அமெரிக்க கப்பல் விபத்து: 50 நாட்களாக கப்பலில் சிக்கியுள்ள 20 இந்தியர்கள் எப்படி இருக்கிறார்கள்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பெர்ன்ட் டிப்மேன் ஜூனியர்
- பதவி, பிபிசி நியூஸ்
அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் மீது `டாலி’ என்ற கப்பல் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து நடந்து கிட்டத்தட்ட ஏழு வாரம் ஆகிவிட்டது.
திங்களன்று, உடைந்த பாலத்தின் இடிபாடுகளில் இருந்து 'டாலி' என்ற கப்பலை வெளியே இழுக்க, சிறியளவில் வெடிவைத்து இடிபாடுகளை அகற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பெரிய கப்பலில் 21 பணியாளர்கள் இருக்கின்றனர். ஒரே நேரத்தில் ஏற்படுத்தப்பட்ட அடுத்தடுத்த வெடிப்புகள், பால்டிமோர் நகரின் புகழ்பெற்ற பிரான்சிஸ் ஸ்டாட் பாலத்தைத் துண்டுகளாகச் சிதறடித்தது. அதன் இடிபாடுகள் மேரிலாந்தின் படாப்ஸ்கோ ஆற்றில் மூழ்கின.
ஏழு வாரங்களுக்கு முன், பாலத்தின் மீது கப்பல் மோதியதில், ஆறு பேர் இறந்தனர். வெடி வைத்து தகர்ப்பதால் இடிபாடுகளில் சிக்கிய கப்பலை மீட்கும் ஒரு நீண்ட செயல்முறை முடிவுக்கு வரும் என்று நிர்வாகமும் மீட்புக் குழுவினரும் நம்புகிறார்கள்.
இந்தக் கப்பலில் உலகில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 21 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள அவர்களின் வீடுகளுக்குச் செல்ல முடியும் என்று மீட்புக் குழு முழுமையாக நம்புகிறது. இருப்பினும், அவர்கள் எப்போது மீட்கப்படுவார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
பால்டிமோர் நகரில் இருந்து புறப்பட்ட 298 மீட்டர் நீளம் கொண்ட டாலி என்ற கப்பல், இலங்கைக்குத் தனது 27வது நாள் பயணத்தைத் தொடங்கியபோது பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தில் மோதி கரை ஒதுங்கியது. இதனால், இந்தக் கப்பலில் இருந்த ஆயிரக்கணக்கான டன் இரும்பு, சிமென்ட் ஆகியவை படாப்ஸ்கோ ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.
அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் முதல் கட்ட விசாரணை அறிக்கையில், சம்பவத்துக்கு முன்னர் கப்பலில் இரண்டு மின்தடைகள் ஏற்பட்டதாகவும், இதனால் கப்பலின் பல உபகரணங்கள் வேலை செய்யாமல் போனதும் கண்டறியப்பட்டது. விபத்து நடப்பதற்கு 10 மணிநேரத்திற்குள் கப்பலில் இரண்டு முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கப்பலில் இருந்த பணியாளர்களில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் மற்றும் 20 இந்தியர்கள் உட்பட 21 பேர் உள்ளனர். விசா கட்டுப்பாடுகள் மற்றும் கட்டாய தரையிறங்கும் அனுமதிச் சீட்டு இல்லாததால் அவர்கள் கரைக்கு வர முடியாமல் தவிக்கின்றனர். மேலும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB), எஃப்.பி.ஐ ஆகியவற்றின் விசாரணைகளும் அவர்கள் கப்பலில் இருப்பதற்கு ஒரு முக்கியக் காரணம்.
திங்களன்று, பாலத்தில் சிக்கிய கப்பலை மீட்டெடுக்க, அங்கு வெடி வைத்து தகர்த்தபோதும், அந்தக் குழுவினர் கப்பலுக்குள் இருந்தனர்.
வெடி வைத்து இடிபாடுகளைத் தகர்க்கும் இந்த முயற்சியை மேற்கொள்வதற்கு முன்னர், அமெரிக்க கடலோர காவல் படை அட்மிரல் ஷானன் கில்ரேத், `` கப்பலில் இருக்கும் பணியாளர்கள் தீயணைப்புக் குழுவினருடன் கீழ் தளத்தில் இருப்பார்கள். அவர்கள் அனைவரும் கப்பலின் ஒரு பகுதி. கப்பலைத் தொடர்ந்து இயக்குவதற்கு அவர்கள் அவசியம்,” என்று கூறினார்.
