இந்தியாவில் விற்கப்படும் மசாலாக்களில் எத்திலீன் ஆக்ஸைடு இல்லை: பிபிசியிடம் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தகவல்

இந்திய மசாலா கலவைகளில் பூச்சிக்கொல்லி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சாரதா வி
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மசாலா கலவைகளில் 'எத்திலீன் ஆக்ஸைடு' எனும் பூச்சிக்கொல்லி இருப்பதாக சர்வதேச அளவில் சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் விற்கப்படும் மசாலாப் பொருட்களில் இந்தப் பூச்சிக்கொல்லி இல்லை என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.

ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்தியாவின் சில பிரபலமான பிராண்டுகள் தடை செய்யப்படுவதற்கு எத்திலீன் ஆக்ஸைடு தான் காரணம்.

ஹாங்காங், சிங்கப்பூர், மாலத்தீவுகள், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள அதிகாரிகள் இந்திய முன்னணி பிராண்டுகளான 'எம்.டி.எச்' மற்றும் 'எவரெஸ்ட்' ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் மசாலாப் பொருட்களில் புற்றுநோயை உருவாக்கும் எத்திலீன் ஆக்ஸைடு எனும் பூச்சிக்கொல்லி ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் இருப்பதைக் கண்டறிந்ததாகக் கூறியபோது நடவடிக்கை எடுத்ததாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

"இந்தியாவில் விற்கப்படும் மசாலா கலவையில் எத்திலீன் ஆக்சைடு பயன்படுத்தப்படுவதில்லை," என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பிபிசி தமிழுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளது. அனைத்து சர்ச்சைகளுக்கும் காரணமான பூச்சிக்கொல்லி இந்திய சந்தைகளில் விற்கப்படும் மசாலாப் பொருட்களில் இல்லை என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கூறுவது இதுவே முதல் முறையாகும்.

இந்திய மசாலா கலவைகளில் பூச்சிக்கொல்லி

பட மூலாதாரம், Getty Images

ஏற்றுமதி செய்யப்பட்ட இந்திய மசாலா கலவைகள் தடை செய்யப்பட்டதையடுத்து, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இந்தியாவில் சோதனைகளைத் துவங்கியுள்ளது.

"மசாலாப் பொருட்களில் பொதுவாக 232 வகையான பூச்சிக்கொல்லிகள் உள்ளதா என்று சோதிக்கப்படும். மசாலாப் பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு குறித்த சமீபத்திய ஊடக அறிக்கைகளைத் தொடர்ந்து, எம்.டி.எச் மற்றும் எவரெஸ்ட் ஆகிய இரண்டு பிராண்டுகளுக்கும் இந்தியாவில் உள்ள உற்பத்தியாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதாவது ஏற்றுமதி செய்யப்பட்டப் பொருட்களை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் மண்டல அலுவலகங்களால் ஆய்வு செய்தல், மாதிரி எடுத்தல் மற்றும் புலனாய்வு செய்தல் ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன,” என்று பிபிசி தமிழின் கேள்விகளுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட பதிலில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், சில வல்லுநர்கள் இந்திய மசாலாப் பொருட்களில் எத்திலீன் ஆக்ஸைடு இல்லை என்ற இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் கூற்றை ஏற்க மறுக்கின்றனர்.

பொதுக் கொள்கை நிபுணர் மற்றும் பூச்சிக்கொல்லி நடவடிக்கை நெட்வொர்க்கின் ஆலோசகரான டாக்டர் டி நரசிம்ம ரெட்டி, “எதன் அடிப்படையில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் மசாலாப் பொருட்களில் எத்திலீன் ஆக்ஸைடு இல்லை என்று கூறுகிறது,” என்று கேட்கிறார்.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் தரமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கிறதா என்று உறுதி செய்ய வேண்டியது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் பொறுப்பாகும்.

இந்திய மசாலா கலவைகளில் பூச்சிக்கொல்லி

பட மூலாதாரம், Getty Images

இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள், இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம், 2006, நிர்ணயிக்கும் தரத்துக்கு ஏற்றவாறு உள்ளனவா என்று சரிபார்க்க மூன்று அடுக்குச் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. ஆவணங்கள் ஆய்வு, காட்சி ஆய்வு, மாதிரிகளின் சோதனை ஆகிய மூன்று அடுக்குச் சரிபார்ப்பு முறை மேற்கொள்ளப்படுகிறது.

