இஸ்ரேல் மீது தென்னாபிரிக்கா தொடர்ந்த வழக்கில் சர்வதேச நீதிமன்றம் உண்மையில் கூறியது என்ன?

இஸ்ரேல் - பாலத்தீனம்
படக்குறிப்பு, சர்வதேச நீதிமன்றத்தின் அப்போதைய தலைவர் ஜோன் டோனோகு, இந்தத் தீர்ப்பு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்றார்
    • எழுதியவர், டொமினிக் காசியானி
    • பதவி, சட்ட விவகாரங்களுக்கான செய்தியாளர்

காஸா போரில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டியும், ரஃபாவில் அதன் தாக்குதலை உடனடியாக நிறுத்தக் கோரியும் தென்னாப்பிரிக்கா தொடுத்துள்ள வழக்கின் மீதான விசாரணையை ஐநாவின் சர்வதேச நீதிமன்றம் மீண்டும் தொடங்கியுள்ளது.

தென்னாப்பிரிக்கா தொடுத்துள்ள வழக்கை "முற்றிலும் ஆதாரமற்றது" மற்றும் "தார்மீக ரீதியாக வெறுக்கத்தக்கது" என்று கூறிய இஸ்ரேல் வெள்ளிக்கிழமை இதன் மீது பதிலளித்துள்ளது.

தென்னாப்பிரிக்கா வழக்கு தொடர்ந்ததில் இருந்து சர்வதேச நீதிமன்றத்தின் (ICJ) ஒவ்வொரு வார்த்தைகளும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் அத்தகைய ஆய்வு தற்போது அதன் சமீபத்திய தீர்ப்பில் பயன்படுத்தியுள்ள "நம்பத்தகுந்த" என்ற வார்த்தையை மையமிட்டுள்ளது.

ஜனவரி மாதத்தில் சர்வதேச நீதிமன்றம் ஓர் இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்பில் இருந்த ஒரு முக்கியமான பத்தி பலரது கவனத்தையும் ஈர்த்தது: “நீதிமன்றத்தின் பார்வையில், உண்மைகள் மற்றும் சூழ்நிலைகள்... தென்னாப்பிரிக்காவால் கோரப்படும் விஷயங்களில் சிலவற்றையாவது முடிவு செய்யப் போதுமானது மற்றும் அது பாதுகாப்பைக் கேட்பதற்கான காரணங்கள் நம்பத்தகுந்ததாகும்.”

இந்த வார்த்தைகள் சட்ட வர்ணனையாளர்கள் உள்ளிட்ட பலராலும், காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது என்ற கூற்று "நம்பகத்தகுந்தது" என்று நீதிமன்றம் முடிவு செய்திருப்பதாக விளக்கப்பட்டது.

இந்த விளக்கமானது வேகமாகப் பரவி, ஐநா ஊடக செய்தி, பிரசார குழுக்களின் அறிக்கைகள் மற்றும் பிபிசி உட்படப் பல்வேறு ஊடகங்களிலும் வெளியானது. இருப்பினும், ஏப்ரல் மாதம் பிபிசியிடம் பேட்டியளித்த சர்வதேச நீதிமன்றத்தின் தலைவர் ஜோன் டோனோக், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இதுவல்ல என்று கூறினார்.

மாறாக, இஸ்ரேலுக்கு எதிராக வழக்கைக் கொண்டு வருவதற்கு தென்னாப்பிரிக்காவுக்கு உரிமை உண்டு என்பதையும், பாலத்தீனியர்களுக்கு உண்மையில் சரிசெய்ய முடியாத அளவிற்கு ஆபத்தில் இருக்கும் உரிமையான, "இனப்படுகொலையில் இருந்து தங்களைப் பாதுகாப்பதற்கான நம்பத்தகுந்த உரிமைகள்" இருப்பதாகவும் நிறுவுவதே இந்தத் தீர்ப்பின் நோக்கம் ஆகும் என்று அவர் தெரிவித்தார்.

