசியிருந்தார்.

சமீபத்திய தரவுகளின்படி, சீனாதான் தற்போது இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது. உலக வணிக ஆராய்ச்சி முன்னெடுப்பு அமைப்பின் (Global Trade Research Initiative) தரவுகள்படி, நடப்பு நிதியாண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 118.4 அமெரிக்க டாலர் பில்லியன்களை எட்டியுள்ளது.

சீனாவில் இருந்து இந்தியாவுக்கான இறக்குமதி 3.24% அதிகரித்து 101.7 பில்லியன் டாலராக உள்ளது. இந்தியாவில் இருந்து சீனாவுக்கான ஏற்றுமதி 8.7 சதவீதம் அதிகரித்து 16.67 பில்லியன் டாலராக உள்ளது.

இந்நிலையில், அந்த நிகழ்ச்சியில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் இந்தியா மற்றும் சீனா இடையேயான வர்த்தகம் குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்தியா - சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், உற்பத்தித் துறையில் நாட்டிற்கான தற்சார்பின் முக்கியத்துவம் குறித்து ஜெய்சங்கர் பேசியிருந்தார்.

அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில், "இந்தியாவில் கோவிட் தொற்று பரவிக்கொண்டிருந்த நேரத்தில், இந்தியாவுடனான எல்லைக்கு அருகில் சீனா தனது துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்தது," என்றார்.

கடந்த 2017ஆம் ஆண்டு பூட்டான் அருகே உள்ள எல்லையில் இந்தியா-சீனா இடையே 71 நாட்கள் பதற்றம் நிலவியது. அதற்குப் பிறகு, 2020ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்தியா மற்றும் சீனா இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

கல்வான் மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளும் எல்லையில் ராணுவப் படைகளைக் குவித்துள்ளன.

மேலும், குவாட் ஒத்துழைப்பு அமைப்பின் கீழ் ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளை அதிகரித்துள்ளது.

இதற்குப் பிறகு, ஜூன் 2020இல் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் தனியுரிமை கொள்கைகள் தொடர்பான காரணங்களால் 59க்கும் மேற்பட்ட சீன மொபைல் செயலிகளை இந்திய அரசு தடை செய்தது.

அதோடு மட்டுமின்றி அடுத்தடுத்து பல்வேறு சூழல்களில் கிட்டத்தட்ட 208 சீன செயலிகளை இந்தியா தடை செய்தது. இவற்றில் பிரபலமான டிக்டாக் செயலியும் ஜூன் 2020இல் தடை செய்யப்பட்டது.

ஜெய்சங்கர் கூறியது என்ன?

இந்தியா - சீனா

பட மூலாதாரம், DIPTENDU DUTTA/AFP VIA GETTY IMAGES

படக்குறிப்பு, "கடந்த 2020ஆம் ஆண்டு, சீனா இந்தியாவுடனான பல ஒப்பந்தங்களை மீறியது மட்டுமின்றி, எல்லையில் அதன் துருப்புகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்கத் தொடங்கியது."

கொல்கத்தாவில் 'வளர்ச்சியடைந்த இந்தியா @2047' என்ற பெயரில் நடத்தப்பட்ட மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட எஸ்.ஜெய்சங்கர், சீனா குறித்துப் பேசுகையில் 1962ஆம் ஆண்டை நினைவுகூர்ந்தார்.

“கடந்த1962ஆம் ஆண்டு முதல் இந்தியா, சீனாவுடனான உறவில் கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டு வருகிறது. இதற்குப் பிறகு இருதரப்பு உறவில் ஒரு சீரமைப்பை ஏற்படுத்தும் விதமாக 1988ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி சீனாவுக்கு சென்றார்” என்று கூறினார் ஜெய்சங்கர்.

"அப்போது, எல்லையில் அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. இதுவே 1988இல் இருந்து இந்தியா சீனா இடையிலான உறவுக்கான அடிப்படையாக இருந்தது. ஆனால் 2020இல் நடந்த சம்பவம் அதை அப்படியே மாற்றிவிட்டது."

மேலும் பேசிய ஜெய்சங்கர் , "2020ஆம் ஆண்டு, சீனா இந்தியாவுடனான பல ஒப்பந்தங்களை மீறியது மட்டுமின்றி, எல்லையில் அதன் துருப்புகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்கத் தொடங்கியது. அதுவும் அது இந்தியா கோவிட் பொதுமுடக்கத்தை எதிர்கொண்டிருந்த காலம்," என்றார்.

இதற்குப் பதிலாக, இந்தியாவும் எல்லைப் பகுதியில் துருப்புகளை அதிகரித்தது. அதன் பிறகு கல்வானில் இருதரப்புக்கு இடையிலும் மோதல் ஏற்பட்டது.

