ராஜஸ்தான் தோற்றதால் 2-ஆவது இடத்துக்கு போட்டியிடும் 3 அணிகள்

ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம், SPORTZPICS

ப்ளே ஆஃப் சுற்றில் எந்தெந்த அணிகள் இடம் பெறும் என்பதில் இன்னும் தெளிவு இல்லாமல் ரசிகர்களை ஏங்க வைத்திருக்கிறது இந்த ஐபிஎல் சீசன். ஆர்சிபி அணி தொடர்ந்து 5 போட்டிகளை வென்று ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய நிலையில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடித்துவந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ந்து 4 தோல்விகளைச் சந்தித்து ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறது.

ராஜஸ்தான் அணிக்கு ஏற்பட்ட தோல்வியால், அந்த அணி 2-ஆவது இடத்தைப்பிடிக்கும் வாய்ப்பை இழந்து 3-ஆவது மற்றும் 4-ஆவது இடத்துக்கான போட்டிக்குத் தள்ளப்பட்டுள்ளது.

குவஹாத்தியில் நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 65-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல் அணி 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்தது. 145 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 7 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எந்தவிதமான ஏற்றமும் கிடைக்கப் போவதில்லை என்றாலும், ராஜஸ்தான் அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பை அசைத்துப் பார்த்துவிட்டது. பஞ்சாப் 13 போட்டிகளில் 10 புள்ளிகளுடன் 9-ஆவது இடத்தில் இருக்கிறது. பஞ்சாப் அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாது என்றபோதிலும், தன்னுடன் மோதும் ப்ளே ஆஃப் செல்ல வாய்ப்புள்ள அணிகளின் வாய்ப்பை இடைமறிப்பதில் இதன் பங்கு அதிகமாகும். அதுதான் நேற்று ராஜஸ்தான் அணிக்கு நடந்துள்ளது.

ஐபிஎல்

பட மூலாதாரம், Getty Images

ராஜஸ்தான் அணிக்கு ப்ளே ஆப்பில் எந்த இடம் கிடைக்கும்?

ராஜஸ்தான் அணி தொடர்ந்து 4-ஆவது தோல்வியை நேற்று சந்தித்துள்ளது. ராஜஸ்தான் அணி 13 போட்டிகளில் 16 புள்ளிகளுடன் 0.273 நிகர ரன்ரேட்டில் 2வது இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் அணிக்கு கடைசி லீக் ஆட்டம் கொல்கத்தா அணியுடன் மிகக்கடுமையானதாக, சவாலானதாக இருக்கக்கூடும்.

ஏனென்றால், ராஜஸ்தான் அணியிலிருந்து ஜாஸ் பட்லர் இங்கிலாந்து அணிக்காக சென்றுவிட்டதால் பெரியபேட்டரை இழந்துவிட்டது பெரிய பின்னடைவு. அதேபோல, கொல்கத்தா அணியிலிருந்து பில் சால்ட் இங்கிலாந்து சென்றுவிட்டார். வெளிநாட்டு முக்கிய வீரர்கள் இரு அணியிலிருந்து கிளம்பி இருப்பதால் வெற்றிக்காக கடுமையாக இரு அணிகளும் போராடும்.

ஒருவேளை கொல்கத்தா அணி கடைசி லீக்கில் ராஜஸ்தானிடம் தோற்றால், முதலிடத்தை தக்கவைப்பதில் எந்தச் சிக்கலும் இருக்காது. ஆனால், ராஜஸ்தான் அணி வென்றால் 18 புள்ளிகள் பெற்றாலும் 2-ஆவது இடம் கிடைப்பது சந்தேகம்தான். ஏனென்றால், சன்ரைசர்ஸ் அணிக்கு 2 லீக் ஆட்டங்கள் மீதமிருக்கின்றன.

அந்த இரு ஆட்டங்களிலும் சன்ரைசர்ஸ் வென்றால், 18 புள்ளிகளுடன் வலுவான நிகர ரன்ரேட்டில் 2வது இடத்தைப் பிடிக்க முடியும். ராஜஸ்தான் அணி 3வது இடத்துக்கு தள்ளப்படும். கடைசி இடத்தை ஆர்சிபி அல்லது சிஎஸ்கே பிடிக்கலாம்.