இது குறித்து, "உணவுப் பொருட்கள் தரமானதாக இல்லை என்று கண்டறியப்பட்டால், அவை துறைமுகத்திலிருந்து நாட்டின் உள்ளே வர அனுமதி பெறாது,” என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கூறியுள்ளது.

இந்திய உணவுச் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மசாலாப் பொருட்களை ஒழுங்குபடுத்துவதில்லை - இது இந்திய ஸ்பைஸ் வாரிய கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது.

இந்த விவகாரம் உலக அளவில் ஊடகங்களில் வெளியான பிறகே, இந்திய உணவுச் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இந்த நடவடிக்கைகளை எடுக்கிறது என்றும், கடந்த காலங்களிலும் இந்திய உணவுப் பொருட்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்றும் டாக்டர் ரெட்டி பிபிசியிடம் கூறினார்.

"கடந்த சில ஆண்டுகளில் ஐரோப்பிய ஒன்றியம் இந்திய உணவுப் பொருட்கள் பலவற்றை நிராகரித்துள்ளது. அப்போதே ஏன் இந்த நடவடிக்கைகளை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் எடுக்கவில்லை?" என்கிறார் டாக்டர் ரெட்டி.

இந்திய மசாலா கலவைகளில் பூச்சிக்கொல்லி
படக்குறிப்பு, டாக்டர் டி நரசிம்ம ரெட்டி

ஏற்றுமதி செய்யப்படும் இந்திய மசாலாப் பொருட்கள் சர்ச்சையில் சிக்கியது ஏன்?

ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்பு மையம் கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி எவரெஸ்ட் மீன் கறி மசாலாவுடன் மூன்று எம்.டி.எச் மசாலா கலவைகளை (மெட்ராஸ் கறி தூள், சாம்பார் மசாலா, மற்றும் கறி தூள் மசாலா) தடை செய்தது. எத்திலீன் ஆக்ஸைடு எனும் புற்றுநோயை உருவாக்கும் பூச்சிக் கொல்லி இருப்பதே இந்தத் தடைக்குக் காரணம் என்றும் கூறியது.

ஹாங்காங்கிற்குப் பிறகு, சிங்கப்பூரும் இதே காரணத்தைச் சுட்டிக்காட்டி, எவரெஸ்ட் மசாலா கலவையை தடை செய்தது.

எத்திலீன் ஆக்சைடு (ETO) சாதாரண வெப்பநிலையில் நிறமற்ற வாயுவாக, நல்ல வாசனையைக் கொண்டுள்ளதாக இருக்கும். சில உணவுப் பொருட்களில், குறிப்பாக மசாலாப் பொருட்கள், உலர்ந்த பழங்கள், கொட்டைகள் மற்றும் சில மூலிகைகளைச் சேமித்து வைக்கும் போது அல்லது சரக்கு போக்குவரத்தின் போது, அவை கெட்டுப் போக வாய்ப்புண்டு. எனவே, சில உணவுப் பொருட்களில் பூச்சிகள் மற்றும் நோய்க்கிருமிகளைக் கட்டுப்படுத்த எத்திலீன் ஆக்ஸைடு பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்தப்படுகிறது. பூச்சிகள் மற்றும் பாக்டீரியாக்களை அது கொல்கிறது.

மனிதர்கள் நீண்ட காலத்திற்கு இதை உட்கொள்ளும் போது புற்றுநோயை ஏற்படுத்தக் கூடும் என்று பல ஒழுங்குமுறை அமைப்புகள் கூறியுள்ளன. சுவாச எரிச்சல், மத்திய நரம்பு மண்டல பாதிப்புகள் மற்றும் குழந்தைப்பேறு வாய்ப்பதில் பாதிப்புகள் ஏற்படும்.

அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பும் இது குறித்து கண்காணித்து வருகிறது. மேலும், மாலத்தீவுகள், ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் ஆகியவையும் இந்திய மசாலாப் பொருட்கள் மீது கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த எம்.டி.எச் நிறுவனம், "எங்கள் மசாலாப் பொருட்களை சேமித்தல், பதப்படுத்துதல் அல்லது பேக் செய்தல் ஆகியவற்றின் எந்த கட்டத்திலும் எத்திலீன் ஆக்சைடு (ஈடிஓ) பயன்படுத்துவதில்லை என்று எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளிக்கிறோம். இந்த கூற்றுக்கள் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை," என்று கூறியது.