இந்தியாவின் பிரஜைகளாக நாட்டின் பாதுகாப்புப் பிரச்னைகளைப் புறக்கணிக்க முடியாது என்றும், இது இன்றைய தேதியில் பெரும் சவாலாக இருந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இதையெல்லாம் தாண்டி, இங்கு பெரிய பொருளாதார ரீதியான சவாலும் இருப்பதாக அவர் கூறினார். பல ஆண்டுகளாக நமது உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் நாம் கவனம் செலுத்தாமல் இருந்து விட்டோம் என்று கூறினார் ஜெய்சங்கர்.

இந்தியா - சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, "சீனாவுடன் அதிக வர்த்தகம் கொண்டிருப்பது, நம் நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார் எஸ்.ஜெய்சங்கர்.

ஜெய்சங்கர் பேசுகையில் "இந்திய வர்த்தகர்கள் ஏன் சீனாவிடமிருந்து அதிக பொருட்களை வாங்குகிறார்கள்? அவர்களின் உற்பத்தி அளவு அதிகமாக உள்ளது, உள்கட்டமைப்பில் அவர்கள் திறன் மிக்கவர்கள், மேலும் சிறப்பான மானிய திட்டங்கள் அங்கு உள்ளது என்றெல்லாம் நீங்கள் கூறலாம்.”

“ஆனால் இது நம் நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதா? உங்கள் வணிகம் வேறு ஒரு நாட்டைச் சார்ந்திருப்பது நல்லதா? குறிப்பாக வணிகத்தைத் தாண்டி அரசியல் காரணங்களுக்காக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நாடு, இந்த நிலையை எப்போது வேண்டுமானாலும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசுகையில், "உலகின் பல நாடுகள் தற்போது பொருளாதாரப் பாதுகாப்பைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றன. சில முக்கியமான துறைகளைச் சார்ந்த வணிகங்கள் நாட்டிற்கு உள்ளேயே இருக்க வேண்டும் என்று அவை நம்புகின்றன. விநியோகச் சங்கிலி குறுகியதாக இருக்க வேண்டும். நீங்கள் அனைத்தையும் உற்பத்தி செய்யாவிட்டாலும்கூட, அரசியலையும் வணிகத்தையும் கலக்காத, எல்லைப் பிரச்னைகள் இல்லாத ஒரு நாட்டோடு நீங்கள் வணிகத்தில் இருக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.

"இது முற்றிலும் அரசின் கைகளில் இல்லை, இதன் பெரும்பகுதி வணிகத்தில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்கள் எடுக்கும் முடிவுகளைப் பொறுத்தது. அதற்கான செயல்பாட்டில் அரசு உதவ முடியும். ஆனால் அதனால் அனைத்துத் துறைகளிலும் கவனம் செலுத்த முடியாது. அதேநேரம் அரசு பல துறைகள் குறித்தும் மிகவும் உணர்திறன் வாய்ந்தது," என்றார் ஜெய்சங்கர்.

இறக்குமதியில் சீனாவை சார்ந்திருப்பதை இந்தியா குறைக்க வேண்டுமா?

இந்தியா - சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, "இந்தியா சீனாவுக்கு 14% ஏற்றுமதி செய்கிறது. அதேநேரம் சீனாவிடம் இருந்து 86 சதவீதத்தை வாங்குகிறது."

சீன விவகார நிபுணரும் மூத்த பத்திரிக்கையாளருமான சைபல் தாஸ்குப்தா இதுகுறித்துக் கூறுகையில், “வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்து, எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதையும், இந்தியா சீனாவை சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டும் என்பதையும் இந்திய தொழிலதிபர்களுக்கு நினைவூட்டும் முயற்சி,” என்கிறார்.

அவர் பேசுகையில், "இதுபோன்ற சார்புத்தன்மை நிலவுகையில், நாம் நம் நாட்டின் நலனையோ அல்லது வணிகத்தின் நலனையோ கருத்தில் கொள்வதில்லை என்ற புள்ளியில் இருந்து அவரது அறிக்கை முக்கியமானது. ஏனென்றால் நாளை ஏதேனும் அரசியல் காரணங்களுக்காக சீனா ஏற்றுமதியை நிறுத்தினால், அதுவொரு இக்கட்டான சூழலை ஏற்படுத்தும்” என்று கூறுகிறார்.

"இந்தியா சீனாவுக்கு 14% ஏற்றுமதி செய்கிறது. அதேநேரம் சீனாவிடம் இருந்து 86 சதவீதத்தை இந்தியா வாங்குகிறது. நேபாளம், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைக் காட்டிலும், மோசமான சூழலில் தன்னைத்தானே நிறுத்திக் கொள்கிறது இந்தியா."