இஸ்ரேல் - பாலத்தீனம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சர்வதேச நீதிமன்றத்தின் முன்னாள் தலைவர் ஜோன் டோனோகு

இனப்படுகொலை நடந்துள்ளதா என்பதை தற்போதைக்கு கூறத் தேவையில்லை என்று கூறிய நீதிபதிகள், தென்னாப்பிரிக்கா குற்றம் சாட்டியுள்ள சில செயல்கள் நிரூபிக்கப்பட்டால், அவை ஐக்கிய நாடுகள் சபையின் இனப்படுகொலை தொடர்பான தீர்மானத்தின் கீழ் வரலாம் என்று முடிவு செய்தனர்.

இப்போது இந்த வழக்கின் பின்னணி என்ன? அதன் சட்டபூர்வ முரண்கள் எப்படி வெளிப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கலாம்.

சர்வதேச சட்டங்கள் தொடர்பாக உலக நாடுகளுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளைக் கையாள்வதற்காக சர்வதேச நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.

அதாவது, இனப்படுகொலை தீர்மானம் போன்ற நாடுகளுக்கிடையே ஒப்புக் கொள்ளப்பட்ட சட்டங்களின் மூலம், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மீண்டும் அதுபோன்ற வெகுமக்கள் படுகொலைகளைத் தடுக்க முயலும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.

கடந்த டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்கா இந்த சர்வதேச நீதிமன்றத்தில், காஸாவில் ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்து வருகிறது என்பதை நிரூபிக்கும் முயற்சியாக வழக்கு ஒன்றைத் தொடுத்தது.

இஸ்ரேல் - பாலத்தீனம்

பட மூலாதாரம், Getty Images

தென்னாப்பிரிக்காவின் வழக்குப்படி, இஸ்ரேலுக்கு "காஸாவில் உள்ள பாலத்தீனியர்களை அழிக்கும்" நோக்கம் இருப்பதால், அது போரை நடத்துகிற விதம் "இயல்பிலேயே இனப்படுகொலை" பாணியிலானது என்று அது குற்றம் சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் முற்றிலுமாக நிராகரித்தது. முழு வழக்கும் களத்தில் என்ன நடக்கிறது என்பதை தவறாகச் சித்தரிப்பதாக அது கூறியது.

இஸ்ரேல் இனப்படுகொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறுவதற்கான தெளிவான மற்றும் சரியான ஆதாரங்களை தென்னாப்பிரிக்கா நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இஸ்ரேலும் தன் பங்கிற்கு, எதிர்தரப்பு முன்வைக்கும் கூற்றுகளை ஒவ்வொன்றாக ஆராய்ந்து, பல நாடுகளால் பயங்கரவாதக் குழு என்று அறிவிக்கப்பட்ட ஹமாஸுக்கு எதிரான, தீவிரமான ஒரு நகர்ப்புற போரில், அது எடுத்துள்ள நடவடிக்கைகள் அனைத்தும் சட்டபூர்வமான தற்காப்பு மட்டுமே என்று வாதிடுவதற்கு உரிமை உண்டு. அப்படி ஆய்வுகள் முடிந்து இந்த வழக்கின் முழு செயல்பாடுகள் முடியவே பல ஆண்டுகள் ஆகலாம்.

எனவே தென்னாப்பிரிக்கா, சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதிகளை முதலில் "தற்காலிக நடவடிக்கைகளை" மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது.

அதன் அடிப்படையில்தான், நீதிமன்றத்தின் இறுதி முடிவை எட்டுவதற்கு முன்பு மேலதிகமான பாதகங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக தற்போதைய சூழலை அப்படியே நிறுத்த வேண்டும் என்று இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது நீதிமன்றம்.

இஸ்ரேல் - பாலத்தீனம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காஸாவில் உள்ள ரஃபாவில் இஸ்ரேலின் ஊடுருவலை உடனடியாக நிறுத்த உத்தரவிடுமாறு தென்னாப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்திடம் கோரியுள்ளது.