இந்திய மசாலா கலவைகளில் பூச்சிக்கொல்லி

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் மசாலா ஏற்றுமதி வணிகத்திற்கு ஆபத்தா?

மசாலாப் பொருட்கள் பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்தின் மையமாக இருந்து வருகின்றன. பட்டுப் பாதை போன்ற விரிவான வர்த்தகப் பாதைகள் உருவாவதற்குக் காரணமாக இருந்த இந்திய மசாலாப் பொருட்கள், போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் போன்ற ஐரோப்பிய சக்திகளை ஈர்த்தன.

மிளகு, ஏலக்காய், இலவங்கப்பட்டை மற்றும் கிராம்பு போன்ற முக்கிய மசாலாப் பொருட்கள் இந்தியாவை ஐரோப்பா, ஆப்ரிக்கா மற்றும் கிழக்கு ஆசியாவுடன் இணைத்து, மசாலா வர்த்தகம் மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்களுக்கான உலகளாவிய மையமாக மாற்றியது.

மாறுபட்டக் காலநிலை மற்றும் புவியியல் காரணமாக இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு விதமான மசாலா வகைகள் கிடைக்கின்றன. எனவே மசாலா உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் இந்தியா ஒரு அதிகார மையமாக திகழ்கிறது என்று கூறினால் அது மிகையாகாது.

இந்திய ஸ்பைஸ் வாரியத்தின் தரவுகளின் படி, 2022-23 நிதியாண்டில் ரூ.31,761 கோடி மதிப்பிலான, 14,04,357 டன்கள் எடை கொண்ட நறுமணப் பொருட்கள் மற்றும் மசாலா பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

மிளகாய் தூள் ஏற்றுமதி ரூ.10,800 கோடியை எட்டியது. அதைத் தொடர்ந்து சீரகம் ரூ.4,590 கோடி, மஞ்சள் ரூ.1,836 கோடி, ஏலக்காய் ரூ.1,085 கோடி, கலப்பு மசாலா ரூ.918 கோடி, மற்றும் மசாலா எண்ணெய்கள் மற்றும் ஒலியோரெசின்கள்ரூ.8,384 கோடியை எட்டியது. 2022-23-ஆம் ஆண்டில் நாடு 1 கோடி டன் மசாலாப் பொருட்களை உற்பத்தி செய்தது.

இந்திய மசாலா கலவைகளில் பூச்சிக்கொல்லி

பட மூலாதாரம், Spices Board of India

இந்திய மசாலாப் பொருட்களின் சர்வதேச ஆய்வு இந்த வர்த்தகத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறது.

பொருளாதாரச் சிந்தனைக் குழுவான 'குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ்' அறிக்கை, "இந்திய மசாலாப் பொருட்களுக்கு எதிரான சமீபத்திய சர்வதேச நடவடிக்கைகள் சுமார் 692.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஏற்றுமதிக்கு ஆபத்தாக இருக்கலாம். இந்த வரிசையில் சீனாவிலும் இந்திய மசாலாப் பொருட்கள் தடை செய்யப்பட்டால், இந்திய ஏற்றுமதியில் 51.1% பாதிக்கப்படும்,” என்கிறது.

இந்தியக் கட்டுப்பாட்டாளர்களால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும், எந்தவொரு அரசு நிறுவனத்தாலும் இதுவரை மசாலா தரம் குறித்து உறுதியான அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என்று அறிக்கை மேலும் குறிப்பிடுகிறது.

குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் நிறுவனரும், முன்னாள் இந்திய வர்த்தகச் சேவை அதிகாரியுமான அஜய் ஸ்ரீவஸ்தவா, இந்தத் துறையை ஒழுங்குபடுத்துவதற்கான சரியான தருணம் இது என்று கூறுகிறார். கண்காணிப்புக்கான 'டிராக் அண்ட் டிரேஸ்' முறைக்கு அவர் வாதிடுகிறார்.

