மும்பை: புழுதிப் புயலில் நூறடி உயர விளம்பர பதாகை சரிந்து 4 பேர் பலி - என்ன நடந்தது?
மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் திங்கட்கிழமை மணல் புயல் வீசியதை தொடர்ந்து பலத்த காற்றோடு மழை பெய்தது.
50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய பலத்த காற்றில் சில இடங்களில் விளம்பர பதாகைகள் விழுந்த நிலையில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
கட்கோபர் பகுதியில் ஒரு பெரிய விளம்பரபதாகை விழுந்ததில் 7 பேர் காயமடைந்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பிடிஐ செய்தி முகைமை தெரிவித்துள்ளது.
மரங்கள் விழுந்ததில் முலுண்ட் மற்றும் தானே ஆகிய இடங்களுக்கு நடுவே ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
அலுவலகம் விடும் நேரத்தில் காற்றும் மழையும் பெய்ததால் பலரும் பாதிக்கப்பட்டனர்.
மும்பையை தவிர்த்து, தானே, மும்பரா, டிவா, டோம்பிவ்லி ஆகிய இடங்களிலும் பலத்த காற்றை தொடர்ந்து மழை பெய்தது.
கட்கோபர் பகுதியில் சுமார் நூறடி உயர இரும்பு விளம்பரபதாகை விழுந்தது. இதில் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், 64 பேர் காயமடைந்துள்ளதாகவும் மும்பை மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