கப்பல் இந்த வாரம் மீட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் 3.7 கி.மீ. தொலைவில் இருக்கும் கரைக்கு கப்பல் எப்போது கொண்டு வரப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
'சோகமான சூழல்'

பட மூலாதாரம், Getty Images
கப்பலில் உள்ள குழுவினருடன் தொடர்பில் இருப்பவர்களில் ஒருவர் ஜோசுவா மெசிக்.
மெசிக் பால்டிமோர் சர்வதேச கடற்படை மையத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். இது ஒரு லாப நோக்கற்ற அமைப்பாகும், இது கடற்படையினரின் உரிமைகளுக்காக இயங்கி வருகிறது. மெசிக்கின் கூற்றுப்படி, எஃப்.பி.ஐ விசாரணைக்காக நிர்வாகக் குழு கப்பலில் உள்ளவர்களின் மொபைல் போன்களை பறிமுதல் செய்தது, அதன் பிறகு அவர்கள் சில வாரங்களுக்கு வெளியுலக தொடர்பிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டனர்.”
``அவர்களால் ஆன்லைன் வங்கியைப் பயன்படுத்த முடியாது. அவர்களால் கட்டணங்களைச் செலுத்த முடியாது. அவர்களிடம் தரவு அல்லது யாருடைய தொலைபேசி எண் எதுவும் இல்லை, எனவே இவர்கள் உண்மையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் பேச முடியாது. தூங்குவதற்கு முன் அவர்களின் குழந்தைகளின் புகைப்படங்களைப் பார்க்கவும் முடியாது. இது உண்மையில் ஒரு சோகமான சூழல்," என்றார்.
கப்பலில் இருந்த பணியாளர்களின் அவல நிலை அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு தொழிற்சங்கங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒன்று சிங்கப்பூர் கடல்சார் அதிகாரிகள் சங்கம் மற்றொன்று சிங்கப்பூர் கடல்சார் ஊழியர்களின் அமைப்பு.
மே 11 அன்று ஒரு கூட்டறிக்கையில், இந்தத் தொழிற்சங்கங்கள் "மன உளைச்சல் மற்றும் குற்றவியல் வழக்கு பற்றிய பயம் காரணமாக மக்களின் மன உறுதி குறைந்துள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு இல்லாததால் அக்குழுவினர் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்றனர். அவர்களின் தொலைபேசிகளை விரைவாக திருப்பித் தர வேண்டும்," என்று அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கடற்பயணிகள் சர்வதேச சங்கத்தின் தலைவர் டேவ் ஹிண்டெல் கூறுகையில், "எவ்வளவு காலம் விசாரணை நடந்தாலும், அந்தக் கப்பலில் உள்ளவர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் மீறப்படக் கூடாது."
"கப்பல்களில் பயணம் செய்பவர்கள் தங்கள் சொந்த வேலைகள், கட்டணம் செலுத்துதல் போன்றவற்றைத் தங்கள் மொபைல் போனில் இருந்து செய்கிறார்கள் என்பதை அதிகாரிகள் நினைவில் கொள்ள வேண்டும். அதிலும் முக்கியமாக, அவர்கள் தங்கள் குடும்பத்துக்காக தங்கள் மொபைல் போன்களை பயன்படுத்துகிறார்கள். அவர்கள் தொலைபேசி மூலம் பணம் அனுப்புகிறார்கள். அடிப்படை விஷயங்கள் இல்லாததால் அவர்கள் மிகவும் மனச் சோர்வடைந்து உள்ளனர்,” என்று குறிப்பிட்டார்.
பால்டிமோரில் இருந்து வரும் கப்பல்களைக் கண்காணிக்கும் `அப்போஸ்டல்ஷிப் ஆஃப் தி சீ’ என்னும் திட்டத்தை நடத்தும் ஆண்ட்ரூ மிடில்டன், இரண்டு வாரங்களுக்கு முன்பு பணியாளர்களைச் சந்தித்ததாகவும், அவர்களிடம் பதற்றம் இருந்தபோதிலும், ஒரு 'நேர்மறை அணுகுமுறையை' கண்டதாகவும் பிபிசியிடம் கூறினார்.