தொடர்ந்து பேசிய அவர், "தன்னிறைவு கொண்ட இந்தியாவை உருவாக்குவதன் மூலம், சில்லறைப் பொருட்களின் இறக்குமதியை அரசு நிறுத்தியுள்ளது. ஆனால் இந்தியாவில் தயாரிக்க முடிந்த நடுத்தர மற்றும் குறைந்த தொழில்நுட்ப தயாரிப்புகளை நாட்டிற்குள் உற்பத்தி செய்ய அது நினைக்கவில்லை. இந்தியா அதன் உற்பத்தியை அதிகரித்திருக்கலாம், ஆனால் அவற்றை சீனாவில் இருந்து எளிதாகப் பெறும் சூழலில் தொழில்துறை அதைப் பற்றி சுத்தமாகச் சிந்திக்கவில்லை மற்றும் அதன் உற்பத்தியை அதிகரிக்கவும் இல்லை," என்கிறார்.

டெல்லியின் ஃபோர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டின் பேராசிரியரும், இந்தியா-சீனா வர்த்தக விஷயங்களில் நிபுணருமான பேராசிரியர் பைசல் அகமது பேசுகையில், “ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உலகளாவிய மதிப்புவாய்ந்த சங்கிலிகளின் வலையமைப்பு உள்ளது, அதில் சீனாவே முன்னணியில் உள்ளது,” என்று கூறுகிறார்.

அந்நாடு இதுதொடர்பான துறைகளை மலிவானதாக வைத்திருப்பதே, அதற்கு பலனைத் தருவதாக அவர் தெரிவிக்கிறார்.

"இதே இந்த உற்பத்திப் பொருட்கள் சீனாவை தாண்டி எந்த நாட்டிற்குச் சென்றாலும் தொழில் நிறுவனங்களுக்குப் பலன் கிடைக்காது. இதுவே ஏன் நிறுவனங்களுக்குச் சரியான வர்த்தக கூட்டாளியாக சீனா இருக்கிறது என்பதற்கான சிறந்த உதாரணம்.”

இந்தியா - சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, "நாட்டின் சந்தை வளர்ந்து வரும் அதே வேகத்தில் நாட்டில் உற்பத்தியை அதிகரிக்க ஏன் முயற்சிகள் எடுக்கப்படுவதில்லை என்பது முன்கூட்டியே கேட்கப்பட வேண்டிய கேள்வி" என்கிறார் சைபல் தாஸ்குப்தா.

தொடர்ந்து பேசிய சைபல் தாஸ்குப்தா, "உற்பத்தியை அதிகரிக்க அரசு பி.எல்.ஐ திட்டத்தைக் கொண்டு வந்தது. அதிக பொருட்களை இந்தியாவில் குவிப்பதற்கு எதிரான வரியை (Anti - Dumping Duty) விதித்தது. மேலும் தரக்கட்டுப்பாட்டு உத்தரவையும் கொண்டு வந்தது.”

“ஆனாலும் இந்தியாவின் இறக்குமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசு அதைச் சரியான நேரத்தில் மறுபரிசீலனை செய்யவில்லை, ஆனால் இப்போது அதை தொழில்துறையினருக்கு நினைவூட்டுகிறது" என்கிறார்.

"நாட்டின் சந்தை வளர்ந்து வரும் அதே வேகத்தில் நாட்டில் உற்பத்தியை அதிகரிக்க ஏன் முயற்சிகள் எடுக்கப்படுவதில்லை என்பது முன்கூட்டியே கேட்கப்பட வேண்டிய கேள்வி. இந்தச் சிந்தனை செயல்படாமல் இருப்பது அரசின் முயற்சியின்மையைக் காட்டுகிறது."

மேலும், "இந்தியாவில் பல பொருட்களின் உற்பத்தியில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன, இது இறக்குமதியில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்தச் சிக்கலைத் தீர்க்க இந்தியா முயல வேண்டும்" என்கிறார் சைபல் தாஸ்குப்தா.

"மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்க, இந்தியா தனது தன்னிறைவுத் திட்டம் அல்லது பிஎல்ஐ திட்டங்களின் மீது கவனம் செலுத்த வேண்டும். ஆனால் இந்தியா தனது உள்நாட்டு உற்பத்தித் திறனை பெரிய அளவில் அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்."

"இதை சீனாவுக்கு எதிரான நடவடிக்கையாகச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மாறாக நமது உற்பத்தியை அதிகரிப்பதிலும், உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யும் நோக்கத்துடன் உற்பத்தியை அதிகரிக்கும் போது, பிறரைச் சார்ந்திருக்கும் தன்மையின் மீது அது தாக்கத்தை ஏற்படுத்தும்."

