டெல்லியின் வெற்றியைக் கொண்டாடும் ஆர்சிபி ரசிகர்கள் - என்ன காரணம்?

ஐபிஎல்

பட மூலாதாரம், Getty Images

லக்னெள அணியை டெல்லி அணி வீழ்த்தியதால், “ நானும் போகக்கூடாது, நீயும் முன்னேற முடியாது” என்ற ரீதியில் முடிவு இரு அணிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால், இரு அணிகளின் முடிவு ராஜஸ்தான் அணிக்கு சாதகமாகி ப்ளே ஆஃப் சுற்றை அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளது.

டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 64-வது லீக் ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் சேர்த்தது. 209 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் சேர்த்து 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியால் டெல்லிக்கு பயன் உண்டா?

லக்னெள அணியை டெல்லி அணி வீழ்த்தி 14 புள்ளிகளுடன் முடித்தாலும், அதன் நிகர ரன்ரேட் ஆர்சிபி அணியைவிட மோசமாகச் சரிந்துள்ளது. ஒருவேளை சிஎஸ்கே அணியை ஆர்சிபி வென்றால் நல்ல ரன்ரேட் பெறும்போது டெல்லி தானாகவே ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறும். ஆதலால், கணித ரீதியாக வெளியேறிவிட்டது, ஆனால், அதிகாரபூர்வமாக வெளியேற்றப்படவில்லை.

சன்ரைசர்ஸ் தனக்கிருக்கும் 2 லீக் ஆட்டங்களிலும் சேர்த்து 194 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று, சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக பேட் செய்யும் அணி 200 ரன்களுக்கு மேல் ஸ்கோர் செய்ய வேண்டும். இதெல்லாம் நடந்தால் சன்ரைசர்ஸ் நிக ரன்ரேட்டைவிட டெல்லி அணி நிகர ரன்ரேட் உயர்ந்து, ப்ளே ஆப் செல்லலாம்.

ஐபிஎல்

பட மூலாதாரம், Getty Images

லக்னெள அணியின் நிலைமை என்ன?

அதேபோல லக்னெள அணிக்கு இன்னும் ஒரு ஆட்டம் மீதம் இருக்கிறது. 7-வது இடத்தில் இருக்கும் லக்னெள அணி 13 போட்டிகளில் 12 புள்ளிகள் பெற்று, நிக ரன்ரேட் ரேட் மைனஸ் 0.787 எனச் சரிந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியை லக்னெள அணி கடைசி லீக்கில் வென்றாலும் அந்த அணிக்கு எந்த விதத்திலும் உதவாது. 14 புள்ளிகளுடன் லக்னெள முடித்தாலும், நிகர ரன்ரேட் மோசமாக இருப்பதால் ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லாமல் வெளியேறும்.

ராஜஸ்தானுக்கு ‘ஆடாமலேயே கிடைத்த’ பிளேஆப் வாய்ப்பு

லக்னெள, டெல்லி அணிகள் 14 புள்ளிகளுக்கு மேல் பெறுவதற்கு வாய்ப்பில்லை. ஆர்சிபி அணியும் கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை வென்றாலும் 14 புள்ளிகளுக்கு மேல் பெற வாய்ப்பில்லை. சிஎஸ்கே தற்போது 14 புள்ளிகளோடு இருப்பதால், கடைசி லீக்கில் ஆர்சிபியை வென்றால் 16 புள்ளிகள் பெறும், தோல்வி அடைந்தால் 14 புள்ளிகளோடு முடிக்கும். ஆதலால், 16 புள்ளிகள் பெறுவதற்கு வாய்ப்புள்ள அணிகளில் சிஎஸ்கே, சன்ரைசர்ஸ், ராஜஸ்தான் அணிகள் மட்டுமே உள்ளன.

ஏற்கெனவே கொல்கத்தா அணி அதிகாரபூர்வமாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்றுவிட்டநிலையில் 16 புள்ளிகளுடன் இருக்கும் ராஜஸ்தான் அணியும் ப்ளே ஆஃப் சுற்றை நேற்றைய டெல்லியின் வெற்றியால் உறுதி செய்துள்ளது.

ஐபிஎல்

பட மூலாதாரம், Getty Images

2-ஆவது இடத்துக்கு இடத்துக்கு கடும் போட்டி

சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிகளும், சிஎஸ்கே வெற்றியையும் பொருத்து, ராஜஸ்தான் அணியின் இடம் உறுதியாகும். ஆனால், ராஜஸ்தான் அணி கடைசி இரு லீக் போட்டிகளில் தோற்றாலும் ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறாது. ஆதலால், அடுத்துவரும் இரு ஆட்டங்களையும் ராஜஸ்தான் அணி “மிகுந்த ரிலாக்ஸாக டென்ஷன்” இன்றி விளையாடலாம்.

