புதின்-ஜின்பிங் சந்திப்பு - யுக்ரேன் போர் பற்றிய நிலைப்பாடுகள் மாறுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், லாரா பிக்கர்
- பதவி, பிபிசி சீனா செய்தியாளர்
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் சீனாவுக்குச் சென்றிருக்கிறார். அங்கு அவர் சீன அதிபர் ஷி ஜின்பிங்கைச் சந்திக்கிறார்.
புதின் ஐந்தாவது முறை ரஷ்யாவின் அதிபராகப் பதவியேற்றபின்னர் இந்த அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். யுக்ரேன் மீது அவர் படையெடுப்பினைத் துவங்கி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சீனா ரஷ்யாவுக்கு முக்கிய நட்பு நாடாக இருந்துவருகிறது. சீனா யுக்ரேன் மீது ரஷ்யா தொடுத்திருக்கும் போரைக் கண்டிக்க மறுத்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கோபத்திற்கு ஆளான ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்து வருகிறது.
இன்று (வியாழன், மே 16) நடந்துவரும் இந்தச் சந்திப்பில் ஷி ஜின்பிங்-உடன் யுக்ரேன் போரைப் பற்றி பேசியதாக புதின் தெரிவித்திருக்கிறார்.
இஸ்ரேல்-காஸா போரை முடிவுக்குக் கொண்டு வருவது மிகவும் அவசரமான குறிக்கோள் என்று இரண்டு தலைவர்களும் தெரிவித்திருக்கின்றனர்.
இருப்பினும், புதின் இதற்கு மேலும் ஆதரவை எதிர்பார்க்கிறார் என்று தோன்றுகிறது. ஆனால் அதற்கான விலையைக் கொடுக்க சீனா தயாராக உள்ளதா?

பட மூலாதாரம், POOL
சீனா-ரஷ்யா உறவு எப்படியிருக்கிறது?
கடந்த வாரம் ஐந்தாவது முறை ரஷ்ய அதிபராகப் பதவியேற்ற பின்னர் புதின் தனது முதல் வெளிநாட்டு பயணத்திற்குச் சீனாவைத் தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியமில்லை. இந்த இருநாள் அரசுமுறைப் பயணம் அவர்களின் உறவு 'எப்போதும் இல்லாத உயர்ந்த நிலையை' எட்டியதால் வருகிறது என்று சீன அரசு ஊடகத்திடம் தெரிவித்தார். அவர் சீனத் தற்காப்புக் கலைகள் மற்றும் சீனத் தத்துவத்தின் மீது தனக்கிருக்கும் ஆர்வத்தைப் பற்றிப் பேசினார். மேலும் அவரது குடும்பத்தில் சிலர் சீனாவின் மாண்டரின் மொழியைக் கற்று வருவதாகவும் கூறினார்.
"இன்று நிலவிவரும் கடினமான சர்வதேசச் சூழ்நிலையில், எங்கள் உறவுகள் இன்னும் வலுவடைந்து வருகின்றன," என்று அவர் கூறினார்.
ஆனால் புதின் சீனாவுடனான தனது நட்பைப் பற்றித் தற்பெருமை பேசும் அதேசமயம், ஷி ஜின்பிங் கவலைப்படுவதற்குக் காரணங்களும் இருக்கலாம்.
ரஷ்யாவுடன் வணிக உறவுகளில் இருக்கும் பெய்ஜிங் மற்றும் ஹாங்காங்கைத் தளமாகக் கொண்ட சீன வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக, புதிய பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த நிறுவனங்கள் தற்போதுள்ள பொருளாதாரக் கட்டுப்பாடுகளைத் தவிர்க்க உதவுவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
சீனா ரஷ்யாவிற்கு ஆயுதங்களை விற்கவில்லை என்றாலும், போருக்குத் தேவையான தொழில்நுட்பம் மற்றும் உதிரி பாகங்களை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்வதாக அமெரிக்கா நம்புகிறது.