"பாலத்தீன மக்களின் உரிமைகளுக்கு மேலும், கடுமையான மற்றும் சரிசெய்யவே முடியாத பாதகங்கள் ஏற்படாமல் பாதுகாக்க" தேவையான நடவடிக்கைகளை எடுக்க இஸ்ரேலுக்கு உத்தரவிடுமாறு நீதிமன்றதில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கும் மேலாக, காஸாவில் உள்ள பாலத்தீனியர்களின் உரிமைகள் நீதிமன்றத்தால் பாதுகாக்கபட வேண்டுமா என்பது குறித்து இரு நாட்டு வழக்கறிஞர்களாலும் வாதம் முன்வைக்கப்பட்டது.

இந்த வாதத்தின்மீது 17 நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஜனவரி 26ஆம் தேதி ஒரு தீர்ப்பை வழங்கியது. அதில் சில நீதிபதிகள் மாற்றுக் கருத்தையும் கொண்டிருந்தனர்.

"தற்போதைய சட்ட நடவடிக்கைகளின் இந்தக் கட்டத்தில், தென்னாப்பிரிக்கா பாதுகாக்க விரும்பும் உரிமைகள் உள்ளதா என்பதை உறுதியாகத் தீர்மானிக்க நீதிமன்றம் கூடவில்லை" என்று சர்வதேச நீதிமன்றம் கூறியது.

மாறாக, “தென்னாப்பிரிக்காவால் கோரப்படும் மற்றும் அது பாதுகாக்க வேண்டியதாகக் கருதும் உரிமைகள் நம்பத்தகுந்ததா என்பதை மட்டுமே அது தீர்மானிக்க வேண்டும்,” என்றது. "நீதிமன்றத்தின் பார்வையில், உண்மைகள் மற்றும் சூழ்நிலைகள்... தென்னாப்பிரிக்காவால் கோரப்படும் சில உரிமைகள் நம்பத்தகுந்தவை என்று முடிவு செய்யப் போதுமானது."

காஸாவில் உள்ள பாலத்தீனியர்களுக்கு இனப்படுகொலை தீர்மானத்தின் கீழ் நம்பத்தகுந்த உரிமைகள் இருப்பதாக முடிவு செய்த பின்னர், அவர்கள் உண்மையில் மீளவே முடியாத சேதத்தின் அபாயத்தில் உள்ளனர் என்றும், இந்த முக்கியமான பிரச்னைகள் கேள்விக்குரியதாக இருக்கும் நிலையில், இனப்படுகொலை நிகழாமல் தடுக்க இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முடிவுக்கு வரப்பட்டது.

இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததா என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறவில்லை - ஆனால் "அதன் வார்த்தைகளால் இனப்படுகொலை நடக்கும் அபாயம் இருப்பதாக நம்புகிறதா?" என்ற சர்ச்சை இங்குதான் எழுந்தது.

ஏப்ரல் மாதம், நான்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உட்பட சுமார் 600 பிரிட்டிஷ் வழக்கறிஞர்கள், இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை நிறுத்தும்படியும், "இனப்படுகொலைக்கான ஒரு நம்பத்தகுந்த அபாயத்தை" குறிப்பிட்டும் பிரிட்டன் பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பினர்.

இஸ்ரேல் - பாலத்தீனம்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இந்த வழக்கு தொடங்கியதில் இருந்து சர்வதேச நீதிமன்றத்தின் ஒவ்வொரு வார்த்தைகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இது இஸ்ரேலுக்கான பிரிட்டன் வழக்கறிஞர்களிடம் இருந்து (UKLFI) எதிர்க் கடிதத்திற்கு வழிவகுத்தது. காஸாவில் உள்ள பாலத்தீனியர்கள் இனப்படுகொலையில் இருந்து பாதுகாக்கப்படுவதற்கான நம்பத்தகுந்த உரிமை இருப்பதாக மட்டுமே சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்று 1,300 பேர் கொண்ட அந்தக் குழு கூறியது.

மேலும் இந்தக் கடிதங்கள் மற்றும் விளக்கங்களில் சர்ச்சை தொடர்ந்தது.