ஒருவேளை சன்ரைசர்ஸ் ஒரு ஆட்டத்தில் வென்று, மற்றொன்றில் தோற்றால் 16 புள்ளிகள் பெறும். ஆர்சிபி அணியை சிஎஸ்கே வென்றால் 16 புள்ளிகள் பெறும். ராஜஸ்தான் அணியும் கடைசி லீக்கில் தோற்றால் 16 புள்ளிகள் பெறும். 3 அணிகளும் 16 புள்ளிகள் பெற்று கடைசி 3 இடத்துக்கு மல்லுக்கட்டும். அப்போது வலுவான நிகர ரன்ரேட் வைத்திருக்கும் சிஎஸ்கே 2வது இடத்தையும், 3வது இடத்தை சன்ரைசர்ஸ் அணியும், 4வது இடம் ராஜஸ்தானுக்கும் கிடைக்கலாம்.

இப்போதுள்ள சூழலில் ப்ளே ஆஃப் சுற்றில் முதலிடத்தை கொல்கத்தா அணி பிடிக்கும், தக்கவைக்கும் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. மற்ற 3 இடங்களில் எந்தெந்த அணி அமரும், யாருடன் யார் ப்ளே ஆஃப் சுற்றில் மோதப் போகிறார்கள் என்பதைக் கணிக்க இன்னும் சில போட்டிகள் காத்திருக்க வேண்டும்.

பஞ்சாப்

பட மூலாதாரம், Getty Images

பஞ்சாப் அணி வென்றது எப்படி?

பஞ்சாப் அணி ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறினாலும், நம்பிக்கையை கைவிடவில்லை. கடைசிப்போட்டிவரை வெற்றிக்காக போராடுவோம் என்று தங்களின் போராட்டக் குணத்தை நேற்று வெளிப்படுத்தினர். இந்த வெற்றியால் தங்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்றாலும் தங்களின் வெற்றி, புள்ளிப்பட்டியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் என்பதை மட்டும் புரிந்திருந்தனர்.

பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவண் காயத்தால் பல போட்டிகளில் ஆடாத நிலையில் கேப்டனாக செயல்பட்ட சாம்கரன் அற்புதமாக செயல்பட்டார். இந்த ஆட்டத்திலும் பந்துவீச்சாளர்களை சிறப்பா ரொட்டேட் செய்து, ராஜஸ்தான் அணியை 144 ரன்களுக்குள் சுருட்டினார்.

சாம் கரன் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் ஆகச்சிறப்பாகச் செயல்பட்டு வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். கேப்டனுக்குரிய பொறுப்புடன் விளையாடிய சாம் கரன் 63 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். பந்துவீச்சிலும் பட்டையக் கிளப்பிய சாம்கரன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ராஜஸ்தானை சுருட்ட உதவி செய்தார்.

பஞ்சாப் பந்துவீச்சாளர்களில் பெரும்பாலும் ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் வழங்கவில்லை. நேதன் எல்லீஸ், ஹர்சல் படேல், ராகுல் சஹர், அர்ஷ்தீப் சிஹ், சாம் கரன் அனைவருமே விக்கெட் வீழ்த்தி தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டதால்தான் ராஜஸ்தான் அணி 144 ரன்களில் சுருட்ட முடிந்தது.

சேஸிங்கின்போது பஞ்சாப் அணி ஒரு கட்டத்தில் 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தும், 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. பிரப்சிம்ரன் சிங்(6), பேர்ஸ்டோ(14), ரூஸோ(22), சஷாஹ் சிங்(0) என விரைவாக விக்கெட்டுகளை இழந்தனர்.

பராக்

பட மூலாதாரம், Getty Images

பஞ்சாப் அணியை மீட்ட சாம் கரன்-ஜிதேஷ் ஜோடி

பஞ்சாப் அணி தோல்விப் பாதைக்கு செல்லும் ராஜஸ்தான் வெற்றி உறுதியாகும் என ஒரு கட்டத்தில் கணிக்கப்பட்டது. ஆனால், அனைத்து கணிப்புகளையும் கேப்டன் சாம் கரன், ஜிதேஷ் சர்மா கூட்டணி உடைத்தது.