ஒருவேளை சன்ரைசர்ஸ் அணி கடைசி லீக் ஆட்டங்களிலும் வென்றால் 18 புள்ளிகள் பெறும், ராஜஸ்தான் அணியும் கடைசி இரு லீக் ஆட்டங்களில் வென்றால் 20 புள்ளிகளோடு முதலிடத்தைப் பிடிக்கும், ஒரு ஆட்டத்தில் வென்றால், சன்ரைசர்ஸ் அணியோடு 2-வது இடத்துக்கு மல்லுகட்டும். எந்த அணியின் நிகர ரன்ரேட் உயர்வாக இருக்கிறதோ அந்த அணி 2வது இடத்தையும், அடுத்த அணி 3வது இடத்தைப் பிடிக்கும்.

சிஎஸ்கேவுக்கு வாழ்வா-சாவா போட்டி

சிஎஸ்கே அணி 16 புள்ளிகள் பெற்றால் 4-ஆவது இடத்தை சிக்கலின்றி உறுதி செய்யும். ஒருவேளை ஆர்சிபியிடம் தோல்வி அடைந்தாலும், பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோற்காமல் அதன் ரன்ரேட்டை பாதிக்காமல் தோற்க வேண்டும். இல்லாவிட்டால் ஆர்சிபி ப்ளே ஆஃப் செல்ல வழிவகுத்துவிடும்.

தற்போது டெல்லி அணி லக்னௌவை வீழ்த்தியிருப்பதன் மூலம், சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி ஆகிய இரு அணிகளுக்கும் நன்மை செய்திருக்கிறது என்றே கூற வேண்டும். குறிப்பாக ஆர்சிபி ரசிகர்கள் டெல்லியின் வெற்றியை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். ஏனென்றால், பிளேஆப்பின் மீதமிருக்கும் இரு இடங்ளுக்கு அதிக வாய்ப்பு கொண்ட பட்டியலில் சன்ரைசர்ஸ், சிஎஸ்கே ஆகிய அணிகளுடன் ஆர்சிபியும் இப்போது சேர்ந்து கொண்டது. கடைசி போட்டியில் வெல்லும்பட்சத்தில் ஆர்சிபிக்கு பிளேஆப் வாய்ப்புக் கிடைக்கும்.

ஐபிஎல்

பட மூலாதாரம், Getty Images

டெல்லிக்கு ஆறுதல் வெற்றி கிடைத்தது எப்படி?

டெல்லி அணி 2024 ஐபிஎல் சீசனை முடிக்கும்போது ஆறுதலான வெற்றியோடு முடித்துள்ளது. தொடக்கத்திலிருந்தே சரியான தொடக்க ஆட்டக்காரர்கள் அமையாமல், நடுவரிசை பேட்டர்கள் அமையாமல் பல தோல்விகளைச் சந்தித்தது. ஆனால், அனைத்தும் ஒன்றுகூடி வரும்போது, வாய்ப்புகள் போதுமான அளவில் டெல்லி அணிக்கு இல்லை.

டெல்லியில் மீண்டும் ஒருமுறை 200 ரன்களுக்கு மேல் டெல்லி கேபிடல்ஸ் அணி குவித்தது. முதல் 4 பேட்டர்களின் அருமையான பங்களிப்பால் டெல்லி அணி பெரிய ஸ்கோரை எட்டியது. அதிரடிபேட்டர் மெக்ருக் டக்அவுட்டில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆனால் அபிஷேக் போரெல் (58) டிரிஸ்டென் ஸ்டெப்ஸ்(57) ஆகியோரின் அரைசதம் டெல்லி அணி பெரிய ஸ்கோரை எட்ட உதவியது.

பந்துவீச்சில் இம்பாக்ட் ப்ளேயராக வந்த இசாந்த் சர்மா தொடக்கத்திலேயே லக்னெள அணியின் பேட்டிங் வரிசையை ஆட்டம் காணவைத்து பாதி தோற்க வைத்தார். 4 ஓவர்கள் வீசிய இசாந்த் சர்மா 34 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார்.

இருப்பினும் 44 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய லக்னெள அணியை நிகோலஸ் பூரன்(61), அர்ஷத் கான்(58நாட்அவுட்) இருவரும் மீட்டு கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினர்.

ஐபிஎல்

பட மூலாதாரம், Getty Images

ஏமாற்றிய பிரேசர்ஸ் மெக்ரூக்

டெல்லி அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் பிரேசர் மெக்ருக் 2வது முறையாக நேற்றைய ஆட்டத்தில் அர்ஷத் கான் ஓவரில் டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். ஆனால், 2வது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப், அபிஷேக் போரெல் இருவரும் பவர்ப்ளேயில் ரன்ரேட்டை குறையவிடாமல் பார்த்துக் கொண்டனர்.

குறிப்பாக மோசின் கான் ஓவரில் அபிஷேக் 3 பவுண்டரிகளையும், அர்ஷத் கான் ஓவரில் சிக்ஸரும் விளாசினார். யுத்விர் சிங் ஓவரை குறிவைத்த ஹோப் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்களை பறக்கவிட்டார். 4 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 51 ரன்களை எட்டியது. நவீன் உல் ஹக் முதல் ஓவரை வெளுத்த ஹோப், போரெல் 17 ரன்கள் சேர்த்தனர். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் சேர்த்தது. அபிஷேக் 16 பந்துகளில் 43 ரன்களை அதிரடியாகச் சேர்த்து 21 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

சுழற்பந்துவீச்சாளர்களால் திணறிய டெல்லி

ஆனால், நடுப்பகுதி ஓவர்களில் லக்னெள அணியின் பிஸ்னோய், க்ருணல் பாண்டியா, தீபக் ஹூடா ஆகிய 3 சுழற்பந்துவீச்சாளர்களும் டெல்லி அணியின் ரன்ரேட்டை உயரவிடாமல் இறுக்கிப்பிடித்தனர். 2வது விக்கெட்டுக்கு அபிஷேக்-ஹோப் 92 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை பிஸ்னோய் உடைத்து, ஹோப்பை 38 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார்.