"நிலத்தில் விளைவது முதல், ஒரு உணவுப் பொருள் நுகர்வோரை அடையும் வரை கண்காணிக்கப்பட வேண்டும். ஏதேனும் தவறுகள் இருந்தால், இந்தச் சங்கிலியில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பிரச்சனை எங்கே உள்ளது என்பது தெரியும். நுகர்வோர் தாங்கள் நுகரும் ஒவ்வொரு பொருளும் எங்கிருந்து வருகிறது என்பதை அறிந்திருக்க வேண்டும். உலகம் படிப்படியாக இந்த முறையை பின்பற்ற நகர்ந்து வருகிறது, இந்தியாவும் பின்பற்ற வேண்டும்," என்று அவர் கூறினார்.

இந்திய மசாலா கலவைகளில் பூச்சிக்கொல்லி
படக்குறிப்பு, குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் நிறுவனர், அஜய் ஸ்ரீவஸ்தவா

ஹாங்காங் இறக்குமதியாளர்கள் என்ன கூறுகிறார்கள்?

இந்தியாவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்பவர்கள் தங்கள் நாட்டு நிலைமைகள் குறித்து விவரிக்கின்றனர்.

"எங்கள் நிறுவனம் பல தசாப்தங்களாக மசாலா வர்த்தகத்தில் உள்ளது, இந்தியாவில் தோன்றி இப்போது உலகளவில் செயல்படுகிறது. நாங்கள் எத்திலீன் ஆக்ஸைடு கொண்ட மசாலாப் பொருட்களைத் தவிர்க்கிறோம். அதை உறுதிப்படுத்த ஆய்வகச் சோதனைக்குப் பொருட்களை உட்படுத்துகிறோம். பூச்சிக்கொல்லிக்கு பதிலாக நீராவி போன்ற மாற்று முறைகளை பயன்படுத்துவதால், செலவுகள் அதிகமாகின்றன. ஆனால் உணவுப் பொருட்களின் தரத்தைப் பராமரிக்க இவை அவசியம்," என்று தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு இறக்குமதியாளர் கூறினார்.

ஹாங்காங்கில் மசாலாப் பொருட்களின் இறக்குமதியாளரான 'ரீஜென்சி ஸ்பைச'ஸின் சுனில் தத்தானி, ஹாங்காங்கில் எத்திலீன் ஆக்ஸைடு மீதான தடை ஒரு வருடத்திற்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டது, அதன் காரணமாக எத்திலீன் ஆக்ஸைடு உணவுப் பொருட்களில் உள்ளனவா என்ற சோதனைகள் தீவிரமாக நடைபெறுவதாகக் கூறுகிறார்.

"ஹாங்காங் உணவு, சுகாதாரத் துறை மற்றும் நுகர்வோர் கவுன்சில் ஹாங்காங்கில் சில்லறை வர்த்தக கடைகளில் சோதனைகளை நடத்துகிறது. அதிகாரிகள் சாதாரண உடையில் வந்து கடையில் இருக்கும் எந்தப் பொருளையும் வாங்கி அதைச் சோதிப்பார்கள். தடை செய்யப்பட்டுள்ள இரண்டு பிராண்டுகளின் பொருட்களின் புதிய இறக்குமதிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மற்ற இந்திய மசாலா பிராண்டுகள் மற்றும் பிற நாடுகளின் மசாலாப் பொருட்களும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன," என்று அவர் கூறுகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு பல ஜப்பானிய கடல் உணவுகள் மீது இதே போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்று அவர் நினைவுகூறுகிறார். “அந்த உணவுகளில் கதிர்வீச்சு அபாயம் இருக்கலாம் என்று கூறப்பட்டது,” என்றார்.

இந்திய மசாலா கலவைகளில் பூச்சிக்கொல்லி

பட மூலாதாரம், Getty Images

இந்திய ஒழுங்குமுறை அமைப்புகள் இப்போது என்ன செய்கின்றன?

சர்வதேச நாடுகளின் நடவடிக்கைகளுக்கு பிறகு, இந்திய ஸ்பைஸ் வாரியம் ஏற்றுமதியாளர்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்திய மசாலாப் பொருட்கள் மீதுள்ள நம்பிக்கையை மீட்டெடுக்கவும், உலக அரங்கில் இந்திய மசாலாப் பொருட்களின் நற்பெயரைப் பாதுகாக்கவும் இந்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. மொத்தம் 52 மசாலாப் பொருட்கள் ஸ்பைஸ் வாரியத்தின் கண்காணிப்பில் உள்ளன.