5-ஆவது விக்கெட்டுக்கு சாம்கரனுடன் ஜோடி சேர்ந்த ஜிதேஷ் சர்மா 63 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். 20 பந்துகளில் 22 ரன்கள் மட்டுமே ஜிதேஷ் சர்மா சேர்த்தாலும், சாம் கரனுக்கு அவர் அளித்த ஒத்துழைப்பு ஆட்டத்தை வெற்றி நோக்கி நகர்த்த உதவியாக இருந்தது.

ஜிதேஷ் சர்மா-சாம்கரனைப் பிரிக்க அஸ்வின், சஹல், போல்ட் எனபல பந்துவீச்சாளர்களை சாம்ஸன் பயன்படுத்தியும் பலனில்லை. மாறாக அனைவரின் ஓவரிலும் சாம் கரன் பவுண்டரி, சிக்ஸர் விளாசி சாம்ஸன் கணிப்பை பொய்யாக்கினார்.

கடைசி 6 ஓவர்களில் பஞ்சாப் அணிக்கு ஓவருக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. ஜிதேஷ், சாம் கரன் அதிரடிக்கு மாறினர். அஸ்வின் ஓவரில் சாம்கரன் சிக்ஸர் அடிக்க, சஹல் பந்துவீச்சில் ஜிதேஷ் சிக்ஸர் அடிக்கமுயன்று ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய அஷுதோஷ் சிங்கால் வெற்றி எளிதானது. அஷுதோஷ் சிறிய கேமியோ ஆடி பஞ்சாப் அணியை வெற்றி பெற வைத்தார்.

சாம்கரன் 38 பந்துகளில் அரைசதம் அடித்து, 41 பந்துகளில் 63 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அஷுதோஷ் சிங் 17 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

சாம் கரன்

பட மூலாதாரம், Getty Images

பேட்டிங்கில் திணறிய ராஜஸ்தான் அணி

ராஜஸ்தான் அணி நேற்று பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்படவில்லை. ராஜஸ்தான் அணியின் பேட்டர், உள்ளூர் ஹீரோ ரியான் பராக் சேர்த்த 48 ரன்களைக் கழித்துப் பார்த்தால் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 100 ரன்களைக் கூட கடக்காது.

ஜெய்ஸ்வால் இந்த சீசனில் சரியாக ஆடவில்லை. ஃபார்மின்றி தவிக்கும் இவரை டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு தேர்வு செய்துள்ளது சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சாம்கரன் வீசிய முதல் ஓவரிலேயே ஸ்விங் பந்தில் க்ளீன் போல்டாகி ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். கரீபியன் ஆடுகளங்களில் ஜெய்ஸ்வால் என்ன செய்யப் போகிறார் எனத் தெரியவில்லை.

சாம்ஸன் என்ன சொல்கிறார்?

ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்ஸன் கூறுகையில் “ இந்த விக்கெட்டை நாங்கள் மிகச்சிறப்பாக எதிர்பார்த்தோம். 140 ரன்களுக்குள் அடிக்க முடியும் ஆடுகளமாக நினைக்கவில்லை, குறைந்தபட்சம் 160ரன்கள் வரை சேர்க்கத் திட்டமிட்டிருந்தோம் ஆனால் பேட் செய்யஆடுகளம் கடினமாக இருந்தது. எங்கள் தோல்விகளை ஏற்கிறோம்."

"எங்கு தோற்றோம் என்பது குறித்து ஆலோசிப்போம். அணியில் எந்த இடத்தில் யார் சரியாகச் செயல்படவில்லை, எங்கு பிரச்சினை இருக்கிறது என்பதை ஆலோசிப்போம். எங்களிடம் தனி ஒருவனாக அணியை வெல்ல வைக்கும் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். அனைவரும் முயற்சித்தால் வெற்றி எளிதாகும். இது குழுவான விளையாட்டு. இந்த கடினமான நேரத்தில் ஒவ்வொரு வீரரும் முன்வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)