நவீன் உல்ஹக் மெதுவான பந்தில் பெரிய ஷாட் அடிக்க முயன்று அபிஷேக் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். டெல்லி அணி 7-ஆவது ஓவரிலிருந்து 12 ஓவர்கள் வரை 42 ரன்கள் மட்டுமே சேர்த்தது. பவர்ப்ளேயில் 73 ரன்கள் சேர்த்தநிலையில் அடுத்த 5 ஓவர்களில் டெல்லி ரன் சேர்ப்பு குறைந்தது.

ஐபிஎல்

பட மூலாதாரம், Getty Images

டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் அதிரடி

கேப்டன் ரிஷப் பந்த் கேமியோ ஆடி 33 ரன்களில் நவீன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 15 ஓவர்கள்வரை டெல்லி அணி 200 ரன்களைக் கடக்குமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் வந்தபின் ரன்ரேட் எகிறத் தொடங்கியது. அர்ஷத் வீசிய 16-ஆவது ஓவரில் ஸ்டெப்ஸ் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸரையும்,நவீன் வீசிய 19-வது ஓவரில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசி ஸ்டெப்ஸ் 22 பந்துகளில் அரைசதம் அடித்தார். கடைசி 5 ஓவர்களில் மட்டும் டெல்லி அணி 72 ரன்கள் சேர்த்து 200 ரன்களைக் கடந்தது. டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் 25 பந்துகளில் 57 ரன்கள்சேர்த்ததுதான் டெல்லி அணி 208 ரன்களை எட்ட காரணமாக அமைந்தது.

அதிர்ச்சி அளித்த இசாந்த்

209 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. இசாந்த் சர்மாவின் பந்துவீச்சில் லக்னெளவின் டாப்ஆர்டர் பேட்டர்கள் ஒவ்வொருவராக வெளியேறினர். முதல் 3 ஓவர்களில் குயின்டன் டீ காக்(12), கேஎல் ராகுல்(5), தீபக் ஹூடா(0) ஆகியோர் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர்.

அக்ஸர் படேல் பந்துவீச்சில் ஸ்டாய்னிஸ் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். இதனால் 44 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து லக்னெள தடுமாறியது. ஆனால், நிகோலஸ் பூரன் களத்துக்கு வந்தது முதல் சிக்ஸர் பவுண்டரி என வெளுத்ததால், பவர்ப்ளேயில் லக்ளென 4 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் சேர்த்தது. ஆயுஷ் பதோனி 6 ரன்களில் ஸ்டெப்ஸ் வெளியேற்றினார். இதனால் 71 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து லக்னெள அணி திணறியது.

ஐபிஎல்

பட மூலாதாரம், Getty Images

லக்னெளவை மீட்ட பூரன், அர்ஷத் கான்

ஆனால், நிகோலஸ் பூரனின் அற்புதமான ஆட்டம் ஸ்கோரை மெல்ல உயர்த்தியது. அக்ஸர் படேலின் ஓவரில் பூரன் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் என 20 ரன்கள் விளாசினார். குல்தீப் யாதவ் ஓவரையும் விட்டுவைக்காத பூரன் சிக்ஸர், பவுண்டரி என பறக்கவிட்டு 20 பந்துகளில் பூரன் அரைசதம் அடித்தார். முகேஷ் குமார் ஷார்ட் பாலில் கேட்ச் கொடுத்து பூரன் 27 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்து வெளியேறினார். 101 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து லக்னெள மோசமானநிலைக்கு சென்றது.

ஆனால் “அன்கேப்டு” வீரர் அர்ஷத் கான் களத்துக்கு வந்தபின் ஆட்டத்தில் சூடு பிடித்தது. டெல்லி பந்துவீச்சை பறக்கவிட்ட அர்ஷத் கான் 5 சிக்ஸர்களை வெளுத்து வாங்கினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டு லக்னெள அணி வெற்றியை நோக்கி நகரத் தொடங்கியது. அர்ஷத் கான் 25 பந்துகளில் அரைசதம் அடித்தார். கடைசி 2 ஓவர்களில் லக்னெள வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷத் கான் இருந்தவரை லக்னெள வெற்றி பெற்றுவிடும் என எண்ணப்பட்டது. ஆனால், முகேஷ் குமார், ரசிக் சலாம் இருவரும் டெத் ஓவர்களை கட்டுக்கோப்பாக வீசியதால், 19 ரன்களில் டெல்லி வென்றது. அர்ஷத் கான் 33 பந்துகளில் 58 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)