ஏற்றுமதியாளர்கள் இப்போது மூலப்பொருட்கள் முதல் உற்பத்தி செய்து முடிக்கப்பட்ட பொருட்கள் வரை அனைத்தையும் சோதிக்க வேண்டும். விநியோகச் சங்கிலி முழுவதும் எத்திலீன் ஆக்சைடை தவிர்க்க இது உதவும்.

பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதற்கு மாற்றாக, நீராவி முறை அல்லது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட வேறு முறைகளையும் ஸ்பைஸ் வாரியம் பரிந்துரைக்கிறது.

ஆனால் இந்த தயாரிப்புகள் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டால், இந்தியாவில் எவ்வாறு அங்கீகரிக்கப்படுகின்றன என்ற கேள்வி எழுகிறது.

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையில் உணவு ஆய்வாளராக இருக்கும் அன்பு வாஹினி, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகியவற்றில் மாறுபட்ட தரநிலைகள் உள்ளன என்கிறார். பொதுவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் தடை செய்யப்பட்டுள்ள உணவுச் சேர்க்கைகள் இந்தியாவில் அனுமதிக்கப்படுகின்றன என்றார்.

"வளர்ந்த நாடுகளில் நுகர்வோர் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். அவர்கள் உரிமை அடிப்படையிலான அணுகுமுறையைக் கொண்டுள்ளனர். சிறிய விதிமீறல்களுக்குக் கூட அவர்கள் நிறுவனங்கள் மீது வழக்குத் தொடுக்கிறார்கள். இந்தியாவில் அப்படி இல்லை," என்கிறார் வாஹினி.

உணவுப் பொருட்களில் அதிகபட்சமாக எவ்வளவு பூச்சிக்கொல்லி இருக்கலாம் என்பது எம்.ஆர்.எல் எனப்படும். அந்த அளவு உலக அளவில் கோடக்ஸ் என்ற அமைப்பால் நிர்ணயிக்கப்படுகிறது.

வெவ்வேறு மசாலாப் பொருட்களில் 139 பூச்சிக்கொல்லிகளின் எம்.ஆர்.எல்-களை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பிட்ட மசாலாப் பொருளில் எவ்வளவு பூச்சிக்கொல்லி இருக்க வேண்டும் என்பது முறையான அபாய மதிப்பீட்டின் அடிப்படையில் முடிவு செய்யப்படும். அந்த மதிப்பீடு செய்யப்படும் வரையில், குறிப்பிட்ட மசாலா மீது எந்தப் பூச்சிக்கொல்லி மருந்தும் பயன்படுத்தப்படாது என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்திய மசாலா கலவைகளில் பூச்சிக்கொல்லி
படக்குறிப்பு, அன்பு வாஹினி, உணவு ஆய்வாளர்

உணவுப் பொருட்களில் பூச்சிக்கொல்லியின் அளவுகள் அதிகரித்துள்ளனவா?

சில ஊடக அறிக்கைகள் இந்தியாவில் மசாலாப் பொருட்களுக்கான பூச்சிக்கொல்லியின் அதிகபட்ச அளவு அதிகரிக்கப்பட்டதாகக் கூறின.

எம்.ஆர்.எல்-களை அதிகரிப்பது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்று பூச்சிக்கொல்லி நடவடிக்கை நெட்வொர்க்கின் ஆலோசகர் டாக்டர் டி நரசிம்ம ரெட்டி கருதுகிறார்.

“இதனால் இந்தியத் தயாரிப்புகள் சர்வதேசச் சந்தையில் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக, சௌதி அரேபியா அதிக பூச்சிக்கொல்லி எச்சம் இருப்பதால் இந்திய ஏலக்காய் ஏற்றுமதியை நிராகரித்து வருகிறது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் தர சோதனை குறித்து ஏற்கனவே வெளிப்படைத்தன்மை இல்லாதபோது இது மசாலா இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவிடும்,” என்று அவர் கூறினார்.

இது குறித்து விளக்கம் அளித்திருந்த மத்திய சுகாதார அமைச்சகம், வெவ்வேறு உணவுப் பொருட்களுக்கு அவற்றின் ஆபத்து மதிப்பீட்டின் அடிப்படையில் அதிகபட்ச எச்ச வரம்புகள் வேறுபடுகின்றன என்று தெளிவுபடுத்தியது. "இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களில் 10 மடங்கு அதிக பூச்சிக்கொல்லி எச்சங்களை அனுமதிக்கிறது என்று சில ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. இத்தகைய அறிக்கைகள் தவறானவை மற்றும் தீங்கிழைப்பவை," என்று அமைச்சகம் கூறியது. அதிகபட்ச எஞ்சிய வரம்புகளை (எம்.ஆர்.எல்) பொறுத்தவரை உலகிலேயே இந்தியா மிகவும் கடுமையான தரங்களைக் கொண்டுள்ளது என்று அமைச்சகம் கூறியது.