பெய்ஜிங்கிற்கு சமீபத்தில் பயணித்த அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கன், பனிப்போருக்குப் பிறகு ஐரோப்பிய பாதுகாப்புக்கு 'பெரும் அச்சுறுத்தலைத் தூண்டுவது சீனா தான்' என்று பிபிசியிடம் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் யுக்ரேன் மீதான அதன் நிலைப்பாடு நடுநிலையானது என்று சீனா கூறி வருகிறது. மேலும் அது ரஷ்யாவிற்கு விற்கும் தொழில்நுட்பம் மற்றும் உதிரி பாகங்கள் போர் தவிர்த்த வணிகரீதியான பயன்பாடுகளையும் கொண்டுள்ளதால் அவை விதிகளை மீறவில்லை என்கிறது.
இருந்தபோதிலும், கடந்த வாரம் ஷி ஜின்பிங் பிரான்ஸுக்குச் சென்றிருந்த போதும் அவர்மீது இந்தக் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. சீனாவுக்கு நற்பெயர் வாங்குவதற்காக ஃபிரான்சுக்குச் சென்றிருந்த அவரது நோக்கத்தை இது திசைதிருப்பியது.
சீனா மீது சந்தேகம் தெரிவிப்பவர்களும், சீனா மீது இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று சொல்பவர்களும் தங்களது வாதங்களை இன்னும் சத்தமாக முன்வைத்து வருகின்றனர். ஷி ஜின்பிங், புதின் மீது அதிக அழுத்தத்தை செலுத்துமாறு அவர்கள் வலியுறுத்துகின்றனர். ஐரோப்பிய ஒன்றியமும் சீனா மீது அதன் சொந்தத் தடைகளை விதிக்கப் பரிசீலித்து வருகிறது.
அதேசமயம் சீனாவின் பொருளாதாரம் இப்போது மந்தமாக இருக்கிறது. தனது வர்த்தக பங்காளிகள் தன்மீது செலுத்தும் இந்த அழுத்தத்தை அதனால் தாங்கிக்கொள்ள முடியாது. உள்நாட்டில் தேவை பலவீனமாக இருப்பதால் வெளிநாட்டுச் சந்தைகள் சீனாவுக்கு அவசியமாகும்.
இவை அனைத்தும் ஷி ஜின்பிங்கை ஒரு சங்கடமான சூழ்நிலையில் தள்ளுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
'வரம்புகள் இல்லாத நட்பு' என்னவானது?
ரஷ்யா யுக்ரேனை ஆக்கிரமிப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பு, புதினும் ஷின்பிங்கும் இருநாட்டு ஒத்துழைப்பை ஆழப்படுத்த 'வரம்புகள் இல்லாத' கூட்டாண்மையை அறிவித்தனர். மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான சித்தாந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இரு நாடுகளுக்கும் இது அவசியமானதாக இருந்தது.
அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்கை மறுவடிவமைப்பதில் ரஷ்யா முக்குயப் பங்காற்றும் என்று சீனா கருதுகிறது. இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம் செழித்து வருகிறது. 'பவர் ஆஃப் சைபீரியா' குழாய் வழியாக தொடர்ந்து வழங்கப்பட்டுவரும் எரிவாயு ஏற்றுமதி உட்பட மலிவான ரஷ்ய எரிசக்தி சீனாவிற்கு நன்மையாக உள்ளது.
ஆயினும்கூட, யுக்ரேன் போர் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இந்தக் கூட்டணி அவ்வளவு 'வரம்புகள் இல்லாததாகத்' தோன்றவில்லை. ஒன்று, இந்த வார்த்தை இருநாட்டு அரச ஊடகங்களில் இருந்து கிட்டத்தட்ட மறைந்து விட்டது, என்று பிபிசி பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது.
சீனா, ரஷ்யாவுடனான தனது மூலோபாயக் கூட்டணியின் 'வரம்பற்ற தன்மையை' அவ்வளவு முக்கியமானதல்ல என்பதுபோலக் காட்டிக்கொள்கிறது, என்கிறார் 'கார்னகி எண்டோமென்ட்' சிந்தனைக் குழுவின் மூத்த ஆய்வாளரான ஜாவோ டோங்.