அவர் கூறுகையில், "கப்பலில் இருந்த பணியாளர்களிடம் நாங்கள் சகஜமாக பேச முயன்றோம். அவர்கள் மனதில் இருந்த தயக்கத்தை நீக்கினோம். பின்னர் அவர்களின் பெயர்களைக் கேட்டோம், சொன்னார்கள். அவர்கள் இந்தியாவின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்துகொள்ள விரும்பினோம். அவர்கள் திருமணமானவர்களா அல்லது குழந்தைகள் இருக்கிறார்களா என்று அவர்களிடம் பேசினோம். அவர்களைக் கொஞ்சம் மன உளைச்சலில் இருந்து மீட்க நகைச்சுவையாகப் பேசினோம். அவர்களும் இறுக்கமான மனநிலையில் இருந்து வெளியேறி அவர்களுக்குள் கேலி செய்து கொண்டனர்,” என்றார்.
அடுத்து என்ன?

பட மூலாதாரம், Getty Images
”தற்போது கப்பலில் உள்ளவர்களுக்கு சிம் கார்டுகள் உடன் தற்காலிக மொபைல் போன்கள் வழங்கப்பட்டுள்ளது. அதில் இணைய வசதி இருக்காது,” என்று மெசிக் கூறுகிறார்.
பல்வேறு சமூக குழுக்கள் மற்றும் தனிநபர்கள் சிலர் அவர்களுக்கு உணவுப் பொருட்கள், போர்வைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளனர்.
பாலம் இடிந்து விழுந்ததில் அரசாங்கத்தின் செயல்பாட்டை மேற்பார்வையிடும் `யுனிஃபைட் கமாண்ட்’ அமைப்பை பிபிசி தொடர்பு கொண்டு, கப்பலில் உள்ளவர்கள் எப்போது வீட்டிற்குச் செல்ல முடியும் என்பது குறித்துக் கேட்டது.
சிங்கப்பூரை தளமாகக் கொண்ட கப்பல் துறை நிறுவனமான `சினெர்ஜி மரைன்’ செய்தித் தொடர்பாளர் டாரெல் வில்சன் பிபிசியிடம், ”மீட்புப் பணிகள் மிகச் சிறப்பாக நடக்கின்றன. பால்டிமோரில் அனுப்பப்பட்ட எங்கள் நிறுவனத்தின் பிரதிநிதிகள் முதல் நாளிலிருந்து அவர்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். எங்களால் இயன்றவரை, அவர்களின் ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்கிறோம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உணவுகளும் கப்பல்களில் அனுப்பப்படுகின்றன, இதனால் அங்குள்ள சமையல்காரர்கள் ஓய்வெடுக்க முடியும்," என்றார்.
"கப்பலில் உள்ளவர்களுக்காக இந்து மத குருமார்கள் உட்படப் பல்வேறு சமயப் பிரதிநிதிகள் உணர்வுபூர்வமான ஆதரவையும் வழங்கி வருகின்றனர். இது எங்களுக்கு மிகுந்த தைரியத்தை அளிக்கிறது," என்றார்.

பட மூலாதாரம், Getty Images
இருப்பினும், பணியாளர்கள் எப்போது கப்பலைவிட்டு வெளியேறுவார்கள் என்பதை அவரால் கூற முடியவில்லை. விசாரணை நடந்து வருவதாகவும், இவர்கள் அளவுக்கு கப்பலைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்க முடியாது என்பதால் அவர்களை கப்பலில் வைத்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
"கப்பலில் இருக்கும் பணியாளர்கள் கப்பலின் செயல்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதி. கப்பல் பாலத்தில் இருந்து வெளியேறியவுடன், அதில் சிக்கி இருப்பவர்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்குவதற்காக கப்பலில் ஏறிச் செல்வேன்" என மெசிக் கூறுகிறார்.
அதன் பிறகு, கப்பலில் இருப்பவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு (5 பேர்) விரைவில் கடற்கரையில் தரையிறங்கத் தேவையான பாஸ்களை பெறுவார்கள் என்று அவர் நம்புகிறார். இருப்பினும், அவர்களின் செயல்பாடுகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும். உதாரணமாக, அவர்கள் கடலோரப் பகுதியில் இருக்கும்போது எப்போதும் அவர்களுடன் ஒரு பாதுகாவலர் இருக்க வேண்டும்.
அவர் மேலும் கூறுகையில் "கப்பலில் உள்ளவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதைக் கண்டறிய முயல்கிறேன். கப்பலின் கேப்டன் போன்ற சில பணியாளர்கள் இயல்பாக அமைதியாக உட்காருவதை விரும்புகின்றனர். நாங்கள் அவர்களை சுதந்திரமாக திறந்தவெளி காற்றைச் சுவாசிக்க உதவ விரும்புகிறோம். அவர்கள் எல்லா நேரமும் கப்பலுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தை அவர்களும் அனுபவிக்க வேண்டும்,” என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