பேராசிரியர் பைசல் அகமது கூறுகையில், ​​"நிச்சயமாக தொழில்துறைக்கு இதில் முக்கியப் பங்கு உண்டு. ஆனால் ஏற்றுமதியை மனதில் வைத்து உற்பத்தியை அதிகரிப்பதில் அரசின் பங்கு மிகவும் முக்கியமானது. இருப்பினும், இது இருவரது கூட்டுப் பொறுப்பே தவிர, ஒருவருக்கு மட்டும் உரித்தானது அல்ல," என்கிறார்.

“தற்போது வரவிருக்கும் அரசு இதுகுறித்து அடிமட்ட அளவில் இருந்து முயற்சிகளை மேற்கொள்வது முக்கியம். இது நடக்கும் வரை, சீனாவை சார்ந்திருப்பது எவ்வளவு குறையும் என்று சொல்வது கடினம்."

இந்தியா சீனா இடையிலான வர்த்தகம்

இந்தியா - சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜிடிஆர்ஐ தரவுகளின்படி , 2024 நிதியாண்டில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 118.4 அமெரிக்க டாலர் பில்லியன் மதிப்புடையது.

தற்போது 2024ஆம் ஆண்டில், சீனா மீண்டும் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி என்ற நிலையை அடைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே இடத்தில் அமெரிக்கா இருந்தது.

உலக வணிக ஆராய்ச்சி முன்னெடுப்பு அமைப்பு (GTRI) வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, 2024 நிதியாண்டில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 118.4 அமெரிக்க டாலர் பில்லியன் மதிப்புடையது.

ஜிடிஆர்ஐ அறிக்கையின்படி, சீனாவில் இருந்து இறக்குமதியைக் குறைப்பதற்காக, அதிக பொருட்களை இந்தியாவில் குவிப்பதற்கு எதிரான வரி மற்றும் தரக் கட்டுப்பாடு தொடர்பான விதிகளை இந்தியா அமல்படுத்தியுள்ளது. ஆனால் இவை இந்தியாவின் இறக்குமதியில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை.

சீனாவிலிருந்து 2024ஆம் நிதியாண்டில், 2.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள லித்தியம் அயன் பேட்டரிகளை இந்தியா வாங்கும், இது இந்தத் துறையில் இறக்குமதி செய்யப்படும் ஒட்டுமொத்தத்தில் 75 சதவீதம்.

அதே நேரத்தில், தொலைத்தொடர்பு உபகரணங்கள் மற்றும் தொலைபேசிகள் தொடர்பான இறக்குமதிகளில் 4.2 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள 44 சதவீதம் சரக்கு சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகத்தின் வரலாறு

இந்தியா - சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த 2000ஆம் ஆண்டில், இரண்டு நாடுகளின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு இடையில் அதிக வித்தியாசம் இல்லை, ஆனால் 2006க்குப் பிறகு, இந்த வேறுபாடு அதிகரித்துக்கொண்டே வந்துள்ளது.

வரலாற்று ரீதியாகப் பார்த்தால் இந்தியா மற்றும் சீனா இடையே கி.மு இரண்டாம் நூற்றாண்டில் இருந்தே கலாசார உறவுகள் இருந்துள்ளன.

அண்டை நாடுகளாக இருப்பதால், இரு நாட்டு வரலாற்று ஆசிரியர்களும் பயணம் செய்து பரஸ்பரம் இரு நாடுகள் குறித்தும் எழுதியுள்ளனர்.

சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகம் தாமதமாகத் தொடங்கியது. தற்போதைய தரவுகளின்படி, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே 2000ஆம் ஆண்டு வரை 2.92 பில்லியன் டாலர்களாக இருந்த வர்த்தகம், 2008ஆம் ஆண்டுக்குள் 41.85 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக சீனா மாறியது.

கடந்த 2000ஆம் ஆண்டில், இரு நாடுகளின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு இடையில் அதிக வித்தியாசம் இல்லை, ஆனால் 2006க்குப் பிறகு, இந்த வேறுபாடு அதிகரித்துக்கொண்டே வந்துள்ளது. 2007இல், இந்தியா 14.61 பில்லியன் டாலர் மதிப்பில் ஏற்றுமதி செய்துள்ள நிலையில், 24.05 பில்லியன் டாலர்கள் மதிப்பில் இறக்குமதி செய்துள்ளது.

சீன பிரதமர் வென் ஜியாபோ டிசம்பர் 2010ஆம் ஆண்டு இந்தியாவுக்கு பயணம் வந்து சென்றபோது, 2015ஆம் ஆண்டிற்குள் இரு நாட்டிற்குமான வர்த்தகத்தை இரண்டில் இருந்து, 100 பில்லியன் டாலர்களாக அதிகரிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால், இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் உள்ள வித்தியாசம் அதிகரித்துள்ளது. இந்தியா உள்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்வதைவிட, சீனாவிலிருந்து இறக்குமதி செய்வது அதிமாகியுள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)