"மேற்கத்திய செல்வாக்கைக் குறைக்கும் இலக்கை சீனா ஆதரிக்கும் அதே வேளையில், அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அச்சுறுத்தல் உட்பட ரஷ்யாவின் சில தந்திரோபாயங்களுடன் சீனா உடன்படவில்லை. ரஷ்யாவிற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினால் வரும் களங்கத்தை சீனா நன்கு அறிந்திருக்கிறது. உலக அரங்கில் தனது சட்டபூர்வமான தன்மையை மேம்படுத்துவதற்கான உத்திகளை அது தொடர்ந்து செம்மைப்படுத்தி வருகிறது," என்றார்.
சமீபத்தில் ஐரோப்பா சென்றிருந்த ஷி ஜின்பிங் "சீனா நெருக்கடியை உருவாக்கவில்லை, அதில் பங்கேற்கவும் இல்லை" என்று கூறினார். இதையே சீனா தனது சொந்த குடிமக்களுக்கும் சொல்லி வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
ஷி ஜின்பிங் அமைதித் தூதுவரா?
ஆனால் சீனாவின் இந்த நடுநிலை நிலைப்பாடு, யுக்ரேன் மீதான அனுதாபம் என்று அர்த்தப்படாது. சீனாவின் வெகுவாகத் தணிக்கை செய்யப்பட்ட ஊடகங்களிலிருந்து இது எளிதில் தெரியும்.
சீன அரசு ஊடகம் இன்னும் ரஷ்யாவின் படையெடுப்பை நியாயப்படுத்துகிறது. அதனை 'அமெரிக்க-ஆதரவு நேட்டோ விரிவாக்கத்திற்கு எதிராக ரஷ்யாவின் துரிதமான பதிலடி' என்று கூறுகிறது.
ஆனால், சீனாவில் மாறுபட்ட குரல்களும் உள்ளன. சீனாவின் பொதுமக்களில் சிலர், ரஷ்யாவுடனான 'வரம்பற்ற உறவை' ஆதரிக்க எவ்வளவு தூரம் தயாராக இருக்கிறார்கள் என்பதில் விரிசல் தோன்றக்கூடும் என்று சந்தேகம் எழுப்பப்படுகிறது.
ஃபுடான் பல்கலைக்கழகத்தில் ரஷ்ய மற்றும் மத்திய ஆசிய ஆய்வு மையத்தின் இயக்குநராக இருக்கும் ஃபெங் யுஜுன் சமீபத்தில் 'தி எகனாமிஸ்ட்' இதழில், 'ரஷ்யா யுக்ரேனில் தோல்வியடைவது உறுதி' என்று எழுதியிருந்தார்.
சீனாவில் இது ஒரு துணிச்சலான கருத்து.
ஆனால், ஷி ஜின்பிங், தான் ஒரு அமைதித் தூதுவராக இருப்பதற்கான சமிக்ஞைகளைக் கொடுத்திருக்கிறார்.
கடந்த மார்ச் மாதம், மாஸ்கோவிற்கு அரசுமுறைப் பயணமாகச் சென்ற சில நாட்களுக்குப் பிறகு, அவர் யுக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சீனா "எப்போதும் அமைதியின் பக்கம் நிற்கிறது" என்று கூறினார். அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு எதிரான தனது 12-அம்ச அமைதித் திட்டத்தையும் சீனா வெளியிட்டது.
இருந்தும், புதின்-ஜின்பிங் சந்திப்பால், இந்தக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் வராது.
ஆனால் மேற்கத்திய நாடுகள் சீனா-ரஷ்யா கூட்டணியால் பொறுமையிழந்து வருகின்றன. அமைதி காப்பாளராக இருக்கும் ஷி ஜின்பிங்கின் முயற்சிகள் இதுவரை பலிக்கவில்லை. முன்பு 'தோழன்' என்றும் 'அன்பான நண்பன்' என்றும் அவர் அழைத்த, சர்வதேச வெறுப்பைச் சம்பாதித்த ரஷ்யா போன்ற நாட்டோடு 'தோளோடு தோள்' நிற்பது எவ்வளவு அபாயகரமானது என்பதை அவர் சிந்திப்பார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