பிபிசி எழுப்பிய எம்.ஆர்.எல் குறித்த கேள்விக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பதிலளித்தது. "அறிவியல் சான்றுகள், தொழில்நுட்பச் சாத்தியக்கூறுகள் மற்றும் சர்வதேச ஒழுங்குமுறை சீரமைப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டன. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் முடிவு பூச்சிக்கொல்லி எச்சங்கள் குறித்த அதன் அறிவியல் குழுவால் செய்யப்பட்ட விரிவான ஆபத்து மதிப்பீடுகளை பெரிதும் அடிப்படையாகக் கொண்டது," என்றது.

இந்திய மசாலா கலவைகளில் பூச்சிக்கொல்லி

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் உணவுத் தர ஒழுங்குமுறையில் உள்ள சவால்கள் என்ன?

தர கண்காணிப்பில் உள்ள ஓட்டைகளைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டில் நுகரப்படும் பொருட்களின் தரம் குறித்து அன்பு வாஹினி கவலை தெரிவித்தார் மற்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சோதனை மையங்களை அதிகப்படுத்த வேண்டும் என்று வாதிட்டார்.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் 239 முதன்மை உணவு சோதனை ஆய்வகங்கள், 22 பரிந்துரை ஆய்வகங்கள் கொண்டுள்ளது. பகுப்பாய்வு செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2020-21 ஆம் ஆண்டில் 107,829 ஆக இருந்து 2023-24 ஆம் ஆண்டில் 451,000 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இது மூன்று மடங்கிற்கும் அதிகமாகும்.

உணவுப் பொருட்களின் சோதனைக்கான கட்டணம் அதிகமாக இருப்பது, சிறிய மற்றும் நடுத்தர தொழில் செய்பவர்களுக்கு நிதிச் சுமையை அதிகப்படுத்துகிறது என்று வாஹினி சுட்டிக்காட்டுகிறார்.

"ஒரு தயாரிப்பில் ஒரு மூலப்பொருளை ஒரு தொகுப்பில் பரிசோதிக்க ஆகும் செலவு சுமார் ரூ.6000 - ரூ.8000. பல மூலப் பொருட்களை சோதிக்க வேண்டும் என்றால், அதற்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவிட வேண்டும். சிறு மற்றும் நடுத்தர வணிகங்களால் இந்த செலவை செய்ய இயலாது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் கண்காணிப்பு கடுமையாக்கப்பட வேண்டும் என்று கூறும் அதே வேளையில், சில விதிகளை எளிதாக்க வேண்டும், "என்று அவர் கூறினார்.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தற்போது எம்.டி.எச் மற்றும் எவரெஸ்ட் உள்ளிட்ட மசாலாப் பொருட்களின் மாதிரிகளை உள்நாட்டு சந்தையில் இருந்து எடுத்து வருகிறது. சந்தையில் மசாலா கலவைகளின் தீவிர சோதனைகளை நடத்துமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதன் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இப்போது பழங்கள் மற்றும் காய்கறிகள், சால்மோனெல்லா மீன் பொருட்கள், மசாலா மற்றும் உண்ணக்கூடிய மூலிகைகள், செறிவூட்டப்பட்ட அரிசி மற்றும் பால் மற்றும் பால் பொருட்கள் போன்ற உணவுப் பொருட்களை கண்காணித்து வருகிறது.

சிட்டிசன் கன்ஸ்யூமர் சிவிக் ஆக்சன் குரூப்பின் நிர்வாக இயக்குனர் எஸ்.சரோஜா, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடத்தும் சோதனைகளின் முடிவுகளை பொது களத்தில் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

"எந்த நிறுவனத்தின் உணவுப் பொருட்கள் தரமாக இல்லை என்பதை நுகர்வோர் தெரிந்து கொள்ள வேண்டும். பிராண்டின் பெயரை வெளியிடுவதில் தவறில்லை" என்று அவர் கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)