முதல் குழுவில் உள்ள பலரும் இஸ்ரேலுக்கான பிரிட்டன் வழக்கறிஞர்களின் விளக்கத்தை "வெற்று வார்த்தை விளையாட்டு" என்று விவரித்தனர். நீதிமன்றத்தில், வெறும் தத்துவார்த்த கேள்வியில் மட்டும் தனியாக அக்கறை செலுத்திக் கொண்டிருக்க முடியாது, காரணம் அதன் பங்கு அதைவிட மிகவும் அதிகமானது என்று அவர்கள் வாதிட்டனர்.

மேலும், இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதி குறித்த கேள்வி, பிரிட்டன் நாடாளுமன்றக் குழுவின் முன் நடைபெற்ற சட்டப்பூர்வ விவாதத்தில் தெளிவாகவும், கவனமாகவும் முன்னிலைப்படுத்தப்பட்டது.

முன்னாள் பிரிட்டன் உச்சநீதிமன்ற நீதிபதியான லார்ட் சம்ப்ஷன், "இஸ்ரேலுக்கான பிரிட்டன் வழக்கறிஞர்களின் கடிதத்தில் சர்வதேச நீதிமன்றம் செய்கிற அனைத்தையும், காஸா மக்கள் இனப்படுகொலைக்கு ஆளாகாமல் இருக்க உரிமை உண்டு என ஒரு விரிவான சட்டமாக ஏற்றுக்கொண்டதாகப் பரிந்துரைக்கப்படுவதாக நான் நினைக்கிறேன். நான் அந்த முன்மொழிவை அரிதாகவே விவாதிக்கக் கூடியதாகக் கருதுகிறேன் என்று சொல்ல வேண்டும்,” என்று கமிட்டியிடம் கூறினார்.

இஸ்ரேல் - பாலத்தீனம்

பட மூலாதாரம், Getty Images

ஆனால் அது அப்படி இல்லை, என்று இஸ்ரேலுக்கான பிரிட்டன் வழக்கறிஞரான நடாஷா ஹவுஸ்டோர்ஃப் பதிலளித்தார்.

"இஸ்ரேல் இனப்படுகொலை செய்து வருகிறது என்ற நம்பத்தகுந்த அபாயத்தின் ஆதாரங்களைக் கூறுவது நீதிமன்றத்தின் தெளிவற்ற அறிக்கைகளைப் புறக்கணிக்கிறது என்பதை நான் மரியாதையுடன் வலியுறுத்துகிறேன்," என்று அவர் பதிலளித்தார்.

ஒருநாள் கழித்து, தற்போது சர்வதேச நீதிமன்றத்தில் இருந்து ஓய்வுபெற்ற ஜோன் டோனோகு பிபிசியின் ஹார்ட் டாக் (HARDtalk) நிகழ்வில் பங்கேற்று, நீதிமன்றம் என்ன செய்தது என்பதை விளக்கி விவாதத்தை வெளிப்படையாக முடித்து வைக்க முயன்றார்.

"அது இன்னும் முடிவு செய்யப்படவில்லை - மேலும் ஊடகங்களில் அடிக்கடி கூறப்படும், இனப்படுகொலை நம்பத்தகுந்தது என்ற விஷயத்தை நான் தெளிவுபடுத்துகிறேன்” என்று அவர் கூறினார்.

"நீதிமன்றம் தனது உத்தரவில், இனப்படுகொலையில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டிய பாலத்தீனர்களின் உரிமைக்கு மீண்டும் சரிசெய்யவே முடியாத அளவுக்குத் தீங்கு ஏற்படும் அபாயம் உள்ளது என்பதையே வலியுறுத்தியது. ஆனால் அடிக்கடி ஊடகங்களில் வெளியாகும் இனப்படுகொலைக்கான நம்பகத்தகுந்த ஆதாரங்கள் உள்ளது என்று கூறப்படும் கூற்று நீதிமன்றம் கூறியது அல்ல.”

அப்படியான மோசமான பாதிப்புகள் நடந்ததற்கான ஆதாரம் இருக்கிறதா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும் காலம் வெகு தொலைவு உள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)